Published:Updated:

பவர்ப்ளே பெளலர் தீபக் சஹாரை டெத் பெளலராக மாற்றியது யார்... எப்படி? #DeepakChahar

ஐபில் போட்டிகளில் வீசிய 616 பந்துகளில் 493 பந்துகள்... அதாவது 80 சதவிகிதம். இந்தியாவுக்காக விளையாடிய போதும் 126 பந்துகளில் 96 பந்துகள் (76 சதவிதம்) பவர்ப்ளே ஓவர்களிலேயே வீசியவர் தீபக் சஹார்.

Deepak Chahar
Deepak Chahar

ஒரே இரவில் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் தீபக் சஹார். வங்கதேசத்துக்கு எதிரான 3-வது போட்டியில் வெறும் 7 ரன் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தது மட்டுமல்லாமல் டி-20 போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

டி-20 போட்டிகளில் தீபக் சஹார் சிறந்த பவர்ப்ளே பந்து வீச்சாளர். முதல் 6 ஓவர்களிலேயே 3 ஓவர்கள் வீசிவிடுவார். ஐபில் போட்டிகளில் அவர் வீசிய 616 பந்துகளில் 493 பந்துகள்... அதாவது 80 சதவிகிதம் பவர்ப்ளேவில் வீசப்பட்டது. இந்தியாவுக்காக விளையாடிய போதும் 126 பந்துகளில் 96 பந்துகள் (76 சதவிதம்) பவர்ப்ளே ஓவர்களிலேயே வீசியவர். பெரிதாக மிடில் ஓவர்களிலேயோ, டெத் ஓவர்களிலேயோ அவர் பந்துவீசியதில்லை. டெத் பௌலராக அவர் அறியப்படவுமில்லை. ஆனால், நாக்பூரில் எல்லாம் மாறியது.

Deepak Chahar
Deepak Chahar

பனி பொழியும் ஆடுகளத்தில் 174 ரன்களை இந்திய அணி டிஃபண்ட் செய்ய வேண்டியிருந்தது. இந்தத் தொடரில் இளைஞர்களை முன்னிறுத்தியே களம் இறங்கிய இந்தியாவுக்கு அனுபவமிக்க பந்துவீச்சாளர் என்றால் சஹால் மட்டும்தான். ரோஹித் ஷர்மா 3வது போட்டிக்கு 4 பிரதான பந்து வீச்சாளர்களையும், 1 பகுதி நேரப் பந்து வீச்சாளரையும் மட்டுமே நம்பி களத்தில் இறங்கினார். வழக்கமாக பவர்ப்ளே ஓவரில் தொடர்ந்து 3 ஓவர்கள் வீசும் தீபக் சஹாருக்கு இமாலய டாஸ்க் காத்திருந்தது. சஹாரை அழைத்த ரோஹித் ஷர்மா `இன்று நீங்கள் முக்கிய ஓவர்களை வீச வேண்டும் தயாராக இருங்கள்’ என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்.

இப்போது பவர்ப்ளேவில் சஹார் வீசியது ஒரே ஒரு ஓவர். ஆனால், அதில் ஒட்டுமொத்த தாக்கத்தையும் ஏற்படுத்தினார் சஹார். ஒரே ஒரு ரன் மட்டும் கொடுத்து, அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். அவரை டெத் ஓவரில் பயன்படுத்தவேண்டும் என்று ரோஹித் பத்திரப்படுத்தினார். 3வது விக்கெட்டுக்கு வங்கதேச வீரர்கள் நைம் மற்றும் மிதுன் 98 ரன்கள் சேர்க்க ஆட்டம் பங்களாதேஷ் பக்கம் திரும்பியது. 48 பந்துகளுக்கு 69 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும். கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. T20 போட்டிகளில் இது எளிதாக எடுக்கக்கூடிய ஸ்கோர்தான். இப்படிப்பட்ட நிலையில், 13-வது ஓவரில் சஹாரின் கையில் பந்தைக் கொடுத்தார் கேப்டன் ரோஹித்.

சஹார், ரோஹித்தின் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை. 2 ஷார்ட் பால்கள் வீசி மிதுனை அடிக்க விடாமல் செய்தார். ஓவரின் முதல் 5 பந்துகளில் 1 ரன் மட்டும் எடுத்திருந்த நிலையில் நெருக்கடிக்கு உள்ளான மிதுனை நக்கிள் பால் வீசி தனது வலையில் வீழ்த்தினார். ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனை இந்தத் தருணம்தான். 98 ரன்கள் எடுத்திருந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழக் காரணமாக இருந்தார் சஹார். 4வது மற்றும் 5வது விக்கெட்டை ஷார்ட் பால் வீசி எடுத்தார் என்றால், 6வது விக்கெட்டை ஃபாஸ்ட் பௌலருக்கே உரித்தான யார்க்கர் வீசி ஹாட்ரிக் விக்கெட்டாக மாற்றிக் காட்டினார். T20 போட்டிகளில் குறைந்த ரன்கள் கொடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பௌலர் என்ற பெருமையையும் பெற்றார்.

தான் வீசிய 20 பந்துகளில் 11 பந்துகளை ஷார்ட் அல்லது ஷார்ட் ஆஃப் குட் லென்த்தில் வீசி பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். ஃபுல் லென்த் பால் வீசவே இல்லை. அதனால் தப்பித்தவறிக்கூட ஒரு ஃபுல் டாஸ் பந்தும் பேட்ஸ்மேன்களுக்குக் கிடைக்கவில்லை. மறுபுறம், மற்ற பந்து வீச்சாளர்கள் 10 ஃபுல் டாஸ் பந்துகளை வீசினர். ஏனெனில், கடும் பனிப் பொழிவின் காரணமாக பந்து கையை விட்டு வழுக்கிக்கொண்டே இருந்தது. ஆனால், சஹாருக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. அது எப்படி சாத்தியமானது... சஹாரின் வரலாறு என்ன?

சென்னையில் விளையாடும்போது கடும் பனிப்பொழிவு இருக்கும். மேலும் கடல் சீற்றத்தின் காரணமாக வீரர்களுக்குக் கடும் வியர்வையும் ஏற்படும். பந்தைப் பிடிப்பதற்கு மிகவும் கடினமான சூழலில் தொடந்து பந்து வீசி பழக்கப்பட்டவர் சஹார்.

சஹார் உருவான கதை!

எல்லா கிரிக்கெட் வீரர்களின் தந்தைகளைப் போலவே தீபக் சஹாரின் தந்தை லோகேந்திரசிங்கும் கிரிக்கெட் வீரராகவேண்டும் என்று ஆசைப்பட்டவர். ஆனால், அது கைகூடவில்லை. இந்தியன் ஏர்ஃபோர்ஸில் வேலை கிடைத்தது. தனது மகனின் திறமையை 12 வயதில் கண்டுபிடித்த லோகேந்திரசிங், தனது ஏர்ஃபோர்ஸ் வேலையை விட்டுவிட்டு மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க வந்தார். தனது சேமிப்பின் மூலம் ஆக்ரா நகரத்துக்கு அருகே இரு பிட்ச்களை அமைத்தார். ஒன்று டர்ஃப் விக்கெட் மற்றொன்று கான்கிரீட் விக்கெட். லோகேந்திரசிங் தொழில்முறை கிரிக்கெட் வீரர் கிடையாது. ஆனால், அவருடைய இன்ஸ்பிரேஷன் மால்கம் மார்ஷல், டேல் ஸ்டெய்ன். இருவரின் யூ டியூப் விடியோக்களைப் பார்த்து அவர்கள் கை அசைவைக் கவனித்து அது மாதிரி தனது மகனுக்குப் பயிற்சியளித்தார்.

deepak chahar
deepak chahar

2010-ல் ராஜஸ்தான் அணி சார்பாக ரஞ்சி போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டார் சஹார். முதல் போட்டியிலே முத்திரை பதித்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய ஹைதராபாத் அணி 21 ரன்களில் ஆல் அவுட் ஆக மிகமுக்கியக் காரணமாக அமைந்தார் சஹார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து, 8 விக்கெட்டுகள் வீசினார். அன்று அவர் இப்ராஹிம் கலீல்க்கு வீசிய இன்ஸ்விங் யார்க்கர் யு-டியூபில் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டது. அப்படியோர் அட்டகாசமான பந்து அது!

ஐபிஎல் எழுச்சி!

2016 புனே அணியில் விளையாடத் தேர்வானார் சஹார். பயிற்சியில் இவரைக் கவனித்த கேப்டன் தோனி, அவர் நன்றாகப் பந்துவீசுவதாகவும் போட்டியில் ஆடத் தயாராக இருக்குமாறும் கூறினார். ஆனால், காயம் ஏற்படவே முதல் சுற்றுப் போட்டிகளில் ஆட முடியவில்லை கடைசி 3 போட்டிகளில் மட்டுமே ஆட முடிந்தது. அடுத்த வருடம் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக, சஹாருக்குப் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

deepak chahar
deepak chahar

2018 தோனி சிஎஸ்கே அணிக்குத் திரும்பினார். அந்த வருடம் நடந்த ஏலத்தில் தீபக் சஹார் 80 லட்ச ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். 12 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்தார். தோனி, கோச் ஸ்டீஃபன் ஃபிளெமிங் இருவரும் சஹாருக்கு அறிவுரை வழங்கிக்கொண்டே இருந்தனர். பௌலிங் கோச் ஆண்டி பிச்செல், சஹாரின் பௌலிங் திறமையை, குறிப்பாக ஸ்விங், நக்கிள் பந்துவீச்சை மேம்படுத்தினார்.

அதன் பலனாக 2019-ல் 17 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் எடுத்தார் சஹார். சராசரி வெறும் 21.9! அணியில் பிராவோவுக்கு அடிபட்டு பாதி போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்தபோது அணிக்கு டெத் ஓவர் பௌலிங் போடும்படி சஹாருக்கு நம்பிக்கை கொடுத்தார் தோனி. குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 நோ பால் போட, டென்ஷன் ஆன தோனி, சஹாரைத் திட்டினார். அதன்பின் கூலான தோனி தனக்கே உரித்தான ஸ்டைலில் அறிவுரை வழங்க, ஓவரின் கடைசி பந்தில் ஸ்டம்ப்பைப் பறக்கவிட்டு, மில்லர் விக்கெட்டை எடுத்து தோனியின் நம்பிக்கையைக் காப்பாற்றினார். அந்தத் தொடரில் மும்பைக்கு எதிராகவும் டெத் ஓவர்களைச் சிறப்பாக வீசியிருப்பார் சஹார்.

Deepak Chahar
Deepak Chahar

சென்னையில் விளையாடும்போது கடும் பனிப்பொழிவு இருக்கும். மேலும் கடல் சீற்றத்தின் காரணமாக வீரர்களுக்குக் கடும் வியர்வையும் ஏற்படும். பந்தைப் பிடிப்பதற்கு மிகவும் கடினமான சூழலில் தொடந்து பந்து வீசிப் பழக்கப்பட்டவர் சஹார். இதைக் கவனித்த அன்றைய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தீபக் சஹாரின் திறமையை இந்திய அணிக்காக விளையாடும் போது சரியாக உபயோகப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை வசமாக்கியுள்ளார்.

பிராவோ இல்லாத நேரத்தில் சஹாரை டெத் பெளலராகப் பயன்படுத்தினாரே தவிர, தொடர்ந்து அவரை டெத் பெளலராக மாற்றவில்லை தோனி. சூழலைப் புரிந்துகொண்டு சஹாரை டெத் பெளலராக மாற்றியிருப்பவர் ரோஹிஷ் ஷர்மாதான். அதனால் இந்தப் புகழ் ரோஹித் ஷர்மாவுக்கே!

நேற்று வரை சிஎஸ்கே வீரராக மட்டுமே அறியப்பட்டவர், இன்று அடுத்து ஆண்டு நடக்க இருக்கும் டி-20 உலகக்கோப்பைக்குத் தனது இடத்தை உறுதிசெய்திருக்கிறார்!

`கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை!' - `ஸ்பெஷல் ஹாட்ரிக்' தீபக் சஹார் #INDvBAN