Published:Updated:

கங்குலியைக் கதறவிட்டவர், ரிவர்ஸ் ஸ்வீப்பின் கிங், களப்போராளி... யார் இவர்? அண்டர் ஆர்ம்ஸ் தொடர் - 1

அண்டர் ஆர்ம்ஸ்

90'ஸ் என்பது சச்சின், லாரா, மெக்ராத், வார்னே என ஜாம்பவான்கள் கோலோச்சிய காலம் மட்டுமல்ல... ஒவ்வொரு டீமிலுமே பல அற்புதமான வீரர்கள் இருந்த காலம். கிரிக்கெட்டின் பொற்காலமான 90'ஸின் மறக்கமுடியாத மாஸ்டர்களை நமக்குள் நினைவுபடுத்திக்கொள்ளவே இந்தத் தொடர்!

இப்போதெல்லாம் விடியற்காலைகளில் கொரோனா கனவுகள்தான் துரத்துகின்றன. ஆனால், 90'ஸில் எல்லோரையும் துரத்தியது கிரிக்கெட் கனவுகள். பெளலிங் போட்டுக்கொண்டே நடப்பது, கைகளையே பேட்டாக வைத்துக்கொண்டு காற்றிலேயே சிக்ஸர்களைப் பறக்கவிடுவது என கிரிக்கெட்டைச் சுற்றியே வாழ்க்கை நகர்ந்த காலத்தை இப்போது நினைத்தாலும் மனம் மகிழ்ச்சியில் கொண்டாடும்.

தென்னம் மட்டையில் ஆரம்பித்து காஷ்மிர் வில்லோ வரை பல பேட்களைப் பிடித்திருப்போம். கிரிப்பில்தான் பிரச்னை என்று டெக்னிக்கல் வல்லுநராவோம். எல்பிடள்யு அவுட் எல்லாம் ஏதோ புரிந்ததுபோல அம்பயர்களை விமர்சிப்போம். டென்னிஸ் பாலில் கிரிக்கெட் விளையாடுவோம். மொட்டை மாடிகளில் அண்டர் ஆர்ம்ஸ் என்கிற புது உருட்டுக்குப் பழகியிருப்போம். ஒன் பிட்ச் ஒன் ஹேண்ட், தூக்கியடித்தால் அவுட் என நமக்கு நாமே புதிது புதிதாக விதிகளை உருவாக்கி கிரிக்கெட் விளையாடியிருப்போம் என அந்தக் காலம் என்பது அதிசயக் காலம்.

கென்யா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எந்த டீமில், எந்த ப்ளேயர் ஆடுகிறார், அவர் எந்த டெளனில் விளையாடுவார், யார் எந்த ஃபீல்டிங் பொசிஷனில் நிற்பார்கள், எப்போது பெளலிங் சேன்ஜ் நடக்கும் என கிரிக்கெட்டின் அத்தனையும் நமக்கு மனப்பாடமாகியிருக்கும். 90'ஸ் என்பது இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை ``ஜெயிக்கணும்னு சொல்லல... ஜெயிச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றோம்'' என மனதைத் தேற்றிக்கொண்டு கிரிக்கெட் பார்த்த காலம். இலங்கை எல்லாம் இந்தியாவை மரண அடி அடித்திருக்கிறது. ஜிம்பாப்வேகூட அச்சுறுத்துவார்கள் எனத் த்ரில்லும், திகிலும் கலந்தடித்த காலம் அது.

சச்சின், லாரா, மெக்ராத், வார்னே என 90'ஸ் கிரிக்கெட் இவர்களுக்கான காலம் மட்டுமேயல்ல... ஒவ்வொரு டீமிலுமே பல அற்புதமான வீரர்கள் இருந்தார்கள். வெற்றிக்காக இறுதிவரைப் போராடுவார்கள். அப்படிப்பட்ட 90'ஸின் மறக்கமுடியாத போராளிகளை நமக்குள் நினைவுபடுத்திக்கொள்ளவே இந்தத் தொடர்!

அண்டர் ஆர்ம்ஸ் ஆடுவோமா?!
Andy Flower
Andy Flower
Photo: ICC

டி20 கிரிக்கெட் நடைமுறைக்கு வரும்வரை கன்வென்ஷனல் ஷாட்களைத்தான் எல்லோரும் ஆடுவார்கள். கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ், ஃபிளிக்கர் என ஸ்டைலிஷ் ஷாட்கள் ஆடுவதில் வல்லவர் யார் என்பதில்தான் அப்போது பெரிய போட்டியே இருக்கும். ஸ்வீப் ஷாட்டும் பிரபலமாக இருந்தது. ஆனால், 90'களின் இறுதியில் இந்த ஸ்வீப் ஷாட் என்பது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆக மாற்றம் கண்டது. அப்போதெல்லாம் யார் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினாலும் பயமாகவே இருக்கும். காரணம் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறேன் என பேக்வேர்ட் பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆவார்கள். குறிப்பாக சச்சின். 2000-களின் இறுதியில்தான் அவருக்கு ரிவர்ஸ் ஸ்வீப் கலை கைகூடி வந்தது. ஆனால், 2000-களின் தொடக்கத்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் எப்படி ஆட வேண்டும் என உலகுக்குக் கற்றுக்கொடுத்தவர் ஜிம்பாப்வே-யின் ஆண்டி ஃப்ளவர். ரிவர்ஸ் ஸ்வீப்பின் கிங்கான ஆண்டி ஃப்ளவர்தான் அண்டர் ஆர்ம்ஸின் முதல் கதாநாயகன்.

இடது கை பேட்ஸ்மேனான ஆண்டி ஃப்ளவர் ஷேன் வார்னே தொடங்கி கும்ப்ளே வரை அத்தனை ஸ்பின்னர்களையும், குறிப்பாக லெக் ஸ்பின்னர்களை எல்லாம் விரட்டி விரட்டி ரிவர்ஸ் ஸ்வீப்பால் வெளுத்து வாங்கியவர்.

விக்கெட் கீப்பரான ஆண்டி ஃப்ளவர் இரண்டாவது டவுன் அல்லது மூன்றாவது டவுன் பேட்ஸ்மேனாகத்தான் இறங்குவார். அதிரடி ஆட்டம் ஆடமாட்டார். கண்டபடி பேட்டைச் சுழற்றமாட்டார். ஆனால், அடிக்கும் ஷாட்கள் எல்லாமே தரமாக இருக்கும். ஃப்ரன்ட் ஃபூட்டில் ஆடும் இவரது பேட்டிங் ஸ்டைல் மிஸ் செய்யாமல் பார்க்கவைக்கும். ஃபீல்டிங் பொசிஷன்களைச் சரியாகப் பார்த்து கேப்களுக்குள் பந்துகளை ஓடவிடுவார்.

பொதுவாகவே இந்திய, இலங்கை வீரர்கள்தான் ஸ்பின் பெளலிங்கை ஈஸியாக சமாளித்து ஆடுவார்கள் எனச் சொல்வார்கள். ஆனால், ஜிம்பாப்வே வீரர் எப்படி ஸ்பின்னை இவ்வளவு சிறப்பாக ஆடக்கற்றுக்கொண்டார் என்பதுதான் எல்லோருக்குமே ஆச்சர்யம். அதுவும் இந்தியா போன்ற சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான பிட்ச்களிலேயே ஸ்பின்னர்களைக் கதறவிட்டதுதான் ஃப்ளவரின் ஸ்பெஷாலிட்டி.

ANDY FLOWER
ANDY FLOWER
Photo: ICC
முதல் போட்டியிலேயே சதம்
தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில், அதுவும் உலகக்கோப்பையில் சதம் அடித்தவர் ஆண்டி ஃப்ளவர். ஆனால், இரண்டாவது சதம் அடித்ததோ தன்னுடைய 150-வது மேட்ச்சில். இரண்டாவது சதத்துக்கு மிக அதிகப் போட்டிகள் எடுத்துக்கொண்டவர் என்கிற சாதனை ஃப்ளவர் வசமே.

இப்போதும் அந்த மேட்ச் நினைவில் இருக்கிறது. 2000-த்தின் இறுதியில் இந்தியாவுக்கு டூர் வந்திருந்தது ஜிம்பாப்வே. அப்போதெல்லாம் இந்தியா ஓரளவுக்கு ஈஸியாக வெற்றிபெறும் அணிகளின் லிஸ்ட்டில் ஜிம்பாப்வே, கென்யா போன்ற நாடுகள்தான் அதிகம் இருக்கும். அதனால் செம உற்சாகமாக ஜிம்பாப்வேயைப் பந்தாட காத்திருந்தது கங்குலி தலைமையிலான இந்திய அணி. கங்குலி கேப்டனாகி இந்திய அணி வெற்றிபெற ஆரம்பித்திருந்த நேரம் அது. அதனால் ஜிம்பாப்வே-வை ஊதித்தள்ளிவிடலாம் என இந்திய ரசிகர்களும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், கங்குலி அண்ட் கோ-வுக்கு வேறு ட்ரீட்மென்ட் கொடுக்கக் காத்திருந்தார் ஆண்டி ஃப்ளவர்.

Andy Flower
Andy Flower
Photo: ICC

முதல் டெஸ்ட் டெல்லியில் நடந்தது. முதல் இன்னிங்ஸிலேயே நாட் அவுட் பேட்ஸ்மேனாக 183 ரன்கள் அடித்து கிலி கிளப்பினார் ஆண்டி ஃப்ளவர். டிராவிட்டின் டபுள் சென்சுரி மற்றும் சச்சினின் சென்சுரியாலும், ஶ்ரீநாத்தின் பெளலிங்காலும் இந்தியா வெற்றிபெற்றது. ஆனாலும், ஆண்டி ஃப்ளவரின் இன்னிங்க்ஸைப் பார்க்கும்போது இவர் அடுத்தடுத்து சம்பவங்கள் செய்வார் என்றே உள்ளுணர்வு சொன்னது. ஆமாம், உள்ளுணர்வு சொன்னது சரிதான். அடுத்த டெஸ்ட்டில் மிகப்பெரிய சம்பவம் செய்தார் ஆண்டி ஃப்ளவர்.

அந்தச் சம்பவ டெஸ்ட் நாக்பூரில் நடந்தது. முதல் டெஸ்ட்டில் டிராவிட் டபுள் சென்சுரி அடித்து, சச்சின் சென்சுரி அடித்தது அப்படியே ரிவர்ஸ் ஆனது. இந்த டெஸ்ட்டில் சச்சின் டபுள் சென்சுரி, டிராவிட் சென்சுரி. இந்தியா 609 ரன்களில் இருக்க சச்சின் டபுள் சென்சுரி அடித்து முடித்ததுமே (201*), இன்னிங்ஸ் வெற்றி நிச்சயம் என்கிற கெத்தில் கங்குலி டிக்ளேர் செய்தார்.

முதலும் கடைசியும்
ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக 1992-ல் உலகக்கோப்பை போட்டியில் அறிமுகமானவர், 2003-ல் உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராகத்தான் கடைசிப்போட்டியையும் விளையாடினார்.

கங்குலி போட்ட கணக்கும் தவறாகவில்லை. முதல் இன்னிங்ஸில் 382 ரன்களில் ஆல் அவுட் ஆனது ஜிம்பாப்வே. ஆல் அவுட் ஆனாலும் ஆண்டி ஃப்ளவர் அரைசதம், அவரது சகோதர் கிரான்ட் ஃப்ளவர் சதம் என ஜிம்பாப்வேயின் பேட்டிங் கொஞ்சம் வலுவாகவே இருந்ததை கங்குலி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆட்டம் நான்காவது நாளுக்குப் போனதால் ஸ்பின்னர்களை வைத்து ஜிம்பாப்வேயின் கதையை முடித்துவிடலாம் எனக் கணக்குப்போட்டு ஃபாலோ ஆன் அறிவித்தார் கங்குலி.

ஜிம்பாப்வே மீண்டும் பேட்டிங் ஆட ஆரம்பித்தது. கங்குலி எதிர்பார்த்ததுபோலவே ஆஃப் ஸ்பின்னரான சரண்தீப் சிங் முதல் மூன்றுவிக்கெட்டுகளைத் தூக்கிவிட்டார். 61 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் காலி. இந்தியா ஈஸியாக வெற்றிபெற்றுவிடும் என்கிற நிலையில்தான் அலிஸ்டர் கேம்ப்பலோடு சேர்ந்து இந்தியாவின் ஸ்பின்னர்களை ஈவு, இரக்கம் பார்க்காமல் அடிக்க ஆரம்பித்தார் ஆண்டி ஃப்ளவர். டெஸ்ட் போட்டிகளில்கூட ஒருவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவார், ரிவர்ஸில் இத்தனை பவுண்டரிகளை அடிப்பார் என்பதை உலகம் அன்றுதான் பார்த்தது.

Andy Flower
Andy Flower
Photo: ICC

நான்காவது நாள் ஆட்டத்தின் லன்சுக்குப் பிறகு சேர்ந்த இந்தக் கூட்டணியைப் பிரிக்க படாதபாடுபட்டார் கங்குலி. சரண்தீப் சிங், சுனில் ஜோஷி, சச்சின் டெண்டுல்கர் என மூன்று ஸ்பின்னர்களைப் பயன்படுத்திப் பார்த்தார். ஆண்டி ஃப்ளவர் கொலைவெறியில் இவர்கள் மூவரையும் ரிவர்ஸ் ஸ்வீப்களால் சுழற்றியடிக்க வேகப்பந்து வீச்சாளர்களை அழைத்துவந்தார் கங்குலி. ஶ்ரீநாத், ஜகீர் கான், அகர்கர் என இந்த வேகப்பந்து வீச்சாளர்கள்தான் டயர்ட் ஆனார்களே தவிர ஆண்டி ஃப்ளவரும், கேம்பலும் அசரவில்லை. ஶ்ரீநாத் எல்லாம் `இனி என்னை பெளலிங் போட கூப்பிடாதீங்கடா' என்பதுபோல கங்குலியை முறைக்க ஆரம்பித்துவிட்டார்.

ஃபாலோ ஆனில் இருந்த ஜிம்பாப்வே லீடிங்கில் போக ஆரம்பித்து நான்காவது நாள் ஆட்டம் முடிந்தது. ஆண்டி ஃப்ளவர் 88 ரன்கள், அலிஸ்டர் கேம்ப்பெல் 83 ரன்களில் இருந்தார்கள்.

232 ரன் சாதனை
ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோராக ஆண்டி ஃப்ளவர் அடித்த 232 ரன்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்றுவரை சாதனை.

கடைசி நாள். கங்குலி மீண்டும் தன் பெளலர்களை நம்பினார். ஆனால், பெளலர்கள் யாரும் தங்களை நம்பாததால் ஆண்டி ஃப்ளவரின் ஆட்டம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஜாகீர் கான் பெளலிங்கில் வீழ்ந்தார் கேம்ப்பெல். ஆனால், ஃப்ளவரை அசைக்கமுடியவில்லை. மீண்டும் ஸ்பின், ஸ்பீடு என அந்த 6 பெளலர்களையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திப் பார்த்த கங்குலி ஒரு கட்டத்தில் வெறியானார். ஆட்டம் டிராவை நோக்கிப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டார். ஆனால், ஆண்டி ஃப்ளவரை அவுட் ஆக்காமல் விடுவது தனக்கு அவமானம் என நினைத்தார்.

பெளலர்கள் ஏமாற்றியதால் பேட்ஸ்மேன்கள் மேல் முரட்டு நம்பிக்கைவைத்தார். சடகோபன் ரமேஷைக் கூட்டி வந்து ஆஃப் ஸ்பின் போடவைத்தார். அடுத்து ராகுல் டிராவிட் வந்து ஆஃப் ஸ்பின் போட்டார். அடுத்து கங்குலியே களம் இறங்கி ஆஃப் ஸ்பின் போட்டார். மிதவேகப்பந்து வீச்சாளரான கங்குலி, பிட்ச் ஸ்பின்னுக்குச் சாதகமாக இருக்கிறது என ஆஃப் ஸ்பின் போட்டார். ஆனால், ஆண்டி ஃப்ளவர் டபுள் சென்சுரி அடித்தார்.

Andy Flower and Grand Flower
Andy Flower and Grand Flower

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. டீமின் 10-வது பெளலராக ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிவ் சுந்தர் தாஸையும் பெளலிங் போட அழைத்துவந்தார் கங்குலி. முதல்முறையாக விக்கெட் கீப்பரைத் தவிர்த்து மற்ற 10 இந்திய வீரர்களும் பெளலிங் போட்ட முதல் மேட்ச் அதுவாகத்தான் இருக்கும். 10 பெளலர்கள் பெளலிங் போட்டும் கடைசி வரை ஆண்டி ஃப்ளவரின் விக்கெட்டைத் தூக்கமுடியவில்லை. ஆண்டி ஃப்ளவரைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்தது இந்தியா. இறுதியில் ஆட்டம் ட்ரா.

இப்படி ரிவர்ஸ் ஸ்வீப்களின் மாஸ்டராக மாறினார் ஆண்டி ஃப்ளவர். ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து ஆண்டி ஃப்ளவர் அவுட் ஆன போட்டிகள் மிகவும் குறைவு. ஆண்டி ஃப்ளவரின் பாதிப்பால் அப்போதைய ஜிம்பாப்வே டீமே ரிவர்ஸ் ஸ்வீப்களை அசால்ட்டாக ஆட ஆரம்பித்தது.

ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், அணில் கும்ப்ளே, ஜெயசூர்யா, ஹர்பஜன் சிங் என உலகின் டாப் ஸ்பின்னர்கள் அனைவரையுமே மிரட்டிய ஒரே பேட்ஸ்மேன் ஆண்டி ஃப்ளவராகத்தான் இருக்கமுடியும். 2003 உலகக்கோப்பையின்போது ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராகப் போர்க்கொடித்தூக்கினார் ஆண்டி ஃப்ளவர். கறுப்பு பேட்ஜ் அணிந்து போட்டிகளில் ஆடினார். இதனால் ஜிம்பாப்வே நிர்வாகம் ஆண்டி ஃப்ளவரை ஒதுக்கியது. முறையான வழி அனுப்புதல்கள் எதுவுமின்றி கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார் ஃப்ளவர்.

ஆனால், பயிற்சியாளராக ரிவர்ஸ் ஸ்வீப் டெக்னிக்கை இங்கிலாந்து வீரர்களுக்குக் கடத்தினார். ரிவர்ஸ் ஸ்வீப்களின் வழியே ஃப்ளவர் பவர் கிரிக்கெட்டில் தொடரும்!

அதிரடி பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால், ஸ்ட்ரைக் ரேட் எப்போதும் சென்சுரியில் இருக்கும். அவர்தான் அண்டர் ஆர்ம்ஸின் அடுத்த நாயகன்? யார் என யூகிக்க முடிகிறதா?

அண்டர் ஆர்ம்ஸில், `இந்த வீரர்களைப் பத்தி பேசாம எப்படி?' என நீங்கள் நினைக்கும் கிரிக்கெட் வீரர்களை கமென்ட்ஸில் தெரிவியுங்கள்!