Election bannerElection banner
Published:Updated:

மிரட்டும் இந்திய பெளலிங்... ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களா இப்படித் திணறுவது?! #AUSvIND #DAY3

#AUSvIND
#AUSvIND ( Asanka Brendon Ratnayake )

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, இரண்டு ரன் முன்னிலையுடன் முடித்துள்ளது. ஆட்டம் இப்போது இந்தியாவின் பக்கம் இருக்கிறது. ஆனால், நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!

பரபரப்பான 'பாக்ஸிங் டே' டெஸ்ட் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. ஐபிஎல் போல பொழுதுபோக்காய் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் எந்த அளவுக்கு உணர்வுப் பூர்வமானதென்பதை ஒவ்வொரு நாளும் நிருபித்துக் கொண்டிருக்கிறது மெல்போர்ன் மைதானம்.

ஆஸ்திரேலியாவை விட அதிகமாக முதல் இன்னிங்ஸில் 131 ரன்களை இந்தியா எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, இரண்டு ரன் முன்னிலையுடன் முடித்துள்ளது. ஆட்டம் இப்போது இந்தியாவின் பக்கம் இருக்கிறது. ஆனால், நாளை என்ன வேண்டுமனாலும் நடக்கலாம்!

நேற்றைய ஆட்டத்தை, 82 ரன்கள் முன்னிலையுடன் முடித்திருந்த இந்தியா, இன்றைய போட்டியைத் தொடர்ந்து ஆட ஆரம்பித்தது. நேற்று சதத்தைத் தொட்ட ரஹானேவும், அரைச் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஜடேஜாவும் களத்தில் இறங்கினர். முதல் அரை மணி நேரத்திற்கு, இருவரும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல், ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் கொடுத்தனர். நேற்றைப் போலவே ஒரு கிளாசிக்கல் பேட்டிங்கை இந்தக் கூட்டணி வெளிப்படுத்த, இந்தியாவின் ரன்கள் உயர்ந்தன.

#AUSvIND | Ravindra Jadeja
#AUSvIND | Ravindra Jadeja
twitter.com/BCCI

99 ரன்கள் லீடிங்கில் எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. 200+ ரன்கள் லீட் எடுத்தால், இந்தியாவின் வெற்றியும் கிட்டத்தட்ட உறுதியாகும் என்கிற சூழலில் நாதன் லயானை உள்ளே கொண்டு வந்தார் கேப்டன் டிம் பெய்ன். லயானை டார்கெட் செய்து ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ஜடேஜா சற்று பதற்றத்துடனே காணப்பட்டார். அந்தப் பதற்றத்தின் காரணமாய், 'இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?!' என காட்சிப் பிழை ஏற்படுத்துவது போன்ற அந்த சம்பவம் அரங்கேறியது! 49 ரன்களுடன் ஸ்ட்ரைக்கில் நின்றார் ஜடேஜா! அந்த ஒரு ரன்னை எட்டி, அரைசதத்தைத் தொட வேண்டுமென்ற பரபரப்பு, அவரிடம் நிரம்பவே காணப்பட்டது.

லயான் வீசிய பந்தை அடித்த ஜடேஜா, தூரத்தைக் கணிக்காமல் ரஹானேவை ஓட அழைத்தார். அதற்குள் பந்து லாபுசேனின் கைக்குப் போய், அவரிடமிருந்து பெய்னின் பிடிக்குள் அடங்க, ரஹானே எதிர்முனையை அடைவதற்குள் ஸ்டம்புகள் தகர்க்கப்பட்டன. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ரஹானேவால் கோலிக்கு நடந்தது, திரும்பவும் அச்சுப் பிசகாமல், இன்று ஜடேஜாவால் ரஹானேவுக்கு நடந்தது. தான் ரன் அவுட் ஆனாலும், ஜடேஜாவுக்கு அடுத்து எப்படி ஆட வேண்டும் என சில வியூகங்களை வகுத்துக்கொடுத்துவிட்டுப் போனார் ரஹானே.

அந்த வியூகங்களின்படியே அரை சதத்தைக் கடந்து, தன் ஸ்டைலில் கொண்டாட்டத்தை செய்த ஜடேஜாவின் ஆட்டமும் வெகு நேரம் நிலைக்கவில்லை. ஷார்ட் பாலினால் அவரை வீழ்த்த, ஆஸ்திரேலியா ஸ்டார்க் மூலமாக வலைவிரிக்க, கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஜடேஜா வெளியேறினார். ஸ்டார்க்கின் வெற்றிக் கொண்டாட்டம், சொன்னது அது ஜடேஜாவுக்கு வைக்கப்பட்ட பொறி என்பதனை.

லாபுசேன்
லாபுசேன்
Asanka Brendon Ratnayake

இந்தியாவின் டெய்ல் எண்டர்களின் கதை எப்போதும் தெரிந்த கதைதானே! முதல் அரை மணி நேரத்திற்கு விக்கெட் விழாமல் தொடர்ந்த இந்தியா, கடைசி 90 நிமிடங்களில் வரிசையாக ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக கடைசி 50 பந்துகளில், 20 ரன்களை மட்டுமே எடுத்து, நான்கு விக்கெட்டுகளை இழந்தது. 131 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

ரஹானே ஆட்டமிழந்த முறை வலி தருவதாக இருந்ததென்றால், ஜடேஜாவுடனான அவரது கூட்டணி, இன்னும் கொஞ்ச நேரம் நிலைத்திருந்தால், இந்தியா 400-ஐ தொட்டிருக்கலாமே என்றே தோன்றியது! 64/3 என்று தவித்த அணியாகப் பார்த்தால், இது நல்ல லீட் தான்! ஆனால் ரஹானே ஆடிய அற்புத ஆட்டத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த ரன் லீட் மிகக் குறைவானதே! சுருக்கமாய்ச் சொன்னால், ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாய் முதல் செஷனைத் தங்கள் பக்கம் கொண்டுபோய்விட்டது.

இரண்டாவது செஷன், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸுடன் தொடங்கியது. ரன்களை நோக்கி ஓடிய இந்தியாவின் ஓட்டம் தற்போது, விக்கெட்டுகளை நோக்கியதாக மாறியது! இந்த இன்னிங்ஸிலும் இந்திய பெளலர்கள் கண்ணும் கருத்துமாய் பந்துவீசினார்கள். தொடக்கம் முதலே தோட்டாவாய்ப் பாய்ந்த பந்துகள் பயமுறுத்தின. முதல் இன்னிங்ஸில், விக்கெட் எதுவும் வீழ்த்தாத உமேஷ், போட்டியின் நான்காவது ஓவரிலேயே, ஜோ பர்ன்ஸை ஆட்டமிழக்கச் செய்து இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டினார். ப்ரித்வி ஷாவின் ஆஸ்திரேலிய வெர்ஷனாக உருவெடுத்துள்ள பர்ன்ஸ் வெறும் 4 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து உள்ளே வந்தார் லாபுசேன்!

எட்டாவது ஓவரை ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் எட்டி இருந்தபோது, பந்து வீச வந்த உமேஷ் காயம் காரணமாக வெளியேறினார். துல்லியமான பந்துகளை இன்று வீசிக் கொண்டிருந்த அவர் வெளியே போனது அணிக்கான பின்னடைவாய்ப் பார்க்கப்பட்டது! பர்ன்ஸும், லாபுசேனும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி, பார்ட்னர்ஷிப் பில்டப் ஆன தருணத்தில், லாபுசேனின் விக்கெட்டை எடுத்து அதிர்ச்சி தந்தார் ரவிச்சந்திர அஷ்வின். இரண்டாவது செஷனின் முடிவில், இரண்டு விக்கெட்டுகளை இந்தியா எடுத்தது.

#AUSvIND
#AUSvIND
Asanka Brendon Ratnayake

இந்நாளைய இறுதி செஷன் தொடங்கியது. இரண்டு விக்கெட்டுகள் விழுந்துவிட்டதுதான் எனினும் ஸ்மித் களத்தில் நின்றது, இந்திய வீரர்களை மூச்சுத் திணறச் செய்தது. இவரை வெளியேற்றினால்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் என இந்தியா யோசிக்கத் தொடங்கியது. அஷ்வின்தான் ஸ்மித்தை ஏதாவது மாயாஜாலம் நிகழ்த்தி வீழ்த்த வேண்டும்! இல்லாவிடில் முந்தைய மூன்று இன்னிங்ஸிலும் அடிக்காததைச் சேர்த்து வைத்து, ருத்ரதாண்டவம் ஆடி விடுவாரே என்ற பயம் உள்ளே உருண்ட நேரத்தில், ஸ்மித்தின் லெக் ஸ்டம்ப்பை சிதறச் செய்தது பும்ராவின் பந்து. இந்திய வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் ரிலாக்ஸ் ஆனார்கள்.

இந்தத் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஸ்மித் அடித்திருக்கும் ரன்கள் 10 மட்டுமே! இந்தியர்களுக்கு எதிராக சர்வசாதாரணமாக சதமடிக்கும் ஸ்மித், இந்தத் தொடரில், தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

ஸ்மித்தைத் தொடர்ந்து உள்ளே வந்த ஹெட், மேத்யூ வேடுடன் கைகோத்தார். இந்தக் கூட்டணியும் வெகு நேரம் நிலைக்கவில்லை. ஓப்பனராக இறங்கி, அணியை நங்கூரம் பாய்ச்சி நிறுத்திக் கொண்டிருந்த, வேடின் விக்கெட்டை, ஜடேஜா எல்பிடபிள்யூ மூலமாக வீழ்த்தி அசத்தினார். இதற்கடுத்த சில ஓவர்களிலேயே, சிராஜ் ஹெட்டையும், ஜடேஜா பெய்னையும் ஆட்டமிழக்கச் செய்ய ஆறு விக்கெட் வீழ்ந்த நிலையில் அல்லாடத் தொடங்கியது ஆஸ்திரேலியா. வரிசையாய் அடுத்தடுத்த ஐந்து ஓவர்களில், இந்த மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது இந்திய பெளலிங் யூனிட்!

இந்தக் கட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்தியாவைவிட 32 ரன்கள் பின்தங்கி இருந்தது! 'மிச்சமுள்ள நான்கு விக்கெட்டுகளை இந்தியா வீழ்த்தினால் இன்னிங்ஸ் வெற்றியே பெறலாமே, நடக்குமா அது?!' என கண்கள் ஒளிர கனவு காணத் தொடங்கினர் இந்திய ரசிகர்கள்! 99/6 என்று திணறிய ஆஸ்திரேலியாவை, ஏழாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு ஒன்று சேர்ந்த கிரீனும், கம்மின்ஸும் ஆபத்தான நிலையிலிருந்து மீட்டு லீடிங்கில் கொண்டுவந்துவிட்டனர்.

#AUSvIND
#AUSvIND
Asanka Brendon Ratnayake

அஷ்வின் பந்து வீச்சில் கம்மின்ஸ் கொடுத்த வாய்ப்பை, பன்ட் கோட்டை விட்டார். இன்று கம்மின்ஸின் விக்கெட் விழாமல் போனதன் விலை என்ன என்பது நாளைதான் தெரிய வரும்!

மிச்சமுள்ள நாலு விக்கெட்டுகளை எடுக்க இந்தியா நாளை எத்தனை ஓவர்களை எடுத்துக் கொள்ளப் போகிறது என்பதில்தான் இருக்கிறது எல்லாமுமே! ஒரு மோசமான செஷன், அதுவரை போட்ட மொத்த உழைப்பையும் வீணாக்கி விடும் என்பதை இந்தியா அடிலெய்டில் கற்றுக்கொண்டிருக்கிறது.

இரண்டு ரன்கள் லீடோடு முடித்திருக்கும் ஆஸ்திரேலியர்கள், இனி அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் இந்தியாவுக்கான டார்கெட். டெய்ல் எண்டர்களை ரன் சேர்க்கவிட்டுவிட்டால் வெற்றிக் கனவு, வெறும் கனவாக மாறி விடும் என்பதை உணர்ந்து, இந்தியா நாளை மிச்சமுள்ள விக்கெட்டுகளையும் விரைவாய் வீழ்த்த வேண்டும்! அப்போதுதான் இந்தப் போட்டியில் வெற்றியும் கைகூடும். டெஸ்ட் சாம்பியன்ஸுக்கான தகுதி இந்தியாவுக்கு இருக்கிறதென்பதும் நிரூபணமாகும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு