Published:Updated:

சென்னையின் 30 ப்ளஸ், சன்ரைசர்ஸின் 100 பர்சன்ட், கிங்ஸ் லெவனின் சிக்கனம்… Auction ஹைலைட்ஸ்! #IPL

Pat Cummins
Pat Cummins

நாதன் கூல்டர்நைலை வாங்க மும்பை இந்தியன்ஸுடன் மல்லுக்கட்டித் தோற்ற சூப்பர் கிங்ஸ், சக ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட்டை வாங்கியிருக்கிறது. ஹேசில்வுட்டின் வேகமும், பௌன்சர்களும் அணிக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும்.

2020 ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் முடிந்துவிட்டது. மேக்ஸ்வெல், கம்மின்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் கோடிகளைக் குவிக்க, இளம் இந்திய வீரர்கள் பலரும் முதல் ஐ.பி.எல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். சென்னை, மும்பை போன்ற அணிகள் பேக் அப் வீரர்களில் கவனம் செலுத்த, பஞ்சாப், பெங்களூர் போன்ற அணிகள் பல மாற்றங்களைச் செய்துள்ளன. இந்த ஏலத்தில் ஒவ்வோர் அணியின் செயல்பாடும் எப்படி இருந்தது, எந்தெந்த அணிகள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன?

`பிரச்னைக்கு தீர்வு காண வன்முறை வழி ஆகி விடக் கூடாது!’ - ரஜினிகாந்த் ட்வீட்  #NowAtVikatan

சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த ஆண்டு ஆடிய அணியில் 20 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்ட சூப்பர் கிங்ஸ், நேற்று 4 வீரர்களை வாங்கியிருக்கிறது. டுவைன் பிராவோவுக்கான எதிர்கால மாற்றாக சாம் கரணை வாங்கியிருக்கிறார்கள். அவர் பெயர் வரும்வரை அமைதியாக இருந்த மஞ்சள் படை, கரணுக்காக கொஞ்சமும் யோசிக்காமல் டெல்லியோடு போரிட்டது. சென்னையின் ஸ்லோ பிட்ச்களில், அவரது கட்டர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்பதால், அவரது வருகை அணிக்கு பலம் சேர்க்கும். பியூஷ் சாவ்லாவுக்கு ரூ.6.75 கோடி கொடுத்ததற்காக சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு அதுவொன்றும் மோசமான வியாபாரம் இல்லை. 30 வயது வீரருக்கு இந்தத் தொகை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், இந்த ஏலத்தில் அனுபவ ஸ்பின்னர்கள் இல்லையென்பதாலேயே ஏலத்தொகை ஏறியது.

Sai Kishore
Sai Kishore
TNPL

நாதன் கூல்டர்நைலை வாங்க மும்பை இந்தியன்ஸுடன் மல்லுக்கட்டித் தோற்ற சூப்பர் கிங்ஸ், சக ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட்டை வாங்கியிருக்கிறது. ஹேசில்வுட்டின் வேகமும், பௌன்சர்களும் அணிக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும். ஏலத்தின் இறுதியில், சையது முஸ்தாக் அலி தொடரின் டாப் விக்கெட் டேக்கரான தமிழக வீரர் சாய் கிஷோரை ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம், தற்போதைய சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாவது தமிழக வீரரானார் சாய் கிஷோர்.

``ஐ.பி.எல் வாய்ப்பு நம் கையில் இல்லை!” - டாப் ஸ்பின்னர் சாய் கிஷோர்
CSK ஏலத்தின் காஸ்ட்லி வீரர்: பியூஷ் சாவ்லா - ₹ 6.75 கோடி

டெல்லி கேபிடல்ஸ்

27.85 கோடி ரூபாயோடு ஏலத்திற்குள் நுழைந்த டெல்லி அணி ஹிட்மேயர், ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ் என 5 முன்னணி வெளிநாட்டு வீரர்களை வாங்கியிருக்கிறது. ஏலத்தின் தொடக்கத்திலிருந்தே மிகவும் ஆக்டிவாக இருந்தது கேபிடல்ஸ். மோர்கன், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், சாம் கரண் என ஒவ்வொரு பெரிய பெயருக்கும் பேடிலை உயர்த்திக்கொண்டே இருந்தார் பார்த் ஜிண்டால். ரஹானே, தவான், பிரித்வி ஷா என மூன்று ஓப்பனர்கள் இருக்கும் நிலையிலும், ஜேசன் ராயை வாங்கியதைப் புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமம்தான். குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்று மளிகைப் பொருள்களை ஸ்டாக் வாங்குவதுபோல், ஜேசன் ராய்க்கு யாரும் போட்டி போடாத நிலையில் கையைத் தூக்கிவிட்டது டெல்லி.

Shimron Hetmyer
Shimron Hetmyer

முன்னாள் வீரர்கள் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் இருவருக்கும் கடுமையாகப் போட்டியிட்டு இழந்தது கேபிடல்ஸ். மேக்ஸ்வெல்லுக்குப் பதில் ஹிட்மேயரை வாங்கிய அந்த அணி, கம்மின்ஸுக்கு நிகரான ஒரு வேகப்பந்துவீச்சாளரை வாங்கவில்லை. கிறிஸ் வோக்ஸை வாங்கியிருந்தாலும், கடந்த ஆண்டைப் போல் ரபாடா இல்லாத ஒரு நிலைமை வந்தால், அவரால் அதைச் சமாளிக்க முடியாது. ஜேசன் ராயை வாங்காமல் இருந்திருந்தால், அவருக்குப் பதில் ஒரு நல்ல வேகப்பந்துவீச்சாளரை வாங்கியிருக்கலாம். கெசரிக் வில்லியம்ஸ் போன்ற பௌலர் அன்சால்டு பட்டியலில் இருக்கிறார். ஆனால், அணியில் இடமிருக்கவேண்டுமே!

DC ஏலத்தின் காஸ்ட்லி வீரர்: ஷிம்ரான் ஹிட்மேயர் - ₹ 7.75 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஏலத்தின் போக்கைப் பெரும்பாலும் நிர்ணயித்தது கிங்ஸ் லெவன்தான். 42.70 கோடியுடன் களமிறங்கிய பஞ்சாப், 30.7 கோடியைச் செலவு செய்தது. டெல்லியுடன் போட்டியிட்டு ரூ.10.75 கோடிக்கு, முன்னாள் வீரர் மேக்ஸ்வெல்லை மீண்டும் மொஹாலிக்குத் திருப்பியது அந்த அணி. உத்தப்பா, மோரிஸ் இருவருக்கும் போட்டியிட்டுப் பின்வாங்கிய கும்ப்ளே, ஷெல்டன் காட்ரலுக்கு முழு வீச்சில் போட்டியிட்டார். முதலில் ராஜஸ்தான் ராயல்ஸுடனும், பின்னர் டெல்லியுடனும் போட்டியிட்டு, அந்த வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளரை எட்டரைக் கோடி ரூபாய்க்கு வாங்கியது கிங்ஸ் லெவன்.

Glenn Maxwell
Glenn Maxwell
AP

அந்த இரண்டு வீரர்களையும் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், மற்ற வீரர்களைக் குறைந்த விலைக்கு வாங்கியது பஞ்சாப். டெத் பௌலர்கள் இல்லாத குறையைப் போக்க, கிறிஸ் ஜோர்டனை (ரூ.3 கோடி) வாங்கிய அந்த அணி, நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷமை வெறும் 50 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. 4 ஒவர்கள் பௌலிங் போடக்கூடிய, ஒரு அட்டகாசமான ஹிட்டரை எந்த அணியும் வாங்க நினைக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான். தீபக் ஹூடா, இஷான் போரல், தஜிஞ்சர் சிங் தில்லன், பிரம்சிம்ரன் சிங் போன்ற நம்பிக்கையான வீரர்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, வழக்கம்போல் பெரும் தொகையை மிச்சம் செய்தது ஜிந்தா அண்ட் கோ!

KXIP ஏலத்தின் காஸ்ட்லி வீரர்: கிளென் மேக்ஸ்வெல் - ₹ 10.75 கோடி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா அணியின் செயல்பாடு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது. நேற்றைய ஏலத்தில், அந்த அணி புதிய கேப்டனை வாங்கக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஏலத்துக்கு முன்பு, “நைட்ரைடர்ஸ் மோர்கன் அல்லது ஃபின்சை வாங்கக்கூடும்” என்று சஞ்சய் பங்கர் கூடக் கூறியிருந்தார். எல்லோரும் எதிர்பார்த்ததுபோல் தொடக்கத்திலேயே மோர்கனை (ரூ.5.25 கோடி) வாங்கியது கொல்கத்தா. ஆனால், அதோடு மட்டும் நிற்காமல் ஃபின்சுக்கும் கூடப் போட்டியிட்டது. சரி, எப்படியும் மோர்கனைக் கேப்டனாக அறிவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க, “நிச்சயம் தினேஷ் கார்த்திக்தான் கேப்டன்” என்று அறிவித்தது நிர்வாகம்.

Eoin Morgan
Eoin Morgan

அந்த முடிவை எடுத்ததோடு மட்டுமல்லாமல், அணிக்கு என்ன தேவை என்பதுவரைத் தெளிவாக அவரிடம் ஆலோசித்து, அவரது தேவைகளையும் பூர்த்தி செய்திருக்கிறார்கள். தமிழக வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சித்தார்த் போன்றவர்களை வாங்கிய பின், “தினேஷ் கார்த்திக் அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால் அவர்களை வாங்க முடிவெடுத்தோம்” என்று கூறினர். கோச்சிங் டீம் மாறியிருந்தாலும், மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யாமல், கேப்டனுக்கு மரியாதை கொடுத்து சரியாகத் திட்டமிட்டிருப்பது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது.

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸை ரூ.15.50 கோடிக்கு வாங்கி, அவரை ஐ.பி.எல் தொடரின் காஸ்ட்லியான வெளிநாட்டு வீரராக்கியது கொல்கத்தா. கொல்கத்தாவும், டெல்லியிடம் 14.75 கோடி வரை கடுமையாகப் போட்டியிட, கடைசி நேரத்தில் புகுந்து ஆட்டையைக் கலைத்தது நைட்ரைடர்ஸ். இங்கிலாந்து ஓப்பனர் டாம் பேன்டன் (ரூ.1 கோடி), ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிறிஸ் கிரீன் (ரூ.20 லட்சம்) ஆகியோரைக் குறைந்த விலைக்கு வாங்கியது, அந்த அணிக்கு மிகப்பெரிய ஆதாயம். 48 வயது வீரர் பிரவீன் தாம்பேவை வாங்கியது அனைத்து அணிகளின் பாராட்டையும் பெற்றது.

KKR ஏலத்தின் காஸ்ட்லி வீரர்: பேட் கம்மின்ஸ - ₹ 15.50 கோடி

மும்பை இந்தியன்ஸ்

ஏலத்தின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய ஷாக் கொடுத்தது மும்பை இந்தியன்ஸ். ஏலத்தின் முதல் பெயராக கிறிஸ் லின் வந்ததும், உடனே பேடிலை உயர்த்தினார் ஜூனியர் அம்பானி. சரி, ஒரு மிகப்பெரிய யுத்தம் தொடங்கப்போகிறது, கோடிகள் கொட்டப்போகிறது என்று எதிர்பார்த்த நிலையில், மற்ற 7 அணிகளுமே சைலன்ட் மோடுக்குச் சென்றுவிட்டன. ஆபத்தான பேட்ஸ்மேன் கிறிஸ் லின், தன்னுடைய அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கே ஏலம் போனார்! ஆக்‌ஷனீயர் எட்மீடஸ் சுத்தியலைத் தட்டியபோது நீதா அம்பானி கொடுத்த ரியாக்‌ஷன், அத்தனை பேரின் ரியாக்‌ஷனையும் பிரதிபலித்தது.

Lynn
Lynn
Twitter- t10 league

கிறிஸ் லின்னை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய மும்பை, கூல்டர்நைலை சென்னையோடு போட்டியிட்டு ரூ.8 கோடிக்கு வாங்கியது. மோசின் கான், திக்விஜய் தேஷ்முக், பிரின்ஸ் பல்வந்த் ராய் சிங் ஆகியோரை அவர்களின் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கிய மும்பை, சௌரப் திவாரியை ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது.

MI ஏலத்தின் காஸ்ட்லி வீரர் : நாதன் கூல்டர்நைல் - ₹ 8.00 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

டிராவிட் காலத்து ராஜஸ்தான் ராயலஸ் இஸ் பேக்! கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் வீரர்களுக்கும்கூட கோடிகளைச் செலவு செய்துகொண்டிருந்த ராயல்ஸ், இப்போது மீண்டும் அறியப்படாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், அனிருதா ஜோஷி, கார்த்திக் தியாகி போன்ற வீரர்களையும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் யஷாஷ்வி ஜெய்ஸ்வாலையும் வாங்கியிருக்கிறது ராயல்ஸ். ஜெய்ஸ்வாலை வாங்க மும்பையும் கொல்கத்தாவும் போட்டி போட்டுக்கொண்டிருக்க, கடைசியில் களமிறங்கி அவரை வென்றது ராஜஸ்தான். இந்த இளம் வீரர்களோடு, அனுபவ உத்தப்பா, உனத்கட் இருவரையும் தலா ரூ.3 கோடிக்கு வாங்கியது அந்த அணி.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

வெளிநாட்டு வீரர்கள் விஷயத்தில் ராயல்ஸின் செயல்பாடு கொஞ்சம் கேள்வி எழுப்புவதாக இருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித், பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய நால்வரையும் நிச்சயம் களமிறக்குவார்கள். அவர்களுக்கான மாற்று வீரர்களை வாங்குவதுதான் அவர்களின் தேவையாக இருந்தது. ஆனால், அவர்கள் சரியான மாற்று வீரர்களை வாங்கவில்லை. ஸ்மித்துக்கு மில்லர் ஓகே. ஆனால், ஸ்டோக்ஸ், பட்லர் போன்றவர்களுக்கு மாற்றை வாங்கவில்லை. ஏலத்தின் இறுதிக்கட்டத்தில் ஒஷேன் தாமஸ், ஆண்ட்ரே டை, டாம் கரண் என பௌலர்களாக வாங்கிக் குவித்திருக்கிறார்கள். பட்லர், ஸ்டோக்ஸ், ஸ்மித் மூவரில் இருவர் ஆடமுடியாத நிலை ஏற்பட்டால், ராயல்ஸின் நிலை கவலைக்கிடமாகிவிடும்.

RR ஏலத்தின் காஸ்ட்லி வீரர்கள்: ராபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனத்கட் - ₹ 3.00 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

வழக்கம்போல் ஒருசில ஸ்டார் வீரர்களுக்கு நேற்றும் முழு வீச்சில் போட்டியிட்டது ராயல் சேலஞ்சர்ஸ். ஆனால், நேற்று ஏலத்தில் பங்கேற்ற புதிய பயிற்சியாளர் குழுவின் திட்டத்திலிருந்த மாற்றம் என்னவென்றால், ஒரு கட்டத்துக்குப் பின் ஏலத்தில் பின்வாங்கியதுதான். கம்மின்ஸுக்காகத் தொடக்கத்திலிருந்தே கடுமையாகப் போட்டியிட்ட ஆர்.சி.பி, கொல்கத்தா களமிறங்கியதும் பின்வாங்கியது. கம்மின்ஸை தவறவிட்ட சிறிது நேரத்திலேயே, மோரிஸை வாங்கப் போட்டியிட்டது. இந்த ஏலத்தில் பங்கேற்ற அனுபவம் + குவாலிட்டி கொண்ட ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், மோரிஸுக்கான டிமாண்ட் எகிறியது. கடந்த ஐ.பி.எல் தொடரிலும் சரி, சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க டி-20 லீகிலும் சரி, மோரிஸின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால், ஸ்டோய்னிஸ், கிராந்தோம் போன்ற முன்னாள் வீரர்களை வாங்க விரும்பாததால், மோரிஸை வாங்கவேண்டியது கட்டாயமானது.

Chris Morris
Chris Morris
AP

ஆரோன் ஃபின்ச் இதுவரை ஐ.பி.எல் தொடரில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், கோலி, டி வில்லியர்ஸ் இருவரை மட்டுமே நம்பியிருக்கும் அந்த அணியின் பேட்டிங் யூனிட், இவரது வருகையால் நிச்சயம் பலமாகும். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷுவா ஃபிலிப்பை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது மிகப்பெரிய போனஸ். இவரை வாங்கியிருப்பது, கீப்பர், ஓப்பனர் என இரண்டு பாக்ஸ்களை டிக் செய்வதோடு, அவரது ஃபார்ம் பெங்களூருக்குப் பல ஆப்ஷன்களைக் கொடுக்கிறது. இளம் வீரர் தேவ்தத் படிக்கலைக் களமிறக்குவதற்கான சாத்தியங்களை அது ஏற்படுத்தியிருக்கிறது. அடிப்படை விலைக்கு பவன் தேஷ்பாண்டேவை வாங்கியது நல்ல மூவ். இரண்டு முறை விற்பனையாகாத டேல் ஸ்டெய்னை, மூன்றாவது வாய்ப்பில் வாங்கியிருக்கிறது ஆர்.சி.பி. தென்னாப்பிரிக்க டி-20 தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் எப்படியும் இரண்டு விக்கெட்டுகளாவது வீழ்த்திக்கொண்டிருந்தார் ஸ்டெய்ன். அவரது அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். உமேஷ், மோரிஸ் போன்ற பௌலர்கள் விக்கெட் எடுப்பார்கள். ஆனால், ரன்கள் எகிறிவிடும். அப்படியான நிலையில், சிக்கனமாகப் பந்துவீசக்கூடிய பௌலர்கள் மீது பெங்களூரு கவனம் செலுத்தியிருக்கவேண்டும். உடானா நல்ல ஆப்ஷன். ஆனால், கேன் ரிச்சர்ட்சன், அதுவும் 4 கோடிக்கு? மோரிஸ், உமேஷ், ரிச்சர்ட்சன் போன்றவர்கள் ஒரே போட்டியில் ஆடினால், ஈ சாலாவும்…

RCB ஏலத்தின் காஸ்ட்லி வீரர்: கிறிஸ் மோரிஸ் - ₹ 10.00 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஒவ்வோர் அணியும் ஆக்‌ஷன் டேபிளில் Action காட்டிக்கொண்டிருந்தபோது, சூரியன் மட்டும் உதயமாகமலேயே இருந்தது. 41 வீரர்களின் பெயர்கள் படிக்கப்பட்டிருந்த நிலையில், சன்ரைசர்ஸ் நிர்வாகம் ஒருமுறைகூட பேடிலை உயர்த்தவில்லை. ஒரு முறைகூட! ஏலத்தின் 42-வது வீரராக விராத் சிங்கின் பெயர் அறிவிக்கப்பட்டபோதுதான், முதல் முறையாக அட்டெண்டெண்ஸ் போட்டது சன்ரைசர்ஸ். ஆனால், அவர்களின் செயல்பாடு இன்னொரு விதத்தில் ஆச்சர்யமளிப்பதாகவும் இருந்தது. இந்த ஏலத்தில் ஒரு வீரரைக்கூட சன்ரைசர்ஸ் போட்டியிட்டு இழக்கவில்லை. தாங்கள் பேடிலை உயர்த்திய அத்தனை வீரர்களையும் அவர்களே வசப்படுத்தினார்கள். 100% சக்சஸ்!

மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ்

விராட் சிங், இந்திய அண்டர் 19 கேப்டன் பிரியம் கார்க் இருவருக்கும் கிங்ஸ் லெவன்தான் ஏலத்தைத் தொடங்கியது. அவர்களோடு இரண்டு முறையும் போட்டியிட்ட சன்ரைசர்ஸ், இருவரையும் தலா ரூ.1.90 கோடிக்குக் கைப்பற்றியது. இருவரையும் அடுத்தடுத்து வாங்கிய அந்த அணி, மற்ற 5 வீரர்களையும் அவர்களின் அடிப்படை விலைக்கே வாங்கியது. மிடில் ஆர்டர் சிக்கலைச் சரிசெய்ய, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷை வாங்கியது நல்ல முடிவு. ஃபேபியன் ஆலனை ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது லாபம். நேற்றைய ஏலத்தில் குறைவாகச் செலவு செய்தது இந்த அணிதான். 7 வீரர்களுக்கும் சேர்த்து ரூ.7 கோடி கூட அவர்கள் செலவு செய்யவில்லை!

ஏலத்தின் காஸ்ட்லி வீரர்: மிட்செல் மார்ஷ் - ₹ 2.00 கோடி

அன்சால்டு

`தோனி இதைத்தான் செய்துகாட்டினார்; கவனம் ரிஷப் பன்ட்!' - கம்பீர் அட்வைஸ்

வழக்கம்போல் இந்த ஏலத்திலும் பல முன்னணி வீரர்கள் ‘Unsold’ லிஸ்டில் இணைந்தனர். ஒரு காலத்தில் ஐ.பி.எல் தொடரின் முன்னணி நாயகனாக இருந்த யுசுப் பதானின் ஐ.பி.எல் பயணம் இந்த முறை முடிவுக்கு வந்திருக்கிறது. ஒரு கோடி கொடுத்து எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை. புஜாரா, விஹாரி போன்ற முன்னணி டெஸ்ட் வீரர்களுக்கும் அதே நிலைதான். டி சௌத்தி, ஸ்டுவார்ட் பின்னி போன்ற சீனியர்களுக்கு டாடா காட்டிய அணிகள், ஈவின் லூயிஸ், கெசரிக் வில்லியம்ஸ், பிராத்வெயிட் போன்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களையும் புறக்கணித்தன. ஒரு மோசமான ஐ.பி.எல் சீசன், டி கிராந்தொமுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது. இருந்தாலும், யாரேனும் காயமடையும்போது நிச்சயம் அவருக்கு வைல்ட் கார்டு வாய்ப்பு காத்திருக்கும். இந்திய வீரர்கள் பிரவீன் தூபே, ஷாம்ஸ் முலானி, ரோஹன் கடம் ஆகியோரை எந்த அணிகளும் வாங்காதது ஆச்சர்யம்தான்!

அடுத்த கட்டுரைக்கு