இந்த மெகா ஏலத்தில் பெரிதும் அடிவாங்கிய அணி மும்பை இந்தியன்ஸ். ஏனென்றால் இந்திய வீரர்களுடன் கூடிய அவர்களின் கோர் அணி மற்ற எந்த ஒரு அணிக்கும் எட்டா கனியாகவே இருந்தது. ஏலத்திற்குப் பிறகான தற்போதைய அணியில் அதே வீரர்கள் பலரும் இடம்பெற்றிருந்தாலும் அந்த பழைய அணியோடு நிச்சயம் ஒப்பிட முடியாது. மேலும் கடந்த ஐ.பி.எல் தொடரில் மும்மை ப்ளே-ஆப்ஸிற்கு தகுதி பெறாததற்கான முதன்மை காரணமாக அந்த அணியின் பேட்டிங் சொதப்பலை கூறலாம். கூடவே இந்தாண்டு ஒரு புதியதொரு அணியுடன் களமிறங்க இருப்பதால் மும்மை இந்தியன்ஸ் புதிய வியூகம் ஒன்றினையே செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கும்.

அந்த அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் முதல் ஆறு வீரர்களை எந்தச் சந்தேகமும் இல்லாமல் கூறிவிடலாம். இஷன் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா ஓப்பனிங் இறங்கப் போகிறார்கள், சூர்ய குமார் யாதவ் ஒன்-டவுனில் ஆடுவார், ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் கைரன் பொல்லார்ட் மற்றும் புதிய வீரர் டிம் டேவிட் விளையாடுவார்கள். உலகின் அத்தனை டி-20 லீக் தொடர்களில் தன்னை நிரூபித்துவிட்ட டிம் டேவிட் இம்முறை ஐ.பி.எல் தொடரிலும் தன் சரவெடிகளைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம். இவர்கள் தவிர குட்டி ABD என்று அழைக்கப்படக்கூடிய டேவாலட் ப்ரேவிஸும் அணியில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து உள்ளது. ஆனால் இரண்டு வெளிநாட்டு பேட்டர்கள், இரண்டு வெளிநாட்டு பௌலர்கள் என்பதுதான் அந்த அணியின் இத்தனை வருட காம்பினேஷனாக இருப்பதால் அவர் அணியின் இடம் பெறுவது கடினம். ஒருவேளை டிம் டேவிட் சரியாக விளையாடாத பட்சத்தில் ப்ரேவிஸிற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
சரி, இப்போது 4-வது பொஷிஷனில் யார் களமிறங்குவார்? மும்பை இந்தியன்ஸை ஒரு சாம்பியன் அணியாக அதன் பெர்பார்மன்ஸிற்காக நாம் போற்றினாலும் அதைத் தாண்டி மற்றொரு விஷயத்திற்காக சேர்த்து நாம் கொண்டாட வேண்டும். இளம் வீரர்கள் பலரை கொண்டெடுத்து அவர்களின் திறமைகளை கூர்தீட்டி மிக சிறந்த வீரர்களாக உருமாற்றுவதே அந்தக் காரணம்.
அம்பத்தி ராயுடு தொடங்கி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வரிசையில் இந்தாண்டு மும்பை அணியின் ப்ளேயிங்-11-யில் இடம்பெறக்கூடிய வாய்ப்பு ஹைதராபாத்தை சேர்ந்த திலக் வர்மாவிற்கு இருக்கிறது. சையத் முஸ்தாக் அலி தொடரில் 35.83 என்னும் சராசரியுடன் 215 அடித்துள்ளார். அவரின் 147 என்னும் ஸ்ட்ரைக் ரேட் மற்றுமொரு சிறப்பம்சம். மும்பை போன்ற நட்சத்திரங்களால் நிரம்பி இருக்கும் ஒரு அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கும் போது திலக் வர்மாவிற்குத் தேவையான ஸ்பேஸும் கிடைக்ககூடும். அவருக்குப் போட்டியாக அவ்விடத்தில் அத்தனை சிறப்பான எண்களுடன் யாரும் இல்லாத காரணத்தால் திலக் வர்மாவிற்கே அதிக வாய்ப்புள்ளது.
இப்படி பேட்டர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாத நமக்கு பௌலர்களை டிக் செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. நமக்கு மட்டும் இல்லை மும்பை அணி நிர்வாகத்திற்கே இக்குழப்பம் இருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. சரி, உறுதியாக ஆடப்போகும் பௌலர்களை பார்த்துவிடுவோம். ஹர்பஜனுக்கு பிறகு மும்பை அணியின் ஸ்ப்பின்னர்களில் எவரும் பெரிய அளவில் சோபித்திருக்கவில்லை. ராகுல் சஹர் மட்டுமே கடந்த சில சீசன்களாக சிறப்பாகச் செயல்பட்டார். அதன்படி அவ்விடத்தில் மயங்க் மார்கண்டே அணியில் இடம் பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அவருக்குப் போட்டியாக தமிழக வீரர் முருகன் அஷ்வின் இருந்தாலும் மயங்க் மும்பை அணிக்காக ஏற்கெனவே ஒரு சீசனில் விளையாடி நன்றாகச் செயல்பட்டும் இருக்கிறார்.
அதற்கடுத்ததாக வேகப்பந்துவீச்சாளர்களில் முதலாவதாக இவரைத் தனியாக சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. ஐ.பி.எல் தொடரின் மிகச் சிறந்த மேட்ச் வின்னர்களுள் ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா. பௌலிங்கில் மட்டுமல்லாமல் மொத்த அணிக்கும் ஒரு தூணாக விளங்குகிறார் அவர். இன்னும் மூன்று ஸ்லாட்டில் இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கு இடமுண்டு. அதில் முதலாவதாக டைமல் மில்ஸ். இவருக்குப் போட்டியாக ரைலி மெரிடித் இருந்தாலும் அவரின் எகானமி மற்றும் டெத் பௌலிங்கில் அனுபவமின்மை ஆகியவை மில்ஸையே ரேஸின் முன்னிலையில் வைத்திருக்கிறது. மில்ஸை பொறுத்தவரை முந்தைய ஐ.பி.எல் தொடர்களில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் கடந்த டி20 உலகக்கோப்பை அவரின் டெத் பௌலிங்கிற்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. எனவே மில்ஸ் ஆடவே அதிக வாய்ப்பிருக்க அணியின் 9 வீரர்கள் முடிவாகிவிட்டது.
இப்போது மீதமுள்ள இரண்டு இரண்டு இடங்களுக்குதான் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. ஏனென்றால் அதற்கான போட்டியில் உள்ள அனைத்து பௌலர்களின் எண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே உள்ளன. வெளிநாட்டு வீரர்களாக டேனியல் சாம்ஸ், மெரிடித் மற்றும் ஃபேபியன் ஆலன், இந்திய வீரர்களில் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் உள்ளனர். ஆறாவது வீரர் டிம் டேவிடிற்குப் பிறகு யாரும் பேட்டிங் செய்யமாட்டார்கள் என்பதால் இந்த இடத்தில் குறைந்தபட்சம் ஒரு பௌலிங் ஆல்-ரவுண்டரேனும் விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது, அதேபோல மயங்க் மார்கண்டேவை தவிர வேறு எந்த ஸ்பின்னர்களும் இல்லாததால் மற்றுமொரு ஸ்பின்னரையும் எடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆல்-ரவுண்டர்களின் பட்டியலில் மீதமிருப்பது ஃபேபியன் ஆலன் மற்றும் சஞ்சய் யாதவ். இவர்கள் இருவரை வைத்து இரண்டு காம்பினேஷன்களை உருவாக்கலாம். ஒன்று சஞ்சய் யாதவ் மற்றும் டேனியல் சாம்ஸ். பௌலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் பங்காற்றக்கூடிவர் சாம்ஸ். இதுதவிர ஃபேபியன் ஆலனுடன் உனத்கட்டை ஆடவைக்கலாம். இந்த இரண்டு கூட்டணியையும் ஒப்பிட்டு பார்த்தால் ஆலன்-உனட்கட் கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. ஏனென்றால் சஞ்சய் யாதவிற்கு பெரிய அளவில் ஐ.பி.எல் அனுபவம் கிடையாது. மேலும் அவரால் நான்கு ஓவர்கள் தனியாக வீசமுடியுமா என்பதும் சந்தேகம்தான். மறுபக்கம் ஃபேபியன் கூடுதலாக தன் ஃபீல்டிங்கால் மாயாஜாலம் நிகழ்த்தக்கூடியவர். மறுபக்கம் என்னதான் தன் பௌலிங்கிற்காக உனத்கட் தொடர்ந்து கலாய்க்கப்பட்டாலும் இத்தனை வருடம் ஐ.பி.எல் அரங்கில் ஆடிய மிகப்பெரிய அனுபவத்தை வைத்திருப்பவர் அவர். பேட்டிங்கிலும் அவ்வப்போது பங்காற்றக்கூடியவர். இதனால் இவர்கள் இருவருக்குமே அதிக வாய்ப்புள்ளது.
மும்பை இந்தியன்ஸ் - Starting XI : இஷன் கிஷன் (wk), ரோஹித் ஷர்மா ( c ), சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்ட், டிம் டேவிட், ஃபேபியன் ஆலன், ஜெயதேவ் உனட்கட், ஜஸ்பிரிட் பும்ரா, மயங்க் மார்கண்டே, டைமில் மில்ஸ்.