Published:Updated:

Harry Brook: `எண்ணிலடங்கா சதங்கள் வேண்டும்!' - சாதித்துக் காட்டும் இங்கிலாந்தின் ஹிட் மேன் ப்ரூக்!

Harry Brook ( Twitter )

"இன்னுமொரு கோலியாக வருவார் பாருங்கள்" என ஸ்டோக்ஸ் இவரைக் கொண்டாடுகிறார். அனைவரது ரேடார் பார்வைக்குள்ளும் சிக்கியிருக்கும் ப்ரூக் யார்?! அப்படியென்ன ஸ்பெஷல் அவரிடம்?

Harry Brook: `எண்ணிலடங்கா சதங்கள் வேண்டும்!' - சாதித்துக் காட்டும் இங்கிலாந்தின் ஹிட் மேன் ப்ரூக்!

"இன்னுமொரு கோலியாக வருவார் பாருங்கள்" என ஸ்டோக்ஸ் இவரைக் கொண்டாடுகிறார். அனைவரது ரேடார் பார்வைக்குள்ளும் சிக்கியிருக்கும் ப்ரூக் யார்?! அப்படியென்ன ஸ்பெஷல் அவரிடம்?

Published:Updated:
Harry Brook ( Twitter )
மூன்று ஃபார்மட்களிலும் ஆடக்கூடியவர்களே அரியவகையினராக மாறிவரும் காலகட்டத்தில், அப்படியொரு இணையற்ற ஏலியனாக இங்கிலாந்துக்குக் கிடைத்திருக்கிறார் ஹாரி ப்ரூக். "மார்கனின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் 360° வீரர்" என பீட்டர்சன் புகழாரம் சூட்டுகிறார், "இன்னுமொரு கோலியாக வருவார் பாருங்கள்" என ஸ்டோக்ஸ் இவரைக் கொண்டாடுகிறார்.

"டெஸ்டில் அடுத்த அலிஸ்டர் குக்", என இங்கிலாந்து பத்திரிக்கைகள் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றன. அனைவரது ரேடார் பார்வைக்குள்ளும் சிக்கியிருக்கும் ப்ரூக் யார்?! அப்படியென்ன ஸ்பெஷல் அவரிடம்? பாகிஸ்தானைப் புரட்டிப் போட்டு டெஸ்ட் தொடரை 3-0 என வென்றிருக்கிறது இங்கிலாந்து. முக்கியக் காரணம், மூன்று டெஸ்டுகளில் வரிசையாக மூன்று சதங்களை அநாயாசமாக அடித்துள்ள ப்ரூக்தான். அறிமுகமானதிலிருந்து ஆடிய முதல் ஆறு இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை அடித்த இங்கிலாந்து வீரர் என்று 125 ஆண்டுகளாக கேஎஸ் ரஞ்சித்சிங்ஜியின் வசமிருந்த சாதனையை அவரது பேட் முறியடித்துள்ளது. இவ்வெற்றி தற்செயலானதா, தற்காலிகமானதா என ஆராய்ந்தால் தகுதியுடையதென்பதும் அதற்கேற்ப அவர் தன்னைத் தகவமைத்துக் கொண்டதுவும் புலனாகும்.

Harry Brook
Harry Brook
ECB

டி20 அறிமுகம் இந்தாண்டு தொடக்கத்திலேயே நடந்திருந்தாலும் ரெட்பால் கிரிக்கெட்டிற்காக அவர் காத்திருக்க வேண்டிய நிலையிருந்தது. எதிர்பாராத வகையில் பேர்ஸ்டோ காயத்தால் விலக, டெஸ்ட் அணியில் மிடில்ஆர்டரில் உண்டான வெற்றிடத்தை நிரப்ப வந்த ப்ரூக் தற்சமயம் அதை முழுவதுமாக தனது இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளார்.

பெரும்பாலானவர்களுக்கு டொமெஸ்டிக் கிரிக்கெட்தான் வார்த்தெடுக்கும் பாசறை. தேசிய அணிக்கான ஆயுதங்களுக்கு அங்கேதான் வடிவம் தரப்படும். இங்கிலாந்துக்கும் கவுண்டி களம் அப்படித்தான். அவ்வகையில் ஜெஃப்ரி பாய்காட், மைக்கேல் பெவன், பேர்ஸ்டோ, ரூட் போன்ற மிகச்சிறந்த வீரர்களை உருவாக்கிய யார்க்ஷயர்தான் ப்ரூக்கையும் செதுக்கியது. அந்நாட்களிலிருந்தே அக்ரஷனோடு ஆடக்கூடியவர்தான் ப்ரூக். வேகப்பந்து வீச்சுக்கெதிராக வாள்வீசுவது மட்டுமல்ல, ஸ்பின்னர்களை சமாளிப்பதுவும் அவருக்கு மிக இயல்பாயிருந்தது. ஸ்பின் பந்துகளுக்குப் பழக, வழக்கமான பேட்டைவிட பாதியளவே அகலமுள்ள பேட்களைக் கொண்டு பயிற்சி மேற்கொண்டார். ஃபுட்வொர்க்கையும் அது மேம்படுத்தியது.

2016-ல் யார்க்ஷயருக்காக ஆடத்தொடங்கியவருக்கு அடுத்த இருஆண்டுகளும் ஏறுமுகம்தான். 2017-ல் இந்திய சுற்றுப்பயணம் செய்த ஜூனியர் அணியில் இடம், 2018-ல் அண்டர்19 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கான கேப்டன் என படிப்படியாக உயர்ந்தார். அந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவோடு தோற்று வெளியேறியிருந்தது இங்கிலாந்து. தனது அணியின் சார்பில் அதிக ரன்களைக் குவித்திருந்தாலும் கேப்டனாக இத்தோல்வியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை

"எதிலும் இரண்டாவதாக வருவதைக்கூட என்னால் ஏற்க முடியாது", என்று அப்போது ப்ரூக் கூறியிருந்தார். தோல்வியோடு சமரசம் செய்யாத இப்பாங்குதான் அவரைப் புடம்போட்டது.

2018-ல் யார்க்ஷயர் ஆடிய ஒரு போட்டியில் முதல் இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. தோல்வியை ஏற்கத் தயாராயில்லாத ப்ரூக் அப்போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தனது 124 ரன்களால் அணியை மீட்டெடுத்தார். அதிலும் எசெக்ஸின் ஆஃப் ஸ்பின்னரான சைமன் ஹார்மரை அவர் எதிர்கொண்ட விதத்தை, ரூட் அப்போதே வெகுவாகப் பாராட்டியிருந்தார். ஆனால் அதன்பிறகு அவரது பயணம் சின்னதொரு பள்ளத்தாக்கைச் சந்தித்தது.

2018, 2019 இரண்டு ஆண்டுகளிலுமே கவுண்டியில் முறையே 25 மற்றும் 21 என்ற ஆவரேஜோடு ப்ரூக் திணறினார். இதிலிருந்து மீள, தனது ஆட்டத்தில் ஒரு சின்ன மாற்றத்தைக் கொண்டு வந்தார். வில்லியம்சனைப் பின்பற்றி, பந்து வீசப்படும்போது ஒரு சின்ன ட்ரிக்கர் மூவ்மெண்டாக தனது பின்னங்காலினை ஆஃப் ஸ்டம்புக்கு நேராக சற்றே நகர்த்தினார். பலன் மிகப்பெரியதாக இருந்தது. 2020-க்குப் பிறகு, அவருடைய சராசரி 56 ஆக கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக கடந்த கவுண்டி சீசனில், 12 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 107.44-ஐ அதுவும் 75 என்ற ஸ்ட்ரைக்ரேட்டில் எட்டியது.

இதுதான் டி20 அணியில் அவருக்கான இடத்தைப் பெற்றுத்தந்தது. டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் சாதித்த அளவு சர்வதேச பௌலர்களை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழ பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டி20-ல் 35 பந்துகளில் 81 ரன்களைக் குவித்து ஸ்தம்பிக்க வைத்தார். இந்தாண்டின் தொடக்கத்தில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூருக்காக ஆடியிருந்தார் ப்ரூக். அதிலும் இஸ்லாமாபாத்துக்கு எதிராக, 49 பந்துகளில் 102 ரன்களோடு மிரட்டியிருந்தார். அந்த அனுபவம் இந்த சர்வதேச டி20-ல் அவருக்குக் கைகொடுத்தது.

ஸ்கூப், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் என வகைக்கொன்றாக அப்போட்டியில் வந்தது. ப்ரூக்கின் மிகப்பெரிய பலங்களில் இதுவும் ஒன்று. கவர்டிரைவ் போன்ற கிளாசிக்கல் கிரிக்கெட் ஷாட்டுகளை ஆடும் அதேநேரம் டி20-ல் ஸ்விட்சை மாற்றி அன்ஆர்தடாக்ஸ் ஷாட்டுகளும் அவரிடமிருந்து வரும். டிஃபென்ஸிவ் மோடுக்கும் அட்டாக்கிங் மோடுக்குமிடையே மிக எளிதாக பயணிப்பதுவும், சூழலுக்கேற்றாற் போல தன்னைத் தகவமைத்துக் கொள்வதும்தான் அவரை முன்னிலைப்படுத்துகிறது.

என்னதான் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ராட்சத தடம் பதித்தாலும், அவரது டெக்னிக்கை முற்றிலுமாகப் பரிட்சிக்கும் ஒரு முழுமையான டெஸ்ட் தொடர் முன்னதாகக் கிடைக்கவில்லை. ஆகஸ்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 140 ரன்களைக் குவித்து இங்கிலாந்து லயன்ஸை வெல்லவும் வைத்தார். இருப்பினும் அதே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அறிமுக டெஸ்டில் வெறும் 12 ரன்களை மட்டுமே அவர் சேர்த்திருந்தார். இதனால்தான் இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணம் அவருக்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது.

Harry Brook
Harry Brook
ECB

பேர்ஸ்டோ குணமாகித் திரும்புவதற்குள் தனது திறமையை முழுமையாக நிருபிக்கவேண்டிய அவசியத்திலும் அவசரத்திலும் ப்ரூக் இருந்தார். துணைக்கண்ட களம், வேகப்பந்து வீச்சுக்கும் சுழல்பந்து ஜாலத்துக்கும் பெயர் பெற்ற பாகிஸ்தான் என அவருக்கு சவால் விடுக்கும் அம்சங்களும் இத்தொடரில் நிரம்பியிருந்தன. ஆனால் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 132 ஸ்ட்ரைக்ரேட்டில் 153 ரன்களைக் குவித்து அரள வைத்தார். இன்சைட் அவுட், கட் ஷாட், ஃப்ளிக், ஸ்விட்ச் ஹிட் என அத்தனையுமே பண்பட்ட வீரரிடமிருந்து வெளிப்பட்டதாகவே தோன்ற வைத்தன. லெந்த்தைக் கணித்து ஆடியது மட்டுமல்ல டைமிங்கும் துல்லியமானதாயிருந்தது. மிஸ்ஹிட் என்பதே பெரியளவில் இல்லை. ஷகீல் வீசிய ஓவரில் ஆறு பந்துகளையுமே பவுண்டரியாக்கி உறைய வைத்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 87 ரன்களைக் குவித்திருந்தார்.

முதல் போட்டியில் ஃப்ளாட் பிட்ச் அதனால் ரன்கள் வந்தன என சொன்னவர்களை முல்தான் டெஸ்டிலும், கராச்சியிலும் வந்த சதங்கள் நலம் விசாரித்தன. மூன்றாவது டெஸ்டில் அப்ராரின் பந்துகளை அசாத்தியமாக அவர் சந்தித்ததும் வியப்பூட்டியது. பாகிஸ்தானில் ஆடிய இங்கிலாந்து வீரர்களில் ஒரே தொடரில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற சாதனையையும் டேவிட் கோவரிடமிருந்து 453 ரன்களெடுத்தபோது தன்வசமாக்கினார்.

எந்த சதத்திற்குப் பிறகும் பெரிய கொண்டாட்டங்கள் அவரிடமிருந்து வெளிப்படுவதில்லை. காரணமாக, "என்னால் அடிக்க முடியுமென்பதில் எனக்கிருக்கும் நம்பிக்கையே காரணம். எனக்கு சதம் வேண்டாம் எண்ணிக்கையிலடங்கா சதங்கள் வேண்டும்" எனக் கூறியிருந்தார். ஸ்பின் டிராக்கில் தன்னை நிருபித்துவிட்ட அவர், இங்கிலாந்தில் ட்யூக் பந்துகளையும், ஆஸ்திரேலியாவில் கூக்கபுராவையும்கூட திறம்பட எதிர்கொண்டு விட்டால், முழுமுதல் டெஸ்ட் கிரிக்கெட்டராக பூரணத்துவம் பெறுவார்.மெக்கல்லம் - ஸ்டோக்ஸின் Baz Ball டெம்ப்ளேட்டுக்குள் கச்சிதமாகப் பொருந்தும் வீரராக ப்ரூக் தன்னை நிருபித்துள்ளார். பேர்ஸ்டோ திரும்பியபின் ப்ரூக்கிற்கு பதிலாக யாரை வெளியேற்றுவதென்ற குழப்பம் கண்டிப்பாக தேர்வாளர்களை சூழும்.

Harry Brook
Harry Brook
ECB
"தனக்கான மந்திரவாதியை, மந்திரக்கோல் தானே தேர்ந்தெடுக்கும்" என ஹாரி பாட்டரில் வரும் வசனம் போல் மூன்று ஃபார்மட்டிலும் தனக்காக அடுத்த Decade முழுவதும் ஆடுவதற்கான வீரராக ஹாரி ப்ரூக்கை இங்கிலாந்து கிரிக்கெட் கண்டெடுத்துள்ளது.

வெறும் பேட்ஸ்மேனாகவா கூடவே கேப்டனுமாகவா என்பதற்கு காலம் பதிலளிக்கும்.