Published:Updated:

6-வது பௌலர் யார்? ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டரா? ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன?!

ரவி சாஸ்திரி - கோலி - தோனி - ரோஹித்

உலகக்கோப்பைக்கு முன்னரே 6-வது பௌலிங் ஆப்சனில் பிரச்னை இருக்கிறதென்று தெரிகிறது. ஆனால், மீண்டும் ஒரு முறை தீர்வேயின்றி இந்திய அணி களமிறங்கவிருக்கிறது.

6-வது பௌலர் யார்? ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டரா? ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன?!

உலகக்கோப்பைக்கு முன்னரே 6-வது பௌலிங் ஆப்சனில் பிரச்னை இருக்கிறதென்று தெரிகிறது. ஆனால், மீண்டும் ஒரு முறை தீர்வேயின்றி இந்திய அணி களமிறங்கவிருக்கிறது.

Published:Updated:
ரவி சாஸ்திரி - கோலி - தோனி - ரோஹித்
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நேற்று தொடங்கின. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை இன்று இரவு எதிர்கொள்ளவிருக்கிறது. முக்கியமான இந்தத் தொடருக்குள் நுழையும் முன் இந்திய அணி எப்படியிருக்கிறது என ஒரு பார்வை பார்த்தால் ஒரே ஒரு விஷயம் மட்டும் இந்திய அணிக்கு பிரச்னையாக இருக்குமோ என தோன்றுகிறது. அது ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விஷயத்தில் நிலவும் குழப்பமே!

டி20 போட்டிகளில் 20 ஓவரை வீசுவதற்கு ஒரு அணிக்கு 5 பௌலர்கள் தேவை. ஆனால், தேவைக்கு ஏற்ற பௌலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு செல்வது எப்போதுமே சரியான விஷயமாக அமையாது. டி20 போட்டிகள் முழுக்க முழுக்க பேட்டர்களின் ஆட்டமாக மாறியிருப்பதால் உலகின் தலைசிறந்த 5 பௌலர்களை கொண்ட ஓர் அணியாக இருந்தாலும் அன்றைய நாளில் ஏதோ ஒரு பந்துவீச்சாளர் சொதப்பவே செய்வார். அந்த மாதிரியான சூழலில்தான் ஒரு 6வது பௌலருக்கான தேவை உதயமாகிறது. கூடுதலாக ஒரு பௌலர் இருக்கும்போது பந்து வீசும் அணிக்கு கூடுதல் ஆப்சனும் வேரியேஷனும் கிடைக்கும். பொதுவாக இப்படி கூடுதல் பந்துவீச்சு ஆப்சனைக் கொடுக்கும் வீரர்கள் ஆல்ரவுண்டர்களாக இருப்பது அணிக்கு பல விதங்களில் உதவிகரமாக இருக்கும். இந்தியாவிற்கு அப்படியொரு ஆல்ரவுண்டராக கூடுதல் பௌலிங் ஆப்சனாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா.

 ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், 2018 ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீசும் போது ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. மூன்று மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டு வந்து உலகக்கோப்பை தொடரில் ஆடியிருப்பார்.

ஆனால், அந்தக் காயம் அவரை விடவில்லை. தொடர்ச்சியான குடைச்சலைக் கொடுக்கவே உலகக்கோப்பை தொடர் முடிந்த பின் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன்பிறகு, கொரோனா காரணமாக லாக்டௌனால் உலகமே முடங்க ஹர்திக் பாண்டியாவும் முடங்கினார். எல்லாம் சீராகத் தொடங்கி கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கிய போது 2020 ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுத்தார். ஆனால், பழைய ஆல்ரவுண்டராக இல்லாமல் ப்யூர் பேட்டராக மட்டுமே மிடில் ஆர்டரில் களமிறங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2020 ஐபிஎல் சீசன் முழுக்க மும்பை அணிக்காக ஒரு ஓவரை கூட ஹர்திக் வீசியிருக்கவில்லை. அந்த சீசனுக்கு பிறகான ஆஸ்திரேலிய தொடரில் ஒரே ஒரு ஓடிஐ போட்டியில் மட்டும் வேறு வழியே இன்றி கோலி கையில் பந்தைக் கொடுத்ததால் 4 ஓவர்களை வீசியிருப்பார். அதன்பிறகான இங்கிலாந்து மற்றும் இலங்கைத் தொடர்களில் கணிசமான ஓவர்களை வீசியிருந்தார். எல்லாம் சரியாகிவிட்டது. ஹர்திக் பாண்டியா மீண்டும் ஆல்ரவுண்டராகிவிட்டார் என நினைக்கையில் மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை அணிக்காக இந்த இரண்டாம் பாதி ஐபிஎல் சீசனில் ஹர்திக் மீண்டும் ஒரு ஓவரை கூட வீசவில்லை. 100% உடற்தகுதியுடன் இல்லை என்பதால் முதல் இரண்டு போட்டிகளையும் தவறவிட்டிருந்தார்.

ஹர்திக் பாண்டியா விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே குழப்பமான சூழலே நிலவியது. காயம் காரணமாக அவர் பந்து வீச முடியாமல் தவிக்கிறாரா அல்லது இந்திய அணிக்காக பந்து வீச வேண்டுமென்பதற்காக பாதுகாத்து வைக்கப்பட்டாரா என்பது கேள்விக்குறியான விஷயமாகவே இருந்தது. ஒருவேளை இந்திய அணிக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தால் நடந்து முடிந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் ஹர்திக் ஏன் ஒரு ஓவரை கூட வீசவில்லை என்பது கேள்வியாகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கோலிக்கு பதிலாக ரோஹித் கேப்டனாகச் செயல்பட்டிருப்பார். டாஸின்போது 6வது பௌலிங் ஆப்சனின் தேவை குறித்து குறிப்பிட்டு பேசியிருப்பார். ஆனால், அவராலும் ஹர்திக் பாண்டியா விஷயத்தில் ஒரு தெளிவான பதிலை கூற முடியவில்லை.

Rohit Sharma
Rohit Sharma
ஹர்திக் இன்னும் பந்து வீசத் தொடங்கவில்லை. ஆனால், நன்றாக தேறி வருகிறார். தொடர் நடக்கும்போது எப்போது வேண்டுமானாலும் பந்துவீசும் நிலைக்கு வந்துவிடுவார் என்று நம்புகிறோம்.
ரோஹித் சர்மா

என நம்பிக்கை மட்டுமே தெரிவித்திருந்தார்.

6 வது பௌலிங் ஆப்சனின் தேவையை பயிற்சி ஆட்டங்களிலேயே இந்தியா முழுமையாக உணர்ந்துவிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சரியாக 5 பௌலர்களை மட்டுமே இந்தியா பயன்படுத்தியிருந்தது. புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 54 ரன்களை கொடுத்திருந்தார். ராகுல் சஹார் 4 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்திருந்தார். ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் 40 ரன்களை கொடுத்திருந்தார். மெயின் பௌலர்கள் ரன்களை வாரி வழங்கிய போதும் கூடுதல் பௌலிங் ஆப்சன் இல்லாததால் அவர்களையே தொடந்து வீச வைத்து அடி வாங்க வேண்டியிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தக் குறையை போக்கும் பொருட்டு விராட் கோலியே வந்து பந்து வீசியிருப்பார். ஆனால், முக்கியமான போட்டிகளில் இப்படி செய்ய இயலாது என்பது அவருக்கே நன்கு தெரியும். இந்திய அணிக்கு முழுமையான திருப்தியான 6வது பௌலிங் ஆப்சன் ஹர்திக் பாண்டியா மட்டுமே. ஆனால், அவர் பந்து வீசுவாரா என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
 ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

பிசிசிஐ-யும் ஹர்திக் பாண்டியா விஷயத்தில் பெருங்குழப்பத்துடனேயே இருந்தது. ஐபிஎல் இரண்டாம் பாதி தொடங்குவதற்கு முன் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார். உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் முன் அவர் 100% சரியாகிவிடுவார் எனத் தேர்வுக்குழு நினைத்திருக்கலாம். ஆனால், கடைசி வரை ஹர்திக் விஷயத்தில் குழப்பம் நிலவியதால் பிசிசிஐயும் குழம்பியது. கொல்கத்தா அணியின் ஓப்பனராக இறங்கி கலக்கிய வெங்கடேஷ் ஐயரை ஐபிஎல் முடிந்த பிறகும் துபாயிலேயே இருக்குமாறு கோரியது. ஹர்திக்கிற்கு பதில் வெங்கடேஷ் ஐயரை அணிக்குள் கொண்டு வரலாம் என ஒரு பேச்சு அடிபட தொடங்கியது.

ஆனால், இதிலும் பிரச்னை இருந்தது. ஹர்திக் பாண்டியா ஃபினிஷர் ரோலில் ஆடுபவர். வெங்கடேஷ் ஐயர் ஓப்பனர். 2 ஓவர் மிதவேகம் வீசுவார் என்பதற்காக ஃபினிஷரை ஓப்பனரை வைத்து ரீப்ளேஸ் செய்வது பொருந்தாத விஷயமாக அமையும் என்பதால் இதுவும் கைகூடாமல் போனது. இந்நிலையில்தான், அணியிலிருந்த அக்சர் படேலை ரிசர்வ் லிஸ்ட்டுக்கு அனுப்பிவிட்டு ரிசர்வ் லிஸ்ட்டில் இருந்த ஷர்துல் தாகூரை அணிக்குள் கொண்டு வந்தனர். ஷர்துல் தாக்கூர் பௌலிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இப்போது பேட்டிங்கிலும் கலக்குகிறார்.

ஹர்திக் பாண்டியா - சூர்யகுமார் யாதவ்
ஹர்திக் பாண்டியா - சூர்யகுமார் யாதவ்

ஆனாலும், ஹர்திக்கை ஷர்துலை வைத்து ரீப்ளேஸ் செய்வதிலும் குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது. ஹர்திக்கிற்கு பதில் ஷர்துல் தாக்கூர் என்பது ஷர்துல் தாக்கூருக்கே கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதனால், புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா என மூன்று வேகப்பந்து ஆப்சன்களோடு ஷர்துல் தாக்கூரை நான்காவது வேகப்பந்து ஆப்சனாகப் பார்ப்பதாகவே தெரிகிறது. ஓவ்வொரு போட்டியையும் பொறுத்து இந்த நால்வரில் இருவரையோ அல்லது மூவரையோ ரொட்டேஷன் பாலிசியில் பயன்படுத்துவதே திட்டமாக இருப்பதாகத் தெரிகிறது.

அப்படியெனில், ஷர்துல் தாக்கூரை அணிக்குள் கொண்டு வந்தும் 6 வது பௌலிங் ஆப்சன் பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்றே எடுத்துக் கொள்ளலாம். ஹர்திக் பாண்டியா பந்து வீசாமல் முழுமையான பேட்டராக மட்டுமே ஆடினாலும் அவர் பேட்டிங்கிலும் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை என்பதே ஐபிஎல்-லிலேயே பார்த்திருப்போம். ஆல்ரவுண்டராக இல்லாமல் அரைகுறை ஃபார்மோடு ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தே ஆக வேண்டுமென்றால் இஷன் கிஷன் அல்லது சூர்யகுமார் யாதவ் இருவரில் ஒருவர் பென்ச்சுக்கு சென்றே ஆக வேண்டும் அல்லது ரிஷப் பண்டை உட்கார வைத்துவிட்டு ராகுல் அல்லது இஷன் கிஷன் கைகளுக்கு கீப்பர் க்ளவுஸை மாற்றியாக வேண்டும். ஆனால், ஹர்திக் பாண்டியாவிற்காக நல்ல ஃபார்மில் இருக்கும் இந்த வீரர்கள் மீது கை வைப்பது சரியாக இருக்குமா என்ற கேள்வியும் எழும்.

விராட் கோலி, ஷர்துல் தாக்கூர்
விராட் கோலி, ஷர்துல் தாக்கூர்
உலகக்கோப்பை மாதிரியான பெரிய தொடருக்கு முன் இந்திய அணி இதேமாதிரியான குழப்பங்களைச் சந்திப்பதை தவிர்த்திருக்க வேண்டும். ஏனெனில், இதற்கு முன்பான இரண்டு ஐ.சி.சி தொடர்களிலும் இதே மாதிரியான சின்னச்சின்ன குழப்பங்களே இந்தியாவின் கோப்பை கனவை காவு வாங்கியிருக்கிறது.

2019 உலகக்கோப்பை முன்பாக இந்தியாவின் மிடில் ஆர்டரில் குறிப்பாக நம்பர் 4-5 இல் எந்த வீரரை ஆட வைக்கப்போகிறார்கள் என்கிற குழப்பம் நிலவியது. ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தோனி, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு என பல வீரர்களையும் நம்பர் 4 இல் இறக்கி சோதித்து பார்த்த இந்திய அணி, கடைசி வரை அந்த இடத்திற்கு யாரை இறக்கப்போகிறார்கள் என்பதில் பெரிய குழப்பம் நிலவியது. அந்தக் குழப்பத்துடனேயே களமிறங்கி அந்த உலகக்கோப்பையை இந்திய அணி கோட்டைவிட்டது.

சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி ஸ்பின்னர்களே இல்லாமல் களமிறங்கிய போது இந்தியா இரண்டு ஸ்பின்னர்களோடு களமிறங்கியது. மழை வேறு பெய்து மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்ததால், அணியை மாற்றுங்கள், ஒரு ஸ்பின்னரை உட்கார வைத்துவிட்டு, வேகப்பந்து வீச்சாளரை சேர்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், விடாப்பிடியாக இரண்டு ஸ்பின்னர்களோடு இறங்கி சொதப்பியது.

ரவிச்சந்திரன் அஷ்வின்
ரவிச்சந்திரன் அஷ்வின்
அந்தப் போட்டியில் அஷ்வின் மீது அத்தனை நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த கோலி-ரவிசாஸ்திரி கூட்டணி அடுத்து நடந்த இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் அஷ்வினை பென்ச்சில் உட்கார வைத்ததை விளங்கிக் கொள்ள தனி மூளை வேண்டும். அது தனிக்கதை!

2019 உலகக்கோப்பையாகட்டும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகட்டும் இரண்டிலுமே அணியில் என்ன பிரச்னை இருந்ததென்பது வெளிப்படையாக தெரிந்திருந்தது. அந்த பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்கான அவகாசமும் கூட இருந்தது. ஆனால், யாரும் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. இப்போது டி20 உலகக்கோப்பைக்கு முன் 6வது பௌலிங் ஆப்சனில் பிரச்னை இருக்கிறதென்று தெரிகிறது. ஆனால், மீண்டும் ஒரு முறை தீர்வேயின்றி இந்திய அணி களமிறங்கவிருக்கிறது.

குழப்பங்களைத் தாண்டி இந்திய அணி வெற்றிக்கொடியை பறக்கவிடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism