இந்திய ஜெர்சியிலிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படத்தை வைத்து 'Time to lead' என ஒரு டைட்டில் போட்டால், இன்றைய தேதிக்கு யாருமே எதிர்கேள்வி கேட்கமாட்டார்கள். நல்ல யோசனை என அந்த ஐடியாவை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். காரணம், ஐ.பி.எல்!
`Leading from the front' என்பதற்கான உதாரணமாக விளங்கும் வகையில் ஹர்திக் குஜராத் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி சாம்பியனாக்கியிருக்கிறார். அறிமுக சீசனிலேயே அந்த அணியை ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வைத்திருக்கிறார்.

Aava De என்பதுதான் இந்த சீசனில் குஜராத் அணியின் முழக்கமாக இருந்தது. குஜராத்தி வழக்கான Aava De க்கு ஆங்கிலத்தில் Bring it on என்று பொருள். எந்தச் சவாலையும் எந்தத் தடையையும் எதிர்கொண்டு காரியத்தைச் சாதித்தல் என பொருள் விளங்கிக்கொள்ளலாம். இந்த Aava De முழக்கத்திற்கு ஏற்ற சரியான கேப்டன் ஹர்திக்தான்.
குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியா ஒப்பந்தம் செய்யப்பட்டு, இவர்தான் எங்களின் கேப்டன் என அணி நிர்வாகம் அறிவித்தபோது அதை யாரும் பெரிதாக ரசிக்கவில்லை. ஹர்திக்கெல்லாம் ஒரு கேப்டன் மெட்டீரியலே இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது. அவரது குணாதிசயத்திற்கு ஓர் அணியை எந்த உரசலுமின்றி கட்டி மேய்ப்பதெல்லாம் சிரமமான காரியம் எனப் பேசியிருந்தனர். பொறுப்புகளைத் தோளில் சுமப்பதற்கான பக்குவமற்ற மனிதர் என்கிற பிம்பமே அவர் மீது இருந்தது. இதெல்லாம் மார்ச் 26 இந்த சீசன் தொடங்கும் வரைக்கும்தான். சீசன் தொடங்கி, தொடக்கத்தில் சில போட்டிகள் முடிந்த சமயத்திலேயே அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அபத்தமானவை என்பதை நிரூபிக்கத் தொடங்கிவிட்டார்.
அதீத தன்னம்பிக்கையோடு துடுக்குத்தனமான அவரின் உடல்மொழிதான் இதுவரை பெரும்பாலும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. ஆனால், இந்த சீசனில் 'கேப்டன்' ஹர்திக் பாண்டியாவிற்கு பெரும்பலமாக அமைந்ததே அந்த அதீத தன்னம்பிக்கைமிக்க உடல்மொழிதான். '83' படத்தின் ரிலீஸ் சமயத்தில் கவாஸ்கரின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தாஹீர் ராஜ், சுனில் கவாஸ்கரின் நடையையும் உடல்மொழியையும் பழகிக்கொண்ட விதத்தை பற்றி பேசும்போது ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார்.
"பெவிலியனிலிருந்து கவாஸ்கர் மைதானத்துக்குள் நடந்து வரும்போது அந்த நடையிலேயே ஒரு Swag இருக்கும். ஒரு கம்பீரமான புலியை போல கவாஸ்கர் நடந்து வருவார். நீங்கள் வேண்டுமென்றே அப்படி நடப்பீர்களா இல்லை அதுதான் உங்களின் இயல்பா?" என நான் அவரிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு, "நீங்கள் இந்திய அணியின் ஓப்பனராக இறங்குகிறீர்கள் எதிரில் வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஒரு அணி இருக்கிறதெனில் உங்கள் நடையிலேயே ஒரு தன்னம்பிக்கை வெளிப்பட வேண்டும். அதைத்தான் நான் செய்திருந்தேன்" என கவாஸ்கர் பதில் கூறியிருக்கிறார். ஹர்திக் பாண்டியாவை இங்கே கவாஸ்கரோடு பொருத்தி பார்க்கலாம். பல முறை கோப்பையை வென்று முழுமையாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் அணிகளுக்கும் பல ஆண்டுகளாக ஆடி செட்டில் ஆகியிருக்கும் அணிகளுக்கும் மத்தியில் பிறந்து சில மாதங்களே ஆன ஒரு புதிய அணியை வழிநடத்துவது எவ்வளவு சிரமம்? ஏற்கெனவே மிரட்சி ஏற்படுத்தும் வகையில் களத்தில் நிற்கும் இந்த அணிகளை வீழ்த்த வேண்டுமெனில் எவ்வளவு பெரிய நம்பிக்கை வேண்டும்? கணக்கிடவே முடியாது. ஆனால், அந்த அதீத நம்பிக்கை, கவாஸ்கரின் கம்பீர நடையை போல ஹர்த்திக்கிடம் இயல்பிலேயே இருந்தது. எந்த இடத்திலும் யாரைக் கண்டும் அவர் மிரளவே இல்லை.

டாஸ் முதல் Post Match Presentation வரை பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு சைகையிலும் உடல்மொழியிலும் அவரின் தன்னம்பிக்கையை நம்மால் உணர முடியும்.
எது அவரின் பலவீனம் எனக் கூறப்பட்டதோ அதுதான் அவரின் பலமாகவும் மாறிப்போனது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்கிற பாணியில் இந்தத் தன்னம்பிக்கை ஒட்டுமொத்த அணியிடமுமே வெளிப்பட்டது.
இந்த சீசனின் தொடக்கத்தில் பனியின் தாக்கத்தினால் எல்லா அணிகளுமே டாஸை வென்று சேஸ் செய்வதிலேயே குறியாக இருந்தனர். அந்தச் சமயத்தில்...
"முதல் பேட்டிங் என்றாலும் சரி சேஸிங் என்றாலும் சரி. எதற்கென்றாலும் நாங்கள் தயார். வெல்வது மட்டுமே எங்களின் இலக்கு" எனக் கூறிய ஒரே கேப்டன் ஹர்திக் பாண்டியாதான்.
சொன்னதோடு மட்டுமல்லாமல் செயலிலும் காட்டினார். இந்த சீசனில் முதல் முறையாக ஸ்கோரை டிஃபண்ட் செய்து வென்ற அணியாகவும் குஜராத்தை மாற்றினார்.

களத்திலும் அவரின் அக்ரசிவ்வான அட்டாக்கிங்கான அணுகுமுறைகளும் பாராட்டை பெற்றன. 17-18 வது ஓவரிலெல்லாம் ஸ்லிப் வைத்து அட்டாக் செய்யுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார். 'பௌலர்களால்தான் போட்டியை வென்று கொடுக்க முடியும்' எனும் கொள்கையோடு பௌலர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கேப்டனாக செயல்பட்டிருந்தார். இடையில் ஹர்திக் பாண்டியாவே காயமுற்று பென்ச்சில் உட்காரும் நிலையெல்லாம் ஏற்பட்டது. அணியின் முதுகெலும்பாக இருந்ததே ஹர்திக்கின் பேட்டிங்தான் அது இல்லாமல் போன போதும் அவருக்கு பதில் ஒரு பேட்ஸ்மேனை இறக்காமல் பௌலரையே இறக்கியிருப்பார்கள். ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இறக்கப்பட்ட சமயங்களிலும் எந்தச் சிரமமும் இல்லாமல் கடைசி ஓவர் சேஸிங்கையெல்லாம் வெற்றிகரமாக முடித்திருந்தனர். இதுதான் 'கேப்டன்' ஹர்திக் அணிக்குக் கடத்தியிருக்கும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.
டேவிட் மில்லர், இந்த சீசனில் 483 ரன்களை அடித்திருக்கிறார். பல சீசன்களுக்கு பிறகு மீண்டும் பழைய கில்லர் மில்லராகவே ஃபார்முக்கு வந்திருந்தார். அவரிடம் உங்களின் கம்பேக்கிற்கான காரணம் என்னவென கேட்டால்...

இந்த அணியும் ஹர்திக் பாண்டியாவும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அவர்கள் தொடர்ந்து கொடுக்கும் வாய்ப்புகளே இதற்கு காரணம்!Miller
எனக் கூறுவார். "வெறும் எண்களை வைத்து மில்லரை அளவிட விரும்பவில்லை. நாங்கள் எப்போதும் அவரை மேட்ச் வின்னராகவே பார்க்கிறோம்" என ஹர்திக் பாண்டியா கூறியிருப்பார். இப்படியாக உள்ளுணர்வின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் செயல்படுவதே ஹர்திக்கின் பலமாகவும் இருக்கிறது.
தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டிருந்த போதும் இறுதிப்போட்டி என்பது ஒரு தனி அழுத்தம். அதுவும் சொந்த மைதானத்தில் லட்சம் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் அழுத்தத்தை ஏற்றிக்கொள்ளாமல் சரியான முடிவுகளை எடுப்பது ஒரு கலை. அதிலுமே ஹர்திக் முழுமையாகத் தேர்ச்சி பெற்றிருந்தார்.
ராஜஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியின் போது முதலில் பந்துவீசிய சமயத்தில் ஹர்திக் எடுத்த ஒவ்வொரு முடிவுமே அப்படியே அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டைக் கொடுத்திருந்தது.

பட்லர் பவர்ப்ளேயில் அடக்கி வாசிக்க அவருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வகையில் ரஷீத் கானை வெகு சீக்கிரமே பந்து வீச அழைத்து வந்திருப்பார். ரஷீத் கான் மீண்டும் கட்டுக்கோப்பாக வீசி ஹர்திக்கின் நம்பிக்கையைக் காப்பாற்றியிருப்பார். பவர்ப்ளே முடிந்தவுடன் ஹர்திக்கே பந்தைக் கையிலெடுத்திருப்பார். வீசிய முதல் ஓவரிலேயே சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார். 12வது ஓவரை ஷமி வீசத் தயாரான சமயத்தில் உள்ளுணர்வின் அடிப்படையில் திடீரென மாற்றி ரஷீத் கானுக்கே அந்த ஓவரைக் கொடுத்திருப்பார். அந்த ஓவரில் படிக்கல் காலி. சாய் கிஷோரை ரொம்பவே ஸ்மார்ட்டாக முக்கியமான இடதுகை பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரும் வீழ்ந்த பிறகு அழைத்து வந்திருப்பார். இப்படியாக ஹர்திக் எடுத்த முக்கியமான முடிவுகள் அனைத்துமே ராஜஸ்தானின் தோல்வியை உறுதி செய்துகொண்டே இருந்தன.
தனிப்பட்ட முறையிலும் துணிச்சலாக சில முடிவுகளை எடுத்திருந்தார். இதுவரை ஃபினிஷர் ரோலில் ஆடிவந்தவர், இந்த சீசனில் முதல் முறையாக நம்பர் 4-ல் களமிறங்கத் தொடங்கினார். இதுவரை ஆடியதற்கு அப்படியே தலைகீழான ரோல். நம்பர் 4க்கு ஆளே இல்லை. அந்த ரோலை யாராவது எடுத்தே ஆக வேண்டும் என்ற சூழலில் ஒரு கேப்டனாக தானே முன் வந்து ஏற்றுக்கொண்டார். இதுவரை ஃபினிஷராக அதிரடி காட்டியவர், அதிரடிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நம்பர் 4-ல் நின்று நிதானமாக முக்கியமான பார்ட்னர்ஷிப்களை அமைக்கத் தொடங்கினார். தொடக்கத்திலிருந்து ராஜஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி வரைக்குமே பெரிதாக எங்கேயும் சறுக்காமல் சீரான பெர்ஃபார்மென்ஸையே கொடுத்திருக்கிறார்.

குஜராத் அணிக்காக இந்த சீசனில் அதிக ரன்களை அடித்திருக்கும் வீரர் ஹர்திக் பாண்டியாதான். 487 ரன்களை 131 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். ஆவரேஜ் 44.
பௌலராகவுமே முக்கியமான கட்டங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு ஹர்திக் பந்துவீச்சில் நிலையில்லாமல் இருந்ததும் மிக முக்கிய காரணமாக இருந்திருந்தது. அதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், அந்தக் காயங்களிலும் சறுக்கல்களிலும் இருந்து மீண்டு வந்து இங்கே பந்துவீச்சிலும் மிரட்டியிருக்கிறார். 145 கி.மீ க்கும் அதிகமான வேகத்தில் வீசி ஆச்சர்யப்படுத்தினார்.
ராஜஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மட்டும் சாம்சன், பட்லர், ஹெட்மயர் என முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
நான் எங்கிருந்து வந்தேன். என்னுடைய கதை என்ன என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும். அதைப்பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை. நான் உங்களை எங்கே அழைத்து செல்லப்போகிறேன் என்பதை மட்டும் சொல்கிறேன்.ஹர்திக் பாண்டியா

குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வீடியோவில் இப்படிப் பேசிவிட்டு குஜராத் அணிக்கான தன்னுடைய கனவுகளை விவரித்திருப்பார்.
ஒரு கேப்டனாக பேட்ஸ்மேனாக பௌலராக ஃபீல்டராக என தன்னால் இயன்ற அத்தனை விதத்திலுமே குஜராத் அணியின் வெற்றிக்காகவும் அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காகவும் ஹர்திக் அபாரமாக உழைத்திருக்கிறார். உழைப்பின் பலனாய் அணியின் கனவும் நிறைவேறியிருக்கிறது. இதற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு வாழ்த்து சொல்லும் அதேநேரத்தில் ஓர் அறிவுரையையும் கூறலாம். குஜராத்துக்காக மட்டுமல்ல; இந்தியாவிற்காகவும் ஒரு கனவு காணுங்கள் ஹர்திக்கே! ஏனெனில், இத்தனை நாளாக இந்திய அணிக்கான அடுத்த கேப்டனுக்கான ரேஸில் ஹர்திக் பாண்டியா இல்லவே இல்லை. அவரை யாரும் சட்டை செய்யவே இல்லை. ஆனால், இனியும் அப்படி இருக்கப்போவதில்லை. ரிஷப் பண்டோடு ராகுலோடு ஸ்ரேயாஸோடு ஹர்திக்கும் இப்போது அந்த கேப்டன்சி ரேஸில் இணைந்திருக்கிறார்.

சொல்லப்போனால் ஒரே சீசனில் மற்ற மூவரை விடவும், கேப்டன் பதவிக்கு தான் எல்லாவிதத்திலும் சிறந்தவன் என்பதையும் நிரூபித்திருக்கிறார். ஆக, இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்னும் கேள்வி எழும்போது ஹர்திக்கின் பெயரை இனி தவிர்க்கவே முடியாது. Time to Lead(?)