Published:Updated:

"தோனி, பிசிசிஐ நினைத்திருந்தால் பல ஆண்டுகள் அணியில் நீடித்திருப்பேன்!”- மனம் திறக்கும் ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் மற்றும் தோனி
News
ஹர்பஜன் சிங் மற்றும் தோனி

“மற்ற வீரர்களைவிட பிசிசிஐ-ஆல் தோனி கூடுதலாக தக்கவைத்து ஆதரவளிக்கப்பட்டார். அவரை போல அனைவரும் தக்கவைக்கபட்டிருந்தால் நாங்கள் அனைவரும் நன்றாகவே விளையாடியிருப்போம்." - ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட்டின் முக்கிய ஸ்பின்னர்களுள் ஒருவர் ஹர்பஜன் சிங். 41 வயதான இவர் தேசிய அணியில் இடம்பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் அதிகாரப்பூர்வ ஓய்வு அறிவிப்பினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ஹர்பஜன்.

தன் ஓய்வு குறித்து ஹர்பஜன் தேசிய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், தான் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த பல்வேறு விஷயங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அதிர்ஷ்டம் என்பது எனக்கு என்றைக்கும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் சுற்றுப்புற காரணிகள் என்பவை எனக்கு முற்றிலும் எதிராக அமைந்தன. நான் 400 விக்கெட்டுகளை கடந்திருந்தபோது என் வயது 31 ஆக இருந்தது. அப்போதிருந்த என் ஃபார்மை கணக்கில் வைத்து பார்த்தால், அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் என்னால் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியும்.

நான் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது கேப்டனாக இருந்தவர் தோனி. ஆனால் அவருக்கும் மேல் உள்ள சக்திகளே நான் வெளியேற்றபட்டதற்கான காரணம். சில பிசிசிஐ அதிகாரிகள் நான் அணியில் இருக்கக்கூடாது என்பதற்காகச் செயல்பட்டனர் என்பதை நான் அறிவேன். நான் நீக்கப்பட்டதற்கு எதிராக அப்போதைய கேப்டன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் பிசிசிஐ-யின் சொல்லுக்கு மீறி ஒரு கேப்டனால் எதையும் செய்துவிட முடியாது” என்றார்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

“மற்ற வீரர்களைவிட பிசிசிஐ-ஆல் தோனி கூடுதலாக தக்கவைத்து ஆதரவளிக்கப்பட்டார். அவரை போல அனைவரும் தக்கவைக்கபட்டிருந்தால் நாங்கள் அனைவரும் நன்றாகவே விளையாடியிருப்போம். நாங்கள் ஒன்றும் பேட் பிடிப்பதையோ பந்து வீசுவதையோ மறந்துவிடவில்லையே” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி குறித்து கூறுகையில், “நான் விளையாடியதிலேயே மிக சிறந்த கேப்டன் கங்குலி. எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமரவைக்கபட்டபோது அவர்தான் எனக்கு முதன்முதலில் வாய்ப்பு அளித்தார். மேலும் என் கேமை மேம்படுத்த முழு சுதந்திரத்தைக் கொடுத்தவர் அவர்” என்று புகழ்ந்துள்ளார்.

தோனி மற்றும் பிசிசிஐ குறித்து ஹர்பஜன் சிங் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருப்பது இணையத்தில் தற்போது சலனத்தை ஏற்படுத்தி வருகிறது.