நடப்பு ஐ.பி.எல் சீசனில் ரசிகர்களை அதிகம் கவலைக்கொள்ள வைத்திருக்கும் வீரர் பொல்லார்டே. கம்பீரமாக க்ரீஸுக்குள் நின்ற இடத்தில் நின்று பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டுக் கொண்டிருந்தவர், இந்த சீசனில் இன்னமும் சரியாக பேட்டை வீசி சமர் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
11 போட்டிகளில் 144 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ரன்களை விட பொல்லார்டின் ஸ்ட்ரைக் ரேட் அதுதான் இன்னும் வேதனையை கொடுக்கிறது. அதிரடி சூரராக அறியப்பட்ட பொல்லார்டின் இந்த சீசன் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 107 மட்டும்தான். ஏறக்குறைய Run a ball-இல் தான் ஸ்கோர் செய்திருக்கிறார். ஐ.பி.எல் வரலாற்றிலேயே பொல்லார்ட் இந்தளவுக்கு மந்தமாக எந்த சீசனிலும் ஆடியது கிடையாது.

'பொல்லார்ட் ஒரு ஓவர்ரேட்டட் கிரிக்கெட்டர்', 'பொல்லார்டை ரீட்டெய்ன் செய்து மும்பை அணி மிகப்பெரிய தவற்றை இழைத்துவிட்டது', 'பொல்லார்டை நீக்கிவிட்டு இளம் வீரரான ப்ரெவீஸை அணிக்குள் கொண்டு வந்து வளர்த்தெடுங்கள்' - இப்படியான கமெண்ட்டுகள் இந்த சீசனில் போகிற போக்கில் பொல்லார்டின் மீது அசால்ட்டாக வீசியெறிப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொல்லார்ட் அவ்வளவுதானா? பொல்லார்ட்டின் காலம் முடிந்துவிட்டதா?
இதற்கெல்லாம் யாராலும் பதில் சொல்ல முடியாது. காலம்தான் இதற்கெல்லாம் விடைகொடுக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக சொல்லலாம். வெறும் ஒரு போட்டியிலோ ஒரு சீசனிலோ சொதப்பியதால் மட்டுமே பொல்லார்டை ஓரங்கட்ட நினைத்தால் அதைவிட மூடத்தனம் வேறெதுவும் இருக்காது.
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி எங்கோ இருக்கும் ஒரு குகைக்குள் மும்பை அணியின் வெற்றி ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும், அசாத்தியமான பிரயத்தனங்களை செய்து மாவீரனாக அந்த குகையையே பெயர்த்து எடுத்து வரும் வல்லமை பொல்லார்டுக்கு மட்டுமே உண்டு. எதோ ஒன்றிரண்டு முறை இதை செய்யவில்லை. 2010-லிருந்து கடந்த சீசன் வரைக்குமே எப்போதெல்லாம் அணி அவரிடமிருந்து அசாத்தியங்களை நிகழ்த்த வேண்டுமென எதிர்பார்க்கிறதோ அப்போதெல்லாம் சமயம் தவறாமல் தனது சாகசங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 2010-லிருந்து இப்போது வரைக்குமே மும்பை அணியின் ஒவ்வொரு ஏற்ற இறக்கத்திலும் வெற்றி தோல்வியிலும் பொல்லார்டின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. வேறெந்த அணியிலும் இப்படி ஒரு வெளிநாட்டு வீரர் அணியோடு ரத்தமும் சதையுமாக இணைந்து இத்தனை நீண்ட பயணத்தை மேற்கொண்டதே இல்லை.
சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால் வெற்றிகரமான கேப்டனான ஹிட்மேன் ரோஹித் சர்மாவை விட பொல்லார்ட்தான் மும்பை அணியில் மூத்தவர்.

2010 ஐ.பி.எல் சீசனின் இறுதிப்போட்டி இன்னமும் ஞாபகம் இருக்கிறது. சென்னைக்கு எதிரான அந்தப் போட்டியில் மும்பை 169 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். சீரான இடைவெளியில் மும்பைக்கு விக்கெட்டுகள் விழுந்துக் கொண்டே இருந்தன. சச்சின் மட்டும் ஒரு முனையில் நின்று போராடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரது போராட்டமும் முடிவுக்கு வந்தது. ஏறக்குறைய சென்னையின் வெற்றி உறுதியாக தொடங்கிவிட்டது. ஆனாலும், சென்னை வீரர்களிடம் முழுமையான உற்சாகம் வெளிப்படவே இல்லை. தோனி இன்னமும் நெற்றியை சுருக்கி தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்தார். காரணம், பொல்லார்ட் க்ரீஸில் இருந்தார்.
10 பந்துகளில் 27 ரன்களை எடுத்திருந்தார். கடைசி ஓவரில் பொல்லார்ட் நின்றால் அழுத்தம் பொல்லார்டுக்கு இருக்கப்போவதில்லை. கடைசி ஓவரை வீசப்போகும் பௌலர்தான் திணறுவார் என்பது தோனிக்கு நன்றாகவே தெரியும். இந்த சமயத்தில்தான் சமயோஜிதமாக ஹேடனை அம்பயருக்கு பின்னாலயே நிறுத்தி பொல்லார்டின் விக்கெட்டை தோனி சாய்த்திருப்பார். பொல்லார்ட் கொடுத்த அந்த நெருக்கடி, அந்த தோல்வி அச்சம், அதுதான் தோனியை அத்தனை வித்தியாசமாக ஒரு ஃபீல்ட் செட்டப்பை யோசிக்க வைத்தது.
12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது பொல்லார்ட் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஆனால், இப்போதும் பொல்லார்ட் க்ரீஸூக்குள் நின்றால் எதிரணியின் கேப்டன்களின் நெற்றி கொஞ்சம் சுருங்கத்தான் செய்கிறது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு தோனி உணர்ந்த நெருக்கடியை இன்னமும் பொல்லார்டை எதிர்த்து நிற்கும் ஒவ்வொரு கேப்டனும் உணரவே செய்கின்றனர். இந்த சீசனிலும் அந்த 2010 சம்பவத்தை தோனி மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருந்தார். ஒரு போட்டியில் அதே மாதிரியே அம்பயருக்கு பின்னால் நேரடியாக ஒரு ஃபீல்டரை பொல்லார்டுக்கு வைத்திருப்பார். பொல்லார்டும் இதை கவனிக்கிறார். வழக்கமான வலையைத்தான் தோனி தனக்கு விரிக்கிறார் என்பதை பொல்லார்டும் உணர்ந்தார். ஆனாலும், நேராக அந்த ஃபீல்டரிடமே தூக்கிக்கொடுத்து பவுண்டரி லைனில் கேட்ச் ஆகியிருந்தார்.

பொல்லார்டின் Arrogance-ஆல் கிடைத்த பலன் இது.ஹர்ஷா போக்லே
என ஹர்ஷா போக்லே கமென்ட்ரியில் பேசியிருப்பார். சவாலை நேரடியாக எதிர்கொள்ளும் இந்தத் திமிர்த்தனம்தான் பொல்லார்டின் மாய வித்தைகளை இத்தனை காலமாக உயிர்ப்போடு வைத்திருக்கிறது. தோனி நிறுத்திய அந்த ஃபீல்டரிடம் பொல்லார்ட் கேட்ச்சை கொடுத்து அவுட் ஆகிவிட்டார். சரிதான், ஆனால் ஒருவேளை அது கேட்ச்சாக இல்லாமல் சிக்ஸராக மாறியிருந்தால் எப்படியிருக்கும்? தோனியின் வியூகமே உடைபட்டு போயிருக்கும். தோனியின் நெற்றி இன்னும் அதிகமாக சுருங்கியிருக்கும். தோனிக்கே நெருக்கடி எனில் ஒட்டுமொத்த அணியும் நெருக்கடியில் விழும். அப்போது பொல்லார்ட் நிகழ்த்த வேண்டிய சம்பவங்கள் ரொம்பவே எளிதாக நிகழ்ந்திருக்கும். இதை பொல்லாட்டின் திமிர்த்தனம் என்றும் சொல்லலாம் அல்லது பொல்லார்ட் நிகழ்த்தும் ஈகோ யுத்தம் என்று சொல்லலாம். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட 34 வயதைத் தாண்டிவிட்ட ஒரு வீரர் தன்னுடைய உடல் பலத்தையும் டெக்னிக்குகளையும் மட்டுமே நம்பி தொடர்ந்து ஆடிவிட முடியாது. கொஞ்சம் ஈகோவுக்கும் வேலை கொடுத்துதான் ஆக வேண்டும்.

2013 சீசனில் பொல்லார்டின் ஸ்ட்ரைக் ரேட் 149. 2015 சீசனில் 163, 2017 சீசனில் 140, 2019 சீசனில் 156, 2020 சீசனில் 191.
இந்த சீசன்கள் எல்லாம் எதோ ரேண்டமாக எடுக்கப்பட்ட சீசன்கள் இல்லை. மும்பை அணி சாம்பியன் ஆன சீசன்கள். அந்த சீசன்களில் பொல்லார்ட் சிதறவிட்ட பவுண்டரிகளையும் பறக்கவிட்ட சிக்ஸர்களையும் கழித்துவிட்டு பார்த்தால் மும்பை அணி இத்தனை முறை சாம்பியன் ஆகியிருக்குமா என்பதே சந்தேகம்தான்.
இப்போது சொல்லுங்கள் பொல்லார்டை இந்த ஒரு சீசனுக்காக ஒதுக்கி ஓரங்கட்டி விடலாமா? அப்படிச் செய்தாலும் பொல்லார்ட் மும்பை அணிக்காக ஆற்றிய பங்களிப்பை யாராலும் மறைத்துவிட முடியாது. 5 முறை கோப்பையை வென்றிருக்கிறோம் என ஒவ்வொரு முறை பெருமை பேசும்போதும் பொல்லார்ட் நினைவுக்கு வந்துக் கொண்டே இருப்பார்.
Happy Birthday Pollard!