Published:Updated:

`துணிந்து நில்' - ஆஃப் ஃபீல்டில் கவனம் ஈர்த்த விராட் கோலியின் அந்த மூன்று குணாதிசயங்கள்!

விராட் கோலி

ஒரு வீரரை ஜாம்பவான் எனும் அந்தஸ்த்துக்கு உயர்த்துவது அவரது ஆன் ஃபீல்ட் சாகசங்கள் மட்டுமே இல்லை. கோலி ஆஃப் ஃபீல்டில் வெளிக்காட்டிய சில நல்ல குணாதிசயங்களை பற்றி இங்கே!

`துணிந்து நில்' - ஆஃப் ஃபீல்டில் கவனம் ஈர்த்த விராட் கோலியின் அந்த மூன்று குணாதிசயங்கள்!

ஒரு வீரரை ஜாம்பவான் எனும் அந்தஸ்த்துக்கு உயர்த்துவது அவரது ஆன் ஃபீல்ட் சாகசங்கள் மட்டுமே இல்லை. கோலி ஆஃப் ஃபீல்டில் வெளிக்காட்டிய சில நல்ல குணாதிசயங்களை பற்றி இங்கே!

Published:Updated:
விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் பிறந்தநாள் இன்று. களத்தில் அவர் வெளிக்காட்டிய வீரதீரங்களை பற்றிய அவதானிப்புகளை அதிகம் கேட்டிருப்போம். கோலி ஆன் ஃபீல்டில் 'கிங்' தான். ஆனால்...

ஒரு வீரரை ஜாம்பவான் எனும் அந்தஸ்த்துக்கு உயர்த்துவது அவரது ஆன் ஃபீல்ட் சாகசங்கள் மட்டுமே இல்லை. களத்திற்கு வெளியே ஆஃப் ஃபீல்டில் வெளிப்படும் அவர்களின் செய்கைகளுக்கும் குணாதிசயங்களுக்குமே இதில் பெரும் பங்கிருக்கின்றன. கோலி ஒரு யுகத்துக்கான வீரராகக் கொண்டாடப்படுகிறார். அவர் ஆஃப் ஃபீல்டில் வெளிக்காட்டிய சில நல்ல குணாதிசயங்களைப் பற்றி இங்கே!
விராட் கோலி
விராட் கோலி

குடும்பமும் முக்கியம்:

விளையாட்டுகள் எப்போதுமே தேசப்பற்றோடு பின்னிப்பிணைந்ததாகவே இருக்கின்றன. அது பிரச்னை இல்லை. தேசப்பற்று சில சமயங்களில் முரட்டுத்தனமான வெறியாக மாறிவிடுவதுதான் பிரச்னை. கிரிக்கெட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் நிமித்தமாக கிரிக்கெட் வீரர்களை எல்லைகளில் நிற்கும் ராணுவ வீரர்களுக்கு ஒப்பாகவே கற்பனை செய்து கொள்கிறோம்.

எப்போதுமே தேசம் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும். வீரர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ஆசா பாசங்களுக்கெல்லாம் இடமே இருக்கக்கூடாது. குறிப்பாக, Work Space - Family Space என்கிற வித்தியாசமே அவர்களுக்கு இருக்கக்கூடாது.
விராட் கோலி, அனுஷ்கா சர்மா
விராட் கோலி, அனுஷ்கா சர்மா
Photo: anushkasharma / Instagram

இவையெல்லாம்தான் ஒரு வீரர் அணியை விட குடும்பமே பிரதானம் என முடிவெடுக்கும் போது அவர்கள் மீது வெறுப்பு விமர்சனங்களை அள்ளிவிடத் தூண்டுகிறது. அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறந்த தருணத்தில் கணவராக அவருடன் இருக்க விரும்பிய கோலி மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஆனால், அதையெல்லாம் உதறிவிட்டு கோலி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரிலிருந்து இடையிலேயே கிளம்பி வந்து அனுஷ்கா சர்மாவுக்கு உறுதுணையாக இருந்தார். இது கோலியின் கடமையும் கூட. ஏனெனில், கோலிக்காக அனுஷ்கா சர்மா பல இடங்களில் தரம் தாழ்ந்து விமர்சிக்கப்பட்டிருக்கிறார். காதலித்த காலகட்டத்தில் மீடியாவிற்கான வியாபார தீனியே அனுஷ்கா சர்மாதான். திருமணத்திற்குப் பிறகு கோலி களத்தில் சிறப்பாக ஆடாவிட்டால் அதற்கும் மனசாட்சியேயின்றி அனுஷ்காவையே குற்றம்சாட்டுவார்கள். அனுபவமிக்க மூத்த முன்னாள் இந்திய வீரர் ஒருவரே கோலியின் ஃபார்ம் பற்றி நேரலையில் பேசும்போது அனுஷ்கா சர்மா குறித்து தரக்குறைவான கமென்ட் அடித்திருந்தார். இப்படியான வசவுகளைக் கடந்தும் அனுஷ்கா கோலிக்கு உற்றத் துணையாக உடன் நின்றார். அவருக்காக பெரும் மதிப்புமிக்கத் தருணம் ஒன்றில் கோலி அவருடன் இருக்க விரும்பினார்.

சகோதரத்துவம்:

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி ரொம்பவே மோசமாக தோற்றிருந்தது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியிலேயே தோற்றிருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், முகமது ஷமிக்கு எதிராக மட்டும் அவரின் மதத்தை குறிப்பிட்டு கேவலமான வசவுகளை அள்ளி வீசினர். ரசிகர்கள் பலரும் அந்த விமர்சனங்களுக்கு எதிராக #IStandWithShami என ஆதரவு குரல்களை எழுப்பினர். இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களுமே கூட ஷமிக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். ஆனால், அவர்களின் ஆதரவில் ஒரு தற்காப்புத் தன்மை வெளிப்பட்டிருந்தது. அதாவது, மதரீதியான விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், மென்மையாக ஷமிக்கான ஆதரவை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால், கோலி மட்டுமே ஒரு கேப்டனாக ஷமிக்காக முன் நின்றதோடு மதரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரத்துவம் பற்றிப் பேசியிருந்தார்.

விராட் கோலி
விராட் கோலி
ஒருவரை மதரீதியாக விமர்சிப்பதை மிக மோசமான செயலாகக் கருதுகிறேன். எல்லாருக்கும் தங்களது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. ஆனால், அதற்காக ஒரு நபர் மதரீதியாக விமர்சிக்கப்படுவார் என்பதையெல்லாம் நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அப்படியானவர்களைப் பற்றிப் பேசி ஒரு நிமிடத்தை கூட நான் வீணாக்க விரும்பவில்லை. நாங்கள் ஷமியுடன் 200% உறுதியாக நிற்கிறோம். எங்களின் சகோதரத்துவத்தை ஒருபோதும் குலைத்துவிட முடியாது.
விராட் கோலி

மாற்றங்களை ஏற்போம்:

மாற்றங்களை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு எந்தச் சலசலப்பும் இல்லாமல் நம்மைத் தகவமைத்துக் கொள்வது ஒரு கலை. கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணியில் கேப்டன்சி விஷயத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டன. கோலி தானாகவே டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலியிருந்து விலகினார். பிசிசிஐயும் தாமே முன்வந்து மற்ற ஃபார்மேட்களில் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது. பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே ஏகப்பட்ட முரண்கள் உண்டாகின. ஒரு கேப்டனாக கோலி அணிக்குள் முழுமையாக அதிகாரம் செலுத்தி வந்திருந்தார். கோலியின் விருப்பத்திற்காக பயிற்சியாளரையே தூக்கி எறிந்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. அப்படி அதிகாரத்தை அனுபவித்தவர், கிரீடம் இறங்கிய பிறகு எப்படிச் செயல்படப்போகிறார், எந்த ஈகோவும் இல்லாமல் ஒரு சாதாரண வீரராக அணியில் அவரால் செயல்பட முடியுமா என்பது போன்ற கேள்விகளும் ஐயமும் எழுந்திருந்தன. ஆனால், கோலி அதற்கெல்லாம் இடமே கொடுக்கவில்லை.

விராட் கோலி
விராட் கோலி
டீம் ஸ்பிரிட்டுடன் அணிக்காக எந்த மனத்தடையுமின்றி முன்பை விட இன்னும் அதிகமாக தன்னை அர்ப்பணித்து ஆடி வருகிறார்.

மேலே குறிப்பிட்ட 3 குணாதிசயங்களை வெளிப்படுத்துவதற்குமே ஓர் அபாரத் துணிச்சலும் மனத்திடமும் தேவைப்படும். அது கோலியிடம் இருந்தது. இவற்றாலும்தான் கோலி அந்த ஜாம்பவான் அந்தஸ்தை எட்டியிருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்துகள் `கிங்' கோலி!