Published:Updated:

ஹேன்ஸி க்ரோனியே - பாப் உல்மர் இயர்பீஸ் சர்ச்சை: விவாதங்களைக் கிளப்பிய சம்பவத்தின் நினைவுகள்!

Bob Woolmer, Hansie Cronje

நிறைய சாதனைகளை அவர்கள் நிகழ்த்தி இருந்தாலும், எல்லாவற்றையும் விட இன்றைய தேதிவரை, இந்தச் சம்பவத்திற்காகத்தான் ஹேன்ஸி - உல்மர் கூட்டணி நினைவுகூரப்படுகிறது.

ஹேன்ஸி க்ரோனியே - பாப் உல்மர் இயர்பீஸ் சர்ச்சை: விவாதங்களைக் கிளப்பிய சம்பவத்தின் நினைவுகள்!

நிறைய சாதனைகளை அவர்கள் நிகழ்த்தி இருந்தாலும், எல்லாவற்றையும் விட இன்றைய தேதிவரை, இந்தச் சம்பவத்திற்காகத்தான் ஹேன்ஸி - உல்மர் கூட்டணி நினைவுகூரப்படுகிறது.

Published:Updated:
Bob Woolmer, Hansie Cronje

'நன்மை உண்டெனில், தீமையும் உண்டு!' தொழில்நுட்பத்தின் உதவியோடு எந்த அளவுக்கு, ஆட்ட நுணுக்கங்களில் மேம்பாடுகளைக் கொண்டு வந்திருக்கிறோமோ, அதே அளவு அதனைத் தவறான வழியிலும், சிலர் பயன்படுத்த முயல்வது இயல்புதானே!

'சுவர்களுக்குக் காதுகளிருக்கும்' பழமொழியை மாற்றி, 'கிரிக்கெட் களத்தில், காதுகளுக்கும் இயர் பீஸ் இருக்கும்!' என்னும் புதுமொழியை உருவாக்கம் செய்ய வைத்த ஹேன்ஸி - உல்மரின் "காதுகள் சொல்ல மறந்த கதை!"தான் இது! 'Hansie Unplugged' என்று அந்தக்காலத்து மீம்களான கார்ட்டூன் மூலம் உலகக்கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேரையும் சென்றடைந்த நிகழ்வு இது! இந்தச் சம்பவத்தில் அப்படியென்ன சுவாரஸ்யம் நிரம்பியிருந்தது?! காலச்சக்கரத்தை பின்நோக்கி உருள விட்டுப் பார்ப்போமா?!
ஹேன்ஸி க்ரோனியே
ஹேன்ஸி க்ரோனியே
ஹாசிப்கான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஹேன்ஸி க்ரோனியே - பாப் உல்மர்' - 90களின் பிற்பகுதியில் இந்தக் கூட்டணி, காலடி வைத்த அத்தனைக் களங்களும், வெற்றி விளைவதாய் மாறின. தென்னாப்ரிக்கக் கிரிக்கெட்டை, அங்குலம் அங்குலமாகச் செதுக்கி மெருகேற்றி, வெற்றி சூத்திரத்தை வர்ணமாகப் பூசிய ஈடு இணையற்றது இந்த இருவரணி! களத்திற்கு வெளியே இருந்து போட்டிக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்த இவர்கள், களத்திற்குள்ளேயும், போட்டியின் போதே, அதனைத் தொடர விரும்பினர். அதைச் செயல்படுத்தவும் செய்தனர்.

மே 15, 1999-ம் ஆண்டு, ஹோவில், உலகக் கோப்பையின் லீக் போட்டியில், இந்தியாவும் தென்னாப்ரிக்காவும் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் அசாருதீன், பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்க, ஓப்பனர்களாக சச்சின் டெண்டுல்கரும் கங்குலியும் களமிறங்கினர். ஹோவில் நடைபெற்ற முதல் மற்றும் கடைசி சர்வதேசப் போட்டி இதுதான் என்பதும், கங்குலியின் முதல் உலகக் கோப்பை போட்டியும் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போட்டியின் சில ஓவர்கள் வழக்கம் போல் நகர்ந்தன. ஆனால் முதல் டிரிங்க்ஸ் பிரேக்கிற்கு சற்று முன்னதாகவே, கமென்டேட்டர்கள் ஏதோ ஒன்றைப் பற்றி தீவிரமாக பேசத் தொடங்க, கேமரா கண்ணைச் சிமிட்டிக் கொண்டு, அவர்கள் பேச்சில் அடிபட்ட நபரின் பக்கம் தலையைத் திருப்பி, கண்களைத் தேய்த்துக் கொண்டு காணத் தொடங்கியது. அங்கே நின்றது அணியின் கேப்டன் ஹேன்ஸிதான். கொஞ்சம் ஜும் செய்து பார்த்த போதே கேமராவோடு சேர்ந்து, பாஷைப் புரியாமல் கமெண்டரி கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களின் கண்களிலும் அது சிக்கியே விட்டது. ஹேன்ஸியின் காதுகளில் இருந்த சின்ன இயர் பீஸ்தான் அது!

கேமராவில் சிக்கியது கங்குலியின் கழுகுக்கண்களில் சிக்காமல் போகுமா?! தனக்குத்தானே அவ்வப்போது பேசிக் கொண்டிருந்த ஹேன்ஸியிடம் ஏதோ தவறிருப்பதைக் கவனித்தவர், கள அம்பயர்களான டேவிட் ஷெப்பர்ட் மற்றும் ஸ்டீவ் பக்னரிடம் முறையிட, அவர்கள் விசாரித்த போதுதான் உண்மை வெளிவந்தது. வசூல்ராஜா, எம்பிபிஎஸ்ஸில் கதாநாயகன் கதாப்பாத்திரம், பரிட்சையில் தேர்வாக ப்ளூடூத்தைப் பயன்படுத்தும் அதே டெக்னிக்கை, ஆதிகாலத்திலேயே பயன்படுத்தி இருந்தார் ஹேன்ஸி. அவரது காதில் இருந்த இயர் பீஸ் மூலமாக, நேரலையாக உத்தரவுகள் பாப் உல்மரிடமிருந்து வந்து கொண்டே இருந்தன ஹேன்ஸிக்கு. வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டும் அதனை அணிந்திருந்தது தெரியவந்தது.

Hansie Cronje
Hansie Cronje

இந்த விநோதப் பிரச்னைக்கு எது தீர்வென்பது கள அம்பயர்களுக்குத் தெரியவில்லை, ஏனெனில், உலகக்கிரிக்கெட் வரலாற்றில் அது முதல்முறை! எனவே பிரச்னை மேட்ச் ரெஃபியான தலத் அலியிடம் செல்ல, அவராலும் முடிவெடுக்க முடியாமல் போக, ஐசிசியின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்லப்பட்டது. ரூல்ஸ் புத்தகங்களை வரிவரியாய் வாசித்து, அதற்கு எதிராக எந்த விதியும் இல்லை என்பதால், "பயன்படுத்தக் கூடாது என்று சட்டத்தில் இல்லை, அதே நேரத்தில் தார்மீக அடிப்படையில் இது நியாயமுமில்லை" என்று சொல்லி இயர் பீஸைக் கைப்பற்றி போட்டியைத் தொடரச் சொன்னது ஐசிசி. இந்தியா நிர்ணயித்த 254 என்ற இலக்கை இலகுவாய் எட்டியது தென்னாப்பிரிக்கா!

ஆனால், இந்தப் பிரச்னை மிகப் பெரியதாக மாறத்தொடங்கியது. ஹேன்ஸியை நோக்கியும் உல்மரை நோக்கியும் கேள்விக் கணைகள் பாய, தாங்கள் செய்தது தவறேயில்லை என்ற கருத்தோடே பிரச்னையை இருவரும் அணுகினர். இயர் பீஸ்களைப் பயன்படுத்துவது சில ஃபுட்பால் டோர்னமெண்ட்களில் சகஜமாகக் காணப்படும் ஒன்றுதான். அதையெல்லாம் உற்று நோக்கியிருந்த உல்மருக்கு இதை ஏன் கிரிக்கெட்டில் முயலக் கூடாது என்ற எண்ணம் எழ, கவுண்டி கிரிக்கெட்டில், அதைப் பயன்படுத்தி வெற்றி கண்டதோடு, உலகக் கோப்பை பயிற்சிப் போட்டிகளிலும், இதைச் சத்தமில்லாமல் பரீட்சித்துப் பார்த்திருந்தார். அவரைப் பொறுத்தவரை, சின்னக் கையேட்டில், மற்ற பயிற்சியாளர்களைப் போல், பக்கம் பக்கமாய் எழுதி வைப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. தனது அணி வீரர்களுக்கு, அவர்களது தவறுகளை அந்த நொடியே சுட்டிக்காட்டி, சரி செய்ய வைக்கவேண்டும் என்பதே, அவரது எண்ணமாக இருந்தது.

Hansie Cronje
Hansie Cronje

ஹேன்ஸிக்கோ, தான் பார்க்காத ஒரு பரிமாணத்திலிருந்து, உல்மர் போட்டியை அணுகுவதால், சில விஷயங்களை அவர் சரியாகச் சுட்டிக் காட்ட முடியும் எனத் தோன்றியதால், அவருக்கும் இது நியாயமான ஒன்றாகவே பட்டது. ஆலன் டொனால்டும், அதற்கு ஒத்துக்கொள்ள, ஒன்றிணைந்து திட்டத்தை அரங்கேற்றி இருந்தனர். ஆகமொத்தம், அவர்களைப் பொறுத்தவரை, அது நியாயமே. எப்பொழுதும், எல்லோருக்கும் தத்தம் செயல்களுக்கு, ஏதோ ஒரு நியாயம் இருக்கத்தானே செய்யும்?! தோல்வியைத் தழுவியதால் அசாருதீனாவது பொங்கி எழுவாரென மைக்குகள் அவர் பக்கம் நீண்டன, அவரோ, "இது காலப்போக்கில் வரப்போகின்ற மாற்றம்தான்!" என்று சொல்லி, விவாதங்களுக்கே இடமளிக்காது ஒதுங்கி நடந்துவிட்டார். அந்தக் காலகட்டத்திலேயே, இதற்கு எதிராகப் பல குரல்களும், ஆதரவாக சில குரல்களும் எழுந்து வந்தன.

ஐசிசி தொடர்ந்து விசாரணை நடத்தியது. ஒரு கட்டத்தில், தென்னாப்ரிக்க கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி, அலி பட்சர் உடன்பாடோடுதான் எல்லாமே நடந்ததென்பது வெளிச்சத்திற்கு வந்தது. இறுதியாக, முக்கியமான தொடரில், இது போன்ற புதிய முயற்சிகளை செய்யவேண்டாம் எனச் சொல்லி, எஞ்சிய போட்டிகளில் அதைப் பயன்படுத்த தடைவிதித்தது.

ஹேன்ஸி - உல்மர் விதைத்த விதை மண்ணோடு மக்கிவிடவில்லை. பல வடிவங்களில், பல பரிணாமத்தில், திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது, அதன்பிறகும். அப்பொழுதெல்லாம், எத்தனை ஆண்டாகியும், ஹேன்ஸி செய்த விஷயத்தோடு தொடர்புபடுத்திதான் பேசப்பட்டு வருகிறது.

2019-ல், இலங்கைக்கு எதிரான போட்டியில், ஸ்டீவ் ஸ்மித், கமெண்டேட்டரிடமிருந்து மைக்ரோபோன் மூலமாக ஒரு தகவலைப் பெற்றார். அது, அதற்கு முந்தைய ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த கம்மின்ஸ், ஹாட்ரிக் விக்கெட்டுக்கான பந்தைத் தற்போது வீசப் போகிறார் என்பதுதான். ஸ்மித், அதை கேப்டன் ஃபிஞ்சுக்கு நினைவுபடுத்தி, அதற்கேற்ப ஃபீல்ட் செட்டிங் செய்யச்சொல்ல, இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. ஆனால், நல்லவேளையாக, ஃபிஞ்ச் அப்படி எதுவும் செய்யாததால், அந்தப் பிரச்னை அப்போதே முடிந்து போனது.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

இதன்பின், கடந்த டிசம்பரில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியிலும், சமீபத்திய ஐபிஎல் தொடரில், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும், கேப்டன் மோர்கனுக்கு, சங்கேத மொழியாக, எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட பதாகைகளை, வெளியேயிருந்த சப்போர்டிங் ஸ்டாஃப்புகள் காட்டி, போட்டியின் போது உதவியிருந்தது கேமரா காட்சிகளில் சாட்சிகளாகி இருந்தன. "அப்படி ஒரு உதவி வெளியே இருந்து கிடைக்குமென்றால் கேப்டனின் வேலைதான் என்ன?!" என்று சேவாக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

2017-ல் நடைபெற்ற பிக் பாஷ் லீக் போட்டி ஒன்றில், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸின் கேப்டனான பிராட் ஹாட்ஜிடம் பேசிக் கொண்டிருந்தார் கமெண்டேட்டர் மார்க் ஹோவர்டு. அப்போது அவர், தன்னையுமறியாமல், பென் லாஃப்லின் களத்தில் நிற்கும் ஷேன் வாட்சனுக்கு வீசிய எட்டு பந்துகளில், இரண்டுமுறை, அவரது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்து, "இனி நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!"என்று சொல்ல, ஹாட்ஜும் அடுத்த ஓவரே அந்த பௌலரைக் கொண்டு வந்தார். அந்த ஓவரில் வாட்சனின் விக்கெட் விழவில்லை, எனினும், இது கடும் எதிர்ப்பலையைக் கிளப்பியது.

வயர்லெஸ் கருவிகளை பிளேயிங் ஏரியாவுக்கு அருகில் பயன்படுத்தக் கூடாதென்ற விதியை ஐசிசி கொண்டுவந்தது. போட்டியின்போது வீரர்கள் செல்போன்களைப் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டக் அவுட்க்கும் டிரெஸ்ஸிங் ரூமுக்கும் இடையில் கேப்டன், சப்போர்டிங் ஸ்டாஃப்களிடம், ஸ்ட்ராடஜி குறித்தோ, மருத்துவக் காரணங்களுக்காகவோ, வேறு தேவைகளுக்காகவோ, வாக்கி டாக்கிகளைப் பயன்படுத்தி முன்அனுமதியோடு பேசலாம் என்ற விதிவிலக்கு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி, 2017-ம் ஆண்டு டெல்லியில் நடந்த, நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கோலி, வாக்கி டாக்கியைப் பயன்படுத்தியதும் கடும் விவாதப் பொருளானது. பின் ஐசிசி தலையிட்டு, அது விதிமீறல் அல்ல என விளக்கம் தந்தது.

Hansie Cronje
Hansie Cronje

கணிப்பொறியின் துணைகொண்டு, இன்றைய வீடியோ அனாலிஸ்டுகள் செய்யும் அத்தனை ஜாலங்களையும், 22 வருடங்களுக்கு முன்பே நிகழ்த்திக் கொண்டிருந்த உல்மர், புதுமையான யுக்திகளுக்கும், தொழில்நுட்ப நுணுக்கங்களுக்கும் பெயர் போனவர். ஹேன்ஸியோ, ஆஸ்திரேலியாவைத் தவிர்த்து மற்ற அத்தனை அணிகளும் எதிர்கொள்ள அஞ்சும் அணியாக, தனது அணியை மாற்றிக் காட்டியவர்.

இத்தனை சாதனைகளை அவர்கள் நிகழ்த்தி இருந்தாலும், எல்லாவற்றையும் விட இன்றைய தேதிவரை, இந்தச் சம்பவத்திற்காகத்தான் ஹேன்ஸி - உல்மர் கூட்டணி நினைவுகூரப்படுகிறது. அவர்கள் இறந்து இத்தனை ஆண்டுகளாகியும் இது மாறிப் போகவில்லை.

போட்டி இடைவெளியில் 12-வது வீரர் மூலமாக தகவல்கள் பரிமாற்றம் எப்பொழுதும் நடப்பதுதான், ஐபிஎல்லின் ஸட்ராடஜிக்கல் டைம் அவுட்டின் நோக்கமும் இதுதான். ஆனால், அதன்பின் போட்டி நடைபெறும்போது, அது 22 பேருக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர, மூன்றாவது நபர் தலையீடு இருக்கக் கூடாது என்பதே நியாயமானது என்பதே பெரும்பாலான பொதுஜனக் கருத்து. எது எப்படியோ, அத்தனை விவாதங்களுக்கும் வித்திட்ட, ஹேன்ஸி - உல்மரின் அந்த நாடகம் அரங்கேறிய நாளிது!