சினிமா
தொடர்கள்
Published:Updated:

கோப்பையை வென்ற குஜராத்!

கோப்பையை வென்ற குஜராத்!
பிரீமியம் ஸ்டோரி
News
கோப்பையை வென்ற குஜராத்!

ஹர்திக் மட்டுமல்ல, அந்த அணி நம்பிய ஒவ்வொரு வீரருமே அணியின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்தனர்.

ஐ.பி.எல் 2022 தொடரை வென்றிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். ரசிகர்கள், விமர்சகர்கள் என ஒவ்வொருவராலும் புறக்கணிக்கப்பட்ட அந்த அணி, தங்கள் முதல் சீசனிலேயே வரலாறு படைத்திருக்கிறது.

பிப்ரவரி இரண்டாவது வாரம், ஐ.பி.எல் 2022 தொடருக்கான ஏலம் முடிந்தபோது குஜராத் டைட்டன்ஸ் மீது பெரும் விமர்சனம் வைக்கப்பட்டது. 10 அணிகளிலேயே அதுதான் மிகவும் பலவீனமான அணி என்று கருதப்பட்டது. ரஷீத் கான், முகமது ஷமி, லாகி ஃபெர்குசன் என பந்துவீச்சு பலமானதாக இருந்தாலும், பேட்டிங் சுமாராகவே இருந்தது. ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் தவிர்த்து நம்பிக்கை கொடுக்கக்கூடியவர்கள் யாரும் இருக்கவில்லை. இத்தனைக்கும் மேல், அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தவர், அதுவரை பெரிய அனுபவம் கொண்டிராத ஹர்திக். ஆனால், எதெல்லாம் அவர்களின் மைனஸாகப் பேசப்பட்டதோ, அதையெல்லாம் வைத்தே இந்தத் தொடரை வென்றது குஜராத். வென்று காட்டினார் கேப்டன் ஹர்திக்!

கோப்பையை வென்ற குஜராத்!

இந்த சீசனில் பல அணிகள் தடுமாறக் காரணமாக இருந்தவர்கள் அந்த அணிகளின் கேப்டன்கள்தான். ரவீந்திர ஜடேஜா, ரோஹித் ஷர்மா, கேன் வில்லியம்சன், மயாங்க் அகர்வால் என அனைவருமே தங்கள் அணியின் காலை வாரினர். அதேசமயம், தன் அணியை முன்னால் நின்று வழிநடத்தினார் ஹர்திக்.

சீனியர் வீரர்கள்மீது நம்பிக்கை வைத்தது, தைரியமான முடிவுகள் எடுத்தது என கேப்டனாக சென்டம் ஸ்கோர் செய்திருக்கிறார் அவர். ‘இவர் அவ்வளவுதான்’ என அனைவராலும் கருதப்பட்ட டேவிட் மில்லரை தங்கள் அணியின் டிரம்ப் கார்டாகப் பயன்படுத்தினார். டாஸ் வென்ற ஒவ்வொரு கேப்டனும் பௌலிங்கையே தேர்வு செய்துகொண்டிருந்தபோது தைரியமாக முதல் ஆளாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார், ஆடுகளத்தின் தன்மை காரணமாக 10 கோடி ரூபாய் கொடுத்து எடுத்த பௌலரை வெளியே அமரவைக்கவும் தயாராக இருந்தார்.

கேப்டன்சி மட்டுமல்லாமல் பேட்டிங், பௌலிங் என அனைத்து ஏரியாவிலும் அணிக்குக் கைகொடுத்தார் ஹர்திக். கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸுக்குப் பெரிதாக ரன் சேர்க்காத இவர்தான், குஜராத் டைட்டன்ஸின் டாப் ஸ்கோரர். அணிக்குத் தேவை என நம்பர் 3, நம்பர் 4 என எல்லா பொசிஷன்களிலும் ஆடினார். தன் பந்துவீச்சால் ஃபைனலின் ஆட்ட நாயகன் விருதையும் வென்று அசத்தினார். அதிர்ஷ்டம் கைகொடுக்கிறது என்று அவரே ஒருகட்டத்தில் சொல்லியிருந்தாலும், அந்த அதிர்ஷ்டத்தின் உருவமாக இருந்தது இவர்தான்!

ஹர்திக் மட்டுமல்ல, அந்த அணி நம்பிய ஒவ்வொரு வீரருமே அணியின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்தனர். ரித்திமான் சஹா, சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் தெவேதியா, யஷ் தயால், ஆர்.சாய்கிஷோர், அல்சாரி ஜோசஃப் என ஒவ்வொருவரும் ஸ்டார்களாகத் திகழ்ந்தனர். இந்த வீரர்கள்மீது அந்த அணி வைத்திருந்த நம்பிக்கை அசாத்தியமானது!

பல அணிகள் தங்கள் பேக் அப் வீரர்களுக்காகவே பல கோடிகள் செலவு செய்தன. நான்கு கோடிக்கும் மேலாகச் செலவு செய்து எடுக்கப்பட்ட வீரர்கள் பலரும் பெஞ்சில் அமர்ந்திருந்தனர். ஆனால், குஜராத் அணியில் அப்படியில்லை. குறிப்பிட்ட சில வீரர்களின் மீது மட்டும் அதிகம் முதலீடு செய்துவிட்டு, மற்ற இடங்களை இருந்த தொகையை வைத்து நிரப்பியது. அதனால்தான், ஏலத்துக்குப் பிறகு அந்த அணியில் பேக் அப் வீரர்கள் இல்லை, எல்லா இடங்களுக்கும் சரியான ஆள்கள் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நம்பிக்கை வைக்கப்பட்ட எல்லோருமே ஹிட் ஆகும்போது, பேக் அப் எதற்கு? குஜராத் டைட்டன்ஸ் அணியால் 3 கோடிக்கும் மேல் கொடுத்து எடுக்கப்பட்ட 9 வீரர்களுமே இறுதிப் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருந்தார்கள்.

இப்படி நம்பிக்கை வைத்த வீரர்கள் எல்லோருமே சிறப்பாக ஆடியது, இதுநாள் வரை தடுமாறிய வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கள் பழைய ஃபார்முக்குத் திரும்பியது என ஒன்பது கோள்களும் குஜராத் டைட்டன்ஸுக்காக நேர்க்கோட்டில் நின்றன. அந்த அணியும், தங்கள் சொந்த மண்ணில் திரண்டிருந்த ஒரு லட்சம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்தக் கோப்பையை உயர்த்திப் பிடித்திருக்கிறது.

மீண்டு வருவார்களா சாம்பியன்கள்!

ஒரு புதிய அணி சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்த சீசனில், 9 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த ஏலத்தின்போது குஜராத்தைப் போல் இந்த இரு அணிகளும்கூட விமர்சனத்துக்குள்ளாகின. ஆனால், இவர்களால் குஜராத் போன்று சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் அவர்களை முடக்கிவிட்டன. ஆனால், இந்த இரண்டு அணிகளுமே நம்பிக்கை தரக்கூடிய இளம் வீரர்களைக் கண்டெடுத்திருக்கின்றன.

கோப்பையை வென்ற குஜராத்!

திலக் வெர்மா, ரமன்தீப் சிங், டிவால்ட் பிரெவிஸ் என அடுத்த தலைமுறைக்கான நட்சத்திரங்களைக் கண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். டிம் டேவிட் மூலம் பொல்லார்டின் இடத்தை நிரப்பிவிட முடியும். ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற சூப்பர் ஸ்டார் அடுத்த சீசன் அணியில் இணையும்போது நிச்சயம் பலமடங்கு அந்த அணி பலம் பெறும்.

தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்பதே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு டானிக். மஹீஷ் தீக்சனா, மதீஷா பதிரனா, முகேஷ் சௌத்ரி போன்ற வீரர்கள் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். 2022 சீசன் என்றொன்று இருந்ததை முற்றிலுமாக மறந்துவிட்டு, பழைய ஆல்ரவுண்டராக ஜடேஜா இணைந்தால் நிச்சயம் விசில் பறக்கும்.

அடுத்த சீசனுக்கு முன்பு நடக்கும் மினி ஆக்‌ஷனுக்கு முன் இந்த இரு அணிகளும், ஏதோவொரு ஜாம்பவானை ரிலீஸ் செய்துவிட்டு, புதிய சூப்பர் ஸ்டாரை ஒப்பந்தம் செய்யக்கூடும். நிச்சயம் ஒரு சாம்பியன் அணியின் உத்வேகத்தோடு இந்த அணிகள் அடுத்த சீசனில் கம்பேக் கொடுக்கும். ஒரு மோசமான சீசனுக்குப் பிறகு கோப்பையை வெல்வது இந்த அணிகளுக்குப் புதிதில்லை. 2023 ஐ.பி.எல் கோப்பையை தோனியோ, ரோஹித்தோ தூக்கினால் நாமும் ஆச்சர்யப்படப் போவதில்லையே!

****

“நானும் நெஹ்ராவும் ஒரே மாதிரி சிந்தித்தோம். தனி ஆளாக போட்டிகளை வென்று தரக்கூடிய பௌலர்கள் அணிக்கு அவசியம் என்பதில் உறுதியாக இருந்தோம். டி20 பேட்டர்களின் ஆட்டமாக இருக்கலாம். ஆனால், இங்கு பௌலர்கள்தான் போட்டிகளை வென்று தருவார்கள்.” - ஹர்திக் பாண்டியா

கோப்பையை வென்ற குஜராத்!

ஐ.பி.எல் கோப்பை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் சாய் கிஷோர். இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகள், 2 கேட்ச்கள் என மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுத்தார். 5 போட்டிகளில் விளையாடிய 20 வயது இளம் வீரர் சாய் சுதர்ஷன், ஒரு அரைசதம் அடித்து அசத்தினார். சீனியர் விஜய் சங்கர் மட்டும்தான் பெரிய பங்களிப்பு கொடுக்கவில்லை.