Published:Updated:

மீண்டும் மிரட்டிய மேக்ஸ்வெல் அணி... முதல் போட்டியிலேயே சொதப்பிய சிட்னி தண்டர்ஸ்! #BBL

Melbourne Stars | BBL
Melbourne Stars | BBL ( twitter.com/cricketcomau )

ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திருந்த நிலையில் நல்ல தொடக்கம் கிடைத்த பிறகும் ஹேல்சும் ஃபெர்குசனும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க எடுத்துக்கொண்ட நேரம் ரொம்பவே அதிகமாக இருந்தது. #BBL

பிக்பேஷ் லீகின் மூன்றாவது நாளான இன்று மூன்றாவது லீக் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியும் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிட்னி தண்டர்ஸ் அணிக்கு இந்த சீசனில் இதுதான் முதல் போட்டி. மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி நேற்றுதான் ப்ரிஸ்பேன் ஹீட்ஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்ற உத்வேகத்தோடு களமிறங்கியது. ஆனால், அந்த அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த நேதன் கூல்டர்நைல் இந்த போட்டியில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து விளையாடி காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கலாம்.

டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Melbourne Stars | BBL | Stoinis
Melbourne Stars | BBL | Stoinis
twitter.com/cricketcomau

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் சார்பாக ஸ்டாய்னிஸும் ஆண்ட்ரே ப்ளெட்சரும் களமிறங்கினர். இருவரும் முதல் 4 ஓவர் பவர்ப்ளேயில் அதிக ரன்களை எடுத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு ஆடினர். நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆன ஸ்டாய்னிஸ், இன்றைக்கு குக் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸரோடு கணக்கைத் தொடங்கினார். டேனியல் சாம்ஸ் வீசிய அடுத்த ஓவரில் ஃப்ளெட்சர் ஒரு சிக்ஸரையும் பவுண்டரியையும் அடித்தார். அடுத்ததாக க்ரிஸ் கீரின் வீசிய மூன்றாவது ஓவரில் ஸ்டாய்னிஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். ஸ்ட்ரைட் பவுண்ட்ரிகளை டார்கெட் செய்து அதிரடி காட்டினார். இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் வந்தது. பவர்ப்ளே முடிவில் 4 ஓவர்களில் 41 ரன்கள் விக்கெட் இழப்பின்றி கிடைத்திருந்தது.

ஆஸியின் U19 ஸ்டாரான தன்வீர் சங்கா வீசிய 5 வது ஓவரில் ஆண்ட்ரே ஃப்ளெட்சர் lbw ஆகி வெளியேறினார். ரீப்ளேவில் பார்க்கும்போது பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்வது போல தோன்றியது. ஆனால், என்ன செய்வது!? புதுசு புதுசாக ரூல்ஸ் போடும் பிக்பேஷ் லீகில் இன்னமும் DRS மட்டும் அறிமுகப்படுத்தபடவில்லை. கொஞ்சம் ஏமாற்றத்துடன் 12 ரன்னில் வெளியேறினார் ஃப்ளெட்சர். ஒன்டவுனில் கடந்த போட்டியில் கார்ட்ரைட் இறங்கியிருந்த சூழலில் இன்று மேக்ஸ்வெல் ஒன்டவுனில் இறங்கினார். ஸ்டாய்னிஸ் ஒரு பக்கம் பவுண்டரிகளாக வெளுத்தெடுத்து கொண்டிருந்தார். அவருக்கு சப்போர்ட்டாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார் மேக்ஸ்வெல். க்ரிஸ் க்ரீன் வீசிய 8 வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து தனது 13வது அரைசதத்தை பதிவு செய்தார் ஸ்டாய்னிஸ். இந்தக் கூட்டணி மெதுவாக செட்டில் ஆகி 10 ஓவர்களில் அணியை 92 ரன்களுக்கு உயர்த்தியது. இதற்கு மேல் முழுமையாக இந்த கூட்டணி அதிரடியில் இறங்கிவிடும் என நினைக்கையில் 11 வது ஓவரில் 67 ரன்களில் குக்கின் பந்து வீச்சில் சாம்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஸ்டாய்னிஸ். ஸ்டாய்னிஸ் வெளியேறிய பிறகு நம்பர் 4 ல் கார்ட்ரைட் களமிறங்கினார்.

Melbourne Stars | BBL | Maxwell
Melbourne Stars | BBL | Maxwell
twitter.com/cricketcomau

கார்ட்ரைட் கொஞ்சம் சிங்கிள் தட்டி ஆடிவிட்டு சாம்ஸ் வீசிய 13 வது ஓவரில் லாங் ஆனில் வெறித்தனமாக ஒரு சிக்ஸரை விளாசினார். மேக்ஸ்வெல்லும் உள்ளே வந்து ரொம்ப நேரம் ஆகியிருக்க, கார்ட்ரைட்டும் நல்ல டச்சில் இருந்ததால் இதுதான் சரியான நேரம் என பவர் சர்ஜ் எனப்படும் 2 ஓவர் பவர்ப்ளேவை எடுத்தது மெல்பர்ன் அணி. ஆனால், பவர்ப்ளேவை எடுத்தவுடனே மெக் ஆண்ட்ரூ பந்துவீச்சில் கார்ட்ரைட் வெளியேறினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன் மட்டுமே வந்தது. அடுத்து க்ரிஸ் க்ரீன் வீசிய ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு அடுத்த பந்தே முட்டி போட்டு ஸ்கொயராக ஆட முயன்று lbw ஆகி 39 ரன்களில் வெளியேறினார் மேக்ஸ்வெல். இந்த 2 ஓவர் பவர்ப்ளேயில் மெல்பர்ன் அணி 19 ரன்கள் எடுத்திருந்தாலும் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், அந்த அணியால் கடைசி 5 ஓவர்களில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. 10 ஓவர்கள் முடிவில் 92 ரன் எடுத்திருந்த மெல்பர்ன் அணியால் 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

மெல்பர்ன் அணியின் இந்த சொதப்பலுக்கு காரணம் கேப்டன் மேக்ஸ்வெல்தான். அவர் எதற்கு பேட்டிங் ஆர்டரை மாற்றி ஒன்டவுனில் வந்தார் என புரியவில்லை. ஸ்டாய்னிஸ் அதிரடியாக ஆடிக் கொண்டிருக்கிறார். அவருடன் நாமும் சேர்ந்து அதிரடியில் இறங்கினால் பெரிய ஸ்கோருக்கு சென்றுவிடலாம் என நினைத்திருக்கலாம். ஆனால், மேக்ஸ்வெல் அப்படி ஆடவில்லை. ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்து கொண்டிருந்தார். இதே வேலையை பேட்டிங் ஆர்டரை குழப்பாமல் கார்ட்ரைட்டின் கையில் கொடுத்திருந்தால் அவரே சிறப்பாக முடித்திருப்பார். தேவையில்லாமல் பேட்டிங் ஆர்டர் குழப்பி டெத் ஓவர்களில் அடிக்க ஆளில்லாமல் அணியின் ஸ்கோர் பெரிதும் குறைந்துவிட்டது.

BBL | Hilton Cartwright
BBL | Hilton Cartwright
twitter.com/cricketcomau

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சேஸிங்கை தொடங்கியது சிட்னி தண்டர்ஸ். சிட்னி தண்டர்ஸ் அணியில் ஓப்பனர்களாக கவாஜாவும் ஹேல்ஸும் களமிறங்கினர். மெல்பர்ன் அணி சார்பாக முதல் ஓவரை கேப்டன் மேக்ஸ்வெல்லே தொடங்கி வைத்தார். இந்த ஓவரில் ஹேல்ஸ் இரண்டு பவுண்டரிக்களை அடிக்க 11 ரன்கள் கிடைத்தன. அடுத்து ஸ்டான்லேக் விசிய ஓவரில் ஹேல்ஸ், கவாஜா இருவரும் தலா ஒரு பவுண்டரி அடிக்க 9 ரன்கள் கிடைத்தன. மெல்பர்ன் அணியை போலவே நல்ல தொடக்கம் இவர்களுக்கும் கிடைக்கத் தொடங்கிய நிலையில் தில்ரூபன் ஹுசைன் வீசிய 3 வது ஓவரில் கவாஜா கீப்பர் பென் டங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பந்து பேட்டில் பட்டது போல் சத்தம் கேட்டாலும் இதுவும் ஒரு சர்ச்சைக்குரிய அவுட் ஆகவே இருந்தது. மீண்டும் DRS இல்லாததால் ஒரு விக்கெட் விரயமானது. அடுத்து ஃபெர்குசனும் ஹேல்ஸும் கூட்டணி போட்டனர். இந்தக் கூட்டணி மெதுவாக செட்டில் ஆகி ஏதுவான பந்துகளை மட்டுமே பவுண்டரி அடித்துக் கொண்டு நல்ல பார்டனர்ஷிப் போட்டது. 10 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.

ஸ்கெட்ச் போட்ட மேக்ஸ்வெல்... மிரட்டிய கூல்டர்நைல்... பவர்ப்ளேவில் வீழ்ந்த ப்ரிஸ்பேன் ஹீட்! #BBL

கடைசி 10 ஓவர்களில் 101 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கியரை மாற்றத் தொடங்கியது இந்தக் கூட்டணி. அடுத்த இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் கிடைத்தன. இப்படியே ஓவருக்கு 10 ரன்கள் என தொடர வேண்டிய நிலையில் 13 வது ஓவரில் ஹின்ச்லீஃப் பந்து வீச்சில் டீப் மிட் விக்கெட்டில் தூக்கியடித்து கேட்ச் ஆனார் ஹேல்ஸ். ஹேல்ஸ் 46 ரன்னில் வெளியேறினாலும் கேப்டன் ஃபெர்குசன் தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஹேட்சர் வீசிய 15 வது ஓவரில் சிங்கிள் தட்டி அரைசதத்தை கடந்தார் ஃபெர்குசன். ஆனால், அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து விட்டு இன்னொரு பவுண்டரிக்காக முயன்று இன்சைடு அவுட் ஷாட் ஆடி கவர் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் வெளியேறும் போது ஸ்கோர் 115. கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹேட்சர் மீண்டும் 17 வது ஓவரில் வந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிட்னி தண்டர்ஸை மீள முடியாமல் செய்திருப்பார். இறுதியில் அந்த அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

BBL
BBL
twitter.com/cricketcomau

ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திருந்த நிலையில் நல்ல தொடக்கம் கிடைத்த பிறகும் ஹேல்சும் ஃபெர்குசனும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க எடுத்துக்கொண்ட நேரம் ரொம்பவே அதிகமாக இருந்தது. பெரிதாக பவுண்டரிக்கு முயலாமல் ஆடியதால் முதல் 10 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மேலும், டெத் ஓவர்களில் விக்கெட்டுகள் இருந்தும் நின்று முடித்துக்கொடுப்பதற்கு பெரிய ஹிட்டர்கள் யாரும் இருந்ததாக தெரியவில்லை. அதிக பந்துகளை சந்தித்திருந்த ஹேல்ஸ் மற்றும் ஃபெர்ச்குசன் இருவரில் ஒருவராவது கடைசி 5 ஓவரில் க்ரீஸுக்குள் இருந்திருக்க வேண்டும்.

மெல்பர்ன் அணி சார்பில் நேதன் கூல்டர் நைலுக்கு பதில் உள்ளே வந்த ஹேட்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆடம் ஷம்பா 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Bash Boost பாயிண்டையும் சேர்த்து வென்றதால் 4 புள்ளிகளை பெற்றது மெல்பர்ன் அணி. நேற்றைய போட்டியிலும் 4 புள்ளிகளை வென்றிருப்பதால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை வகிக்கிறது மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி.
அடுத்த கட்டுரைக்கு