Published:Updated:

கவாஸ்கர் முதல் கோலி வரை... எல்லோரும் ஏன் தோனியை கொண்டாடுகிறார்கள்?! #HBDDhoni

தோனி
தோனி ( ஹாசிப்கான் )

முற்றுப்புள்ளி என்று ஒன்று வரும்வரை, வார்த்தை முடிந்து போவதில்லை. அப்படித்தான், தோனியின் விக்கெட் வீழும் வரை, பேட்டிங்கில் இந்தியாவின் கதைக்கு முடிவுரை எழுதப்பட்டதில்லை!

‘’கேப்டனாக நீங்கள் பெறக்கூடிய மிகப்பெரிய சாதனை உங்கள் அணியினரின் நம்பிக்கை மற்றும் மரியாதை. ஒரு துப்பாக்கித் தோட்டா தோனியை நோக்கி வந்தால் எங்களில் எவரும் எந்த யோசனையும் இன்றி அவருக்கு முன்னால் நின்று அந்த தோட்டாவை உடலில் வாங்குவோம்!’’
கே.எல்.ராகுல்

என்ன செய்து விட்டார் தோனி, இந்தளவுக்கு ரசிகர்களும், சக வீரர்களும், இவ்வளவு ஏன் தற்போதைய கேப்டன் கோலியே, "நீங்கள்தான் என்னுடைய நிரந்தரக் கேப்டன்" எனப் போற்றும் அளவுக்கு!

பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 50 ஓவர் உலக கோப்பையை வென்று இந்தியர்களின் கனவை அவர் நிகழ்த்திக் காட்டி... பத்து மாதங்கள் உருண்டோடி விட்டன, அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து!

பன்ட், பிரித்வி என அடுத்த தலைமுறை வீரர்கள், தலையெடுக்க தொடங்கி விட்டனர். ஆனால், இன்னமும், அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் சிறிதும் குறையவில்லை. இன்றும்கூட, இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியிலும் தோல்வியிலும், ஏதோ ஒரு காரணத்துக்காக, இவரது பெயரை, நாக்குகள் உச்சரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஏனெனில், நமது நினைவு ஏடுகளில், அவர் பதிய வைத்துச் சென்றிருக்கும் பொன்னான தருணங்கள் அப்படி!

மகேந்திர சிங் தோனி... 1000 வார்த்தைகளுக்குள் படம்பிடிக்க முடியாத, சரித்திரம் அவருடையது, சாதனைகள் அவருடையது‌. M.S. Dhoni: The Untold Story-யால்கூட முழுவதும் வடிக்க முடியாத போராட்டம் அவருடையது.

தோனி
தோனி

அங்குலம் அங்குலமாய், மைதானத்தின் மொத்தத்தையும், தன்னுடையதாக்கி, ஸ்டம்பின் பின்னால் சிம்மாசனமிட்டு, தனி ராஜ்ஜியம் நடத்தியவர்தான் தோனி. இந்திய பேட்டிங் படையில், இறுதியாய் இறங்கி அழிக்கும் பிரம்மாஸ்திரம் அவர். முற்றுப்புள்ளி என்று ஒன்று வரும்வரை, வார்த்தை முடிந்து போவதில்லை. அப்படித்தான், தோனியின் விக்கெட் வீழும்வரை, பேட்டிங்கில் இந்தியாவின் கதைக்கு முடிவுரை எழுதப்பட்டதில்லை. பாதிப் போட்டியில், ரன்ரேட்டைக் கணக்கிட்டு, சேனல் மாற்றிக் கொண்டிருந்த ரசிகர்களை, இதயம் நிறைந்த நம்பிக்கையோடு, கடைசிப் பந்துவரை, பார்க்க வைத்தவர் அவர்‌. அதனால்தான், இன்னமும் 2019 உலகக்கோப்பை ரன்அவுட், காலத்தால் அழிக்க முடியாத வலியாக இருக்கிறது.

அதிக சிக்ஸர்களை அடித்த விக்கெட்கீப்பர் என்று புள்ளிவிபரம் பாராட்டுகிறது‌. ஒருநாள் போட்டிகளில், அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்தவர் என மலைக்கவைக்கிறது. இவை அனைத்தையும் விட, அவர் சம்பாதித்தது மிக அதிகம், அதுதான் மக்களின் நம்பிக்கை. இந்தியாவுக்காக ஆடிய போதும் சரி, சிஎஸ்கேவுக்காக ஆடிய போதும், இறுதிவரை போராடுவதுதான் அவரது பாணி. அனுபவமற்ற இளங்கன்றாக பயமின்றி, இலங்கையை துவம்சம் செய்து அடித்த 183 ஆகட்டும், பாகிஸ்தானை பந்தாடிச் சேர்த்த 148 ஆகட்டும், ஒவ்வொன்றும் மாஸ்டர் கிளாஸ்.

அதுவும், அவர் ஏற்றிருந்த ஃபினிஷிங் ரோலில், அழுத்தம் அதிகம். நிலைத்து நிற்க வேண்டுமென, பந்துகளை வீணடிக்க முடியாது. ஏனெனில், பல சந்தர்ப்பங்களில், தேவைப்படும் ரன்ரேட், 12-ஐ தாண்டும்போதுதான் களமிறங்குவார். முதல் பந்திலிருந்தே சிக்ஸர்கள் சிதற வேண்டும், பவுண்டரிகள் பறக்க வேண்டும். அந்த நொடியிலும், அந்த முகத்தில், துளியளவு கலக்கம் இருக்காது‌. உலகக்கோப்பை இறுதிப் போட்டி என்றாலும் சரி, ஏதோ ஒரு சாதாரண போட்டி என்றாலும் சரி, அவரது அணுகுமுறை ஒன்றுதான். கண்களில் தீர்க்கம் இருக்கும், மனமோ அலைபாயாது. இலக்கை அடைவதற்கான சின்னச் சின்னக் கணக்கீடுகளை, சமன்பாடுகளை, ஒருங்கிணைத்து, அந்த நோக்கத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும் மூளை.

ஒன்றை இரண்டாக்கும், இரண்டை மூன்றாக்கும் கால்கள், சொன்னபடியெல்லாம் கேட்டு, தாமதிக்காமல் தயங்காமல், ஓடிக் கொண்டே இருக்கும். விக்கெட்டுகளுக்கு இடையே ஓடியே ரன் சேர்க்கும் வித்தகத்தை, செய்து காட்டிக் கொண்டே இருந்தார். ஒரு கோப்பையை நமது உடைமையாக்கிய அந்த சிக்ஸரடித்த நொடி, கவாஸ்கருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியக் கிரிக்கெட் ரசிகனுக்கும், அத்தனை அணுக்களிலும் நிறைந்த அற்புதமான தருணம். இயான் பிஷப் சொன்னதைப் போல், கடைசி ஓவரில், 15 ரன்கள் வேண்டுமெனில், பதற்றம் பௌலருக்குத்தான் இருக்கும், தோனிக்கல்ல.

தோனி - சாம்பியன்ஸ் டிராஃபி
தோனி - சாம்பியன்ஸ் டிராஃபி

பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, விக்கெட் கீப்பராகவும், வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத மின்னல் வேகம் இந்த ஜெட் விமானத்துடையது. பேட்ஸ்மேன்கள், பந்து பின்னால் தோனியின் கைக்குச் சென்றிருக்கிறதா என, கவனத்தோடு பார்த்த பிறகே கிரீஸைத் தாண்டி கால்களை எடுத்து வைப்பதைப் பற்றி யோசிக்கவே வேண்டும். மைக்ரோ விநாடி நேரம், கால்கள் தரையில் இருந்து உயர்ந்தாலும், ஸ்டம்ப் சிதறி இருக்கும். அத்தனை துல்லியமான அந்தக் கேமரா கண்கள், தேர்ட் அம்பயரே தேவை இல்லை எனுமளவு கழுகின் கூர்மையோடு, அத்தனையையும் கண்காணிக்கும்.

அவரது எந்த டிஆர்எஸ் கணிப்பும், துளியளவும் தவறியதில்லை. ஃபீல்ட் அம்பயரே, அவரது முகபாவனையைக் கொண்டு, என்ன நடந்திருக்கும் என்பதைக் கணித்துக் கொள்ளலாம். 'நோ லுக் சிக்ஸரை'ப் பார்த்திருப்போம். 'நோ லுக் ஸ்டம்பிங்'கெல்லாம் தோனிக்கு மட்டுமே சாத்தியம். ஃபீல்டிங் செய்யப்பட்டு, ஃபைன் லெக்கில் இருந்து வீசப்படும் பந்தா, டீப் எக்ஸ்ட்ரா கவரில் இருந்து வீசப்படும் பந்தா, எட்டுத் திசையிலிருந்து, எங்கிருந்து எறியப்பட்டாலும், அதிவேக, பாதுகாப்பான அந்தக் கைகளை அடைந்து விட்டால், இரண்டாம் எண்ணமே இன்றி பேட்ஸ்மேன் நடையைக் கட்ட வேண்டியதுதான்.

பேட்ஸ்மேனாக, ஃபீல்டராக, அவர் அரங்கேற்றிய பாத்திரங்களைக் கூட இங்கே இன்னொருவர் தாங்கி விடலாம். ஆனால், கேப்டனாக தோனி தனிப்பெரும் தலைவர்! தனக்குரிய ஆயுதங்களை, போர்க்களத்தில் கூட செய்து கொள்ளும், சாமர்த்தியம் அவருக்கு உண்டு. தனக்கான படையை உருவாக்கியதாகட்டும், வியூகங்களை வகுப்பதிலாகட்டும், சரியான ஃபீல்டிங் பொசிஷன்களில் வீரர்களை நிறுத்தி, விக்கெட் வீழ்த்தும் லாவகமாகட்டும், கள நிலவரத்தைக் கவனித்து, அதற்கேற்றாற் போல் செயல்படும் சமயோசித புத்தியாகட்டும், சாணக்கியர்தான் தோனி.

IPL 2021 - தோனி - தோனி - கோலி
IPL 2021 - தோனி - தோனி - கோலி

பௌலர்களுக்கான உத்தரவு பறந்து கொண்டே இருக்கும். அஷ்வினுக்கு சங்கேத பாஷையில், ஹர்பஜனுக்கு உடல் மொழியில் என பேட்ஸ்மேன்களின் பார்ட்னர்ஷிப்புக்கு மேல், இவருக்கும் பௌலர்களுக்குமான புரிதல் மிக அருமையானது. அதுவும் ஜடேஜாவும் இவரும்தான், முக்கிய க்ரைம் பார்ட்னர்ஸ். ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருக்கும் அவருடைய பேச்சுக்கள், நல்ல கேப்டனாக விரும்புபவர்கள் கேட்க வேண்டிய, பாடங்கள். அதுதான், இன்றளவும் அவரை, பௌலர்களின் கேப்டன் எனக் கொண்டாட வைக்கிறது.

தலைமைப் பதவிக்கே உரிய பக்குவமும் பண்பட்ட தன்மையும், கம்பீரமும், தோனியிடம் தேவைக்கேற்றாற் போல், சமயத்திற்கேற்றாற் போல் வெளிப்படும். 2008-ம் ஆண்டு, சாம்பியனாக வலம் வந்த ஆஸ்திரேலியாவை, அவர்கள் மண்ணிலேயே வைத்து, 160 ரன்களுக்குச் சுருட்டியது இந்தியா. இவ்வளவுக்கும், கேப்டனாக பதவியேற்ற பின், இது தோனியின் பதினைந்தாவது போட்டிதான். எப்பொழுதும், நிதானம் தப்பாத தோனி, அப்போதும் தப்பவில்லை.

பத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களத்தில் ரோஹித்துடன் நின்றிருந்த தோனி, கிளவுஸை மாற்றவேண்டும் என்று அழைப்பு விடுத்து, டிரஸ்ஸிங் ரூமுக்கு ஒரு செய்தியையும் அனுப்பினார். அது, வெற்றி பெற்றபிறகு, இதை யாரும் பெரிதாகக் கொண்டாடக் கூடாதென்று. காரணம், 'இது எங்களுக்கு ஒரு சாதாரண வெற்றிதான், மற்ற நாடுகள் எப்படியோ, அப்படித்தான் நாங்கள் ஆஸ்திரேலியாவையும் பார்க்கிறோம்' என்பதனை ஆஸ்திரேலியாவின் காதில், ரகசியமாய் ஓதும் சூசகம்தான். சொல்லப் போனால், உடனிருந்த ரோஹித்திடம், எப்படிக் கைகுலுக்க வேண்டுமென்று கூட பாடமே நடத்தினாராம் தோனி. மைண்ட் கேமின் மாஸ்டர் இவர். எந்த இடத்தில், அடக்கி வாசிக்க வேண்டும், எந்த இடத்தில், அடக்கி ஆள வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி.

ஓய்வைப் பற்றிக் கேட்ட செய்தியாளரின் செய்கைக்குக் கோபப்படாமல், அதைக் கையாண்ட விதமாகட்டும், அந்த 'டெஃபனிட்லி நாட்' ஆகட்டும், விடைபெறும் நேரம் வந்ததெனத் தோன்றியதும், டெஸ்டுக்கு 'குட் பை' சொன்னதோடு, இன்னொரு ஃபேர்வெல் போட்டிக்காகக் காத்திருக்காது, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வெடுத்த மாண்பாகட்டும், தனித்துவமானவர்தான் தோனி. மனிதர்களையும், சூழ்நிலைகளையும், சரியாக கையாள்வது ஒரு கலையெனில் அதற்குரிய முனைவர் பட்டத்தை தோனிக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.

ரவி சாஸ்திரி, தோனி, தோனி - கோலி - சாஸ்திரி
ரவி சாஸ்திரி, தோனி, தோனி - கோலி - சாஸ்திரி

கம்பேக் கதாநாயகராய், சரிந்து விழும் போதெல்லாம திரும்ப எழுந்து, மௌன ஆவேசத்தை காட்டியிருப்பார். 2007-ம் ஆண்டு, உலகக் கோப்பையில், உடைந்து உருக்குலைந்து, கருகிய கனவுகளை, கைகளில் ஏந்தி, கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ரசிகர்களின் கைகளில், முதல் டி20 உலகக் கோப்பையைக் கொடுத்து அழகு பார்த்தார் தோனி. சிஎஸ்கே இரண்டாண்டு தடையைச் சந்தித்து, மீண்டு வந்த போது, நாத்தழுதழுக்க ஒரு மேடையில் பேசியிருப்பார் தோனி. அதில், முன்பு இருந்ததைக் காட்டிலும், தடை பெற்ற பின்தான், சிஎஸ்கேவின் ஃபேன் பேஸ் மேலும் அதிகரித்தது என கண்கள் கலங்கக் கூறியிருப்பார். அந்த முறையும், டேடிஸ் ஆர்மி என்ற கேலிகள்தான் எழுந்தன. நொண்டிக் குதிரையைக் கூட, பந்தயத்தில் ஓடவைத்து, வெற்றிபெற வைக்கும் ஜாக்கியாயிற்றே அவர்?! அவ்வருடம், சிஎஸ்கேவை டாப் கியரில் ஓடவைத்து, கோப்பையை வெல்ல வைத்தார்.

2020 ஐபிஎல்-ல் சிஎஸ்கே மரண அடி வாங்கி வெளியேற, சிஎஸ்கேவுக்கான மூடுவிழாவாக அது பார்க்கப்பட்டது. தோல்வியை ஒத்துக் கொள்பவரா தோனி, தோல்வியையே தன்முன் மண்டியிட வைப்பவராயிற்றே?! 2021-ல் வாங்கிய வலியைத் திருப்பித் தந்தார் எதிரணியினருக்கு. புள்ளிப் பட்டியலின் உச்சங்களில் உலவினார்.

மூன்று ஐசிசி கோப்பைகளையும், இந்திய மண்ணைச் சேர வைத்ததற்காக மட்டுமே தோனி கொண்டாடப்படவில்லை. சீனியர் பிளேயர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியேறிய நிலையில், அணியின் கட்டமைப்பை அது குலைத்திடாமல், ஒரு முழுமையான அணியாக உருவாக்கியதுதான் அவரது மிகப்பெரிய சாதனை. அதனைச் செய்யத் தவறியதால்தான், இன்னமும் எழ முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது இலங்கை.

தோனி
தோனி

வெற்றியோ தோல்வியோ அதை ஒரே போல பாவிப்பது, தன்னைச் சார்ந்தவர்களின் திறனறிந்து, அதை முழுமையாக வெளிப்படுத்த வைப்பது, அவர்கள் சோபிக்காத நேரத்திலும், தூணாகத் தோள் கொடுத்துத் தாங்குவது... இதுதான் தோனி! ரோஹித்தை ஓப்பனராக்கி, இந்தியாவுக்கான ஒரு ஒப்பற்ற ஓப்பனரைக் கொடுத்தவர் தோனி. அதே போல், கோலியின் ஃபார்ம் மோசமாகி, கடின காலகட்டத்தை அவர் கடந்த போதும், அவருக்கு முழுமையாக துணை நின்றவர்தான் தோனி.

அதுதான் தோனியின் மீதான கோலியின் மரியாதையை இரட்டிப்பாக்கியது. உடனிருப்பவர்களுக்கு துன்ப காலத்தில் உடன் நின்றவர்தான் தோனி. அதனால்தான், அவருடைய ப்ளேயிங் லெவனில், பெரிய மாற்றத்தை பார்க்க முடியாது. இவை எல்லாம்தான் தோனி. இதுதான் கேஎல் ராகுலை மட்டுமின்றி, மற்ற அத்தனை வீரர்களையும், அவரைக் கொண்டாட வைத்திருக்கிறது. இவர் ஓய்வு பெற்ற பின், ஃபீல்டிங் செட்டிங்கைப் பற்றி புத்தகம் எழுத வேண்டுமென, தலைசிறந்த கேப்டனான கங்குலியையே சொல்ல வைத்தது. போட்டிகளை வென்று கொண்டிருந்த அணியை, புதுப்பொலிவூட்டி, கோப்பைகளை வெல்ல வைத்தவர் தோனி!

கால இயந்திரம் இன்னும் எத்தனை ஆண்டுகள் முன்னோக்கி ஓடினாலும், காண முடியாத, அற்புதக் கிரிக்கெட்டர்தான் தோனி. சாதிப்பதற்கு எதுவுமே பாக்கியில்லை என்ற மைல்கல்லை எட்டிய பின்புதான் விடைசொல்லிச் சென்றிருக்கிறார்.

தோனி... ஒரு சகாப்தம், சரித்திரம்!

அடுத்த கட்டுரைக்கு