கடந்த ஆண்டு ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத ஜோப்ரா ஆர்ச்சரை இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்து 5 போட்டிகளில் விளையாட வைத்திருந்தது.
ஆனால் மீண்டும் காயம் ஏற்பட்டதால் மருத்துவரை அணுகுவதற்காக பெல்ஜியம் சென்று பின்பு மீண்டும் விளையாடி தற்போது இங்கிலாந்துக்குத் திரும்பிவிட்டார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஜோப்ரா ஆர்ச்சரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜோப்ரா ஆர்ச்சர் குறித்து பேசிய கவாஸ்கர், “ ஆர்ச்சர் காயம் அடைந்திருக்கிறார் என்பது தெரிந்தே மும்பை அணி அவரை வாங்கியது. அவரை மிகப்பெரிய தொகை குடுத்து வாங்கிய அணிக்கு அவர் என்ன கொடுத்தார். அவர் உடல் தகுதியுடன் இல்லையென்றால் அதை அணியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடல் தகுதி இல்லாமல் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, அவரது நாட்டிற்குச் செல்கிறேன் என்று கிளம்பி விட்டார்.
அவர் கடைசி வரை தனது ஐபிஎல் அணிக்காக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. இதுபோன்ற ஒரு வீரருக்கு ஒரு ரூபாய் சம்பளம்கூட கொடுக்கக்கூடாது. ஆர்ச்சர் அவரது சம்பளத்தில் பாதியை தொண்டு நிறுவனத்திற்குக் கொடுக்க வேண்டும். ஒரு வீரர் தன் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்கிறதா இல்லையா என்று தெரியும் வரை அணியில் இருக்க வேண்டும். ஒருவேளை பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றால் ஒரு வாரம் முன்னதாக தாராளமாக நாட்டிற்கு போகட்டும்” என்று கூறியிருக்கிறார்.