Published:Updated:

`கோலி கேப்டன்ஷிப் சிறப்பாக இருக்க தோனியும் ரோஹித்தும்தான் காரணம்!' - கம்பீர்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காகத் தோனி செய்த சாதனையைப் பாருங்கள். இதை ஆர்சிபி அணியுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.

கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர்

கிழக்கு டெல்லி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களவை எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர். அரசியலில் குதித்தாலும், அவ்வப்போது, கிரிக்கெட் தொடர்பாகவும், இந்திய அணி குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடிக்கும் கம்பீருக்கும் இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்சி குறித்து விமர்சித்துள்ளார் கம்பீர்.

கம்பீர்
கம்பீர்

டெல்லியில் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களுடனான கலைந்துரையாடலுக்குப் பின் பேசிய கௌதம் கம்பீர், ``கோலி இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும். கோலி, கடந்த உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டார். இருந்தாலும் அவர் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. சர்வதேசக் கிரிக்கெட்டில் ரோஹித் மற்றும் தோனி இருப்பதால், கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது. நீங்கள் தனியாக ஒரு அணியை வழிநடத்தும்போது, உங்கள் தலைமைப் பண்பு கவனிக்கப்படுகிறது. அப்போது மற்ற வீரர்களின் துணை உங்களுக்கு இருக்காது. நான் இதுதொடர்பாக எப்போது பேசினாலும் நேர்மையாகத்தான் பேசுவேன்.

ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் ஷர்மாவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தோனியும் செய்த சாதனையைப் பாருங்கள். இதை ஆர்.சி.பி அணியுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும். இந்தியக் கேப்டனாக கோலி சிறப்பாகச் செயல்பட அவர்கள் இருவரும்தாம் காரணம்.

கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. டெஸ்ட் கிரிகெட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவை தொடக்கவீரராகக் களமிறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அணியில் நீங்கள் அவரைத் தேர்வு செய்தால், ப்ளேயிங் லெவனிலும் அவர் இருக்க வேண்டும்.

கம்பீர் - தோனி
கம்பீர் - தோனி

அவர் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்றால், அணியிலும் சேர்க்க வேண்டியதில்லை” என்றவர், ``நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஷேன் வார்னேவின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், ஐ.பி.எல் தொடரில் மட்டுமே நான் அவருக்கு எதிராக விளையாடினேன். அது எனக்கு அவ்வளவு கடினமாக இல்லை” என்றார். மேலும், 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், கிரிக்கெட்டிலிருந்து வெளியேறுவது குறித்துதான் யோசித்ததாகவும் கம்பீர் கூறியுள்ளார்.