Published:Updated:

`தாமதமாகும் விசாரணை; ஐசிசி தலைவர் பதவி!’ - பிசிசிஐ-க்கு மாற்றாக கங்குலியின் புதிய பிளான்?

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஸ்மித்தும் இந்திய தொடர் தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் கங்குலியை ஐசிசி தலைவர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கொரோனா என்ற ஒற்றை வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், உலகம் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகான உலகம் என்பது வேறு மாதிரியாக இருக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தச் சவால்களைச் சமாளிக்க அனைத்துத் துறைகளிலும் பல அதிரடியான முடிவுகள் இருக்கும்.

கொரோனா
கொரோனா

கொரோனா காரணமாக விளையாட்டுத் துறையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சம்மர் காலத்தில் இந்தியாவில் களைகட்டும் ஐபிஎல் உட்பட உலகில் திட்டமிடப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்ட பல்வேறு தொடர்களால் பல விளையாட்டு வாரியங்கள் நிதிச் சிக்கலிலும் சிக்கியுள்ளன. கிரிக்கெட்டிலும் இந்தியா, ஆஸ்திரேலியா மாதிரியான பெரிய வாரியங்கள் தவிர்த்து மற்ற கிரிக்கெட் வாரியங்கள் பெருமளவில் கொரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில் சிக்கலைச் சந்திக்க உள்ளன.

இதனால் அனைத்து கிரிக்கெட் வாரியங்களின் நலனையும் ஐசிசி கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதனால் கொரோனாவுக்குப் பிறகான ஐசிசி-யின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்கும். தற்போது ஐசிசியின் தலைவராக இந்தியாவின் சஷாங் மனோகர் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில், அந்தப் பொறுப்புக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று அவர் அறிவித்திருக்கிறார்.

ஐசிசி
ஐசிசி

இந்த நிலையில் ஐசிசி-யின் புதிய தலைவராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் தற்போதைய தலைவருமான கங்குலி வர வேண்டும் என்ற கோரிக்கைகள், இந்தியா தாண்டியும் ஒலிக்கிறது,

``ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி போன்ற ஒருவர் வருவது முக்கியமான ஒன்று. கோவிட் 19 பிரச்னைக்குப் பிறகு ஐசிசி-க்கு வலிமையான தலைமை தேவை. நவீனகால கிரிக்கெட்டைப் புரிந்துகொண்டு அதோடு நெருக்கமாகப் பயணித்தவரும் தலைமைப் பண்பு கொண்டவருமான ஒருவர் அதன் தலைமைப் பொறுப்புக்கு வருவது அவசியம்” என கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநருமான கிரேம் ஸ்மித்.

`வலிமையான தலைமை; கிரிக்கெட்டைப் புரிந்தவர்!’ - ஐசிசி தலைவராகக் கங்குலி; முன்மொழியும் ஸ்மித்

பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி, ஐசிசி பக்கம் போவாரா என்ற கேள்வி இருந்தாலும் பிசிசிஐ பதவியில் நீடிப்பதில் கங்குலிக்கு தற்போதைய விதிகள் தடையாக இருக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார் கங்குலி. எனினும் உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் வழிகாட்டுதலின்படி, `ஒருவர் பிசிசிஐ அல்லது மாநிலக் கிரிக்கெட் சங்கங்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் எந்த நிர்வாகப் பதவியையும் வகிக்க முடியாது’.

ஏற்கெனவே கங்குலி மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வந்ததால், மிக விரைவில் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலக நேரிடும். அப்படி அவர் பதவி விலகிய பின்னர், 2024-ம் ஆண்டு வரை பிசிசிஐ அல்லது மாநில கிரிக்கெட் சங்கங்களில் எந்த நிர்வாகப் பொறுப்பையும் ஏற்க முடியாது.

பிசிசிஐ தலைவர் கங்குலி
பிசிசிஐ தலைவர் கங்குலி

இந்த விதியை அறிந்துதான் கங்குலி பிசிசிஐ தலைமை பொறுப்புக்கு வந்தார். பதவிக்கு வந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்த விதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கு இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. கங்குலியின் பிசிசிஐ பதவிக்காலம் முடியும் வரையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்காத சூழலில் கங்குலியின் பார்வை ஐசிசி பக்கம் திரும்பலாம் என்கிறார்கள் சிலர்.

ஐசிசியின் போர்டு குழுவில் 17 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 12 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் உறுப்பினர்கள், மூன்று அஸோசியேட் உறுப்பினர்கள், சுயேச்சையான பெண் இயக்குநர் ஒருவர் மற்றும் ஐசிசியின் தலைவர் என 17 உறுப்பினர்களும் அடுத்த தலைவரை தேர்தெடுக்க வாக்களிப்பார்கள். இவர்களில் பெரும்பாலான வாக்குகளை இந்தியா பெறுவது என்பது பெரிய சவாலான விஷயமாக இருக்காது.

ஐசிசி
ஐசிசி

காரணம், கொரோனாவுக்குப் பிறகான காலத்தில் மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கு இந்தியாவின் உதவி தேவைப்படும் என்கிறார்கள். பல்வேறு நாடுகளும் இந்திய அணியுடனான் தொடருக்கு அழைப்பு விடுத்துள்ளன. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஸ்மித்தும் இந்திய தொடர் தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் கங்குலியை ஐசிசி தலைவர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

எந்த நாட்டுக்கு எதிராக இந்திய அணி, கிரிக்கெட் விளையாடச் சென்றாலும், அந்த நாடுகளுக்கு ஒளிபரப்பு உரிமை மூலம் அதிக வருவாய் கிடைக்கும். தற்போது இருக்கும் கடினமான சூழலைச் சமாளிக்க, மற்ற நாடுகள் இந்தியாவை ஆதரிக்கும் என்றே கூறப்படுகிறது.

ஐசிசி தலைவர் பதவிக்கான முக்கியத் தகுதிகளில் ஒன்று, `ஒருமுறையாவது ஐசிசி-யின் போர்டு மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்க வேண்டும். கங்குலி இந்த மார்ச் மாதம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஐசிசியின் போர்டு மீட்டிங்கில் கலந்துகொண்டார். அதே நேரத்தில் பிசிசிஐ செயலாளரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷாவும் இந்தப் பதவிக்கு காய் நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஷா இதுவரை போர்டு மீட்டிங்கில் கலந்துகொண்டதில்லை. ஆனால், அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்கிறார்கள் ஷாவுக்கு நெருக்கமான சிலர்.

கடைசி நேர ட்விஸ்ட் - பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி; செயலாளர் அமித் ஷா மகன்?
தந்தை அமித் ஷா உடன் ஜெய் ஷா
தந்தை அமித் ஷா உடன் ஜெய் ஷா

எனினும் பிசிசிஐ இதுதொடர்பான தகவல்களை இதுவரை மறுக்கவில்லை, ஏற்கவும் இல்லை. ``நிறைய பெயர்கள் எங்களுக்கும் வருகின்றன. அந்தப் பதவிக்குத் தகுதியான நபர்கள் கட்டாயம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்கிறார் பிசிசிஐ-யின் பொருளாளர் அருண் துமால்!

அடுத்த கட்டுரைக்கு