Published:Updated:

ரவிசாஸ்திரியை ஆதரிக்கும் கங்குலி... சர்ச்சை பேட்டிகளால் கொதிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்!

சவுரவ் கங்குலி

“இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்படவில்லை, ரத்து செய்யப்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்” - கங்குலி

ரவிசாஸ்திரியை ஆதரிக்கும் கங்குலி... சர்ச்சை பேட்டிகளால் கொதிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்!

“இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்படவில்லை, ரத்து செய்யப்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்” - கங்குலி

Published:Updated:
சவுரவ் கங்குலி

ஐசிசி என அழைக்கப்படும் இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலை இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்றுதான் எல்லா நாட்டு ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள். காரணம் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சொல்வதைத்தான் ஐசிசி கேட்கும், ஐசிசி ஒரு பொம்மை அமைப்பு, அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலாக செயல்படுவதில்லை என்கிற விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. இது ஒரு வகையில் உண்மையும்கூட. உலகின் மிகப்பெரிய பணக்கார போர்டாக, செல்வத்தால் கொழித்திருக்கும் பிசிசிஐ-தான் உலக கிரிக்கெட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மாற்றியமைக்கப்படுகின்றன, ஐபிஎல்-காக உலக டி20 கிரிக்கெட் அட்டவணை மாற்றியமைக்கப்படுகிறது என எல்லாமே பிசிசிஐ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போர்டுகளுக்கு இந்த விஷயத்தில் பிசிசிஐ மீது கடும்கோபம் இருந்தாலும் பிசிசிஐ நிர்வாகத்தை பகைத்துக் கொள்ளாது. ஏனென்றால் இந்தியாவுடன் விளையாடினால்தான் டிக்கெட்கள் விற்கும், டிவி உரிமம் பல கோடிகளுக்கு விலைபோகும், விளம்பரங்கள் வரும். இந்தியா இல்லையென்றால் வருமானம் இல்லை என்பதாலே எல்லா நாட்டு வாரியங்களும் அமைதி காக்கின்றன.

கங்குலி
கங்குலி

இந்தச் சூழலில்தான் செப்டம்பர் 10-ம் தேதி காலை தொடங்கியிருக்கவேண்டிய இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது போட்டி ரத்து செய்யப்பட்டதாக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. ‘’இந்தியாவால் ஒரு அணியை களத்துக்கு கொண்டு வர முடியாததால் ரத்து செய்யப்படுவதாக'’ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்ததோடு இந்திய வீரர்கள் பயிற்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகளையும் எழுப்பியது.

இந்திய முகாமுக்குள் கொரோனா பரவ முழுக்க முழுக்க இந்திய வீரர்களும், நிர்வாகிகளுமே காரணம் என்றது. கைவிடப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் மீண்டும் அடுத்தாண்டு நடக்கும் என்கிற செய்திகளும் வந்தன. இதனால் 2-1 என தொடர் முடிந்திருக்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த டெஸ்ட் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியோ ‘’அதெல்லாம் இல்லை… தொடர் முடிந்து விட்டது'’ என்கிற ரீதியில் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

“இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்படவில்லை, ரத்து செய்யப்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்” என நேற்று காலை கொல்கத்தாவைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார் கங்குலி.

“ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு கடுமையான இழப்பை சந்தித்துள்ளது உண்மைதான். இப்போதைய இறுக்கமான சூழல் கொஞ்சம் தணிந்தபிறகு, அடுத்து என்ன முடிவெடுக்கலாம் என நாங்கள் விவாதிக்க இருக்கிறோம். ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டி அடுத்த வருடம் எப்போது நடைபெற்றாலும், அது தனித்த டெஸ்ட் போட்டியாகவே கருதப்படும். இப்போது முடிந்த தொடரின் தொடர்ச்சியாக இருக்காது” என்று சொல்லி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் அதிர வைத்திருக்கிறார் கங்குலி.

கோலி - ரவி சாஸ்திரி
கோலி - ரவி சாஸ்திரி

இந்த மாத இறுதியில் லண்டனுக்கு செல்லவுள்ள கங்குலி, அங்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அதிகாரிகளை சந்திப்பாரா எனக் கேட்டதற்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்திருக்கிறார். அத்தோடு ரவி சாஸ்திரியின் புத்தக அறிமுக விழா குறித்தோ, அதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் குறித்தோ, அணிக்குள் கொரோனா தொற்று பரவியதற்கு இந்த நிகழ்ச்சியே காரணம் என எழுந்துள்ள விமர்சனம் குறித்தோ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கங்குலி நேரடியாக பதில்தரவில்லை. அதேசமயம், “இத்தகைய சூழ்நிலையில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது” என ரவி சாஸ்திரிக்கு ஆதரவாகவே பேசியிருக்கிறார்.

நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள், அதாவது செப்டம்பர் 1 அன்று ரவி சாஸ்திரி எழுதிய ‘Stargazing: The Players in My Life’ என்ற புத்தகத்தின் அறிமுக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இதன்பிறகு செப்டம்பர் 5 அன்று சாஸ்திரிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரோடு நெருக்கமாக இருந்த பெளலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் பிசியோ நிதின் பட்டேல் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். அடுத்த நாளே பரத் அருணுக்கும், ஸ்ரீதருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. செப்டம்பர் 9 அன்று, அதாவது ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கு முந்தைய நாள் இந்திய அணியின் துணை பிசியோதெரபிஸ்டான யோகேஷ் பார்மருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னரே வீரர்கள் கலக்கம் அடைந்திருக்கின்றனர்.

யோகேஷ் பார்மருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அறிந்த வீரர்கள் நிலைகுலைந்து போனார்கள். அவரிடமிருந்து தங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்குமோ என வீரர்கள் பயந்தனர். ஏனென்றால் பிசியோ யோகேஷ் பார்மர் பெரும்பாலான வீரர்களிடம் நெருக்கமாக இருந்துள்ளார். நிதின் படேல் இல்லாத காரணத்தால் வீரர்களின் அன்றாட நடவடிக்கைகளை இவரே கவனித்துள்ளார். இதனால் அடுத்த நாள் விளையாடுவதற்கு சில வீரர்கள் தயங்கினார்கள். அவர்களையும் நாம் குறை சொல்ல முடியாது. வீரர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
சவுரவ் கங்குலி

புத்தக நிகழ்ச்சிக்கு சாஸ்திரியோ மற்றவர்களோ எந்த அனுமதியும் கேட்கவில்லை எனச் சொல்லியிருக்கும் கங்குலி, அதற்காக அவர்களை குறை சொல்லமுடியாது என்றும் சொல்லியிருக்கிறார். “எத்தனை நாளைக்கு உங்களால் ஒரே ஹோட்டல் அறைக்குள்ளேயே முடங்கியிருக்க முடியும்? ஒரு நாள் முழுக்க உங்கள் வீட்டில் நீங்கள் அடைந்து கிடக்க முடியுமா? ஹோட்டலில் இருந்து மைதானம், மைதானத்திலிருந்து நேராக ஹோட்டல் எனப் பழகியவர்கள், சற்று வெளியே சென்று வருவதை நாம் தடுக்க முடியாதே” என சாஸ்திரிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார் கங்குலி.

விராட் கோலி - ஜோ ரூட்
விராட் கோலி - ஜோ ரூட்
Rui Vieira

செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்கூட்டியே செல்வதற்கு ஏதுவாகவே இந்திய வீரர்கள் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்துள்ளார்கள் என்கிற விமர்சனம் இங்கிலாந்தில் பரவலாக எழுந்துள்ளது. பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் இதே கருத்தை பேசிவருகிறார்கள். ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

“இந்திய வீரர்களும் பயிற்சியாளர்களும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயோ பபுளில் இருக்கிறார்கள். இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. இவை மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அவர்களும் மனிதர்கள் தானே. இங்கிலாந்திலிருந்து நேரடியாக துபாய்க்கு வரும் வீரர்கள், உடனடியாக மற்றொரு பயோ பபுளுக்குள் செல்கிறார்கள். மற்றுமொறு தனிமைப்படுத்தல், மற்றுமொரு பபுள்…இதற்கடுத்து டி20 உலககோப்பைக்காக தனியாக பயோ பபுளில் இருக்க வேண்டும். நாம் நினைப்பது போல் இதெல்லாம் அவ்வளவு எளிதல்ல” என முதல்முறையாக இங்கிலாந்து தொடர் சர்ச்சைகள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார் கங்குலி.

பிசிசிஐ தலைவரின் இந்தப் பேச்சு கிரிக்கெட் அரங்கில் மீண்டும் பெருத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்தியாவுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஜாஸ் பட்லர், ஜானி பேர்ஸ்ட்டோ, டேவிட் மலான் ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கிறார்கள். ஆர்ச்சர் காயம் காரணமாக விளையாடவில்லை. பென் ஸ்டோக்ஸ் ஏற்கெனவே கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்துவிட்டதால் அவரும் இந்த ஐபிஎல் தொடரில் இல்லை.

ஆனால், கொல்கத்தா அணியின் கேப்டனான, இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் இயான் மோர்கன் துபாயில் தன் அணியினருடன் இணைந்துவிட்டார். சாம் கரண், மொயின் அலி ஆகியோர் சென்னை அணியில் விளையாட இருக்கின்றனர். அதேப்போல் ஆதில் ரஷித், கிறிஸ் ஜோர்டன் போன்ற வீரர்களும் ஐபிஎல் பங்கேற்பை உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால், ஐபிஎல் தொடங்க இன்னும் 6 நாட்கள் இருப்பதால் கடைசி நேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் திடீரென விலகல் முடிவை எடுக்கலாம், அவர்களை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கட்டாயப்படுத்தலாம் என்கிற பரபரப்பும் ஐபிஎல் அணிகளுக்குள் எழுந்திருக்கிறது.

விராட் கோலி
விராட் கோலி
Kirsty Wigglesworth

இதற்கிடையே நேற்று காலை அளித்த பேட்டி சர்ச்சைகளை எழுப்பியதால் மாலையே இன்னொரு பேட்டி அளித்திருக்கிறார் கங்குலி. அதில் ''தொடரின் தொடர்ச்சியாகவே ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கும். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது எங்களுக்குப் பெருமை. அதைவிட்டுத்தரமாட்டோம்'' என காலையில் பேசியதை மறுத்து மாலையில் பேட்டி தந்திருக்கிறார் கங்குலி!