Published:Updated:

``பிசிசிஐ தலைவரானதும் இதுதான் எனது முதல் பணி!”- உற்சாகத்தில் கங்குலி

போட்டியே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, போட்டிபோட்டு தேர்வானாலும் சரி, இந்தப் பதவி மிகப் பெரிய பொறுப்பு.

Ganguly
Ganguly ( Twitter )

பிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வுசெய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர். இன்று மாலை வரை வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத பட்சத்தில், கங்குலி தான் அடுத்த பிசிசிஐ தலைவர்.

கங்குலி
கங்குலி

இந்நிலையில், நேற்றைய கூட்டத்துக்குப் பின்னர் கங்குலி தான் பிசிசிஐ தலைவர் என்ற தகவல் வெளியானதால், அவர் வாழ்த்து மழையில் நனைந்துவருகிறார். இந்நிலையில், இந்தியா டுடே ஊடகத்துக்கு கங்குலி அளித்த பேட்டியில், ``இந்த காலகட்டத்தில் பிசிசிஐ-யின் தலைவராக நான் நியமிக்கப்பட வாய்ப்புகள் உருவாகி இருப்பதை மகிழ்ச்சியாகப் பார்க்கிறேன். காரணம், பிசிசிஐ-யின் நிலை தற்போது மோசமாக இருக்கிறது. இதைச் சரி செய்வதற்கு, எனக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

போட்டியே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, போட்டிபோட்டு தேர்வானாலும் சரி, இந்தப் பதவி மிகப் பெரிய பொறுப்பு. காரணம், உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம்தான் பெரியது. இந்தியாதான் பவர்ஹவுஸ். அதனால் இந்தப் பயணம் நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும்” என்றார்.

ஜக்மோகன் டால்மியா!
ஜக்மோகன் டால்மியா!

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த கங்குலி, ``அவர் பயணித்த பாதையில் நானும் பயணிப்பேன் என ஒரு காலமும் நினைத்துகூட பார்த்தது கிடையாது. அவர், எனக்கு அப்பா போன்றவர். இதற்கு முன்னர் பல சிறந்த பிசிசிஐ தலைவர்கள் இருந்திருக்கிரார்கள். ஸ்ரீநிவாசன், அனுராக் உள்ளிட்டோர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்” என்றார்.

10 மாதங்கள் மட்டுமே தலைவராகச் செயல்பட முடியும் என்ற புதிய ஐசிசி விதி தொடர்பாகப் பேசிய கங்குலி, ``அதுதான் விதி. நாம் அதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும். நான் பிசிசிஐ தலைவராகப் பதவியேற்றால், என்னுடைய கவனம் முழுவதும் முதல் தர கிரிக்கெட்மீதுதான் இருக்கும். ரஞ்சி கோப்பை கிரிக்கெட்தான் எனது முதலாவது இலக்கு. முதல் தர கிரிக்கெட்டர்களின் பொருளாதாரத்தையும் கவனத்தில் கொள்வேன்” என்றார்.

Ganguly
Ganguly

கங்குலி பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 10 மாதங்கள் மட்டுமே அந்தப் பொறுப்பில் செயல்பட முடியும். பிசிசிஐ -யின் புதிய விதிகளின்படி ஒருவர் கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்பில் தொடர்ச்சியாக 6 வருடங்கள் மட்டுமே செயல்பட முடியும். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்புகளில் செயல்பட்டுவருவதால், பிசிசிஐ தலைவராக அவர் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே செயல்பட முடியும். தங்போது, கங்குலி மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

இதற்கிடையே கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ராஜிவ் சுக்லா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் 23ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி, ``இன்னும் சில மாதங்களில் அனைத்தும் சீரடைந்து இந்திய கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும். அணியுடன் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துவதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.