Published:Updated:

ஆசிய கோப்பை: கங்குலியின் `ரத்து’ அறிவிப்பு! - அப்செட்டில் பாகிஸ்தான்

பிசிசிஐ தலைவர் கங்குலி
பிசிசிஐ தலைவர் கங்குலி

சுழற்சி அடிப்படையில் இந்தத் தொடரை பாகிஸ்தான்தான் நடத்த வேண்டும். ஆனால், இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையே நிலவும் பதற்றம், பாதுகாப்பு விவகாரங்களைக் காரணம் காட்டி, இந்தியா அரபு நாடுகளில் போட்டியை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தது.

உலகளவில் கொரோனா காரணமாகப் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன. அதில் விளையாட்டுத்துறையும் மிக முக்கியமானது. சம்மர் கால விளையாட்டுப் போட்டிகள் முற்றிலுமாகத் தடைபெற்ற நிலைடில், 117 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்தில் நேற்றுதான் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதே நாளில் பிசிசிஐ தலைவர் கங்குலியும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

BCCI
BCCI

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் லைவ்வில் ஸ்போர்ட்ஸ் டாக் என்னும் நிகழ்வில் பேசிய கங்குலி, `செப்டம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுவிட்டது’ என்றார். மேலும், இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் முழுமையான தொடர்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். ஆசிய கோப்பை ரத்து தொடர்பாக கங்குலி கருத்து தெரிவித்து இருந்தாலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

இந்த நிலையில், கங்குலியின் அறிவிப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊடகப் பிரிவு இயக்குநர் சமியுல் ஹசன், `கங்குலியின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் சங்கம் வெளியிடட்டும். கங்குலியின் கருத்து எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. எங்களை பொறுத்தமட்டில் தொடருக்கான அறிவிப்பு இனிதான் வரும்’ என்றார்.

Pakistan
Pakistan
Twitter

இந்த ஆசிய கோப்பைத் தொடர் குறித்த பல்வேறு குழப்பங்கள் சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வந்தது குறிப்பிடதக்கது. காரணம், சுழற்சி அடிப்படையில் இந்தத் தொடரை பாகிஸ்தான்தான் நடத்த வேண்டும். ஆனால், இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையே நிலவும் பதற்றம், பாதுகாப்பு விவகாரங்களைக் காரணம் காட்டி, இந்தியா அரபு நாடுகளில் போட்டியை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தது. இதனால் இரண்டு முறை இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. குறைந்தபட்சம் இந்தியா விளையாடும் போட்டிகளையாவது பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பக இதுவரை முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில்தான் கங்குலி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு