Published:Updated:

`மூன்றே விநாடிகள்!' - பதவியேற்ற ஒரேவாரத்தில் கோலியை சம்மதிக்க வைத்த கங்குலி

கோலி - கங்குலி
கோலி - கங்குலி ( BCCI )

பிசிசிஐ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய அணியை பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வங்கதேச அணியுடன் கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த பிசிசிஐ சம்மதித்துள்ளது. ஐசிசியால் பகலிரவு டெஸ்ட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் விளையாட இந்தியா மறுத்துவந்த நிலையில், இந்தியா விளையாடப்போகும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியும் இதுதான். இந்தியாவில் நடக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியும் இதுதான். இதன்மூலம் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது என்ற வரலாறு படைக்கவுள்ளது.

கோலி
கோலி

பகலிரவு டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டபோதே ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியை பகலிரவு டெஸ்ட்டில் விளையாட அந்த அணி நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், அப்போதைய பிசிசிஐ நிர்வாகம் அதை ஏற்க மறுத்தது. அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடர், இங்கிலாந்து எனப் பல்வேறு நாட்டு அணிகளும் கோரிக்கை விடுத்தபோதும் இந்திய அணி விளையாட மறுப்பு தெரிவித்துவந்தது. இந்தநிலையில்தான் பிசிசிஐ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய அணியைப் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

`டிசிப்ளினரி நடவடிக்கை' - கபில்தேவ் கடுப்பான டெல்லி டெஸ்ட் `சம்பவம்'! #VikatanVintage

பதவி ஏற்ற மறுநாளே கேப்டன் கோலியைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசியுள்ளார் கங்குலி. அப்போது மூன்று விநாடியிலேயே கோலியைப் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு சம்மதம் தெரிவிக்க வைத்துவிட்டார் கங்குலி என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள கங்குலி, ``அடிலெய்டு உட்பட பல இடங்களில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் போனதுக்கு என்ன காரணம் என்பது நேர்மையாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் கோலியை ஒருமணி நேரம் சந்தித்துப் பேசினேன். எனது முதல் கேள்வியே பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான். மூன்று வினாடிகளில் அதற்கு `அதைச் செய்யுங்கள்' எனக் கோலி பதில் கொடுத்தார்.

கங்குலி
கங்குலி

கடந்த காலங்களில் என்ன நடந்தது; இதற்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நானும் எனது குழுவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். டெஸ்ட் போட்டிகளின்போது மைதானங்கள் காலியாக இருக்கின்றன. இதைக் கோலியும் உணர்ந்ததால்தான் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். இதுவே டெஸ்ட் போட்டிகளை முன்னோக்கிக் கொண்டு செல்ல சரியான வழியாக இருக்கும். டி20 போட்டிகளுக்கு மைதானங்கள் எப்படி நிரம்பி வழியும் என்று எனக்குத் தெரியும். டெஸ்ட் கிரிக்கெட்டை முறையாக நிர்வகிப்பதன் மூலம் இதற்கும் கூட்டத்தைக் கொண்டு வர முடியும் என நினைக்கிறோம். இது இந்தியாவுக்கு ஒரு தொடக்கம்தான்.

`எந்த சமரசத்துக்கும் இடமில்லை.. என் வழியிலேயே அனைத்தும்'- முதல் நாளிலேயே சாட்டையை சுழற்றும் கங்குலி!

இப்போது மக்களின் வாழ்க்கை மாறிவிட்டது. பெரும்பாலும் அலுவலகங்களைவிட்டு வெளியேற முடியாத நிலையில் மக்கள் உள்ளார்கள். அதனால்தான் அவர்களுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டும். இது முக்கியமான டாஸ்க். மாற்றம் எப்போதுமே நல்லதுதான். 'பிங்க்' நிற பந்து கிரிக்கெட் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கூட்டத்தை அழைத்துவரும் என நான் நினைக்கிறேன்" என்றவர் 2001-ல் ஈடன்கார்டனில் நடந்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார். ``அது எனக்கு 100 வது டெஸ்ட். கூடவே பாக்சிங் டே டெஸ்ட்டும்கூட. டெஸ்ட் கேரியரில் அப்படி ஒரு போட்டியில் விளையாட வாழ்க்கையில் அதிர்ஷ்டம் செய்தவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் போட்டியில் முதல் நாளில் 70,000 பேர் மைதானத்துக்கு வந்திருந்தனர். இதைத்தான் இப்போதும் எதிர்பார்க்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

'பிங்க்' நிற பந்து
'பிங்க்' நிற பந்து

இதேபோல் பிசிசிஐயின் இந்த முடிவை வரவேற்றுள்ள சச்சின் டெண்டுல்கரும் 'பிங்க்' நிற பந்தில் விளையாட உள்ள இந்திய அணிக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில், ``இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுவது வரவேற்கத்தக்க ஒன்று. இப்போட்டிகளின்போது மைதானத்தின் ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கும். பந்தின் ஈரப்பதம் பௌலர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். பிங்க் நிறப் பந்துகளை வைத்து பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்யும்போது 20 ஓவர்கள் வரை விளையாடிய பந்து, 50 ஓவர்கள் வரை விளையாடிய பந்து, 80 ஓவர்கள் வரை விளையாடிய பந்து என வெவ்வேறு நிலையில் உள்ள பந்துகளை வைத்து பயிற்சி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

தலைவனின் தாக்கம் வரலாற்றையே மாற்றும்... தலைவர் கங்குலி என்ன செய்ய வேண்டும்? #Ganguly
அடுத்த கட்டுரைக்கு