Published:Updated:

Team India: கங்குலி-டிராவிட் நடத்திய அந்த உலகக்கோப்பை சம்பவம்! நினைவிருக்கிறதா?

கங்குலி-டிராவிட் | Ganguly- Dravid

ஆட்டத்தின் ஐந்தாவது பந்திலேயே சமிந்தா வாஸ் ரமேஷை போல்டாக்க டாஸை வென்று சரியான முடிவை எடுத்திருக்கிறார் ரணதுங்கா என்றே பலரும் கருதினர். ஆனால் அவரின் சந்தோஷமும் மற்றவர்களின் கணிப்பும் அதிக நேரம் நீடிக்கவில்லை.

Team India: கங்குலி-டிராவிட் நடத்திய அந்த உலகக்கோப்பை சம்பவம்! நினைவிருக்கிறதா?

ஆட்டத்தின் ஐந்தாவது பந்திலேயே சமிந்தா வாஸ் ரமேஷை போல்டாக்க டாஸை வென்று சரியான முடிவை எடுத்திருக்கிறார் ரணதுங்கா என்றே பலரும் கருதினர். ஆனால் அவரின் சந்தோஷமும் மற்றவர்களின் கணிப்பும் அதிக நேரம் நீடிக்கவில்லை.

Published:Updated:
கங்குலி-டிராவிட் | Ganguly- Dravid

தோனி, ரோகித் இந்திய கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்னரே `சிக்ஸர் கிங்' என்ற பட்டத்தை வைத்திருந்தவர் கங்குலி. கிரீஸிற்கு வெளியே இறங்கி வந்து இவர் அடிக்கும் சிக்ஸர்களைக் காணவே தனி ரசிகப்படை உண்டு. அதுவும் குறிப்பாக இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக கங்குலி இறங்கி வந்தால், கண் இமைக்கும் நொடியில் மைதானத்திற்கு வெளியே விழும் பந்து ஒன்று இரண்டு ஓவர்களை ஓட்டிவிடலாம் என்று பௌலர்கள் அல்லாத வீரர்களுக்கு ஓவர் தரும் கதையெல்லாம் கங்குலியிடம் செல்லாது. இதற்கு அணியின் பிரதான பௌலரே போட்டிருக்கலாம் என்று எதிரணி கேப்டன் ரத்தக்கண்ணீர் வடிக்கும் அளவிற்கு அடிப்பார் கங்குலி. ஸ்பின்னுக்கு துணை போகும் இந்திய ஆடுகளங்களில் மட்டுமல்ல... நான் எங்கு அடிச்சாலும் அடி விழாது.. இடி விழும் என பிற்கால 80ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கும் ஆரம்ப கால 90ஸ் கிட்ஸ்களுக்கும் கங்குலி தன்னை நிரூபித்த போட்டி ஒன்று உண்டு என்றால் அது 1999-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இதே நாளில் ஆடிய ஆட்டம்.

 Ganguly- Dravid
Ganguly- Dravid

1996-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றிருந்த இலங்கை அணி அதே அதிரடியை மீண்டும் நிகழ்த்தி அடுத்த கோப்பையை மீண்டும் கைப்பற்றிவிடும் என்பதே பலரது கண்டிப்பாகவும் இருந்தது. கிட்டத்தட்ட அதே பழைய அணிதான் மறுபடியும் வந்திறங்கினாலும் அந்த தற்போதைய இலங்கை அணியை போல ஆடியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ரணதுங்கா ஃபீல்டிங் தேர்வு செய்தார். சடகோபன் ரமேஷ் மற்றும் கங்குலி ஆகியோர் இந்திய அணியின் ஒப்பனர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் ஐந்தாவது பந்திலேயே சமிந்தா வாஸ் ரமேஷை போல்டாக்க டாஸை வென்று சரியான முடிவை எடுத்திருக்கிறார் ரணதுங்கா என்றே பலரும் கருதினர். ஆனால் அவரின் சந்தோஷமும் மற்றவர்களின் கணிப்பும் அதிக நேரம் நீடிக்கவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1992-ம் ஆண்டிலேயே அறிமுகமாகி இருந்தாலும் அடுத்த நான்கு ஆண்டுகள் அணிக்கு வெளியேதான் அதிகமாக இருந்தார் கங்குலி. அதே போல இவர் ஒருநாள் போட்டிகளுக்கு சரி வருவாரா என்ற கேள்வியும் அப்போது சுழன்று கொண்டிருந்தது. அதேபோல சச்சினுடன் இணைந்து 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஒன்றை டிராவிட் அமைந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டர் இமேஜ் அவரைவிட்டு அகலவில்லை. கங்குலியும் தன் மாஸ் இமேஜை வெளிப்படுத்த மற்றுமொரு பெரிய அரங்கத்தை எதிர்பார்த்து இருந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து கச்சிதமாக அமைந்தது இலங்கைக்கு எதிரான இந்த ஒற்றை ஆட்டம்.

 Ganguly
Ganguly

Back foot டிரைவ் மூலம் ஒரு பவுண்டரி அடித்து தன் இன்னிங்ஸை தொடங்கியிருப்பர் கங்குலி. அவருடன் டிராவிடும் இணைய ரன் மழை மெல்ல பொழியத் துவங்கியது. இப்போது வரும் அப்போது வரும் விக்கெட்டிற்காக இலவு காத்த கிளி போல காத்திருந்தனர் இலங்கை வீரர்கள். சோமர்செட்டின் டான்டன் மைதானத்தின் எல்லைக்கோடுகள் வேறு சற்று சிறிதாக இருக்கும் என்பதால் அதை முழுமையாக பயன்படுத்தி கொண்டார் கங்குலி. மைதானத்திற்கு வெளியே பறந்து கொண்டே இருந்தன பந்துகள். கங்குலி தன் சதத்தை நிறைவு செய்ய 119 பந்துகளை எடுத்துக்கொண்டாலும் அடுத்த 39 பந்துகளில் அவர் பேட்டில் இருந்து வந்த ரன்கள் 83.

எப்போதும் ஆறு ஓவர்கள் வரை வீசும் ஜெயசூர்யா அன்று மூன்று ஓவர்களோடு நிறுத்திக்கொண்டார். காரணம் அவரின் மூன்று ஓவர்களில் மட்டும் 37 ரன்களை பறக்கவிட்டிருந்தார் கங்குலி. ஒரு கட்டத்தில் யாருக்கு பவுலிங் கொடுக்கலாம் என்று இலங்கை கேப்டன் குழம்பிப் போக வேறு வழியில்லாமல் மஹிலா ஜெயவர்த்தனாவை மூன்று ஓவர்கள் வீசி அழகு பார்த்தார். வெறும் டெஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்பட்ட டிராவிட் அன்றைய தினத்தில் 145 ரன்களை குவித்திருந்தார் எடுத்துக்கொண்ட பந்துகள் 129. இறுதியாக ரன் அவுட் மூலம் தான் இந்த இணையை பிரிக்க முடிந்ததே தவிர எந்த ஒரு பவுலராலும் அவர்களை ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை.

Dravid
Dravid

318 ரன்களை இந்த இணை பார்ட்னர்ஷிப் ஆக்கியது. அன்றைய காலத்தில் ஒருநாள் போட்டிகளில் அவ்வளவு பெரிய பார்ட்னர்ஷிப்பை யாருமே அமைத்திருந்தது கிடையாது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அசாருதீன் - ஜடேஜா இணை அடித்த 275 ரன்கள்தான் அதுவரையிலான சாதனையாக இருந்தது. பொதுவாக டாப் வரிசையில் களம் கண்டு இன்னிங்ஸை கட்டமைக்கும் சச்சின் அன்று 46வது ஓவரில் தான் களத்திற்கு வந்தார். அத்தலைமுறையின் மிகச்சிறந்த பேட்டரை டெய்லர் எண்டர் களமிறக்க வைத்தது இந்த கங்குலி - டிராவிட் கூட்டணி. 50 ஓவர்களில் முடிவில் 373 ரன்கள் எடுத்தது இந்தியா.

இந்த அதிரடி ஸ்கோரை விரட்டிப் பிடிக்க அதிரடி நாயகன் ஜெயசூர்யா நினைத்தால்தான் முடியும் என்றிருந்த நிலையில் அவரை மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே தன் சிறப்பான ஃபீல்டிங்கால் ஆட்டமிழக்க செய்தார் ஸ்ரீநாத். வெறும் மூன்றே ரன்களுக்கு ஜெயசூர்யா ரன் அவுட் ஆக ஆரம்பத்திலேயே ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்துவிட்டது. சிறு சிறு பார்ட்னர்ஷிப்புகள் இடையில் அமைந்தாலும் 43-வது ஆல்-அவுட்டானது இலங்கை. 154 ரன்கள் வித்தியாசத்தில் அப்போட்டியை வென்றது இந்தியா.

இதன் பிறகே கங்குலி, டிராவிட் ஆகிய இருவரின் இடங்களும் இந்திய அணியில் அசைக்க முடியாதவையாக மாறின. பிற்காலத்தில் இருவருமே இந்திய அணியின் கேப்டகளாக மாறினர். ஆட்டம் முடிந்த பிறகு, "இந்த தோல்வியிலிருந்து அடுத்த எப்படி பயணப்படப் போகிறீர்கள்? " என்ற கேள்விக்கு " அடுத்து வீட்டுக்கு தான் பயணப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார் இலங்கை கேப்டன் ரணதுங்கா. அந்த ஆட்டத்தை அவரால் மட்டுமல்ல யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.