Published:Updated:

`எனது சதத்தை `டைவர்ட்’ செய்த தோனியின் அந்த வார்த்தை..!’ - உலகக்கோப்பை ஃபைனல் குறித்து கம்பீர்

இந்தக் கேள்வியை பலமுறை நான் எதிர்கொண்டுள்ளேன். அன்று நீங்கள் 97 ரன்னில் இருக்கும்போது என்ன நடந்தது எனப் பலரும் கேட்பதுண்டு.

கம்பீர்
கம்பீர்

இந்தியாவில் உள்ள எந்த கிரிக்கெட் ரசிகராலும் 2011-ம் ஆண்டை மறக்க முடியாது. 1983-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை மீண்டும் இந்தியா வசம், அதுவும் சொந்த மண்ணில். அப்போதைய கேப்டன் தோனி தனது ஸ்டைலில் சிக்ஸர் அடித்து முடித்து வைக்க ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் மனமும் கொண்டாட்டத்தில் திளைத்தது. அந்த இறுதிப் போட்டியின் ஹைலைட்ஸை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது.

தோனி
தோனி

இலங்கை அணி நிர்ணயம் செய்த 276 என்னும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கிடைத்தது மோசமான தொடக்கம்தான். சேவாக் முதல் ஓவரில் ஆட்டமிழக்க அதிகம் நம்பிய சச்சினும் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த கம்பீர் மற்றும் கோலி ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கோலி ஆட்டமிழந்த பின்னர் தோனி-கம்பீர் ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றது. 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் இரு முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தபோது நிதானமாக இந்திய இன்னிங்ஸை கட்டமைத்த கம்பீர் 97 ரன்னில் பெரேரா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 2011 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, பலருக்கும் இருந்த ஒரு வருத்தம், ` கம்பீர், அந்த 3 ரன்களை எடுத்து சதத்தைப் பூர்த்தி செய்திருக்கலாம்' என்பதுதான்.

கம்பீர்
கம்பீர்

கடந்த 8 வருடங்களில் கம்பீர் பல இடங்களில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் எந்தப் பதிலையும் கூறாதவர், தற்போது அதுதொடர்பாகப் பேசியுள்ளார். ஒரு நேர்காணலில் இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கம்பீர், ``இந்தக் கேள்வியைப் பலமுறை நான் எதிர்கொண்டுள்ளேன். அன்று நீங்கள் 97 ரன்னில் இருக்கும்போது என்ன நடந்தது எனப் பலரும் கேட்பதுண்டு.

அவர்களுக்கு எனது பதில் இதுதான். நான் 97 ரன்கள் எடுக்கும் வரையில் எனது தனிப்பட்ட ஸ்கோரைப் பற்றி கவலை கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் எனது ஸ்கோர் குறித்து நான் அறிந்திருக்கவில்லை. அன்று நடந்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

கம்பீர் - தோனி
கம்பீர் - தோனி

ஒரு ஓவரின் நடுவில் தோனி என்னிடம் `இன்னும் மூன்று ரன்கள் தான் உங்கள் செஞ்சுரிக்குத் தேவை’ என்றார். அவர் சொன்ன பிறகுதான் எனது தனிப்பட்ட ஸ்கோர் குறித்து எனக்குத் தெரிய வந்தது. மனம் திடீரென தனிப்பட்ட ஸ்கோர் குறித்து சிந்தித்தபோது ஓர் அவசரம் ஏற்பட்டது. அதுவரையில் இலக்கை கடப்பதில் மட்டுமே கவனம் இருந்தது. அதன்பின்னரும் அப்படியே இருந்திருந்தால் நான் சதமடித்திருப்பேன் என நினைக்கிறேன்.

நான் 97 ரன்னில் இருக்கிறேன் என தோனி உணர்த்தியபோது தோன்றிய அவசரம், எனது விக்கெட்டை இழக்க காரணமாக ஆனது. அன்று ஆட்டமிழந்து டிரெஸ்ஸிங் ரூம் செல்லும்போது, `இந்த 3 ரன்னால் எனது விக்கெட்டை இழந்துவிட்டேன். என் எதிர்காலத்தையும் இந்த 3 ரன்கள் பாதிக்கும்’ என்பதை நான் எனக்கே சொல்லிக்கொண்டேன். அது உண்மையாகிவிட்டது. 8 ஆண்டுகள் கழித்து இன்றும் என்னை அந்த 3 ரன்கள் துரத்துகிறது” எனக் கூறியிருக்கிறார்.

கம்பீர்
கம்பீர்

உலகக்கோப்பை தொடர் முடிந்து 8 ஆண்டுகள் கழித்து தற்போது ஆட்டமிழந்தது தொடர்பாக கம்பீர் தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகக் கவனம் பெற்றுள்ளது.