நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொண்ட மும்பை அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து அணியின் பயிற்சியாளரான ஷேன் பாண்ட் பேசியிருக்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை நாங்கள் வகுத்த திட்டங்களுக்கு எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஒத்துழைக்காமலிருந்தது மிகவும் ஏமாற்றமான ஒரு விஷயமாகும். மார்க்கஸ் போன்ற வீரர்களை இந்த ஆடுகளத்தில் எப்படி அணுக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். ஆனால் நாங்கள் பந்து வீச விரும்பிய இடங்களில் சிலர் பந்தை வீசவில்லை.

மார்க்கஸ் நேற்று நேராகத் தரையில் அடிக்க முயற்சி செய்து விளையாடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் அதற்கேற்றபடிதான் எங்கள் பந்துகளை வீசினோம். ஆனால் அவருடைய இன்னிங்ஸ் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. போட்டிக்கு முன்னால் நாங்கள் வகுக்கும் திட்டங்கள் குறித்து பெருமை அடைகிறோம். ஆனால் களத்தில் சில தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கிறோம். இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.