Published:Updated:

ராகுல், ரோஹித், பண்ட் - டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் போவது யார்? பிசிசிஐ-க்குக் காத்திருக்கும் சவால்கள்!

ராகுல், ரோஹித், பண்ட்

கோலி சென்ற பின்தான், அவர் ஏற்றிருந்த பதவியின் முக்கியத்துவமும், அதற்கு அவர் செய்திருக்கும் நியாயமும் இன்னமும் அதிகமாகவே விளங்குகிறது. இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

ராகுல், ரோஹித், பண்ட் - டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் போவது யார்? பிசிசிஐ-க்குக் காத்திருக்கும் சவால்கள்!

கோலி சென்ற பின்தான், அவர் ஏற்றிருந்த பதவியின் முக்கியத்துவமும், அதற்கு அவர் செய்திருக்கும் நியாயமும் இன்னமும் அதிகமாகவே விளங்குகிறது. இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

Published:Updated:
ராகுல், ரோஹித், பண்ட்
அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்கிற பந்தயம் சூடுபிடித்துள்ள நிலையில், பந்தயத்தில் குதிக்க பல வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராகுல் முதல் பும்ரா வரை ஓப்பன் ஸ்டேட்மென்ட்டே விட்டு வருகிறார்கள்.

"விராட் கோலி, கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் செட் செய்திருக்கும் பெஞ்ச் மார்க், அடுத்து வரும் கேப்டனுக்குத் தலைவலியாக இருக்கும்" என்று கோலி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிக் கொண்டதைப் பற்றி, அஷ்வின் கருத்துத் தெரிவித்திருந்தார். அடுத்த கேப்டனுக்குத் தலைவலிகளும் சவால்களும் இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு முன்னர், இங்கே யார் கேப்டன் என்று நிர்ணயிப்பதே பிசிசிஐக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது.

Indian test team
Indian test team

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெஸ்ட்டில், துணைக் கேப்டனாக உலா வந்து கொண்டிருந்த ரஹானே ஃபார்மில் இருந்திருந்தால் அவரைக் கேப்டனாக்கி பிசிசிஐ அழகு பார்த்திருக்கும். கடந்த ஆஸ்திரேலியத் தொடர், அதற்கான அங்கீகாரத்தைத் தந்து அவர் 'அக்மார்க் கேப்டன் மெட்டீரியல்' என முத்திரை குத்தி இருந்தது. ஆனால், அவரது சமீபத்திய பெர்ஃபார்மன்ஸுகள், ஒரு பேட்ஸ்மேனாக சொந்த மண்ணில் ஆடும் தொடர்களிலேயே கூட இனிமேல் அவருக்கு இடம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

இத்தகைய சூழலில், இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக யாருக்கு வாய்ப்புகள் அதிகம்‌?! அவர்களது பலம், பலவீனங்கள் என்னென்ன?! ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரோஹித் ஷர்மா:

ஐபிஎல்லில் சிறந்த கேப்டனாக தன்னை நிருபித்துக் காட்டியவர்தான் ரோஹித். நல்ல தலைவராக அவருடைய நிதானம், அணுகுமுறை, முடிவெடுக்கும் திறன், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் வியூகங்கள் எல்லாமே சேர்ந்துதான் மும்பை இந்தியன்ஸை ஐந்து முறை கோப்பையை ஏந்த வைத்திருக்கிறது. இந்தக் காரணத்தினால்தான் அடுத்து வர இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான ரோட் மேப்பாக, லிமிடெட் ஃபார்மெட் கேப்டன் பதவி முன்னரே ரோஹித்தின் கைகளில் வந்து சேர்ந்துவிட்டது. ஆகவேதான், அது குறித்து எந்த எதிர்வாதமும் எழவில்லை. ஆனால், ரெட் பால் கிரிக்கெட் கேப்டனாக அவர் டபுள் பிரமோஷன் பெறுவதற்கு ஆதரவும், எதிர்ப்பும் சேர்ந்தேதான் கிளம்பி உள்ளன.

Rohit Sharma
Rohit Sharma

அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப்புக்கான பந்தயத்தில் இந்தியாவை இலக்கை நோக்கி எடுத்துச் செல்லக் கூடிய அனுபவம் அவரிடத்தில் இருக்கிறது என்ற ஒரு முழுமுதற் காரணமே ரோஹித்தை பிசிசிஐயின் முதல் தேர்வாக மாற்றி உள்ளது. மூன்று ஃபார்மெட்டுக்கும் ஒரே கேப்டன் என்பது, பயிற்சியாளர் - கேப்டன் இருவருக்குமான புரிதலை வலுப்படுத்துவதுடன், வீரர்கள் தேர்விலிருந்து, அணிக்குள் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்குவது வரை அனைத்திலும் அணிக்கு மிக சாதகமான அம்சமாக இருக்கும். ஆனாலும், இவற்றை எல்லாம் தாண்டி இந்த விஷயத்தை வேறு ஒரு கோணத்திலிருந்தும் அணுக வேண்டி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, டெஸ்ட் ஃபார்மட்டுக்கான திட்டமிடல் எப்போதுமே நீண்ட காலத்திற்கானதாக இருக்கும். புதிதாக கேப்டனாக நியமிக்கப்படுபவர் அணியுடன் நெடுங்காலம் பயணிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே 34 வயதாகி விட்ட ரோஹித்தால் இன்னமும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்தான் ஆட முடியும் என்பதால் அதன்பின் மீண்டும் ஒரு கேப்டனுக்கான தேடலை பிசிசிஐ தொடங்க வேண்டியதிருக்கும்.

அதேபோல், தொடக்கத்தில் சற்றே திணறினாலும் டெஸ்டில் ஓப்பனராக ரோஹித்தின் வருகைக்குக் பின்தான், இந்திய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கணிசமான ரன்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில், ரோஹித்தின் தலையில் டெஸ்ட் கேப்டன் என்ற பதவியைத் தூக்கி வைப்பது அவருக்கான பணிப் பளுவைப் பன்மடங்காக்கும். இது அவரது பேட்டிங்கில் கூடக் குறுக்கிட்டு, குந்தகம் விளைவிக்கலாம். பல ஆண்டுகள் கழித்து, இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த ஓப்பனரின் ஆட்டத்திறன் பாதிக்கப்படுவது அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

Rohit Sharma
Rohit Sharma

இதேபோல், ரோஹித்தின் ஃபிட்னஸும் அடிக்கடி கேள்விக்குள்ளாகிறது. இந்தியா முன்னதாக ஆடிய ஆஸ்திரேலியத் தொடர், சமீபத்திய தென்னாப்பிரிக்கத் தொடர் உட்பட பல முக்கியத் தொடரில், சில போட்டிகளில், அவர் காயங்களால் பங்கேற்க முடியவில்லை. பிரதான வீரராகவே அவர் அணியில் இல்லாதது பல பாதிப்புகளை உண்டாக்கியது என்றால் கேப்டனான பின்னர், அவர் இல்லாமல் போகும் நிலை வந்தால், அந்த பாதிப்பின் வீச்சைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இது பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகவும் அவரது பங்களிப்பில் பாதகத்தை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக இது அணிக்கும் அவருக்கும் நல்லதல்ல.

கே.எல்.ராகுல்:

தென் ஆப்பிரிக்கத் தொடரில் கேப்டனாக கோலி, ரோஹித் இருவருக்கும் அடுத்து பிசிசிஐக்கு நினைவுக்கு வந்துள்ளது, ராகுலின் பெயர்தான். தற்போதைய நிலையில், தகுந்த வீரர்கள் இல்லாததே இந்த முடிவுக்குக் காரணமே ஒழிய ராகுல், இதற்கு முழுதாகத் தயாராகி விட்டாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

KL Rahul
KL Rahul

டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ஆடி இருந்தாலும், கேப்டனாக அணியை வழிநடத்திய அனுபவம் ராகுலுக்குப் பெரிதாக இல்லை. ஒரே ஒரு ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியில் மட்டுமே கேப்டனாக ஆடியிருக்கிறார். சீசனுக்கு ஒரு கேப்டன் என பந்தாடும் பஞ்சாப், ராகுலுக்கு கேப்டன் பதவியை அளித்தது. மொத்தம் 27 போட்டிகளில் ராகுல் கேப்டனாக ஆடினார். அதில் பேட்ஸ்மேனாக, அதிலும் ஓப்பனராக, விக்கெட் கீப்பராக பன்முகமும் காட்டினார். ஆனால், கேப்டனாக அவர் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது சந்தேகத்துக்குரியதே. ஐபிஎல்லில் 27 போட்டிகளுக்கு தலைமையேற்றுள்ள அவரது வெற்றி சதவிகிதம், வெறும் 43 மட்டும்தான். இது தேர்ச்சி விகிதம் மட்டுமே ஒழிய, மாபெரும் வெற்றிக் குறியீடு அல்ல.

இந்த நிலையில், அனுபவமில்லாத அவரிடம் இப்பதவியைத் தூக்கிக் கொடுப்பது எவ்வகையில் சரியாகும்? "அடுத்த ஓராண்டும், இந்தியா பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளை சொந்த மண்ணிலேயே ஆடுகிறது. தற்போது, கேப்டனாக ரோஹித்தையும், துணைக் கேப்டனாக, ராகுலையும் நியமியுங்கள். ரோஹித் ஓய்வறிவிக்கும் சமயத்தில் அணியைத் தாங்கும் அனுபவம் உள்ளவராக ராகுல் தயாராகி விடுவார்" என்பது இன்னொரு தரப்பின் வாதமாக இருக்கிறது. ஆனால், அந்தக் கால கட்டத்திற்குப் பின்தான், இந்தியா SENA நாடுகளில் ஆடத் தொடங்குகிறது. இந்திய சூழ்நிலைகளில் கற்றுத் தேர்ந்த அவரால், அப்புதிய சூழலைக் கையாள முடியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ராகுல் தலைமைப் பண்பு உள்ளவரா என்பதிலும் இன்னமும் போதுமான தெளிவில்லை.

KL Rahul
KL Rahul

சமீபத்தில் நடைபெற்ற, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் காயம் காரணமாக கோலி இல்லாததால் அந்த வாய்ப்பு ராகுலிடம் வழங்கப்பட்டது. முதல் போட்டியில் இந்தியா வென்று, தொடரில் முன்னிலை வகித்த நிலையில் அந்த அழுத்தத்தை அப்படியே இரட்டிப்பாக்க ராகுல் தவறினார். "களத்தில் கேப்டனுக்கு இருக்க வேண்டிய ஆளுமையும், அக்ரஷனும், ராகுலிடம் காணப்படவில்லை. அட்டாக்கிங் ஃபீல்டிங் செட்டப்போடு, பௌலர்களைத் தட்டிக் கொடுத்து விக்கெட் எடுக்க வைக்கும் வித்தை அவரிடம் காணப்படவில்லை" என்பதே பல கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாக இருந்தது. இது எல்லாம் சேர்ந்து, ராகுலுக்கு எதிராகவே கறுப்புக் கொடி காட்டுகிறது.

ரிஷப் பண்ட்

டெஸ்ட் கேப்டன் பந்தயத்தில் ஓடும் இன்னொரு முக்கியக் குதிரை ரிஷப் பண்ட். கவாஸ்கர், யுவராஜ், ரெய்னா என பல முன்னாள் வீரர்களும், "பண்டைக் கேப்டனாக்குங்கள்" என அவருக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். அவருடைய இளம் வயதும், துடிப்பும் அவருக்குச் சாதகமான அம்சங்களாகின்றன. வெறும் 24 வயதே ஆகும் பண்ட், டெஸ்ட்டில் அணி எதிர்பார்க்கும் 'நீண்ட காலக் கேப்டன்' என்ற நிபந்தனைக்குள் கனகச்சிதமாகப் பொருத்திப் போவார். அணிக்குள் களையெடுப்பை நடத்தி புஜாரா, ரஹானே எனத் தொடர்ந்து திறனை வெளிப்படுத்தத் தவறி வரும் வீரர்களை வெளியேற்றி ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் உள்ளிட்ட வீரர்களால் அணியைப் புனரமைப்பு செய்தால் அதற்குக் கேப்டனாக கண்டிப்பாக பண்ட் சரியான தேர்வுதான்.

Rishabh Pant
Rishabh Pant
இந்த ஆண்டு நடைபெற உள்ள இலங்கைத் தொடர், இங்கிலாந்துடன் எஞ்சியுள்ள அந்தக் கடைசி போட்டி, ஆஸ்திரேலியாவுடனான தொடர் என இந்த மூன்று தொடர்களுக்கு உள்ளாகவே சில போட்டிகளில் தோற்றாலும், அதற்குள் பண்ட் கற்றுக் கொண்டு விடுவார் என்பதே அவருடைய ஆதரவாளர்களின் வாதமாக இருக்கிறது.

இளம்வயதிலும் குறுகிய காலத்திற்குள்ளாகவே பண்டிடமும் முதிர்ச்சி தெரியத்தான் செய்கிறது. முன்னதாக அவசரக் கதியில் டிஆர்எஸ் கேட்கச் சொல்லி கோலியை தவறான முடிவுகளை எடுக்க வைத்த அதே பண்ட்டிடம், சமீபத்திய போட்டிகளில் ஒரு தெளிவும் நிதானமும் நிரம்பி இருப்பதைக் காணலாம். என்னதான் விக்கெட் கீப்பராக சதாசர்வ காலமும் டெஸ்ட் போட்டிகளில்கூட பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்தாலும், டெல்லி கேப்பிடலஸ் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது பண்ட்டின் இன்னொரு முகத்தை எல்லோராலும் பார்க்க முடிந்தது. அளவுகடந்த பக்குவமும், பேட்டிங் செய்யும் போது கூடுதல் நிதானமும், ஷாட் செலக்ஷனின் போது கவனமும், டெல்லி கேப்பிடல்ஸின் அதிவேக பௌலிங் படையைக் கையாண்ட விதமும் எனப் பல இடங்களில் பண்ட் ஸ்கோர் செய்தார். இது எல்லாமும் சேர்ந்துதான் அவரை ரோஹித்துக்கு அடுத்தபடியாக, ராகுலுக்கும் ஒருபடி மேலாக பார்க்க வைக்கிறது. ஆனாலும், அனுபவம் மற்றும் வயது என்ற அந்த இரண்டும் இல்லை என்பதே தற்போது, பண்ட்டுக்கு எதிராகதான் நிறைய குரல்கள் ஒலிக்கின்றன.

இந்த மூவர்தான் பிசிசிஐயின் டாப் லிஸ்ட் என்றாலும் இவர்களைத் தவிர்த்தும் அஷ்வின், பும்ரா என இன்னமும் சில பெயர்களை ரசிகர்கள் முன்னெடுக்கின்றனர். அஷ்வினுக்கு வயது என்ற காரணியும், அயல்நாடுகளில் அவர் பெரிதாக ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதும் பாதகமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. கம்மின்ஸைக் கேப்டனாக கண்டு பழகிய சில ரசிகர்கள், பும்ராவையும் கேப்டனாக்க ஆசைப்படுகின்றனர். பும்ராவும் கேப்டனாக ஆக்கப்பட்டால் அது தனது கௌரவமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். என்ற போதிலும், நீண்ட நெடிய ஸ்பெல்களை வீசி, விக்கெட் எடுப்பதற்காகவே செய்யப்பட்ட இந்திய பிரதான வேகப்பந்து வீச்சாளருக்கு, கீ பிளேயருக்கு, அப்படி ஒரு கூடுதல் பளுவை ஏற்ற பிசிசிஐ துணியாது என்பதே உண்மை.

விராட் கோலி
விராட் கோலி

வெங்க்சர்க்கார், "தோனி தயாராவதற்கு முன், கும்ப்ளே குறுகிய காலத்திற்கு டெஸ்ட் அணிக்குத் தலைமையேற்று தயார் செய்து வைத்ததைப் போல், புதிய கேப்டன் உருவாக வேண்டிய இடைவெளியை ரோஹித் அல்லது அஷ்வினைக் கொண்டு நிரப்பலாம்" என்று கூறியிருந்தார். இதுவும் சரியான வாதம்தான். ரோஹித்தை தற்போது கேப்டனாக்கி, பண்ட்டை, ரோஹித் மற்றும் கோலிக்குக் கீழ் பண்படுத்தித் தயார்ப்படுத்துவதும் சரியான முடிவாகவே இருக்கும்.

மொத்தத்தில், கோலி சென்ற பின்தான் அவர் ஏற்றிருந்த பதவியின் முக்கியத்துவமும் அதற்கு அவர் செய்திருக்கும் நியாயமும் இன்னமும் அதிகமாகவே விளங்குகிறது. யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்களுக்கு அது சவால்களும் சங்கடங்களும் சதிராடும் களமாகவே தொடக்கத்தில் இருக்கப் போகிறது.

கே.எல்.ராகுல், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதைப் போல, வெல்வோம் என்ற நம்பிக்கையை அணிக்குள் கோலி கடத்தி இருக்கிறார். அதை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வது புதிய கேப்டனின் கூடுதல் பொறுப்பாக இருக்கும்.

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? உங்கள் கருத்து என்ன என்பதையும் கமென்ட்டில் சொல்லுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism