Published:Updated:

ஃப்ராங்க் வோரல்... அவமானமாகப் பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸை அசைக்கமுடியா அணியாக மாற்றியவர்!

மேற்கிந்தியத் தீவுகள் நாட்டுக்கு என்று 1920-களில் இருந்தே கிரிக்கெட் அணி உண்டு. ஆனால் அதற்கு கேப்டனாக ஒரு வெள்ளைத் தோல் கொண்ட ஆங்கிலேயர்தான் இருப்பார். கேட்டதற்கு, கரீபிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எல்லாம் தலைமைப் பண்பு கிடையாது என்ற ஒரு காரணத்தை அவர்களே சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால் 1950-60களில் எங்கள் நாட்டை நாங்களே ஆள வேண்டும் என்ற முழக்கம் பல தேசங்களில் எழும்பி உணர்ச்சி நெருப்பை பற்ற வைத்திருந்தது. 'நமது தோலின் நிறம் தான் அவர்களுக்கும் நமக்குமான வித்தியாசம். மற்றபடி எதுவும் இல்லை' என்ற விடுதலை எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் துளிர் விட்டு மரமாகி இருந்தது. அதன் ஒரு பகுதியாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கு முதல் அந்நாட்டின் பூர்வகுடியின் மைந்தன் ஒருவர் கேப்டன் ஆனார். அவர் தான் ஃப்ராங்க் வோரல். ஃப்ராங்க் வோரல் - காலம் காலமாக மேற்கிந்தியத் தீவுகள் சுமந்து வந்த பாரத்தை இறக்கி வைக்க வந்த பரமாத்மா.

அந்த காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்கள் ஆடியதெல்லாம் தோல்வியைத் தவிர்ப்பதற்கு தான் ஆடப்பட்டதே தவிர வெற்றிக்காக அல்ல. ஃப்ராங்க் வோரல் கேப்டன் ஆவதற்கு முன்பு ஆடிய 84 ஆட்டங்களில் 29 ஆட்டங்களை டிரா செய்திருந்தது அந்த அணி. ஐந்து நாட்கள் நடக்கும் ஆட்டம், மேலும் அந்தக் காலத்தில் ஓவருக்கு எட்டு பந்து போன்றவைகள் எல்லாம் சற்று சலிப்பைக் கொடுக்க அந்த நேரம் பார்த்து கேப்டன் ஆனார் வோரல். அதுவும் முதல் தொடர் வலிமை மிக்க ஆஸ்திரேலிய அணியுடன்... அதுவும் ஆஸ்திரேலியா நாட்டில் வைத்து.

Frank Worrell
Frank Worrell

வெற்றியோ தோல்வியோ... ஆடிப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று மந்தமான ஆட்ட முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தனது வீரர்களை அழைத்தார் வோரல். ரோகன் கன்ஹாய், வெஸ் ஹால், கேரி சாபர்ஸ் போன்ற மிகச் சிறந்த வீரர்கள் இருந்தும் அணி ஏன் தோற்கிறது என்ற கேள்விக்கு முதலில் விடை தேடினார். மேற்கிந்தியத் தீவுகள் என்பது இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடு கிடையாது. பார்படாஸ், ஜமைக்கா, ஆண்டிகுவா போன்ற பல தனித் தனி நாடுகளின் ஒன்றியம் தான் அது. வேறு வேறு கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளுக்கு இடையில் இருந்து வந்திருக்கும் வீரர்களை ஒன்றிணைத்தார் வோரல். நாம் எதிரணியைப் போல சும்மா விளையாடவில்லை. நமது இன விடுதலைக்காக ஆடுகிறோம். நாம் யாருக்கும் குறைவானவர்கள் இல்லை என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த ஆடுகிறோம் என்று உந்து சக்தி அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேப்டன் ஆன முதல் ஆட்டத்திலேயே வோரலின் தலைமைப் பண்பு தெரிய ஆரம்பித்தது. வெற்றிக்காக ஒவ்வொரு வீரரும் போராடினர். கிரிக்கெட் உலகத்தில் முதன் முதலில் ஒரு டெஸ்ட் போட்டி டை ஆனது ஃப்ராங்க் வோரல் கேப்டனான முதல் டெஸ்ட் போட்டியில்தான். அந்த டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் இழந்தாலும் 2-1 என கெளரவமாகத்தான் தோற்றது. தோற்ற ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலிய அணி வெறும் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தான் வென்றிருந்தது.

ஆஸ்திரேலிய கேப்டன் ரிச்சி பெனாட் உடன் கலந்து பேசி தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே நாம் பாசிட்டிவ் கிரிக்கெட் ஆடுவோம் என்று கூறியிருந்தார் வோரல். இரு அணியினரும் அதை செய்து காட்டினர். அடிப்பதற்கு லாவகவான பந்துகள் வரும் போது டெஸ்ட் போட்டி தானே என்று யாரும் அடிக்காமல் விடவில்லை. அம்பயர் கையை உயர்த்தியவுடன் வாக்குவாதம் இன்றி வீரர்கள் வெளியேறத் தொடங்கினர். மந்தமான பேட்டிங், வீரர்களுக்கு இடையே வாக்குவாதம், ஒற்றுமை இல்லாத அணி என்று இருந்ததை மாற்றி வோரல் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை காண மக்களை அழைத்து வந்தார். ஒருவேளை வோரல் இந்தத் தொடரில் அதே பழைய மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை தோற்று இருந்தால் மீண்டும் எதாவது ஒரு வெள்ளைத் தோல் வீரர் கேப்டன் ஆகி இருப்பார். மேற்கிந்தியத் தீவுகள் அணி பிரமாண்டமாக மாற அதன்பிறகு இருபது ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம்.

வோரல் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் 15 போட்டிகளில் ஆடியது. அதில் ஒன்பது போட்டிகளில் வெற்றி வாகை சூடியது. பதினைந்து ஆட்டங்களில் பத்து ஆட்டங்கள் வெளி நாடுகளில் நடந்தவை. வோரல் கற்றுக்கொடுத்த அட்டாக்கிங் கிரிக்கெட்டுக்கான வெகுமதிதான் இரண்டு உலகக்கோப்பைகளும், 30 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக மாறிய அந்தப் பெருமையும்.

கேப்டன் என்று மட்டுமல்ல, பேட்டிங்கிலும் மிகச் சிறந்த வீரர் வோரல். கேப்டனாவதற்கு முன்பு 19 ஆட்டங்களில் ஆறு சதம், ஆறு அரை சதம் என்று அடித்து அசத்திய வீரர். யாருக்கு எப்படி அடி பட்டால் என்ன என்று 'பாடிலைன்' பந்து வீச்சு மூலம் ஆஸ்திரேலிய அணியை அசைத்த இங்கிலாந்து ஆடிய அதே கிரிக்கெட்டை தான் மேற்கிந்தியத் தீவுகளும் ஆடியது. ஆனால் வோரலின் தலைமையில் அவர்கள் ஜென்டில்மேன் ஆடட்த்ததை அதற்கேற்றவாறே ஆடினர். இந்திய அணி கேப்டன் நாரி கான்ட்ராக்ட்டர் ஒருமுறை சார்லி க்ரீஃபீத் பந்து வீச்சில் தலையில் பலத்த காயத்துடன் சரிந்து விழுந்தார். மண்டைக்குள் இரத்தம் கட்டி, மோசமான சூழலில் அவர் இருந்த போது அவருக்கு இரத்தம் தேவைப்பட்டது. அப்போது முதல் ஆளாக அவருக்கு இரத்தம் கொடுத்து உதவியது ஃப்ராங்க் வோரல்தான்.

வெஸ்ட் இண்டீஸ் அணி உலகத்தையே கட்டி ஆண்டதற்கு வோரலும் அவர் தலைமைப்பண்பும் ஒரு முக்கியக் காரணம். தான் விதைத்து வைத்த செடி பெரிய மரமாகி ஊருக்கே நிழல் தருவதைக் காணத்தான் வோரலுக்கு கொடுத்து வைத்திருக்கவில்லை. 42 வயதிலேயே கேன்சர் அவரை எடுத்துக்கொண்டது. அவர் நினைவாக இன்று வரை ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் ஆடும் தொடர் 'ஃப்ராங்க் வோரல் டிராபி' என்றே அழைக்கப்படுகிறது. அவமானமாகப் பார்க்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை அசைக்க முடியாத ஆதிக்கமாக மாற்றிய ஒப்பற்ற வீரரின் 97-வது பிறந்ததினத்தை கரீபிய தீவுகள் மட்டுமல்லாது கிரிக்கெட் உலகமே நினைவுகூர்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு