வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் தடுமாறினாலும், களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட் 45 பந்துகளில், 46 ரன்களைக் குவித்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்டின் பேட்டிங் குறித்துப் பேசும்போது ரிஷப் பண்ட் குண்டாக இருப்பதால் அவரால் நினைத்த ஷாட்களை அடிக்க முடிவதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், "ரிஷப் பண்ட் புது விதமான ஷாட்களை அடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் பல நேரங்களில் அவர் அவுட்டாகி விடுகிறார். நான் ரிஷப் பண்ட் குறித்து எப்போதுமே சொல்லும் விஷயம் என்னவென்றால் அவர் உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர் வித்தியாசமான ஷாட்களை ஆட முயற்சி செய்கிறார். அப்போது அவர் உடல் தகுதி சரியாக இருந்தால்தான் அந்த ஷாட்களை அவரால் சரியாக விளையாட முடியும். ரிஷப் பண்ட் உடல் பருமனாக இருக்கிறார். அவர் இருக்க வேண்டிய எடையை விட அதிகம் உள்ளார். அவர் குண்டாக இருப்பதால் அவரால் நினைத்த ஷாட்களை அடிக்க முடிவதில்லை. எனவே உடல் எடையைச் சரியாக வைத்துக் கொள்வதில் பண்ட் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.