Published:Updated:

எதிரணிகளின் வெற்றிக் கனவைத் தகர்த்தவன்; `ரிவர்ஸ் ஸ்விங்' மன்னன்; வக்கார் யூனிஸ் பிறந்ததினப் பகிர்வு

லாராவின் லெக் ஸ்டம்ப் தகர்ந்தது போல அந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக் கனவையும் களைக்க வக்காருக்கு தேவைப்பட்டது ஒரே ஒரு பந்துதான்...

வக்கார் யூனிஸ் - உலகம் கண்ட அதி அற்புத பௌலர்களில் ஒருவர். அவரின் பிறந்தநாள் இன்று. வானத்தை நோக்கிச் செல்லும் என நினைத்து நாம் விடும் தீபாவளி ராக்கெட் யூடர்ன் போட்டு எதிர் வீட்டு ஜன்னலுக்குள் செல்லும் கதை தான் வக்கார் யூனிஸின் பந்து வீச்சு முறை. ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்து செல்லும் என்று ஆயாசமாக இருந்த பல பேட்டர்களின் கால் கட்டை விரல்களை உடைத்துச் சென்றிருக்கின்றன இவர் வீசிய துல்லிய யார்க்கர்கள். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன் என்றாலும் சரி, இவர் தன் வேலையை காட்ட ஆரம்பித்தால் அவ்வளவுதான். உச்சி வெயிலில் காலில் செருப்பின்றி காயப்போட்ட துணியை எடுக்கச் சென்றது போல நடனம் ஆட வேண்டியதுதான்.

பாகிஸ்தானின் புரேவாலா என்னும் ஊரில் பிறந்தவர் வக்கார் யூனிஸ். பிழைப்பதற்காக துபாய்க்கு இடம்பெயர்ந்தது அவரது குடும்பம். வக்காரின் பள்ளிக் காலம் எல்லாம் ஷார்ஜாவில் தான் கழிந்தது. 12 வயது வரை கிரிக்கெட் பக்கமே எட்டிப் பார்க்காத வக்கார், அதன் பிறகு மெல்ல கிரிக்கெட்டின் பக்கம் சாயத் தொடங்கினார். ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் என பள்ளிக் காலங்களில் பல விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பந்துவீச்சில் கூட முதலில் லெக் ஸ்பின்னராகவே ஆரம்பித்தார். 1988ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பி முதல் தர கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர், சில நாள்களிலேயே ஒரு கால்வாய்க்குள் விழுந்து தனது இடது கை சுண்டு விரலை வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இடது கையில் நான்கு விரல்கள் தான் வக்காருக்கு உண்டு. இந்தக் காயம் குணமடைய சிறிது காலம் எடுத்ததால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு குட்டி இடைவெளி விழுந்தது.

வக்கார்'
வக்கார்'

ஒரு காயம் இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுத நினைக்கும் போது இன்னொரு காயம் இவரை கிரிக்கெட்டின் முறைவாசலுக்கு கொண்டு வந்து விட்டது. ஆனால் அது அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் இம்ரானுக்கு ஏற்பட்ட காயம். இம்ரான் கான் அடிபட்டு தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது டி.வி-யைப் போட, அதில் ஒரு ஆட்டத்தில் வக்கார் பந்து வீசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அதைப் பார்த்த இம்ரான் நேராக அந்த ஆட்டம் நடக்கும் மைதானத்திற்கு சென்று விட்டார். "இந்த ஆண்டு இறுதியில் ஷார்ஜாவில் நடக்கும் முத்தரப்பு தொடரில் நீ ஆடப் போகிறாய்" என்று இம்ரான் கூற பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய நட்சத்திரம் உருவாகியது.

1980-களின் இறுதியில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அதி தீவிர புயலாக மாறியது. வாசிம் அக்ரமுடன் இணைந்து கொண்டு இவர் வேட்டையாடிய பேட்டர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. லைன், லென்த், வேகம், ஸ்விங் என நான்கையும் குழைத்து எதிரே இருப்பவருக்கு இவர் வீசும் வேகத்திலேயே அந்த பேட்ஸ்மேன் நம்பிக்கையை இழந்திருப்பார். இம்ரான் கானின் ஓய்விற்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சிறிதும் பிசிறு தட்டாமல் பார்த்துக் கொண்டார் வக்கார்.

வக்கார் , அக்தர் , அக்ரம்
வக்கார் , அக்தர் , அக்ரம்
வாசிம் அக்ரம் : வேகப்பந்து வீச்சுக்கு இலக்கணம் வகுத்தவன்... பேட்ஸ்மேன்களின் தலைக்கனம் தகர்த்தவன்!

ஒரு பேட்ஸ்மேன் 50 ரன்களைக் கடந்து விட்டாலே அவர் நன்றாக செட்டில் ஆகிவிட்டார் என்று கூறுவது வழக்கம். ஆனால் வக்கார் யூனிஸ் ஆடும்போது, அந்தப் பேச்சுக்கே இடமில்லை. இரண்டு நாட்கள் முழுதும் பேட்டிங் பிடித்த வீரரால் கூட வக்காரின் ரிவர்ஸ் ஸ்விங்கிங் யார்க்கருக்கு பதில் சொல்ல முடியாது. இம்ரான் கான் காலத்தில் பிரபலமான ரிவர்ஸ் ஸ்விங்கை தனது பிரமாஸ்திரம் ஆக்கி அதை பேட்ஸ்மேன்களை நோக்கி எய்தால் அவ்வளவுதான். அதுவும் பாகிஸ்தான் போன்ற ஆசிய மைதானங்களில் இவர் வீசிய ரிவர்ஸ் ஸ்விங்கர்களுக்கு யாரிடமும் பதில் இருந்ததே கிடையாது

1992-ம் ஆண்டு இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றார் வக்கார். இங்கிலாந்து அணிக்கு கிரஹம் கூச் சதம் அடிக்கிறார். மற்றொரு துவக்க வீரர் ஆதர்டன் அரைசதம் கடக்கிறார். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 270-1 என்றிருக்க வக்கார் பந்தை வாங்கிக் கொண்டு வீச ஓடி வருகிறார். அதற்கு முன்பே வக்காரின் பந்துவீச்சில் நூறு ரன்களுக்கு மேல் இங்கிலாந்து எடுத்து விட்டது. ஆனால் அது எல்லாம் வக்கார் தனது ரிவர்ஸ் ஸ்விங்கை பயன்படுத்தும் முன்பு. அதன் பின்பு வக்கார் ஆறு ஓவர்கள் பந்து வீசினார். இங்கிலாந்து அணி 320 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது!

1996-ம் ஆண்டு நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவரது ஓவரில் கவர் டிரைவ் மூலம் இரண்டு பவுண்டரிகளை அடிப்பார் லாரா. ஆனால் அதே ஓவரில் பிரையன் லாராவுக்கு ஒரு அக்மார்க் யார்க்கரை வீசி அவ்வளவு பெரிய லாராவை சின்னக் குழந்தை போல முகம் குப்புற விழச் செய்வார் வக்கார் யூனிஸ். லாராவின் லெக் ஸ்டம்ப் தகர்ந்தது போல அந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக் கனவையும் களைக்க வக்காருக்கு தேவைப்பட்டது ஒரே ஒரு பந்துதான்.

வஞ்சிக்கப்பட்டாரா முகமது அமீர்... ஸ்விங் மன்னனின் எழுச்சியும் வீழ்ச்சியும்! #Amir
வக்கார் யூனிஸ்
வக்கார் யூனிஸ்

வாசிமும் வக்காரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு செய்த சாதனைகளை இப்போதுவரை யாராலும் செய்ய முடியவில்லை. பந்துவீச்சாளராக இருந்து கொண்டு கேப்டன் ஆன வெகுசிலரில் இருவருக்குக் குறிப்பிடத்தக்க இடமுண்டு. ஓய்வுபெற்ற பின்புகூட பயிற்சியாளராகத் தன்னால் முடிந்த பங்களிப்பை அணிக்குக் கொடுத்திருக்கிறார் வக்கார். 25 வயதை எட்டுவதற்கு முன்னமே சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளைக் வாரிக்குவித்தவர் இவர். வாசிம் அக்ரமுடன் ஏற்பட்ட சிறு சிறு மோதல்களால் முழுமை பெறாத கரியராகவே முடிந்து போனது வக்கார் யூனிஸின் கிரிக்கெட் வாழ்க்கை.

வக்கார், வாசிம் அக்ரம்
வக்கார், வாசிம் அக்ரம்

வக்கார் யூனிஸ் 13 முறை ஒரு நாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்று வரை அந்த சாதனை முறியடிக்கப்படாமலே இருக்கிறது. 1990-ம் ஆண்டு மட்டும் இரண்டு ஃபார்மட்டுகளிலும் சேர்த்து பத்து முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மற்ற பந்துவீச்சாளர்களிடம் வேகமாக இரண்டு விக்கெட் வேண்டும் என்று கூட கேட்க முடியாது. ஆனால் வக்காரிடம் சென்று விரைவாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடு என்று கேட்க முடியும். 250-0 என்று இருந்தால் கூட வக்கார் யூனிசால் அந்த அணியை 300 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய முடியும்.

வக்கார் யூனிஸ்
வக்கார் யூனிஸ்

இன்று வரை பலருக்கு வக்கார் யூனிஸ் தான் ரோல் மாடல். முகமது அமீர் கூட வக்கார் யூனிஸின் பந்துவீச்சு வீடியோவைப் பார்த்து தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பந்து வீசியதாக கூறியுள்ளார். மின்னல் வீரன் உசேன் போல்ட் கூட தான் வளர்ந்து வந்த காலங்களில் வக்கார் தான் தனக்கு மிகவும் பிடித்த வீரர் என்று கூறியுள்ளார். `ரிவர்ஸ் ஸ்விங்' என்னும் அரிய கலையை கமர்ஷியல் கிரிக்கெட் மொத்தமாக தின்று முழுங்கும் வரை கிரிக்கெட் உலகில் வக்கார் யூனிஸின் பெயர் மின்னிக் கொண்டே இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு