90-களில் நியூஸிலாந்து கிரிக்கெட்டின் முகமாக இருந்தவர் கிறிஸ் ஜெய்ன்ஸ். ஆல்ரவுண்டரான கிரிஸ் கெயின்ஸ் நியூஸிலாந்து முதல் ஐசிசி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து, 3000 ரன்களுக்கு மேல் அடித்த வெகு சில ஆல்ரவுண்டர்களில் கெய்ன்ஸும் ஒருவர். நியூசிலாந்துக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,320 ரன்கள் அடித்திருக்கிறார். 215 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4950 ரன்கள் அடித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 218 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 201 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார்.

51 வயதான கிரிஸ் கெய்ன்ஸுக்கு கடந்தவாரம் ஆஸ்திரேலியாவின் கேன்பரா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.. ஆனால், சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமாக ஆரம்பித்து தற்போது உயிர்காக்கும் கருவிகள் அவருக்குப் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அவர் உயிருக்குப்போராடுவதாகவும் நியூசிலாந்து டிவி செய்தி வெளியிட்டிருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்கிற சாதனை 2004 வரை விவியன் ரிச்சர்ஸிடம்தான் இருந்தது. 84 சிக்ஸர்கள் அடித்திருந்தார் ரிச்சர்ட்ஸ். இந்தச் சாதனையை 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்ட்டில், ஆண்ட்ரு ஃபிளின்டாஃபின் பந்துவீச்சில் 85-வது சிக்ஸரை அடித்து முறியடித்தார் கெய்ன்ஸ். அதேபோல் விளையாடும் 100-வது போட்டியில் 100 ரன்கள் அடித்த உலகின் ஒருசில வீரர்களில் கிறிஸ் கெய்ன்ஸும் ஒருவர். அந்த சதமும் இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டதுதான்.
கேப்டன்களுடன் பஞ்சாயத்து, அடிக்கடி அணியின் ஒழுக்கவிதிகளை மீறுவது, திருமண உறவு முறிவுகள் என காயங்களோடு சேர்ந்து பிரச்னைக்குரிய வீரராகவும் இருந்தார் கெய்ன்ஸ். இதனால் அவரால் அணிக்குள் தொடர்ந்து நீடித்து விளையாடமுடியாமல் போனது.
கிறிஸ் கெய்ன்ஸ் உயிருக்குப் போராடும் செய்தி கிரிக்கெட் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.