Published:Updated:

`தோனி ஓய்வுபெற்றால்....; பன்ட் செய்ய வேண்டியது இதைத்தான்!' - கபில் தேவ் ஷேரிங்ஸ்

கபில் தேவ் மற்றும் தோனி
கபில் தேவ் மற்றும் தோனி

``வீரர்கள் ஒருபோதும் தங்களை போட்டியிலிருந்து விலக்கவோ அல்லது ஓய்வளிக்கவோ தேர்வாளர்களுக்கு வாய்ப்புகள் தரக் கூடாது" என்றும் கபில் தேவ் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு `83' என்கிற படமாக உருவாகி வருகிறது. 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கதைக்களமாகக் கொண்டது இந்தப்படம். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதற்காக கபில் தேவ் மற்றும் படக்குழுவினர் சென்னை வந்திருந்தனர்.

தோனி
தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கபில்தேவ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,``தோனி, பல ஆண்டுகள் நாட்டிற்குச் சிறப்பான சேவை செய்திருக்கிறார். நிச்சயம் ஒருநாள் அவர் ஓய்வுபெற வேண்டிய சூழல் ஏற்படும். அது கூடிய விரைவிலோ அல்லது கொஞ்சம் தாமதமாகவோ நடக்கலாம். அவர் தன்னுடைய பணியை மிகவும் சிறப்பாகச் செய்துள்ளார். அவர் போட்டிகளில் தற்போது விளையாடுவதில்லை. எனவே, `எனக்கு இது போதுமானதாக உள்ளது' எனக்கூறி எப்போது ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர் ஓய்வு பெற்றால், அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்" என்றார்.

`தோனி இருந்தபோது நிலைமையே வேறு..!’ - இந்திய அணியில் ராகுலின் `ரோல்’ குறித்து சேவாக்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது. அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 காலகட்டத்துக்கான அந்த ஒப்பந்தப் பட்டியலில் தோனியன் பெயர் சேர்க்கப்படவில்லை. இது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதுகுறித்தும் பேசிய கபில்தேவ், ``பட்டியலில் தோனியின் பெயர் நீக்கப்பட்டது வருத்தமளிக்கிரது. இது என்னுடைய வேலை அல்ல. ஏனெனில், ஒப்பந்தத்தை நான் வழங்கவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் வேலை அது. அதனால், எனக்கு இதுபற்றித் தெரியாது. நீங்கள் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால்தான் பதிலைப் பெற முடியும்" என்று தெரிவித்தார்.

வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற விமர்சனம் ரிஷப் பன்ட் மீது வைக்கப்படுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மும்பையில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கம்மின்ஸ் வீசிய பந்தில் பன்ட் காயமடைந்தார். இதையடுத்து கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். அந்தத் தொடரின் மூன்றாவது போட்டியின்போதே பன்ட், காயத்திலிருந்து மீண்டபோதும், பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல், தற்போதைய நியூஸிலாந்து தொடரிலும் கே.எல். ராகுலே விக்கெட் கீப்பிங் பணியைச் செய்து வருகிறார். இதுகுறித்தும் கபில் தேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இதுகுறித்து பேசிய கபில்தேவ்,``பன்ட் மிகவும் திறமையானவர். அவர் யாரையும் குறைசொல்ல முடியாது. கிரிக்கெட்டில் தனது எதிர்காலத்தை அவர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். போட்டிகளில் தொடர்ந்து ரன்களைப் குவிப்பதுதான் அவருக்கான ஒரே வழி. இதன்மூலமே தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, அவர் தனது திறனை நிரூபிக்க முடியும். உங்களிடம் திறமை இருக்கும்போது, விமர்சனங்களை தவறு என நிரூபிப்பது உங்கள் வேலைதான். வீரர்கள் ஒருபோதும் தங்களை போட்டியிலிருந்து விலக்கவோ அல்லது ஓய்வளிக்கவோ தேர்வாளர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது'' என்று கூறினார்.

மேலும், ``போட்டியில் பந்துவீச்சுதான் அற்புதமானது. நாங்கள் போட்டிகளில் வெற்றிபெறுவது பேட்ஸ்மேன்களால் அல்ல. ஒரு டெஸ்டில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் சிறப்பான பந்து வீச்சாளர்களால்தான் வெற்றிபெறுகிறோம். இதுதான் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசம்" என்றும் கூறினார். ``பாண்டியா விரைவில் மீண்டு அணிக்குத் திரும்ப வரவேண்டும். அவர் தன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது" என்றும் கபில்தேவ் தெரிவித்தார்.

கபில் தேவ் - ரன்வீர் சிங்... ஶ்ரீகாந்த் - ஜீவா... 1983 ரியல் அண்டு ரீல் ஹீரோஸ்! #VikatanPhotoCards
அடுத்த கட்டுரைக்கு