Published:Updated:

``கமென்ட்ரியின்போது கிரிக்கெட் எப்படி இருக்கும்?" - அபிஷேக் நாயர் அனுபவம் #VikatanExclusive

மு.பிரதீப் கிருஷ்ணா

TNPL அனுபவம்... தன்னுடைய வர்ணனையாளர், பயிற்சியாளர், ஆலோசகர் ரோல்கள்... ரோஹித் ஷர்மா, விஜய் சங்கர், வருண் சக்ரவர்த்தி, தினேஷ் கார்த்திக் ஆகியோருடனான பயணம் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அபிஷேக் நாயரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

Abhishek Nayar
Abhishek Nayar

அபிஷேன் நாயர் - வீரர், பயிற்சியாளர், வர்ணனையாளர், ஆலோசகர் எனப் பல அவதாரங்களில் மிரட்டுகிறார். கடந்த ஆண்டு பாண்டிச்சேரி அணியில் இணைந்து, தன் 100-வது முதல் தரப் போட்டியை ஆடியவர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் அகாடெமி பயிற்சியாளராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஒருசில முன்னணி வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசகராகவும் செயல்படுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக TNPL தொடரில் வர்ணனை செய்துகொண்டிருக்கும் அவரை, ஒரு போட்டிக்கு இடையே பேட்டி கண்டேன்..!

TNPL தொடரில் இரண்டாவது ஆண்டாக வர்ணனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இந்தத் தொடரின் அனுபவம் எப்படி இருக்கிறது?

மிகவும் நன்றாக இருக்கிறது. இந்தத் தொடரின் தரம் கூடிக்கொண்டே இருக்கிறது. போட்டி நடந்துகொண்டிருக்கும் இரு மைதானங்களும் மிகவும் நன்றாக இருக்கின்றன. கடந்த ஆண்டு, சேப்பாக்கத்திலும் போட்டிகள் நடந்தன. இந்த ஆண்டு அங்கு பெரிய அளவில் போட்டிகள் இல்லை என்றாலும், இந்த மைதானங்களின் தரம், அதை ஈடுகட்டிவிட்டது. இந்த மைதானங்கள் சர்வதேச தரத்தில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். குறிப்பாக, ஆடுகளங்களின் தரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

Anthony Dhas
Anthony Dhas
TNCA/TNPL

இந்த சீஸனில் உங்களைக் கவர்ந்த வீரர்களைப் பற்றி...

ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. கோவை கிங்ஸ் அணியின் ஆன்டனி தாஸ் ஆடிய அந்த இன்னிங்ஸ் (டூட்டி பாட்ரியாட்ஸ் அணிக்கெதிராக - 26 பந்துகளில் 63 ரன்கள்) என்னை பிரமிக்கவைத்தது. அதேசமயம், அலெக்சாண்டரின் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) பந்துவீச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது. கிராமத்தில் பிறந்து, எளிமையான பின்னணியிலிருந்து வந்து, ஒரு மிகப்பெரிய மேடையில் தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆட்டத்திலும், அவர் அர்ப்பணிப்போடு ஆடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை நான் பார்த்த வரையிலும், இன்னும் பல வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் இவர்கள் இருவரும் என்னைக் கவர்ந்தவர்கள்!

விஜய் சங்கர் - சமீப காலமாக ஆல்ரவுண்டராகக் கலக்கிக்கொண்டிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, இப்போது காயத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரது வளர்ச்சியை நேரில் பார்த்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி...

விஜய் சங்கர் தொடக்கத்திலிருந்தே தன்னுடைய திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக நான் விளையாடியபோது அவர் வேறு ஒரு வீரராக இருந்தார். இப்போது, ஒவ்வொரு விஷயத்திலும் பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறார். தன் பேட்டிங்கை மேம்படுத்த கடுமையான முயற்சிகள் எடுத்துக்கொண்டே இருக்கிறார். பேட், பால் இரண்டிலுமே அணிக்குத் தேவையான பங்களிப்பை அவரால் அளிக்க முடியும். அந்த பேலன்ஸை அடைந்திருக்கிறார். இந்தக் குறுகிய காலகட்டத்தில், அவர் இந்திய அணியின் உடையில் வியக்கத்தக்க செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Vijay Shankar
Vijay Shankar
AP

அவரது சர்வதேச டி-20 பயணம் எதிர்பார்த்ததைப்போல் இல்லை. ஆனால், அதிலிருந்து மீண்டு, இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்து சிறப்பாகச் செயல்பட்டார். அடுத்து, உலகக் கோப்பை அணிக்கும் தேர்வானார். இந்தக் காலகட்டத்தில் எக்கச்சக்க விஷயங்களைச் செய்திருக்கிறார். இதுவே அவர் தன்னுடைய ஆட்டத்தில் எவ்வளவு உழைப்பைக் கொட்டுகிறார் என்பதை உணர்த்தும். இதுமட்டுமல்லாமல், ஃபிட்னஸ் விஷயத்திலும் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். சில பல காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், தன் உடல்வாகை சரியாகப் பராமரிப்பது போன்ற விஷயங்களில் கடந்த சில ஆண்டுகளாக நன்றாகவே செயல்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து செய்தால், நிச்சயமாக அணியில் நிரந்தர இடம் இவருக்கு உண்டு.

விஜய் சங்கர் மட்டுமல்ல, முந்தைய TNPL தொடர்களில் வாஷிங்டன் சுந்தர்கூட சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார். மேலும், சில ஆல்ரவுண்டர்களும் இந்தத் தொடரில் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீக்கிரமே தமிழ்நாடு ஆல்ரவுண்டர்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறும் என்று நினைக்கிறீர்களா?

ஒரு மிகப்பெரிய தொடருக்கு முன் ஏற்படும் நெருக்கடி, அதில் இருக்கும் எதிர்பார்ப்பு, அதைக் கையாள்வது எப்படி, அவர்கள் திறமைகளுக்கு விளையாடுவது எப்படி எனப் பல விஷயங்களை, ஒவ்வொரு கிரிக்கெட்டருக்குமே நாங்கள் உணர்த்துவோம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, நான் அவர்களுக்குச் சொல்வது இதுதான் - ஒரு வீரர் நல்ல ஆல்ரவுண்டராவது, இதுபோன்ற போட்டிகளில் இல்லை. ஒரு தொடருக்கு வருவதற்கு முன், தங்களின் திறமைகளை எப்படி பட்டை தீட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான்.

ஆல்ரவுண்டராக ஒரு போட்டியில் சிறப்பாகச் செயல்படுவது, போட்டியைக் காணும் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும். 'நாம் பேட்டிங், பௌலிங் இரண்டையுமே சிறப்பாகச் செய்ய வேண்டும்' என்று நினைக்க வைக்கும். அவர்களை, இரண்டாவது விஷயத்தில் கவனம் செலுத்த ஊக்கமளிக்கும். ஆனால், இந்திய அணியின் தேவை ஒரு நேச்சுரலான ஆல்ரவுண்டர். ஒரு பேட்ஸ்மேனை, பௌலிங்கில் கவனம் செலுத்தச் செய்வதோ, ஒரு பௌலரை பேட்டிங்கில் கவனம் செலுத்தச் செய்வதோ, ஒரு முழுமையான ஆல்ரவுண்டரை உருவாக்கிவிடாது. இப்போது ஹர்திக்கை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு நேச்சுரல் ஆல்ரவுண்டர். அவரால் இரண்டு ஏரியாவிலும் இயற்கையாகவே சிறப்பாகச் செயல்பட முடிகிறது. என்னைப் பொறுத்தவரை, ஒரு வீரரால் இன்னொரு ஏரியாவில் முன்னேற்றம் காண முடியும். ஆனால், ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் என்பது வரம். அதில், தொடக்க காலத்தில் இருந்தே உழைக்க வேண்டும்.

வீரர், பயிற்சியாளர், வர்ணனையாளர்... உங்களுக்கு மிகவும் பிடித்த ரோல்?

என்னைப் பொறுத்தவரை, ஒரு வீரராக என்னுடைய கரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பயிற்சியாளர் பொறுப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னை கிரிக்கெட்டோடு மிகவும் நெருக்கமாக வைத்திருக்கிறது. வர்ணனையும் நன்றாகத்தான் இருக்கிறது. என்னால், மற்றவர்களைப்போல் நிறைய விஷயங்கள் பேச முடியாது. இருந்தாலும், இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த ஆட்டத்தை வேறொரு கோணத்தில் இருந்து அணுக முடிகிறது. வீரராக இருக்கும்போது பார்த்ததற்கும் பயிற்சியாளராகப் பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. வர்ணனையில் இருக்கும்போது இன்னும் வேறொரு கோணத்தில் பார்க்க முடிகிறது. Stats, Analysis என ஒருவகையில் எனக்குப் புதிதான பார்வையை இந்த வர்ணனையாளர் பணி கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இது மிகச் சிறந்த அனுபவம்.

Rohit Sharma
Rohit Sharma
AP

ஒரு சக வீரராகவும் நண்பராகவும், ரோஹித் ஷர்மா உங்களுக்கு மிகவும் நெருக்கம். உலகக் கோப்பைத் தொடரில் அவர் ஆடிய ஆட்டம் உங்களுக்கு ஆச்சர்யமாக இருந்ததா?

நிச்சயமாக இல்லை. அவரிடம் அப்படியான ஒரு ஆட்டத்தை எப்போதுமே நான் எதிர்பார்ப்பதுண்டு. உலகக் கோப்பைக்கு முன்பு யாரிடமோ பேசிக்கொண்டிருக்கும்போது நான் சொன்ன விஷயங்கள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. 'ரோஹித்தை எனக்கு நன்கு தெரியும். இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் ஆடிய விதத்தைப் பார்க்கும்போது, அவருக்கு ஒரு மிகச் சிறந்த உலகக் கோப்பைத் தொடர் அமையப்போகிறது' என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அவருடைய மொத்த கிரிக்கெட் பயணமும் எனக்கு நன்கு தெரியும். 2011 உலகக் கோப்பைக்குத் தேர்வாகாதது, அதன்பிறகான மாற்றங்கள் என அனைத்தையும் கவனித்திருக்கிறேன். அதன்பிறகு, இந்த ஆட்டத்தில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும், கொட்டிய உழைப்பும் அபரிதமானது. அதைப் பார்த்த எனக்கு, அவரது இந்த ஆட்டம் எந்த வகையிலும் ஆச்சர்யப்படுத்தவில்லை.

ரோஹித் சில இரட்டைச் சதங்கள் அடித்திருக்கிறார். பல சதங்களும் அடித்திருக்கிறார். அவரது இந்த மிகப்பெரிய சதங்கள், பல போட்டிகளில் வெற்றி தேடித் தந்திருக்கின்றன. பேட்ஸ்மேனாக மிகப்பெரிய மாற்றம் கண்டிருக்கிறார். அதேபோல், கேப்டன்ஸியிலும் நல்ல முதிர்ச்சியைக் காட்டியிருக்கிறார். ஆக, அவரது இந்த பெர்ஃபான்ஸில் எனக்கு ஆச்சர்யமே இல்லை!

பயிற்சியாளராக மட்டுமல்லாமல், தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி போன்ற வீரர்களுக்கு பெர்சனல் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளீர்கள். உளவியல் ரீதியாக, ஒரு வீரர் தன்னைத் தயார் படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

திறமையையும் உளவியலையும் நான் எப்போதுமே தொடர்பு படுத்திப் பார்ப்பதுண்டு. இரண்டுமே ஒன்றையொன்று தொடர்புடையது. ஒரு சில வீரர்களிடம் சில நொடிகள் பேசினால் போதுமானதாக இருக்கும். ஒருசிலரிடம் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துப் பேச வேண்டியிருக்கும். நிறைய விஷயங்களை ஆழமாக அலச வேண்டியிருக்கும். ஒரு வீரரை நாம் எவ்வளவு புரிந்துகொண்டுள்ளோம் என்பதில்தான் இருக்கிறது. அவர் எங்கிருந்து வருகிறார், எந்த சூழ்நிலையிலிருந்து வருகிறார், அவரது கடந்த காலம் எப்படியிருக்கிறது என்பதைப் போன்ற விஷயங்களை அறிந்துகொள்வது முக்கியம்.

Dinesh Karthik
Dinesh Karthik

ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு வாழ்க்கைமுறை இருக்கும். சில சமயங்களில் அதை உடைப்பதுதான் அங்கு தேவையான விஷயமாகவும் இருக்கும். அதன்பின் புதிதாக ஒன்றைச் செயல்படுத்தி, அது அவர்களுக்கு சரிவருகிறதா என்று பார்க்க வேண்டும். அதுவொரு மிகப்பெரிய பிராசஸ். ஒரு வீரரின் பலத்தை, பலவீனத்தைத் தெரிந்துகொள்வதில் இருந்து அது தொடங்குகிறது. உளவியல் இங்கு மிகவும் முக்கியமானது. அதேபோல், வெறுமனே பேசுவதும், புதுமையைப் புகுத்துவதும் மட்டும் தேவையான மாற்றத்தைக் கொடுத்துவிடாது. அனைத்து விஷயங்களும் ஒருசேர சரியாக அமைய வேண்டும்.

கிங்ஸ் லெவன் ஏலத்தில் எடுப்பதற்கு முன்பே, நீங்கள் வருண் சக்ரவர்த்தியோடு பணியாற்றியிருக்கிறீர்கள். கொல்கத்தா அணியினரோடு அவர் இருந்தபோது அவரை நன்கு அறிந்திருப்பீர்கள். அவரைப் பற்றி...

வருண் சக்ரவர்த்தியை முதலில் நெட் பௌலராகத்தான் நைட்ரைடர்ஸ் அணிக்கு அழைத்தோம். அப்போது அவரது பந்துவீச்சை நன்கு அலசினோம். அவரது செயல்பாடு எங்களுக்குத் திருப்திகரமாகவே இருந்தது. கடந்த ஆண்டு, ஒரு அட்டகாசமான TNPL தொடர் அவருக்கு அமைந்தது. அந்தத் தொடரில் அவர்தான் மிகச் சிறந்த பௌலர் என்றே சொல்லலாம். மதுரை பேந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் மிக முக்கியக் காரணமாக விளங்கினார். கடந்த ஐ.பி.எல் ஏலத்தின்போது, அவரை எடுக்க நாங்களும் கடுமையாகப் போட்டியிட்டோம். ஆனால், கிங்ஸ் லெவன் அவரை ஏலத்தில் எடுத்துவிட்டது. அங்கு அவருக்கான வாய்ப்புகளும் பெரிதாகக் கிடைக்காமல் போய்விட்டது. காயத்தால் அவதிப்பட்டதும் அதற்கொரு காரணமாக அமைந்தது.

Abhishek Nayar
Abhishek Nayar

அவரது கிரிக்கெட் பயணத்தில் இது தொடக்க காலம்தான். இந்தக் காயத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார், அங்கிருந்து எப்படி தன்னை நிரூபிக்கிறார் என்பதில்தான் இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு வீரருக்குமே ஒரு 'X Factor' இருக்கும். அடுத்த சில உள்ளுர் தொடர்களில், அடுத்த TNPL தொடரில் அவர் மீண்டும் தன்னை நிரூபிக்கும்போது, டி-20 அணியிலோ, அதன்பிறகு ஒருநாள் அணியிலோ நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும். நான் முதன் முதலாகப் பார்த்த வருண் அந்தத் திறமையைக்கொண்டவர்தான்!

வருணுக்குக் கொடுக்கப்பட்ட தொகை (ரூ. 8.4 கோடி) அவர் மீதான நெருக்கடியை அதிகரித்தது என்று நினைக்கிறீர்களா? அந்த உளவியல் அழுத்தம் அவரது பெர்ஃபாமன்ஸைப் பாதித்திருக்குமா?

ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது என்பதே பெரிய நெருக்கடிதான். எவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டிருந்தாலும், சிறிய தொகைக்கு வாங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நெருக்கடியை உணரவே செய்வார்கள். அதிக தொகை என்பது, நெருக்கடியை சற்று அதிகப்படுத்தும் என்பது உண்மைதான். அதேசமயம், அந்த வீரர் எந்த அணிக்காக விளையாடுகிறார் என்பதும் முக்கியம். அவ்வளவு பெரிய மேடையில் ஆடுவது என்பது கட்டாயம் நெருக்கடியை ஏற்படுத்தும்தான். ஆனால், நீங்கள் என்ன தொகைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களிடம் மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையெல்லாம்விட, ஒரு வீரராக, அவர் தன்மேல் வைத்திருக்கும் எதிர்பார்ப்பும் ஒரு காரணம். வருணின் காயம், அவர் மீதான நெருக்கடியை நிச்சயம் அதிகரித்திருக்க வேண்டும். நிச்சயமாக, அந்த ஒரு சீஸனில் நாங்கள் பார்த்த வருணாக அவர் இருக்கவில்லை.

Abhishek Nayar
Abhishek Nayar

தினேஷ் கார்த்திக்குக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறீர்கள். தேசிய அணிக்கு வருவதும் போவதுமாகவும் இருக்கும் ஒரு வீரருக்கு ஆலோசகராக இருந்தது உங்களுக்கு எவ்வளவு சவாலாக இருந்தது?

அது அந்த வீரருக்குத்தான் சவால் என்று நான் நினைக்கிறேன். வீரர்களை ஊக்கப்படுத்துவதில்தான் எல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் சரி, வீரர்களோடு தொடர்புடைய ஒவ்வொருவருமே சரி, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் உற்சாகமாக இருந்தாலே, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். ஒரு வகையான பாசிடிவிடியை அவர்களால் உணர முடியும்.

ஒரு பாசிடிவான சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் இதில் முக்கியமானது. அதெல்லாம், நீங்கள் அணிக்குத் தேர்வு செய்யப்படுகிறீர்களா இல்லையா என்பதைப் பொறுத்ததல்ல. உங்களுடைய ஆட்டம் என்ன தரத்தில் இருக்கிறது என்பதுதான். நம் திறமையைத் தவிர்த்து மற்ற சில விஷயங்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நமது கட்டுப்பாட்டில் இல்லை. அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது முக்கியம். உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை இன்னும் சிறப்பாகச் செய்து முடித்து, உங்களை மேலும் மெருகேற்றிக்கொள்வதுதான் சரி. அவ்வளவுதான். வீரர்களை உற்சாகமாக வைத்திருப்பது என்பது, நல்ல சூழ்நிலையை உருவாக்குவதில்தான். அது நம்மிடமிருந்துதான் வர வேண்டும். அதுவொன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை.