ஐபிஎல் தொடரில் சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு நடைபெற இருக்கிறது.
இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சிஎஸ்கே அணி 2 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இதுவரை தோனி, சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இந்நிலையில், `முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தோனியைப் போல் எந்த ஒரு கேப்டனும் இருந்ததில்லை' என தோனியைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

தோனியைப் பாராட்டி பேசிய சுனில் கவாஸ்கர், `சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்று நன்றாகவே தெரியும். அதற்கு தோனியின் கேப்டன்ஷிப்தான் காரணம். 200 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியிருப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.
இவ்வளவு போட்டிகளில் அணியை வழிநடத்தும் போது அது நிச்சயம் வீரர்களின் செயல்பாட்டை பாதிக்கும். ஆனால் தோனி சற்று வித்தியாசமானவர். அவருடைய கேப்டன்ஷிப் செயல்பாடு மிகவும் வித்தியாசமாக இருக்கும். தோனி போல் இதுவரை எந்த கேப்டனும் இருந்ததில்லை. இனி எதிர்காலத்தில் யாரும் தோனி போல் வரப்போவதும் கிடையாது" என்று சுனில் கவாஸ்கர் தோனியைப் பாராட்டியிருக்கிறார்.