Published:Updated:

விராட் கோலியின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதான்! #HBDKohli

Virat Kohli
Virat Kohli ( AP )

உண்ண மறந்து, உறங்க மறந்து அவர் ஜிம்மே கதி என்று இருந்த நாள்கள் ஏராளம். தான் எப்படி ஆகவேண்டும் என்று நினைத்தாரோ அப்படியே மாறினார் விராட்.

விராட் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது அவர் ஃபிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததுதான்
டேவ் வாட்மோர்

கோலியின் தலைமையில் அண்டர் 19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் டேவ் வாட்மோர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில்தான் இப்படிக் கூறினார். சாதாரண இளைஞனாய் இந்திய அணிக்குள் நுழைந்து, ஜாம்பவனாய் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விராட் கோலியின் வாழ்க்கையை மாற்றிய அந்த முடிவைப் பற்றியும், அதற்கு அவர் கொடுத்த உழைப்பைப் பற்றியும், அது இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் ஒரு பார்வை...

கோலியின் இளவயது உருவத்தை நினைத்துப் பாருங்கள். அமுல்பேபி அளவிற்கு இல்லை என்றாலும், கொஞ்சம் குண்டாகத் தான் இருப்பார். அவருடைய ஒரு நேர்காணலின்போது, ``ஒரு போட்டியில், பவுண்டரிக்குச் சென்ற பந்தை சேஸ் பண்ணும் போது ஒவ்வொரு அடியும் மிகக் கஷ்டப்பட்டுத்தான் வைத்தேன். அந்த ஒவ்வொரு கஷ்டமான அடியும், ஃபிட்னஸின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது" என்று சொல்லியிருப்பார். அதன்பின், உண்ண மறந்து, உறங்க மறந்து அவர் ஜிம்மே கதி என்று இருந்த நாள்கள் ஏராளம். தான் எப்படி ஆகவேண்டும் என்று நினைத்தாரோ அப்படியே மாறினார் விராட்.

Virat Kohli
Virat Kohli
AP
நட்ஸும், பால் கலக்காத காபியும்தான் அவரின் ஃபேவரிட் ஸ்நாக்ஸ்.

கோலி ரன் எடுப்பது பற்றி, நாம் சிலாகிப்பதை விட கமென்ட்ரி கொடுப்பவர்களே குஷியாகி விடுவார்கள். 50 முதல் 70 சதவிகிதம் வரை ரன்களை ஓடித்தான் எடுப்பார் விராட். சிங்கிளே இல்லாத இடத்தில் சிங்கிள் எடுப்பார். சிங்கிள் எடுக்கவேண்டிய இடத்தில் அது டபுளாகும். 4, 6 என்று அடித்து மட்டும்தான் ரன் எடுக்க வேண்டும் என்று இல்லை. கண்ணுக்கே தெரியாமல் ஸ்கோர்போர்டை டிக் செய்துகொண்டே இருப்பார். அவர் 80 ரன் ஓடினாலும் 81வது ரன்னையும் முதல் ரன் போல் எடுக்கும் மனநிலையில் ஓடுவது ஆச்சர்யப்பட வைக்கும் ஒன்று. இதுதான் அவர் ரன் மெஷினாக இருக்கும் சக்சஸ் சீக்ரெட். ஆனால், அதைத் தன்னோடு நிறுத்திக்கொள்ளவில்லை அவர்.

தன் சக்சஸ் சீக்ரெட்டை தன் அணியினருக்கும் கடத்துவதுதானே ஒரு தலைவனுக்கு அழகு. விராட் அதையும் அட்டகாசமாக நடைமுறைப்படுத்தினார். கோலி ஃபிட்னசுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. 2016, ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ்கான் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தார். குட்டி டி வில்லியர்ஸ் போல் சுழன்று சுழன்று ஆடினார். ஆனால் ஃபீல்டிங்கில் சொதப்புவார். காரணம், அவரது உடல் எடை. சில போட்டிகள் பார்த்த கோலி, அவரை அணியிலிருந்து நீக்கி, சச்சின் பேபியைக் களமிறக்கினார். ஃபிட்னஸ் என்ற ஒற்றை விஷயம் அணித் தேர்வில் அவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தினார் விராட்.

வீட்டு உணவையே அதிகம் விரும்பும் விராட், ஜங்க் ஃபுட்டைத் தவிர்ப்பவர்.

சில காலம் முன்பு வரை ஃபீல்டிங்கில் இந்திய அணி சுமார்தான். 11 பேர் கொண்ட அணியில் யாரோ ஒருவர்தான் யுவராஜ், கைஃப் போன்று பெஸ்ட் ஃபீல்டராக இருப்பார்கள். ஆனால், இன்று எல்லாம் மாறியிருக்கிறது. ஜடேஜா - உலகின் மிகச் சிறந்த ஃபீல்டராக நிற்கிறார். அவரோடு, கோலி, ரஹானே, மனீஷ், ஹர்திக் என எல்லோரும் ஃபீல்டிங்கில் கலக்குகிறார்கள். இந்திய அணி ஃபிட்னசுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவு இது. இன்று யோ யோ டெஸ்டைக் கடக்காமல் யாராலும் நுழைய முடியாது என்ற நிலை இருக்கிறதே. அன்று இந்திய அணியின் மிகச் சிறந்த ஃபீல்டராக இருந்த யுவிக்குக் கூட கஷ்டமான நிலைதான். ஃபிட்னஸ் அந்த அளவுக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இருந்த காலத்திலேயே, வீரர்களுக்கு பலமுறை அடிபட்டு, பல மாதம் ஓய்வில் இருக்கும் நிலை இருந்தது. ஆனால், இப்போது சர்வதேச டி20, ஐ.பி.எல் என்று பல போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு ஏராளமான உள்ளூர் தொடர்கள். அதன் அட்டவணையும் பெரிதாகிவிட்டது. அத்தனை போட்டிகளில் ஆடினாலும், நம் வீரர்கள் ஃபிட்டாக இருக்கிறார்கள். இந்திய அணிக்குள் நுழைவற்கு எது முக்கியம் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால் தங்களின் பேட்டிங், பெளலிங்கோடு சேர்ந்து ஃபிட்னஸுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தி கோலி எஃபெக்ட்!

Virat Kohli
Virat Kohli
AP

தன் அணியினருக்கு மட்டுமன்றி, இன்றைய இளைய தலைமுறை யினருக்கும் ஒரு ஃபிட்னஸ் இன்ஸ்பிரேஷனாக கோலி இருக்கிறார். சமூக வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் கோலியின் ஒவ்வொரு பதிவையும் பார்த்து இன்ஸ்பயர் ஆவார்கள் என்பது உறுதி. அதற்குச் சான்றாக அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில், மூன்று வருடங்களுக்கு முன் செய்த வொர்க்அவுட்டையும் தற்போதைய வொர்க் அவுட்டையும் ஒப்பிட்டுப் பதிவிட்டிருந்தார். "இந்த வொர்க் அவுட்டைச் சரியாகச் செய்வதற்கு அதிக (3 வருடம்) காலம் எடுத்திருக்கிறது. ஆனால், தொடர்ந்து ஒரு விஷயத்தை முயற்சி செய்யும்போது அது சரியாக மாறும். இதோ என் மாற்றம். அதனால், எந்த விஷயமும் சரியாக அமைவதற்குக் காத்திருங்கள்" என்றார்.

விராட் இன்றைய தலைமுறையினருக்குக் கூறும் அறிவுரை இதுதான்: ``நான் சிறுவனாக இருந்தபோது என் நண்பர்களுடன் விளையாடுவதற்கு பல மணி நேரம் செலவழிப்பேன். ஆனால் இன்றைய குழந்தைகள் அப்படி அல்ல. இவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை அதிகமாகச் செலவு செய்கின்றனர். சமூக வலைதளங்களுக்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி அளவாக உபயோகிக்க வேண்டும். டெக்னாலஜி வளர்ந்து உள்ளது. அதை நன்மையாகப் பயன்படுத்துவதும், தீமையாகப் பயன்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மாற்றம் உங்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும்".

அடுத்த கட்டுரைக்கு