Published:Updated:

அரவிந்த டி சில்வா... அண்டர்டாக்ஸின் முதல் சூப்பர் ஹீரோ! - அண்டர் ஆர்ம்ஸ் - 2

அண்டர் ஆர்ம்ஸ் - அரவிந்த டி சில்வா

``என்னை அடிக்கல, குத்தல... ஆனா உயிரை மட்டும் அப்படியே உருவி எடுத்துட்டடா'' என கமல்ஹாசனிடம் நாகேஷ் சொல்வாரே, அதுபோல இந்தியா முழுக்கவும் பரவியிருந்த அந்த சில நிமிட நேர மகிழ்ச்சியை சத்தம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக உருவி எடுத்துவிட்டார் அரவிந்த டி சில்வா.

இப்போது வங்கதேச வீரர்களைப் பார்க்கும்போது இந்திய ரசிகர்களுக்கு எப்படி ஒரு கடுப்பும், கோபமும், எரிச்சலும் கிளம்புகிறதோ அதேபோல் 90-களில் இலங்கையைப் பார்த்தால் கொலைவெறியாகும். காரணம் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் அவமானகரத் தோல்விகளைப் பரிசளிக்கும் அணியாக இருந்தது இலங்கை.

``ஒரு தம்மாத்தூண்டு தீவு, நம்மளைப்போட்டு இந்த அடி அடிக்கிறானுங்களே'' என்கிற ஆற்றாமையில் எல்லா இந்திய ரசிகர்களுமே புலம்புவார்கள். இலங்கையின் இந்த எழுச்சி என்பது 96 உலகக்கோப்பையில் இருந்துதான் தொடங்கியது. அந்த எழுச்சியைத் தொடங்கிவைத்த அண்டர்டாக்ஸின் முதல் சூப்பர் ஹீரோதான் அண்டர் ஆர்ம்ஸின் இந்த வார நாயகன்.

Aravinda De Silva
Aravinda De Silva
ICC

1996 உலகக்கோப்பை... இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என ஆசிய நாடுகள் கூட்டாகச் சேர்ந்து நடத்தின. உலகக்கோப்பை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னால் இலங்கையில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்ததால் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீஸும் இலங்கை சென்று விளையாட மறுத்தன. விடுதலைப்புலிகள், ``நாங்கள் கிரிக்கெட் ரசிகர்கள். எங்களால் கிரிக்கெட் வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் நிகழாது'' என அதிகாரபூர்வமாக அறிவித்தும் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை பாதுகாப்பானது என இந்த நாடுகளுக்குப் புரியவைக்க இந்திய/பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து இலங்கைக்கு எதிராக விளையாடும் வகையில் காட்சிப்போட்டி ஒன்று கொழும்புவில் நடத்தப்பட்டது.

92- உலகக்கோப்பைக்குப் பிறகு இந்தியாவும் - பாகிஸ்தானும் நேருக்கு நேர் சந்திக்கவேயில்லை. இந்தச் சூழலில் இந்திய/பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து ஆடுகிறார்கள் என்பது மிகப்பெரிய செய்தியானது. இந்திய/பாகிஸ்தான் அணிக்கு முகமது அசாருதின் கேப்டன். டெண்டுல்கர், வாசிம் அக்ரம் என முக்கிய வீரர்கள் எல்லோருமே விளையாடினர். இந்தக் காட்சிப்போட்டியில் இந்திய/பாகிஸ்தான் அணி இலங்கையை வென்றது. ஆனால், இந்தப்போட்டி நடந்தப்பிறகும் ஆஸ்திரேலிய/வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இலங்கையில் விளையாடுவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருந்தன.

இதனால் இரண்டு போட்டிகளில் விளையாடாமலேயே 4 புள்ளிகளைப் பெற்றது இலங்கை. அந்த அணிக்கு ஈஸியாக 4 புள்ளிகள் கிடைத்ததுப்பற்றி எந்த அணியும் பெரிதாக கவலைப்படவில்லை. ஏனென்றால் இலங்கை அணியை அவர்கள் யாரும் உலகக்கோப்பைக்கான போட்டியாளர்களாகவே மதிக்கவில்லை. ஆனால், இலங்கை அணி சத்தம் இல்லாமல் மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாராகியிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

1984-ம் ஆண்டு 19 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் டிசில்வா.
Aravinda De Silva
Aravinda De Silva
ICC

இலங்கையின் முதல் போட்டி கொழும்புவில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்தது. ஜிம்பாப்வே அடித்தது 228 ரன்கள்தான். ஆனால், ஓப்பனர்கள் ஜெயசூர்யாவும், கலிவித்தரானாவும் சிங்கிள் டிஜிட்டல் அவுட் ஆக, ஜிம்பாப்வே-விடமே இலங்கைத் தோற்கப்போகிறது என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், குருசின்ஹாவுடன் கூட்டணிப்போட்டு அணியை மீட்டெடுத்தார் அரவிந்த டி சில்வா.

அரவிந்த டி சில்வா... கட்டையான, குட்டையான உருவம். கிரிக்கெட்டர்களுக்கான ஃபிட்னஸ் என எதுவும் பெரிதாக இருக்காது. விவியன் ரிச்சர்ட்ஸின் ரசிகராக வளர்ந்தவர் என்பதால் அவரைப்போன்ற பாடி லேங்குவேஜிலேயே இருப்பார். டீனேஜராகவே இலங்கை கிரிக்கெட் அணிக்குள் நுழைந்துவிட்டாலும் அடிக்கடி அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தார். விவியன் ரிச்சர்ட்ஸ் போலவே ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என நினைத்ததுதான் காரணம். உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக ஆடியதுபோல சர்வதேசப்போட்டிகளில் அவரால் அடித்து ஆடமுடியவில்லை. அடிக்கடி தூக்கியடித்து அவுட் ஆகிவிடுவார். ஆஸ்திரேலியாவில் நடந்த 1992 உலகக்கோப்பையில் இலங்கையின் கேப்டன் அரவிந்த டி சில்வாதான். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியைத் தவிர மற்றப் போட்டிகளில் டிசில்வா பெரிதாக விளையாடவில்லை. அதன்பிறகு கேப்டன்ஷிப் அர்ஜூனா ரணதுங்காவுக்கு மாறி 1996 உலகக்கோப்பைக்கு தயாராகியிருந்தது இலங்கை.

ஒரே டெஸ்ட்டின் இரண்டு இன்னிஸ்களிலும் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இரண்டு சென்சுரிகள் அடித்தவர் என்கிற சாதனை இன்றுவரை அரவிந்த டி சில்வாவிடம்தான் இருக்கிறது.

96 உலகக்கோப்பையின்போது அரவிந்த டி சில்வாவின் ஆட்டிட்யூட் மாறியிருந்தது. அக்ரசிவ் ஆட்டம் என்பதில் இருந்து மாறி அட்டாக்கிங் ஆட்டம் என்பதை நோக்கி நகர்ந்திருந்தார். அதாவது எல்லா பந்துகளையும் சிக்ஸருக்குத் துரத்துவதற்கு பதில் ஒரு ஓவருக்கு ஒன்றிரண்டுப் பந்துகளை மட்டும் அடித்து பெளலருக்குப் பிரஷரைக் கூட்டிவிடுவார். மற்றப் பந்துகளில் சத்தம் இல்லாமல் இருப்பார். அதாவது அந்த ஓவரில் வீசப்படும் சுமாரானப் பந்தை மட்டுமே பவுண்டரிக்கு விரட்டிவிடுவார். ஓவருக்கு 6 ரன்கள் என்கிற ரன்ரேட்டை கடைப்பிடிப்பார். ஸ்ட்ரைக் ரேட் எப்போதும் 100-க்கு அருகில் அல்லது அதற்குமேல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வார்.

Aravinda De Silva with 1992 world cup team Captains
Aravinda De Silva with 1992 world cup team Captains
ICC

அரவிந்த டி சில்வா களத்துக்குள் வந்துவிட்டால் பேட்டை எப்போதும் தரையில் வைக்கமாட்டார். கக்கத்துக்குள்ளேயே பேட்டை வைத்துக்கொண்டு ஒரு துடிப்புடனேயே இருப்பார்.

ஜிம்பாப்வே-க்கு எதிரான அந்த உலகக்கோப்பை போட்டிதான் டி சில்வாவின் பெயரை உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இந்தப்போட்டியில் 86 பந்துகளில் 91 ரன்கள் அடித்தார். இந்த உலகக்கோப்பையில்தான் அந்த 15 ஓவர் வியூகத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது இலங்கை. இப்போதைய பவர்ப்ளே போல் அப்போது முதல் 15 ஓவர்களில் ஃபீல்டிங் ரெஸ்ட்ரிக்‌ஷன்ஸ் இருக்கும். இந்த 15 ஓவர்களில் அவுட்ஃபீல்டில் மூன்று ஃபீல்ட்கள் மட்டுமே நிற்க வேண்டும். அதனால் 15 ஓவர்களில் 100 ரன்கள் அடித்துவிட வேண்டும் என்பதைக் கொள்கையாக வைத்து விளையாடியது இலங்கை.

இந்த வியூகப்படிதான் டெல்லியில் நடந்தப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை. இந்தியாவின் 272 ரன் டார்கெட்டை ஈஸியாக சேஸ் செய்துவிட்டார்கள். காரணம் ஜெயசூர்யாவும், கலுவித்தரானவும் சேர்ந்து முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்கள் அடித்து ரன்ரேட்டை எங்கேயோ கொண்டுபோய், ரிக்வயர்ட் ரன்ரேட்டை அப்படியே சள்ளென குறைத்துவிட்டார்கள்.

இந்தியாவுக்கு முதல் அப்செட்டைப் பரிசளித்தவர்கள் அடுத்த போட்டியில் உலக சாதனைப் படைத்தார்கள். அந்த வரலாற்று சம்பவம் மார்ச் 6, 1996-ல் நடந்தது. அன்று ஒரேநாளில் மட்டும் இந்தியா/ஜிம்பாப்வே, பாகிஸ்தான்/நியூசிலாந்து, இலங்கை/கென்யா என மூன்று உலகக்கோப்பை போட்டிகள் மூன்று நாடுகளில் நடந்தன. தூர்தர்ஷனில் அப்போது இரண்டு சேனல்கள்தான் என்பதால் இலங்கை/கென்யா போட்டி இந்தியாவில் ஒளிபரப்பாகவில்லை. ஆனால், அந்தப்போட்டியில்தான் சராமாரியாக சிக்ஸர்களைப் பறக்கவிட்டிருந்தது இலங்கை. அதாவது பேட்டிங் ஆட வந்த எல்லா பேட்ஸ்மேன்களுமே சிக்ஸர் அடித்தார்கள். மொத்தமாக 14 சிக்ஸர், 43 பவுண்டரிகள். 90'ஸில் 300 ரன்களே பெரிய விஷயம் எனும்போது 398 ரன்கள் அடித்து உலக சாதனைப் படைத்தது இலங்கை. அரவிந்த டி சில்வா மட்டுமே 14 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 145 ரன்கள் அடித்திருந்தார். இலங்கையை எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். ஆனால், அப்போதும் இந்திய ரசிகர்களும் சரி, மீடியாக்களும் சரி இலங்கையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ``கண்டி, ரொம்ப சின்ன ஸ்டேடியம். அதான் 400 ரன் அடிச்சிட்டாங்க'' என்கிற ரைட்அப்களையே படிக்க முடிந்தது.

அடுத்ததுதான் இந்திய கிரிக்கெட் காலம் முழுக்க மறக்க முடியாத அந்தச் சம்பவத்தை கொல்கத்தாவில் நிகழ்த்திக்காட்டியது இலங்கை. முதல் அரையிறுதிப்போட்டியில் இலங்கையுடன் மோதியது இந்தியா. மார்ச் 13, 1996. அதுவொரு புதன்கிழமை. மதியம் 2.30 மணிக்கு மேட்ச். பலரும் ஸ்கூல், காலேஜ், அலுவலகம் என எல்லாவற்றுக்கும் லீவ் போட்டுவிட்டு மேட்ச் பார்க்க வீட்டுக்குள் முடங்கியிருந்தார்கள். அன்று வயிறுவலி என ஸ்கூலுக்கு லீவ்போட்ட பல லட்சம் பேரில் நானும் ஒருவன்.

REVENGE... லீக் போட்டிக்கான தோல்விக்கு இன்று இலங்கையை பழிதீர்க்கப்போகிறது இந்தியா என எல்லா செய்தித்தாள்களின் விளையாட்டுப்பக்கங்களும் ஆருடம் சொல்லின. ஏனென்றால் காலிறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது பயங்கர கூஸ் பம்ப் மொமன்ட்டுகளாக இருந்ததால் இலங்கையுடன் வெற்றி நிச்சயம் என்றே எல்லோரும் கணித்திருந்தார்கள். இந்திய கிரிக்கெட் ரசிகனாகப் படிக்கவே பரவசமாக இருந்தது. இலங்கையைப் பழிதீர்க்கப்போகும் நேரத்துக்காக ஒட்டுமொத்த இந்தியாவுமே 2.30 மணிக்காக காத்திருந்தது.

Aravinda De Silva
Aravinda De Silva
ICC

டாஸ் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே போட்டாலும் தூர்தர்ஷனில் அதைக்காட்ட மாட்டார்கள். தூர்தர்ஷனின் கவரேஜ் என்பது 2.20-க்குத்தான் தொடங்கும். முதலில் பிட்ச் ரிப்போர்ட். ``ஈடன் கார்டன் மைதானத்தில் புது பிட்சை உருவாக்கியிருக்கிறார்கள். அதில்தான் போட்டி நடக்கப்போகிறது. எப்படியிருந்தாலும் இது ஒரு பேட்டிங் பிட்சாகத்தான் இருக்கும்'' என குத்துமதிப்பாக பிட்ச் ரிப்போர்ட்டை சொல்லிமுடித்தார்கள்.

டாஸ் வென்ற அசாருதின் இலங்கையை முதலில் பேட்டிங் செய்யச்சொல்கிறார். ``லீக் போட்டியில் இலங்கை சேஸ் செய்து வென்றதால் இந்தப்போட்டியில் இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய அழைத்திருக்கிறார்... இது ஒரு ராஜதந்திரம்'' என்கிற ரேஞ்சில் இந்திய கமென்ட்டேட்டர்கள் அசாருதினின் முடிவை சிலாகித்துக்கொண்டிருந்தார்கள். கமென்டேட்டர்களின் சிலாகிப்புகள் தொடரும் வண்ணம் ஶ்ரீநாத்தின் முதல் ஓவரிலேயே கலுவித்தரானா டக் அவுட், ஜெயசூர்யா 1 ரன்னில் அவுட். ஒவ்வொரு வீட்டுக்குள் இருந்தும் வந்த கைத்தட்டல் சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்தது. ஶ்ரீநாத்தின் இன்னொரு ஓவரில் குருசிங்கேவும் 1 ரன்னில் அவுட் ஆக, ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒரே நேரத்தில் ஆர்ப்பரிப்பதுபோல் ஒரு ஃபீல்.

ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டதுபோன்ற கொண்டாட்டங்கள் கமென்ட்ரிபாக்ஸில் கேட்க ஆரம்பித்தன. இந்த உலகக்கோப்பையின் அட்டவணைப்படி உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் நடக்க வேண்டும். ஆனால், இந்தியா இறுதிப்போட்டியில் விளையாடினால் பாகிஸ்தானுக்கு போகமுடியாது எனவும், வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் பேசப்பட்டிருந்தது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் அடித்ததோடு மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீரர் அரவிந்த டி சில்வா.

இதனால் மார்ச் 17-ம் தேதி இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா - வங்கதேசத்துக்கு டிக்கெட் எடுக்கவேண்டியிருக்கும் என கமென்ட்ரிபாக்ஸில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்கவே உற்சாகமாக இருந்நது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே அந்த மகிழ்ச்சியில் மண் அள்ளிப்போட்டார் அரவிந்த டி சில்வா.

அரவிந்த டி சில்வாவின் அந்த இன்னிங்ஸை இப்போது யோசித்துப் பார்க்கும்போது `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நாகேஷ் கமல்ஹாசனிடம் சொல்லும் வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ``என்னை அடிக்கல, குத்தல... ஆனா உயிரை மட்டும் அப்படியே உருவி எடுத்துட்டடா'' என்பாரே அதுபோல இந்தியா முழுக்கவும் பரவியிருந்த அந்த சில நிமிட நேர மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக உருவி எடுத்துவிட்டார் டிசில்வா.

Aravind De Silva
Aravind De Silva
ICC

60 கோடிப் பேர் உலகம் முழுக்க அந்தப்போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஈடன் கார்டன் மைதானத்தில் மட்டும் 1 லட்சம் இந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள். மூன்றாவது ஓவருக்குள் மூன்று விக்கெட்டுகள் விழுந்துவிட்டது. கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இலங்கை அரையிறுதிப்போட்டியில் விளையாடுகிறது... என இவ்வளவு பிரஷர் இலங்கை அணியை சூழ்ந்திருக்கிறது. இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் களத்தில் நிற்கும் பேட்ஸ்மேன் என்ன மனநிலையில் பேட்டை பிடிப்பார்? மைதானத்துக்குள் எழும்பும் இந்திய ரசிகர்களின் சத்தமே பயத்தைக் கிளப்பும், பதற்றத்தைக் கூட்டும், கால்களை கிடுகிடுக்கவைக்கும். ஆனால், அரவிந்த டி சில்வாவை அந்த கொல்கத்தா கூட்டமோ, 3 விக்கெட் இழப்போ, முதல் அரையிறுதிப்போட்டி என்கிற நினைப்போ எதுவுமே ஒன்றும் செய்யவில்லை.

தரமான பவுண்டரிகளால் நிறைந்த ஒரு ஹைலைட்ஸ் ஆட்டத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது அன்றைய டிசில்வாவின் இன்னிங்ஸ். முன்பு சொன்னதுபோலவே டிசில்வா அதிரடி ஆட்டம் ஆடவில்லை. அட்டாக்கிங் ஆட்டம் ஆடினார். ஒவ்வொரு ஓவரிலும் ஒன்றிரண்டு பவுண்டரிகள் அடிப்பது பிறகு சத்தம் இல்லாமல் நிற்பது என சட்டென ஒரு பெரிய பாசிட்டிவிட்டியை இலங்கை அணிக்குள் கொண்டுவந்துவிட்டார் அரவிந்த டி சில்வா.

32 பந்துகளில் அரைசதம், 47 பந்துகளில் 66 ரன்கள். இதில் 14 பவுண்டரிகள். அதாவது பவுண்டரிகளால் மட்டுமே 56 ரன்கள். ஓடி எடுத்தது வெறும் 10 ரன்கள்தான். 15-வது ஓவரில் அவுட் ஆனார் டிசில்வா. அப்போது இலங்கையின் ஸ்கோர் 85. கிட்டத்தட்ட ஓவருக்கு 6 ரன்கள் என்கிற ரன்ரேட்டுக்கு டிசில்வா கொண்டுவந்துவிட்டதால் இலங்கையின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு கொண்டுவந்து, பின்னர் சிறப்பான பெளலிங்கால் இந்தியாவைத் தோற்கடித்தார்கள்.

1997-ம் ஆண்டு மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 1,220 ரன்கள் குவித்தார். ஒரு போட்டியில் சராசரியாக 72 ரன்கள்.

அடுத்து ஆஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டி. இதில் சென்சுரி அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று இலங்கைக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்தார் அரவிந்த டி சில்வா.

இலங்கைக்காக அவர் பல அற்புதமான இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும் அரவிந்தா டி சில்வா என்றால் அது 1996 உலகக்கோப்பைதான். ஜெயசூர்யா, ஜெயவர்தனே, சங்கக்காரா, தில்ஷான் என அடுத்தடுத்த மேட்ச் வின்னர்கள் இலங்கையில் எழுந்து வந்ததற்கான முக்கியக் காரணம் அரவிந்த டிசில்வா. ஜெயசூர்யாவின் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே டிசில்வாவின் தாக்கம் இருக்கும்.

தன்னுடைய பேட்டிங்கை திட்டிக்கொண்டே பார்த்தே ரசிகர்களையும், இன்னொருபக்கம் பாராட்டவைப்பார் அரவிந்த டி சில்வா... இதுதானே ஒரு வீரனின் வெற்றி!