Published:Updated:

IND v AFG: டாஸ் வெல்லவில்லைதான், ஆனால் ஆட்டத்தை வென்ற கோலியின் படை! அரையிறுதி கைகூடுமா?

கார்த்தி

ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை வெல்ல வேண்டும் என்கிற விநோத கால்குலேட்டர் கணக்குகள் எல்லாம் கண் முன் வந்து போக, அதைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்வோம் என முடிவு செய்தனர் ரசிகர்கள்.

இந்த உலகக் கோப்பை டி20 தொடர் இந்தியாவுக்கு எதிர்பார்த்ததைப் போல அமையவில்லை. பயிற்சிப் போட்டிகளில் எதிரணிகளை வெளுத்துத் தள்ளினாலும், புள்ளிப் பட்டியலில் வெற்றிப் படிக்கட்டில் ஏறவே ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளின் துணை தேவைப்பட்டிருக்கிறது.
IND v AFG
IND v AFG

டாஸ் வென்ற இந்திய அணி... அட சும்மா சொன்னேங்க! அது இனி வாய்ப்பில்லையோன்னு தோணுது. கடந்த 14 டாஸ்களில், கோலி தோற்கும் 13வது டாஸ் இது. ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்து போட்டிகளில் வென்றிருந்தாலும், இந்தியா முதலில் பேட் செய்து இந்தத் தொடரில் ஒரு போட்டியைக் கூட வெல்லாததால், ஆப்கான் பௌலிங் தேர்வு செய்தது. "நாங்களும் பௌலிங் பண்ணலாம்னு தான் இருந்தோம்" என்றார் கோலி. 'அதான் தெரியுமே!' என்பதுபோல் போட்டியைப் பார்க்க ஆயுத்தமாகினர் இந்திய ரசிகர்கள். எப்படியும் இந்தியா ஆப்கானிஸ்தானை வெல்ல வேண்டும். அதன் பின் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை வெல்ல வேண்டும் என்கிற விநோத கால்குலேட்டர் கணக்குகள் எல்லாம் கண் முன் வந்து போக, அதைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்வோம் என முடிவு செய்தனர் ரசிகர்கள்.

ராகுலும் ரோஹித்தும் ஓப்பனிங் இறங்கினார்கள். அஷ்ரஃப் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே நமக்கு வாகா சிக்குன அணி ஆப்கான்தான் என முடிவு செய்து கோதாவில் இறங்கினார்கள். முதலிரண்டு ஒவர்களில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ். அதற்கும் இரண்டு ஓவர்களும் ஸ்பின். பவர்பிளே இறுதியில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள். இந்தத் தொடரில் இந்தியாவின் அதிகபட்சம் இதுதான். ரோஹித் முதலில் அரைசதம் கடக்க, அடுத்து ராகுலும் ஃபாலோ ஆன் போட்டார். அதிலும் ரஷீத் கான் ஓவரில், ரோஹித் காட்டியதெல்லாம் தெறி மாஸ் ரகம். அடுத்து அடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

IND v AFG
IND v AFG

ரோஹித் அவுட்டாக ஒன் டவுனில் களமிறங்கினார் ரிஷப் பண்ட். கோலி ஹெல்மெட்டுடன் ரெடியாகக் காத்திருந்தார். ஆனால், ஏனோ போட்டி முடியும் வரை ஹெல்மெட்டை அணிந்துகொண்டு வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தார். விளையாட வரவே இல்லை. ரோஹித் சென்ற வேகத்தில் ராகுலும் கிளம்பிவிட, அடுத்து களமிறங்கினார் பாண்டியா. குல்பதின் வீசிய அந்த ஓவரில், ஒத்த கையில் அசால்ட்டாக சிக்ஸ் அடித்தார் பண்ட். அடுத்த பந்தில் லாங் ஆஃப் திசையில் இன்னொரு சிக்ஸரையும் விளாசினார் பண்ட். கடைசி ஓவரில் மட்டும் 16 ரன்கள். பாண்டியா, பண்ட் புண்ணியத்தில், கடைசி நான்கு ஓவர்களில் 65 ரன்கள் வந்திருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருபது ஓவர் முடிவில் இந்தியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. எப்படியும் வெற்றி என எல்லோருக்கும் தெரியும். ஆனால், நெட் ரன் ரேட் தேவையே! ஆப்கானிஸ்தானை 99 ரன்களுக்குள் சுருட்டினால் சிறப்பு என்கிற இலக்கோடு களமிறங்கினார்கள்.
IND v AFG
IND v AFG

ஓப்பனர்களை ஷமியும், பும்ராவும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினர். குர்பாஸும், குல்பதினும் ஷமியின் அடுத்த ஓவரில் 21 ரன்கள் விளாச, 'என்ன இந்தப் போட்டியும் போச்சா' என்கிற மரண பீதி லைட்டாக எட்டிப் பார்த்தது. பவர்பிளே இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான்.

குபாஸின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா. குல்பதீன் ஸ்வீப் ஷாட் அடிக்க முயல, அஷ்வினின் அசத்தலான பந்துவீச்சால் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அஷ்வின் தன் அடுத்த ஓவரில் நஜீபுல்லாவையும் அவுட்டாக்க 99 ரன்களுக்கு இன்னும் எவ்ளோ வேணும் என மீண்டும் கால்குலேட்டருடன் ஆயுத்தமானார்கள் ரசிகர்கள். ஆனால், அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. பும்ரா, தாகூர் இருவரின் பந்துவீச்சையும் எளிதாகச் சமாளித்து ஆடினர் ஆப்கான் வீரர்கள். எந்த ஷமியை முதல் போட்டிக்காக வசை பாடினார்களோ, அதே ஷமிதான் மீண்டும் ஆபத்பாந்தவனாக வந்தார். நபி, ரஷீத் கான் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

IND v AFG: கம் பேக் இந்தியாவா, கம் பேக் டு இந்தியாவா? அரையிறுதிக்குச் செல்ல கோலி என்ன செய்யவேண்டும்?
20 ஓவர் முடிவில் ஆப்கானால் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
IND v AFG
IND v AFG
ICC

2007 உலகக் கோப்பையில் பங்களாதேஷ், இலங்கையிடம் தோற்ற இந்தியா, பெர்முடாவை அபாரமாக வீழ்த்தும். அதிலும் 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எல்லாம் எடுப்பார்கள். பெர்முடாவோ பரிதாபமாக 156 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிடும். அந்தத் தொடரில் இந்தியா ஆரம்ப சுற்றுடன் வெளியேறிவிடும். அதற்கும் நேற்றைய போட்டிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இந்தியா அரை இறுதிக்குச் செல்லும் என நம்புவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு