Published:Updated:

கங்குலியை எச்சரித்த இங்கிலாந்து நிர்வாகம்... ஐந்தாவது டெஸ்ட் போட்டி கொரோனா பரவலால் நிறுத்திவைப்பு!

கங்குலி
கங்குலி

கொரோனா அச்சம் காரணமாக பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் திட்டமிட்டபடி ஐந்தாவது டெஸ்ட் நடக்கும் என நேற்றிறவு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது போட்டி நிறுத்திவைக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது. இதனால் ECB - BCCI உறவில் விரிசல் விழுந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா அச்சம் காரணமாக இன்னும் சற்று நேரத்தில் மான்செஸ்டரில் தொடங்குவதாக இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே இந்திய முகாமுக்குள் கொரோனா பரவியது, மான்செஸ்டர் டெஸ்ட்டை நிறுத்திவிட்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது என பல விவகாரங்கள் தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட மூவருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று பரவியதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரப்பிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் அனைவரையும் நேற்று தங்கள் ஹோட்டல் அறைகளுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லி உத்தரவிடப்பட்டது. இதனால் இன்றைய போட்டி நடக்குமா, நடக்காதா என்கிற சந்தேகம் நேற்று எழுந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல்-க்கு முக்கியத்துவம் கொடுத்த பிசிசிஐ!

இன்னும் எட்டு நாட்களில் ஐபிஎல் போட்டிகள் துபாயில் ஆரம்பிக்கும் நிலையில் மான்செஸ்ட்டர் போட்டி மூலம் இந்திய வீரர்கள் பலருக்கும் கொரோனா பரவினால் அது ஐபிஎல் போட்டிகளை பாதிக்கும் என பிசிசிஐ தங்களது கவலையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான தொடரைவிட ஐபிஎல்-க்கு பிசிசிஐ நிர்வாகம் முக்கியத்துவம் தருவது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ‘’ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லையென்றால் எங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பான 304 கோடி ரூபாயை பிசிசிஐ தரவேண்டும். அத்தோடு ஐந்தாவது டெஸ்ட்டில் இருந்து வாக் ஓவர் கொடுத்ததாக அறிவித்து தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததாக ஏற்றுக்கொள்ளவேண்டும்’’ என சொல்லியிருக்கிறது ECB (இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்).

அத்தோடு பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் ‘’நாங்கள் பலமுறை எச்சரித்தும் இந்திய அணியினர் கோவிட் விதிகளை மதிக்கவில்லை. ஓவல் டெஸ்ட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். அதன்மூலம்தான் இந்திய அணி முகாமுக்குள் கொரோனா பரவியது'’ என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

கோலி - ஜோ ரூட்
கோலி - ஜோ ரூட்
Jon Super

வாக்ஓவர் கொடுக்கவேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சொல்கிறது என்கிற தகவல் இந்திய கேப்டன் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இருவருமே தொடரை விட்டுக்கொடுக்க முடியாது என சொல்ல, பிசிசிஐ-யும் வீரர்களின் முடிவை ஏற்றுக்கொண்டிருகிறது. இதற்கிடையே நள்ளிரவில் இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என டெஸ்ட் முடிவுகள் வந்ததாகச் சொல்லப்பட திட்டமிட்டபடி போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது சோதனையில் வீரர்கள் சிலருக்கும் கொரோனா பரவல் இருக்கலாம் என சந்தேகம் எழும்ப இப்போது டெஸ்ட் போட்டி நிறுத்துவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு