Published:Updated:

`ஐபிஎல் தொடர் ரத்தாகி, டி20 உலகக் கோப்பை நடைபெற்றால்..!’ -வாய்ப்பை இழக்கும் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் - டி20 உலகக்கோப்பை
ஐபிஎல் - டி20 உலகக்கோப்பை

ஒருவேளை ஐபிஎல் போட்டி நடைபெறாமல், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மட்டுமே நடைபெறும் என்றால், சில முக்கிய வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிடலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பிட்ட துறை என்று இல்லாமல், அனைத்து துறைகளும் கடுமையான சூழலைச் சந்தித்துவருகின்றன.

வழக்கமாக, கோடைகாலத்தில் இந்தியாவில் விளையாட்டுகள் களைகட்டும். குறிப்பாக ஐபிஎல். கடந்த 12 வருடங்களாக இந்தியாவில் ஐபிஎல் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகப் பெரியது. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னர் அதற்கு எதிர்ப்புகள் இருக்கும். தடை செய்ய வழக்குகூட பதியப்படும். ஆனால், தொடர் தொடங்கிய பின்னர் `கொண்டாட்டம்’ மட்டும்தான் எஞ்சியிருக்கும்.

தோனி
தோனி

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் பலரது மனதிலும் இருந்த ஒற்றைக் கேள்வி, `இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா?’ என்பதுதான். ஒருபுறம் கொரோனா குறித்த தகவல்கள் பரவ, மறுபுறம் சென்னை சேப்பாக்கத்தில் தோனி, ரெய்னா என `யெல்லோ படை’ வெறித்தன பயிற்சியில் இறங்கியது.

இதற்கிடையேதான், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் 15 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனாவால் ஐபிஎல் போட்டிகள் தடை செய்யப்பட்டால் யாருக்கெல்லாம் வருமான இழப்பு! #corona #IPL

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது சோகத்தைத் தந்தாலும், பலதரப்பட்ட மக்களாலும் பாராட்டப்பட்ட முடிவாக இது பார்க்கப்பட்டது. காரணம், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அங்கு வார இறுதி நாள்களில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் கால்பந்து போட்டிகளும் ஒரு காரணம். ஆயிரக்கணக்கான மக்கள் மைதானங்களில்கூட, கொரோனா எளிதாகப் பரவியது. தற்போது, அனைத்துவிதமான விளையாட்டுப் போட்டிகளும் தடை செய்யப்பட்டாலும், இது தாமதமான முடிவாகத்தான் பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவில் ஐஎஸ்எல் இறுதி ஆட்டம் ஆளில்லா மைதானத்தில் நடத்தப்பட்டது. தற்போது, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரை அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

கொரோனா
கொரோனா
தோனியின் இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டால், அவர் நிச்சயம் உலகக் கோப்பை அணியில் இடம் பிடிப்பார்.
ரவி சாஸ்திரி

இந்நிலையில், ஏப்ரல் மாதம் 15 -க்குப் பிறகும் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு சாதகமான சூழல் இல்லை என்றே கூறப்படுகிறது. பிசிசிஐ தரப்பில் சிலர், ஏப்ரல் மாதத்தில் இந்த வைரஸ் சிக்கல் முடிவுக்கு வந்தாலும் மே மாதத்தில் சிறிய அளவில் தொடரை நடத்தும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனினும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரத்துசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. ஒருவேளை ஐபிஎல் போட்டி நடைபெறாமல், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மட்டுமே நடைபெறும் என்றால், சில முக்கிய வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிடலாம்... அப்படியான சில வீரர்களை இங்கே பார்க்கலாம்.

சஞ்சு சாம்சன்:

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சாம்சனுக்கு இடம் கிடைத்தும், அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மனதில் வைத்தே நியூஸிலாந்து மைதானத்தில் டி20 தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, அவருக்கான வாய்ப்பு என்பது மிக குறைவாக உள்ளது. ஐபிஎல் தொடரும் நடைபெறாமல் போனால், சாம்சன் நிலை பரிதாபம்தான். பன்ட் இருப்பதால் விக்கெட் கீப்பர் என்ற அளவிலும் இவருக்கான வாய்ப்பு என்பது குறைவுதான். இந்திய அணியில் தற்போது ராகுலும் கீப்பிங் பணியைச் செய்வதால், ஒருவேளை பன்ட் சொதப்பினால், அவரும் அணியில் இருந்து கழற்றிவிடப்பட வாய்ப்புகள் உண்டு. எனினும், டி20 என்பதால் பெரும்பாலும் பன்ட் -க்கு சிக்கல் இருக்காது. ஆனால், சாம்சனின் நிலை கொஞ்சம் கஷ்டம்தான்!

க்ருணல் பாண்ட்யா:

க்ருணல் பாண்ட்யா:
க்ருணல் பாண்ட்யா:
Twitter

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, பல போட்டிகளில் தனது பந்துவீச்சு மூலமாகவும் பேட்டிங் மூலமாகவும், ஃபீல்டிங் மூலமாகவும் வெற்றியை தேடித்தந்த ஆல்-ரவுண்டர். இந்திய டி20 அணியில் அவ்வப்போது இடம் பிடித்தாலும், இவரால் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு, இவரது ஸ்பாட்டுக்கு போட்டியாக இருக்கும் ஜடேஜாவின் சமீபத்திய செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதால், க்ருணல் பாண்ட்யாவுக்கு ஐபிஎல் தொடர் மிஸ்ஸானால், அது பெருத்த ஏமாற்றம்தான். மாறாக ஐபிஎல் நடைபெற்றால், தன் முழுத் திறமையையும் வெளிக்காட்டி உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க முயற்சிகள் செய்வார். இவரது சகோதரரான ஹர்திக், காயம் காரணமாக நீண்டகாலமாக விளையாடாமல் இருக்கிறார். அனால், ஹர்திக் தனது உடல் தகுதியை நிரூபித்தாலே அணியில் இடம் பிடித்துவிடுவார் என்பதால், ஐபிஎல் ரத்தானாலும் அது அவருக்கு ஒரு பொருட்டாக இருக்காது.

தோனி..!

தோனி
தோனி

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், கடைசியாக தோனியைக் களத்தில் பார்த்தது. அதன் பின்னர் அவரைப் பார்க்காததால், ரசிகர்கள் சி.எஸ்.கே-யின் பயிற்சிகளுக்கே வந்து குவிந்தனர். தோனியும் சில சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, `தோனியின் இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டால், அவர் நிச்சயம் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பார்’ என்றார்.

இந்த ஐபிஎல் தொடரில், தோனி தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி, நிச்சயம் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஐபிஎல் தொடர் நடைபெற்றாலும் தோனி இந்திய அணிக்கு வருவது அத்தனை எளிதான காரியம் கிடையாது. அவர், இளம் வீரர்களுடன் போட்டியிட வேண்டும். ஆனால், ஐபிஎல் தொடர் நடைபெறாமல் போனால், சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!

ஷ்ரதுல் தாக்கூர்..!
ஷ்ரதுல் தாக்கூர்..!
Twitter

ஷ்ரதுல் தாக்கூர்..!

இந்திய அணியில் தொடர்ச்சியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வாக, ஐபிஎல் இவருக்கு முக்கியம். காரணம், உலகக் கோப்பை தொடருக்கு கட்டாயம் பெஸ்ட் அணி தேர்வாக வேண்டும். அதற்கு போதுமான அளவில் ஷ்ரதுல் இன்னும் பர்ஃபாம் செய்யவில்லை. குறிப்பாக, ஷ்ரதுல் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இறுதிக் கட்டத்தில் பவுண்டரிகள் விளாச முடியும் என்பது இவரது ப்ளஸ்ஸாக இருந்தாலும், பந்துவீச்சில் லைன் அண்டு லெங்த்தில் தொடர்ச்சியாக சொதப்புகிறார். இதனால் ஐபிஎல் இவருக்கு மிக முக்கியம். ஷமி, புவனேஷ்வர், பும்ரா ஆகிய அனுபவ வீரர்கள் இருக்கின்றனர். தவிர, ஹர்திக் அணிக்குத் திரும்பும் நிலையில், இவரது நிலை உலகக் கோப்பையில் கஷ்டம்தான்!

எந்த நிலையிலும் அதிரடியாக ஆடும் திறமை ப்ரித்வி ஷாவுக்கு இருக்கு!
விராட் கோலி

ப்ரித்வி ஷா!

ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா

`எந்த நிலையிலும் அதிரடியாக ஆடும் திறமை ப்ரித்வி ஷாவுக்கு இருக்கு’- இப்படிச் சொன்னவர், இந்திய அணியின் கேப்டன் கோலி. சிக்கல் என்னவென்றால், எப்போது அவர் நின்று ஆடுவார் எனத் தெரியாது. அச்சமின்றி அதிரடியாக ஆடுவது ப்ளஸ். ஆனால், மோசமான ஷாட்டுகளால் விரைவில் ஆட்டமிழந்துவிடுவதால் இன்னும் தேர்வுக் குழுவினரின் நம்பிக்கைக்குரிய வீரராக அவர் இல்லை. இந்த ஐபிஎல் தொடரில் தவறுகளைத் திருத்திக்கொண்டு சிறப்பாக விளையாடும் பட்சத்தில், ஓப்பனிங் இடத்துக்கு மாற்று வீரராக வாய்ப்பு இருக்கும். அதனால் ஐபிஎல் தொடரை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

ஐபிஎல் தொடர் ஒருவேளை ரத்து செய்யப்பட்டால், இதுபோன்று உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காமல் மிஸ் பண்ணும் வீரர்கள் வேறு யார் யார்... உங்கள் கருத்துகளை காரணத்துடன் கமென்ட்டில் பதிவுசெய்யுங்கள் மக்களே..!

அடுத்த கட்டுரைக்கு