Published:Updated:

ஒருபுறம் ஃபெடரர்... மறுபுறம் நியூசிலாந்து..ஃபைனல்ஸ்னா இப்படி இருக்கணும்!

கார்த்திகா ராஜேந்திரன்

வெற்றிக்கதவைத் தொட்டு திறக்காமல் வெளியேறினர் பெடரரும், நியூசிலாந்து வீரர்களும். கிரிக்கெட், டென்னிஸ் வரலாற்றில் அதிக நேரம் நீடித்த இறுதிப்போட்டியில் விளையாடி தோல்வியைச் சந்திப்பதுதான் எவ்வளவு வலிமிகுந்தது!

Cricket Newzealand - Roger Federer
Cricket Newzealand - Roger Federer

ஜூலை 14 2019! வழக்கமான ஒரு விடுமுறை நாளாக கடந்துபோக முடியாமல் பல நினைவுகளை விட்டுச் சென்றுள்ளது இந்த ஞாயிற்றுக்கிழமை. டி.வியில் இங்கிலாந்து - நியூசிலாந்து, ஸ்மார்ட்போன் ஹாட் ஸ்டாரில் ஃபெடரர் - ஜோகோவிச்! இரண்டு இறுதி போட்டிகளின் முடிவும், சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கலாம், சிலருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். ஆனால், வெறுப்பை மட்டும் தந்திருக்க வாய்ப்பில்லை. கிரிக்கெட், டென்னிஸின் மீதான காதலை அதிகரித்தன இந்த இரண்டு போட்டிகளும்.

அரை இறுதியில் இந்தியாவை வெளியேற்றினாலும், பெரும்பாலான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு நியூசிலாந்து பக்கமே இருந்தது. 2019 விம்பிள்டன் அரை இறுதியில் நடாலை வென்ற ஃபெடரர், இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

முடிவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில்தான் போட்டியைப் பார்க்கத் தொடங்கினோம். ஆனால், ஃபெடரரும் சரி, நியூஸிலாந்தும் சரி கடைசி நிமிடம் வரை வெற்றிக்கு அருகில் சென்று தோற்றது, இரு தரப்பு ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

லார்ட்ஸ் மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற புள்ளிவிவரங்களை ஸ்க்ரால் செய்தபடி டாஸை கவனித்தால், டாஸ் ஜெயித்தது என்னவோ நியூசிலாந்துதான். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்தின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் குப்தில் வழக்கம்போல சொதப்பல். வோக்ஸ் பந்துவீச்சில் அவர் வெளியேறியதும், வில்லியம்சன் என்ட்ரியானார். இன்றைக்கும் நியூசிலாந்தின் பேட்டிங்கை கரை சேர்க்கப்போவது கேப்டன்தான் என கிவி ரசிகர்கள் நம்பியிருக்க, 30 ரன்களுக்கு மேல் வில்லியம்சனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நிக்கோல்ஸ், லாதமின் நிதானமான ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. முதல் இன்னிங்ஸ் முடியும் நேரத்தில் விம்பிள்டன் தொடங்கியது.

Need to watch all the three?! Then, this is the only way
Need to watch all the three?! Then, this is the only way
Chittizen, Twitter

2015 விம்பிள்டன் இறுதிப்போட்டிக்குப் பிறகு, ஃபெடரர் - ஜோகோவிச் சந்திக்கும் விம்பிள்டன் இறுதிப்போட்டி இது. 2015-ல் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியனான ஜோகோவிச், 2018-ம் ஆண்டு ஆண்டர்சனை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார். இந்த ஆண்டும் ஜோகோவிச்சின் ஆதிக்கம்தான் என்று கணித்தபோது, கடைசி டை - பிரேக்கர் வரை ஃபெடரரிடம் இருந்த பிடிப்பு வேற லெவல்.

முதல் செட்டை 7-6 (5) ஜோகோவிச் கைப்பற்ற அடுத்த செட்டிலேயே அதிரடி கம்-பேக் 1-6 கொடுத்தார் ஃபெடரர். இரு வீரர்களும் தலா ஒரு செட் வென்றுவிட்டனர். அதுவும் இரண்டாவது செட்டை ஃபெடரர் எளிதில் வென்றதைப் பார்த்தால், ஃபெடரருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கணக்குப்போட்டுக்கொண்டே கொஞ்சம் கிரிக்கெட் பக்கம் திரும்பினேன்.

ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பட்லர், மோர்கன், ஸ்டோக்ஸ்..! இந்த பேட்டிங் ஆர்டரை நினைத்தாலே வெற்றி இலக்கை இங்கிலாந்து எளிதில் கடந்துவிடும் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால், எதிரணி குறித்த பயமெல்லாம் நியூசிலாந்துக்கு இல்லை. போல்ட், ஃபெர்குசன், ஹென்றி இருக்கும் பெளலிங் யூனிட்டை நம்பி எவ்வளவு வேண்டுமானாலும் பந்தயம் கட்டலாம் என்பது கடந்தகாலம் சொல்லும் கதை. அதை சாத்தியப்படுத்தியும் இருக்கிறது. 23-வது ஓவர் முடிவில், இங்கிலாந்து 84/4. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளியேற, நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. ஆனால், களத்தில் இருப்பது பட்லர், ஸ்டோக்ஸ். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய இரண்டு பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இங்கிலாந்து மனம் தளரவில்லை.

Jos Buttler - Ben Stokes
Jos Buttler - Ben Stokes

110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பட்லர் - ஸ்டோக்ஸ் கூட்டணி வெற்றிக்குப் பக்கத்தில் இங்கிலாந்தை இழுத்துச் சென்றது. கடைசி 5 ஓவர்களில், 45 ரன்கள் தேவை. ஆட்டம் போகிற போக்கை பார்த்தால் கடைசி பந்து வரை பரபரப்பு இருக்கும் என்பது புரிந்தது. சரி, கிரிக்கெட்தான் இப்படி என்றால், விம்பிள்டன் இறுதிப்போட்டியோ பதற்றத்தின் உச்சத்தை எட்டி இருந்தது. முதல் இரண்டு செட்டுகளில் ஆளுக்கு ஒன்று வென்றதை தொடர்ந்து, அடுத்த இரண்டு செட்களிலும் அதே நிலை. 7-6(4), 4-6 என்ற கணக்கில் போட்டி நகர, ஐந்தாவது செட்டில் மோத ஸ்லீவ்வை சுருட்டித் தயாரானார்கள் ஃபெடரர் - ஜோகோவிச்!

Wimbledon 2019
Wimbledon 2019

ரோஜர் ஃபெடரர் வின்னிங் சர்வ் ஆடும்போதெல்லாம், ஜோகோவிச் அதை முறியடித்தார். இரு வீரர்களும் மாறி மாறிப் புள்ளிகளை தனதாக்கிக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில், இரு வீரர்களுக்கும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பகிர்ந்தளித்துவிட்டால் என்ன என்றுகூட சிலருக்குத் தோன்றியிருக்கும். கடைசி செட்டில் நடந்த டை-ப்ரேக்கர் ரசிகர்களின் இதயத்தை ஏகப்பட்ட முறை ப்ரேக் செய்தது. 4 மணி நேரம் 57 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், ஐந்தாவது செட் முடிவுக்கு வரும்போது ஜோகோவிச் கோப்பையை உச்சிமுகர்ந்து முத்தமிட்டுக்கொண்டிருந்தார்.

இப்போது மீண்டும் கிரிக்கெட்டின் முறை! வெற்றி இலக்கை இங்கிலாந்து கிட்டத்தட்ட நெருங்கியிருந்த அந்த வேளையில் சூப்பராகப் பந்துவீசி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது நியூசிலாந்து. ஃபெர்குசன் பந்துவீச்சில் பட்லர், வோக்ஸ் வெளியேற, நீஷம் பந்து ஆர்ச்சர், பிளங்கெட் பெவிலியன் திரும்பினர். ஸ்டோக்ஸ் களத்தில் நிற்கும் வரை ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் போகலாம். அதுதான் நடந்தது கடைசி ஓவரில். 6 பந்துகளில் 15 ரன்கள் தேவை.

ஸ்ட்ரைக்கர் எண்டில் ஸ்டோக்ஸ் நிற்க, போல்ட் வீசிய முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதுமில்லை. அடுத்த பந்து சிக்ஸ். ஓவரின் நான்காவது பந்தும் சிக்ஸ்! கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சிக்ஸை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். லாங் -ஆஃப் பக்கம் பந்தை தட்டிய ஸ்டோக்ஸ், இரண்டாவது ரன் எடுக்க மீண்டும் ஸ்ட்ரைக்கிங் எண்டை நோக்கி ஓடினார். பவுண்டரி லைனில் பந்தைத் தடுத்த குப்தில் த்ரோ செய்த போது, ஸ்டோக்ஸின் பேட்டைத் தொட்டு ஓவர்த்ரோ கணக்கில் பந்து பவுண்டரிக்கு ஓடியது.

Cricket Newzealand
Cricket Newzealand

ஆட்டத்தையே மாற்றிய அந்தப் பந்துக்குப் பிறகும் வில்லியம்சனிடம் இருந்து கோபமான, காட்டமான ரியாக்‌ஷன்கள் வெளிப்படவில்லை. அதுதான் கேன் வில்லியம்சனின் ஸ்பெஷல்! 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை. போல்ட் யார்க்கர் வீசுகிறார். ரன் எடுக்க ஓடி, ரன் அவுட்டாகினர் அடில் ரஷுதும், மார்க் வுட்டும்! சூப்பர் ஓவரில் வந்து நின்றது இந்த உலகக் கோப்பை.

2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சாம்பியன்ஷிப்பை நழுவவிட்டது நியூசிலாந்து. மீண்டும் ஓர் இறுதிப்போட்டி வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அந்த அணி, சூப்பர் ஓவரின் கடைசி பந்து வரை ஆட்டத்தை விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால், அதுவும் டிரா ஆக, ஐ.சி.சி வகுத்துள்ள பவுண்டரிகள் கணக்குப்படி இங்கிலாந்து போட்டியை வென்றது.

ஒருபுறம் ஃபெடரர்... மறுபுறம் நியூசிலாந்து..ஃபைனல்ஸ்னா இப்படி இருக்கணும்!

லீக் சுற்றில் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகளை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குச் சென்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள், இப்படி ஒரு ஆட்டத்தை பல கோடி நெஞ்சங்களுக்குப் பரிசளித்ததன் மூலம் அவர்களின் இதயங்களையும் சேர்த்தே வென்றுள்ளன.

One-sided ஆக இல்லாத இறுதிப்போட்டிகள்தான் எவ்வளவு அழகு. ஒரு புள்ளி, ஒரு ரன் வித்தியாசத்தில் எல்லாம் உலகக் கோப்பையை, சாம்பியன்பட்டத்தை வெல்வது சாதனை என்றால், அதே நூலிழை வித்தியாசத்தில் கோப்பையை நழுவவிடும் சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை!

இந்த இரண்டு போட்டிகளும் உணர்த்தியது இதுதான், 'ஃபைனல்ஸ்னா இப்படி இருக்கணும்!'