Published:Updated:

CWC 2022: துணிவே துணை; அணியே பிரதானம்... ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் சக்சஸ் சீக்ரெட்!

Australia ( ICC )

90களின் ஆஸ்திரேலிய ஆண்கள் அணிக்காவது சில அணிகள் கொஞ்சம் போட்டியளித்தன. ஆனால், இந்தப் பெண்கள் அணிக்கு ஒரு போட்டி என்பதே பெரிதாக இல்லை. மற்ற அணிகள் அண்ணாந்து பார்க்கும் ஒரு உயர்மட்ட தளத்தில் நின்று அசத்தி வருகின்றனர்.

CWC 2022: துணிவே துணை; அணியே பிரதானம்... ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் சக்சஸ் சீக்ரெட்!

90களின் ஆஸ்திரேலிய ஆண்கள் அணிக்காவது சில அணிகள் கொஞ்சம் போட்டியளித்தன. ஆனால், இந்தப் பெண்கள் அணிக்கு ஒரு போட்டி என்பதே பெரிதாக இல்லை. மற்ற அணிகள் அண்ணாந்து பார்க்கும் ஒரு உயர்மட்ட தளத்தில் நின்று அசத்தி வருகின்றனர்.

Published:Updated:
Australia ( ICC )
பெண்கள் உலகக்கோப்பை தொடரில் மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 7வது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. நடந்திருப்பதே 12 உலகக்கோப்பை தொடர்கள்தான். அதில் 7 தொடர்களை ஆஸ்திரேலியா மட்டுமே வென்றிருக்கிறது.

இதுமட்டுமல்ல 2018 மற்றும் 2020 டி20 உலகக்கோப்பைகளையும் ஆஸ்திரேலியாவே வென்றிருந்தது. ஆக, நான்காண்டுகளில் மட்டும் மூன்று உலகக்கோப்பைகள். பெண்கள் கிரிக்கெட்டின் ராணியாக யாராலும் வீழ்த்த முடியாத ஓர் உச்சபட்ச இடத்தில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி அமர்ந்திருக்கிறது. அந்த அணி இவ்வளவு ஆதிக்கம் செலுத்துவதற்கான காரணம் என்ன?

1987-ல் ஆஸ்திரேலிய ஆண்கள் அணி முதன்முதலாக உலகக்கோப்பையை வென்ற பிறகு கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. அதுவரை உயரே பறந்து கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகளின் கொடி கீழிறங்கி ஆஸ்திரேலிய கொடி மேலேறியது. 90களில் தொடங்கிய இந்த ஆதிக்கம் போகப் போக கூடிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் ஹாட்ரிக் உலகக்கோப்பைகளை வெல்லும் அளவுக்கு ஆஸ்திரேலிய அணி தனிராஜ்ஜியம் நடத்தியது. ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் இரண்டிலுமே அவர்களை அடிக்க ஆளே இல்லை. ரெக்கார்டுக்கு மேல் ரெக்கார்டுகள். வெற்றிக்கு மேல் வெற்றிகள். கிட்டத்தட்ட அந்த ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் காலத்து ஆஸ்திரேலிய அணிக்கு ஒத்த ஆதிக்கத்துடனேயே இப்போது ஆஸ்திரேலிய பெண்கள் அணியும் பயணித்து வருகிறது.

Australia
Australia
ICC
அந்த ஆண்கள் ஆஸ்திரேலிய அணிக்காவது சில அணிகள் கொஞ்சம் போட்டியளித்தன. ஆனால், இந்த பெண்கள் அணிக்கு ஒரு போட்டி என்பதே பெரிதாக இல்லை. மற்ற அணிகள் அண்ணாந்து பார்க்கும் ஒரு உயர்மட்ட தளத்தில் நின்று அசத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய பெண்கள் அணி இதற்கு முன்பே உலகக்கோப்பைகளை வென்றிருந்தாலும், இந்த 7வது உலகக்கோப்பை வெற்றி கொஞ்சம் ஸ்பெஷலானது. ஏனெனில், இது சாம்பலிலிருந்து மீண்டெழுந்து கைப்பற்றியிருக்கும் வெற்றி. 2016 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் ஆஸ்திரேலிய பெண்கள் அணி தோற்று உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 2017 ஓடிஐ உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஹர்மன்ப்ரீத் கவுர் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மீண்டும் ஒரு உலகக்கோப்பையைத் தவறவிட்டது. அந்தத் தோல்விகள்தான் நியூசிலாந்தில் உலகக்கோப்பையை கையில் ஏந்தியிருக்கும் இந்த அணியின் முழுமையான ஆதிக்க உணர்வை வெளிக்கொண்டு வந்தது.

அந்த 2017 உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு அணியின் பயிற்சியாளர் மேத்யூ மாட் வீராங்கனைகளுக்கு சில கட்டளைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

அஞ்சி அஞ்சி தற்காப்பாக ஆடும் ஆட்டத்தை இனி முழுமையாக கைவிட வேண்டும். எந்த நேரத்திலும் துணிச்சலாக ரிஸ்க் எடுத்து ஆட வேண்டும் என்பது முதல் கட்டளை.

தனிப்பட்ட எந்த வீராங்கனைகளையும் அணி நம்பியிருக்கக்கூடாது. மேலும், தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு அணியின் நலனுக்காக அணிக்கு எது தேவையோ அதை மட்டும்தான் செய்ய வேண்டும். அணிதான் இங்கே பிரதானம். இது இரண்டாவது கட்டளை. சரியான புரிதலுடனும் நம்பகத்தன்மையுடனும் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் மேம்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இது மூன்றாவது கட்டளை. ஹர்மன்ப்ரீத் கொடுத்த ஷாக்கிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியின் வேதவாக்காக இவை மட்டுமே இருந்தன.

துணிச்சலாகவும் அதிரடியாகவும் ஆடக்கூடிய அலிஷா ஹீலி போன்ற பேட்டர்கள் மிடில் ஆர்டரிலிருந்து டாப் ஆர்டருக்கு ப்ரமோட் செய்யப்பட்டனர். இந்த சிஸ்டத்திற்குள் செட் ஆகமாட்டார்கள் எனத் தெரிந்த வீராங்கனைகள் ஒதுக்கப்பட்டனர். அணியின் நலன் மட்டுமே பிரதானம் என்பது கறாராகப் பின்பற்றப்பட்டது. ஆஸ்திரேலியா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பெண்கள் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் எலிஸ் பெர்ரி சமீபத்தில் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டதே இதற்கான சமீபத்திய உதாரணம்.

Australia
Australia
ICC
டி20 போட்டிகளில் கீழ் வரிசையில் ஆடுபவர்கள் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியாக வேண்டும். பெர்ரி டாப் ஆர்டரில் ஆட வாய்ப்பில்லை எனும் போது அவரை கீழ் வரிசையில் ஆட வைப்பதையெல்லாம் பற்றி யோசிக்கவே இல்லை.
மேத்யூ மாட்

என மேத்யூ மாட் நேருக்கு நேராகப் பதில் சொன்னார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி இப்படித்தான் செயல்பட்டது. இந்த அணுகுமுறைதான் ஆஸ்திரேலிய அணி விரும்பிய ரிசல்ட்களையும் கொடுத்தது. 2017 அந்த அரையிறுதி தோல்விக்குப் பிறகு இதுவரை 43 ஓடிஐ போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆடியிருக்கிறது. இதில், 40 போட்டிகளை வென்றிருக்கிறது.

குறிப்பாக, தொடர்ந்து 26 போட்டிகளை வென்று எந்த அணியும் செய்திடாத சாதனையைச் செய்திருந்தது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியே 21 ஓடிஐ போட்டிகளில்தான் தொடர்ந்து வென்றிருக்கிறது.

அவர்களின் பெண்கள் அணி அதையும் தாண்டி சாதித்தது. இதனால்தான் இந்த ஆஸ்திரேலிய பெண்கள் அணியை அந்த காலத்து ஆஸ்திரேலிய அணியோடு ஒப்பிட்டு பேசும் வழக்கமும் தொடங்கியது.

27வது போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் வெற்றிப்பயணத்தை முடித்துவைத்தது. ஆனால், அதன்பிறகு மீண்டும் முதலிலிருந்து கோட்டை போடுவது போல மீண்டும் வெல்ல தொடங்கியது. குறிப்பாக, இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே அத்தனை அணிகளையும் வீழ்த்தி, ஆடிய அத்தனை போட்டிகளிலும் வென்றிருந்தது. முதல் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக 300+ ஸ்கோரை எடுத்து அத்தனை அணிகளுக்குமே எச்சரிக்கையூட்டியது. 270-ஐ சுற்றிய டார்கெட்தான் பெண்கள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக சேஸ் செய்யபட்ட டார்கெட்டாக இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா அந்த ரெக்கார்டையும் இங்கே உடைத்தது. மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக இறுதிப்போட்டியில் அசாத்தியத்திலும் அசாத்தியமாக 356 ரன்களை எடுத்திருந்தது.

சஞ்சய் மஞ்சரேக்கர் இந்த உலகக்கோப்பை முழுவதற்கும் கமெண்ட்ரி பேசியிருந்தார். அவர் ஆஸ்திரேலியாவின் வெற்றியை பற்றி கூறும்போது...

Alyssa Healy
Alyssa Healy
Cricket Australia
அந்த அணி எந்த ஒரு தனிப்பட்ட வீராங்கனையையும் சார்ந்தே இல்லை. இறுதிப்போட்டியில் அலிஷா ஹீலி 170 ரன்களை அடித்திருந்தார். ஆஸ்திரேலியா 356 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், ஹீலி ரன்னே அடித்திருக்காவிடிலும் ஆஸ்திரேலியா 350 ஸ்கோரைத் தாண்டியிருக்கும். ஹீலி அடிக்காவிட்டால் லேனிங் அடித்திருப்பார். அவரும் அடிக்காவிட்டால் வேறொருவர் அடிப்பார். ஒரு அணியாகவே அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.
சஞ்சய் மஞ்சரேக்கர்

எனப் பேசியிருக்கிறார். மேத்யூ மாட் இட்ட கட்டளைகளில் இதுவும் ஒன்று. அதை இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரைக்கும் தங்களின் மிஷன் சக்சஸ் ஆகும் வரைக்கும் அந்த அணி முழுமையாகப் பின்பற்றியது. அனுபவமிக்க ஆல்ரவுண்டரான எலிஸ் பெர்ரி, கடைசியில் சில லீக் போட்டிகளிலும் அரையிறுதியிலும் ஆடியிருக்கவே இல்லை. ஆனாலும், அவரின் இல்லாமையை ஆஸ்திரேலிய அணி துளி கூட உணரவில்லை. அதே முரட்டுத்தனத்தோடு வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் டாப் - 5 இல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலிஷா ஹீலி, ஹேனஸ், லேனிங் என மூவர் இடம்பிடித்திருக்கின்றனர்.

இளம் வீராங்கனைகள் பலரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் 10-15 வருடங்களுக்கு இதே ஆதிக்கம் தொடரும் என நினைக்கிறேன்.
அலிஷா ஹீலி

என்று அலிஷா ஹீலி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.

2017 லிலிருந்து எங்கள் அணியின் குணாதிசயத்தையே மாற்றத் தொடங்கினோம். ஆட்டங்களின் மீதான அணுகுமுறை மாற தொடங்கியது. பிக்பேஷ் லீக் மற்றும் தேசிய கிரிக்கெட் லீக் ஆகியவை இந்த ப்ராசஸில் எங்களும் பெரும் உதவியாக இருந்தன. தாலியா மெஹ்ராத், டார்சி ப்ரவுன், சதர்லேண்ட் ஆகியோர் பிக்பேஷ் தொடர்களில் அதிக அழுத்தமிக்க போட்டிகளில் ஆடியிருக்கின்றனர். அவர்களின் அந்த அனுபவம் அணிக்கு பலமாக இருந்தது.
மெக் லேனிங்
Australia
Australia
ICC

என கேப்டன் மெக் லேனிங் பேசியிருக்கிறார். பெண்களுக்கான தனியான டி20 லீக்குகளைத் தொடங்க தயக்கம் காட்டிக்கொண்டிருக்கும் நாடுகள் நோட் செய்ய வேண்டிய பாய்ண்ட் இது.

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருதல் ஒரு கலை. அதைச் சரியாக செய்யும் வழக்கம் பல அணிகளுக்கும் கிரிக்கெட் போர்டுகளுக்கும் இல்லாத சூழலில் ஆஸ்திரேலிய அணி அதை முழுக்கட்டுப்பாடுடனும் ஒழுக்கத்துடனும் செய்திருக்கிறது.

தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டதால்தான் அவர்களால் துணிச்சலாக அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு நாங்கள்தான் என பேச முடிகிறது. வாழ்த்துகள் ஆஸி!