சர்வதேச அரங்கில், தரமான கிரிக்கெட் வீரராக விராட் கோலி உருவெடுத்திருப்பது நாம் அனைவரும் தெரிந்த விஷயம். அவரது பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதனைப் பட்டியல்களே அதற்குச் சான்று. இதை உலகின் பல கிரிக்கெட் வீரர்களும் ஒப்புக்கொள்வார்கள். அப்படிப்பட்ட கோலிக்கு, கூடுதல் பணம் கொடுத்தால்தான் அணியில் சேர்க்க முடியும் என ஒருவர் பணம் கேட்டிருக்கிறார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்திரியும் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் கலந்துகொண்டு பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். அணிக்குள் தேர்வாவது குறித்து விராட் கோலி பேசுகையில், தனது சொந்த ஊரில் நடந்த விஷயங்களை நினைவுகூர்ந்தார்.
``எனது சொந்த மாநிலமான டெல்லியில், சில நேரங்களில் எனக்கு மோசமான அனுபவம்தான் கிடைத்தது. சிறப்பாக விளையாடினாலும், அணியில் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது சிலரது கைகளில் இருந்தது. அப்படி ஒருவர் எனது தந்தையிடம், என்னைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செலவாகும் என்றார். ஒரு நேர்மையான, மிடில் கிளாஸ் வழக்கறிஞரான எனது தந்தைக்கு, முதலில் அவர் சொன்ன கொஞ்சம் எக்ஸ்ட்ரா என்பதன் அர்த்தம் புரியவில்லை. பின்னர் புரிந்து கொண்டவர், `அவனது திறமை மூலம் அவன் தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும். நீங்கள் கேட்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எல்லாம் தர முடியாது’ என்று என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

நான் தேர்வாகவில்லை. நான் கதறி அழுதுவிட்டேன். முற்றிலுமாக உடைந்துவிட்டேன். ஆனால், அந்த ஒரு சம்பவம் எனது வாழ்க்கையில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. நான் இன்னும் சிறப்பாக விளையாடினால்தான் நேர்மையான வெற்றியாளராக இருக்க முடியும் எனக் கடினமாக முயன்றேன். என்னைப் பொறுத்தவரையில், என் தந்தை தனது செயல் மூலம் சரியான பாதையைக் காட்டினார்” என்றார்.