Published:Updated:

IND v SL: புவி வீசிய 19வது ஓவரில் என்ன பிரச்னை? இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பில்லையா?

Bhuvi & Rohit ( Bcci )

கடைசி 5 ஓவர்களில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா என மூவராலுமே ஒரு விக்கெட்டை கூட வீழ்த்திக் கொடுக்க முடியவில்லை. இந்தப் போட்டியிலும் புவி வீசிய 19வது ஓவரே கடும் சொதப்பலாக அமைந்தது.

IND v SL: புவி வீசிய 19வது ஓவரில் என்ன பிரச்னை? இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பில்லையா?

கடைசி 5 ஓவர்களில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா என மூவராலுமே ஒரு விக்கெட்டை கூட வீழ்த்திக் கொடுக்க முடியவில்லை. இந்தப் போட்டியிலும் புவி வீசிய 19வது ஓவரே கடும் சொதப்பலாக அமைந்தது.

Published:Updated:
Bhuvi & Rohit ( Bcci )
வங்கதேசத்தையும் ஆப்கானிஸ்தனையும் அடித்த அதே வேகத்தில் இந்தியாவையும் சாய்த்திருக்கிறது இலங்கை அணி. எதிர்பார்த்திடவே செய்யாத அதிர்ச்சி தோல்வியை இந்தியாவிற்குப் பரிசாக அளித்திருக்கின்றனர். இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இலங்கை அணி ஆசியக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றுவிட்டது. பலவீனமான இலங்கை அணி, இந்திய அணியை எப்படி வீழ்த்தியது?

ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் ஸ்கோரை டிஃபண்ட் செய்து வெல்வது ரொம்பவே கடினம். சேஸிங் செய்யும் அணிகளே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். கடந்த உலகக்கோப்பைத் தொடரிலேயே இதை உணர முடிந்திருக்கும். ஸ்கோரை சேஸ் செய்யும் அணிகளே தொடர்ந்து வென்றதால் போட்டியின் முடிவு ஏறக்குறைய டாஸின் போதே தெரிய வந்திருந்தது. அதே கதைதான் இப்போதும்.

Toss
Toss
Bcci
இந்த ஆசியக்கோப்பைத் தொடரில் தகுதிச்சுற்றைத் தவிர்த்து இதுவரை 9 போட்டிகள் நடந்திருக்கின்றன. இந்த 9 போட்டிகளில் 7 போட்டிகளில் ஸ்கோரை சேஸ் செய்த அணிகளே வென்றிருக்கின்றன. இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டுமே முதலில் பேட் செய்த அணிகள் வென்றிருக்கின்றன.

அதுவும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஹாங்காங்கிற்கு எதிராக ஆடிய போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, சேஸிங் செய்யும் அணிக்கே இங்கே வெற்றி வாய்ப்பு அதிகம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி டாஸைத் தோற்று முதலில் பேட் செய்தது. போட்டியை இழந்தது. இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் டாஸைத் தோற்று முதலில் பேட் செய்தது. போட்டியை இழந்தது.

இலங்கை அணி இந்த ஆண்டில் வென்றிருக்கும் அத்தனை டி20 போட்டிகளிலும் சேஸிங் மட்டுமே செய்திருக்கிறது. ஆக, முதல் பேட்டிங்கை விட சேஸிங்தான் இலங்கைக்கும் விருப்பம்.

இந்த சேஸ் ரெக்கார்டுகளையெல்லாம் வைத்து, இதனால் மட்டுமே இந்திய அணி தோற்றுப்போனது எனும் முடிவுக்கும் வந்துவிட முடியாது. இந்திய அணியின் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அத்தனையிலுமே முக்கியமான கட்டங்களில் சில குறைபாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் திணறல் நேற்றைய போட்டியிலும் தொடர்ந்திருந்தது.

இலங்கை அணியின் 21 வயதே ஆன இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்கா 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
Madhushanka
Madhushanka
ICC

பவர்ப்ளேயில் கோலிக்கு எதிராக 3 பந்துகளை வீசியிருந்தார். அற்புதமாக பந்தைத் திருப்பியவர் மூன்றாவது பந்தில் கோலியை ஸ்டம்புகள் சிதற வெளியேற்றினார். கோலி டக் அவுட்! கடைசிக்கட்டத்தில் அடித்து ஆட வேண்டிய ரிஷப் பண்ட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியைக் கட்டுக்குள் கொண்டு வந்தார் மதுஷங்கா.

கேப்டன் ரோஹித் சர்மா நிலைமையை உணர்ந்து செட்டில் ஆகி, பின்னர் வெளுத்தெடுக்கத் தொடங்கினாலும் மற்ற பேட்டர்களிடமிருந்து அவருக்கு சரியான உறுதுணை கிடைக்கவே இல்லை. சூர்யகுமார், ஹர்திக், பண்ட், தீபக் ஹூடா என அத்தனை பேரும் வரிசையாக விக்கெட்டுகளை வாரிக்கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். அணித்தேர்வும் பேட்டிங் ஆர்டருமே கூட இந்திய அணிக்கு பிரச்னையாகத்தான் இருந்தது. ரிஷப் பண்ட்டும் தீபக் ஹூடாவும் நம்பர் 6-7 இல் ஆடக்கூடியவர்களா என்பதே பெரிய கேள்விதான். ஹூடா எங்கே வேண்டுமானாலும் ஆடுவார் எனினும் அவர் மேலே ஆடுகிற போதுதான் அவரிடமிருந்து முழுமையான பெர்ஃபார்மென்ஸை அணி பெற முடியும். டி20 போட்டிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ரிஷப் பண்ட் இன்னும் தடுமாறி வருகிறார். அவர் கீழ் வரிசையில்தான் ஆடப்போகிறார் எனில் அந்த விக்கெட் கீப்பர் ஃபினிஷர் ரோலுக்கு பண்ட்டை விட தினேஷ் கார்த்திக்கே சிறப்பான தேர்வாக இருப்பார். அணித்தேர்விலும் பேட்டிங் ஆர்டரிலும் வெளிப்பட்ட சின்னச்சின்ன குழப்பங்களுமே கூட இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தன.

இலங்கை அணிக்கு 174 ரன்கள் டார்கெட். இந்திய அணியின் வலுவான பந்துவீச்சிற்கு எதிராக இலங்கை அணி சரண்டர் ஆகும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த எண்ணமெல்லாம் பவர்ப்ளேயிலேயே நொறுங்கிப்போனது.
Kushal Mendis
Kushal Mendis
ICC
முதல் 6 ஓவர்களில் நிஷாங்காவும் குஷால் மெண்டீஸூம் விக்கெட்டே விடாமல் 57 ரன்களைச் சேர்த்திருந்தனர். ஒட்டுமொத்தமாக 11.1 ஓவர்களில் 97 ரன்களை இந்தக் கூட்டணி சேர்த்துக் கொடுத்தது.

இந்த வலுவான தொடக்கம்தான் இலங்கை அணிக்கு பெரும்பலமாக அமைந்தது. முதல் விக்கெட்டாக நிஷாங்கா வீழ்ந்த பிறகு 12வது ஓவரிலிருந்து இந்திய அணியின் கையும் கொஞ்சம் ஓங்க ஆரம்பித்தது. இந்திய அணி என்பதை விட இந்திய ஸ்பின்னர்களின் கை ஓங்க ஆரம்பித்தது எனலாம். சஹாலும் அஷ்வினும் 3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை அள்ளிக்கொடுத்தனர். இவர்களால் போட்டி ஏறக்குறைய சமநிலைக்கு வந்தது. கடைசி 5 ஓவர்களில் யார் பக்கம் வேண்டுமானாலும் ஆட்டம் திரும்பலாம் எனும் சூழல். ஸ்பின்னர்களை போன்றே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசி ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தும்பட்சத்தில் இந்திய அணியே வெல்லும் வாய்ப்பு கூட இருந்தது. ஆனால், அது நடக்கவே இல்லை. கடைசி 5 ஓவர்களில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா என மூவராலுமே ஒரு விக்கெட்டை கூட வீழ்த்திக் கொடுக்க முடியவில்லை.

இந்தப் போட்டியிலும் புவி வீசிய 19வது ஓவரே கடும் சொதப்பலாக அமைந்தது.

ஷனாகாவின் லெக் சைடு பவுண்டரியின் தூரம் குறைவு என்பதால் ஒயிடு அவுட் சைடு தி ஆஃப் ஸ்டம்ப் லைனிலேயே வீச வேண்டும் என புவி முடிவு செய்திருந்தார். நல்ல முடிவுதான். ஆனால், எந்த சர்ப்ரைஸூம் இல்லாமல் இதை செயல்படுத்தியதுதான் பிரச்னையானது. 19வது ஓவரில் மூன்றாவது பந்தை வீசுகையில் தொடர்ந்து இரண்டு ஒயிடுகளை புவி வீசியிருந்தார். இரண்டுமே அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் நன்கு வெளியே வீச முயன்று ஒயிடானவை. தொடர்ந்து இரண்டு பந்துகள் இப்படியாகவே ஒயிடாக அடுத்த இரண்டு பந்துகளையும் புவி சரியாக வீசினார். அந்த இரண்டு பந்துகளையும் ஷனாகா பவுண்டரி ஆக்கினார். காரணம், புவியின் Predictability! அந்த இரண்டு ஒயிடுகளுக்குப் பிறகு வீசப்பட்ட அந்த இரண்டு பந்துகளுமே கூட அதே திட்டத்தில் ஒயிட் லைனுக்கு நெருக்கமாக வீசப்பட்டவைதான்.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்
இப்படித்தான் இங்கேதான் வீசப்போகிறேன் என்பதை அறிவித்துவிட்டு, அதற்கு முன்னோட்டமாக இரண்டு டெலிவரிகளையும் வீசி காண்பித்துவிட்டு ஷனாகாவை ஒயிடு அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் டெலிவரிக்கு முழுமையாகத் தயார்படுத்திவிட்டார் புவி.

ஆக, அந்த இரண்டு பந்துகளில் மட்டும் ஒயிடோடு சேர்த்து 10 ரன்கள் செல்ல 19வது ஓவரில் மொத்தமாக 14 ரன்கள் சென்றிருந்தது. அர்ஷ்தீப் பவுண்டரியே கொடுக்காமல் 20வது ஓவரை நன்றாக வீசிய போதும் இந்திய அணி தோற்றதற்கு புவனேஷ்வர் குமார் வீசிய அந்த 19 வது ஓவரே மிக முக்கிய காரணமாக அமைந்தது.

டெத் ஓவர்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சுத்தமாக எடுபடாமல் போனதும் ஆச்சர்யம்தான். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 12 ஓவர்களை வீசி 105 ரன்களைக் கொடுத்திருந்தனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 11.5 ஓவர்களை வீசி அதே 105 ரன்களைத்தான் கொடுத்திருந்தனர். ஆனால், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 7, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 0. டாஸ் மற்றும் சேஸிங் ரெக்கார்டு மட்டுமே இந்திய அணியின் தோல்விக்குக் காரணமில்லை என்பதற்கு கண் முன்னே நிற்கும் வலுவான சாட்சி இது.

சிறப்பாக ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்திய அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்துவிட்டது. டி20 உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்தத் தொடரில் இந்திய அணி சொதப்பியிருப்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயமே. இனி கணித லாஜிக்படி இந்தியா தகுதிபெற வாய்ப்பிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் கால்குலேட்டரே குழம்பும் அளவு கணக்குப் போட வேண்டியிருக்கும். அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் மிகக் குறைவே!

Team India
Team India
ICC
உலகக்கோப்பை அணித்தேர்வுக்கு முன்பாக இந்திய அணி சில கடினமான முடிவுகளை எடுத்தே ஆக வேண்டும் என்பதே ஆசியக்கோப்பைத் தொடர் இந்தியாவிற்கு விடுத்திருக்கும் செய்தி!