Election bannerElection banner
Published:Updated:

ஃபகர் ஸமானின் 193 ரன் சேஸிங் சென்சுரி... தென்னாப்பிரிக்க பௌலிங்கை சிதைத்த ஒன் மேன் இன்னிங்ஸ் எப்படி?

ஃபகர் ஸமான்
ஃபகர் ஸமான் ( twitter.com/ICC )

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரரான ஃபகர் ஸமான் மிரட்டல் அடி அடித்துள்ளார். 155 பந்துகளை சந்தித்த ஃபகர் ஸமான் 193 ரன்களை எடுத்தார். ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே சேஸிங்கின் போது எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

தென்னாப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தென்னாப்பிரிகாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றிருந்தது. அந்தப் போட்டியே பயங்கர விறுவிறுப்பாக இருந்தது. கடைசி பந்து வரை சென்றுதான் பாகிஸ்தான் அணி டார்கெட்டை எட்டியிருந்தது. இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டம் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்களை எடுத்தது. குவின்டன் டிகாக், பவுமா, வான்-டெர்-டஸன், மில்லர் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

ஃபகர் ஸமான்
ஃபகர் ஸமான்
twitter.com/ICC

இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்ததால் டார்கெட்டை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடே பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால், லுங்கி இங்கிடி வீசிய இரண்டாவது ஓவரிலேயே இமாம் 5 ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு, ஃபகர் ஸமானும் கேப்டன் பாபர் அசாமும் கூட்டணி போட்டனர். இவர்கள் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தனர். ஆனாலும், பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரிலேயே பாபர் அசாம் நார்க்கியா வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன்பிறகு, ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பௌலர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. கண்ணை மூடி விழிப்பதற்குள் பாகிஸ்தான் அணி 120-5 என்ற பரிதாப நிலைக்கு சென்றது.

அதிகபட்சமாக 200-க்குள் பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆகிவிடும் என எதிர்பார்க்க, ஒற்றை ஆளாக நின்று அத்தனை கணிப்புகளையும் மாற்ற தொடங்கினார் ஃபகர் ஸமான்.

நார்க்கியா, ரபாடா, ஃபெலுக்வயோ, இங்கிடி என வேகப்புயல்கள் அத்தனை பேரையும் வெளுத்தெடுக்கத் தொடங்கினார். இங்கிடி தொடர்ந்து ஷார்ட் பாலாக வீச அதை புல் ஷாட்களாக அடித்துத் தள்ளி மாஸ் காட்டினார். ரபாடா வீசிய 28-வது ஓவரில் ஸ்கொயர் லெகில் ஒரு சிக்சரை அடித்து அரைசதத்தைக் கடந்தார். இதுவரைக்கும் காண்பித்ததெல்லாம் டீசர்தான். இதன்பிறகுதான் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தையே ஓட்டிக்காண்பித்தார் ஃபகர் ஸமான். சைனாமேன் பௌலரான ஷாம்ஸி வீசிய ஓவர்களிலெல்லாம் பந்து பெரும்பாலும் ஆகாய மார்க்கமாகவே பயணித்துக் கொண்டிருந்தது. அசாத்தியமான டார்கெட் ஒருபக்கம் மலைப்பை கொடுக்க, தொடர்ந்து விக்கெட்டுகளும் விழுந்து அழுத்தத்தைக் கொடுத்தது. ஆனால், இதையெல்லாம் ஃபகர் ஸமான் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. நெட் ப்ராக்டீஸ் போல பந்துகளை அடித்து பறக்கவிட்டுக்கொண்டே இருந்தார். நார்க்கியா வீசிய பந்தை பவுண்டரியாக்கி 107 பந்துகளில் சதத்தையும் கடந்தார். இதன்பிறகு, கியரை இன்னும் அதிரடியாகக் கூட்டினார். அடுத்த 21 பந்துகளில் ஐம்பது ரன்களை சேர்த்துவிட்டார். ஷாம்ஸி வீசிய 44-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து தென்னாப்பிரிக்க அணிக்கு கொஞ்சம் தோல்வி பயத்தையே காட்டிவிட்டார்.

ஃபகர் ஸமான்
ஃபகர் ஸமான்
twitter.com/ICC

கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஃபகர் ஸமான் 192 ரன்களில் இருந்தார். பாகிஸ்தான் வெற்றிபெறாவிட்டாலும் ஃபகர் ஸமான் இரட்டை சதம் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிடி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்னுக்கு முயன்று ஃபகர் ஸமான் 193 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட்டும் சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்தது.

பந்தை லாங் ஆஃபில் தட்டிவிட்ட ஃபகர் ஸமான் இரண்டாவது ரன் ஓடும்போது அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், கீப்பரான டிகாக் பந்து வேறு திசையில் வந்துக் கொண்டிருப்பதை போல சைகை காட்ட, அதை பார்த்து ஒரு நொடியில் ஃபகர் ஸமான் ஏமாந்து ஓட்டத்திலிருந்து கவனத்தை எடுத்துவிடுவார். இந்த ஒரு நொடி தாமதம்தான் ரன் அவுட்டுக்கு காரணமாக அமைந்தது. இது குயுக்தியுடன் அரங்கேற்கப்பட்ட செயல் என விமர்சிக்கப்பட்டாலும், ''டிகாக் மீது எந்த தவறும் இல்லை. நான் தான் இன்னொரு முனையில் ராஃப் க்ரீஸுக்குள் சென்றுவிட்டாரா என்பதில் கவனம் செலுத்தி என்னுடைய விக்கெட்டை இழந்துவிட்டேன்'' என ஃபகர் ஸமான் கூறியுள்ளார்.

ஃபகர் ஸமான்
ஃபகர் ஸமான்
twitter.com/ICC

18 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்களுடன் ஃபகர் ஸமான் 193 ரன்களை எடுத்திருந்தார். சேஸிங்கின் போது எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னர் வங்கதேசத்துக்கு எதிராக சேஸிங்கின் போது வாட்சன் 185 ரன்களை எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும், ஃபகர் ஸமான் இதற்கு முன்பே ஜிம்பாப்வேக்கு எதிராக இரட்டை சதம் அடித்துள்ளார். இந்தப் போட்டியிலும் இரட்டை சதம் அடித்திருந்தால், ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டை சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஃபகர் ஸமானும் இணைந்திருப்பார்.

நார்கியா, ரபாடா, லுங்கி இங்கிடி, ஃபெலுக்வயோ என சமகால கிரிக்கெட்டின் மிக ஆபத்தான பௌலிங் யுனிட்டுக்கு எதிராக ஃபகர் ஸமான் அடித்த அடி பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்றாக ரசிகர்களால் என்றைக்கும் கொண்டாடப்படும்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு