Published:Updated:

`ஆசியாவில் டாஸ் ராசியே இல்ல...!’ - மாத்தி யோசிக்கும் டுப்ளெஸ்ஸிஸ்?

இந்திய அணியின் வெற்றிக்கு டாஸ் ஒரு முக்கிய பங்காக கூறப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டுப்ளெஸ்ஸிஸ் ஆசிய மண்ணில் தொடர்ச்சியாக டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கிறார்.

கோப்பையுடன் டுப்ளெஸ்ஸிஸ் - கோலி
கோப்பையுடன் டுப்ளெஸ்ஸிஸ் - கோலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துத் தொடரை இழந்தது. இந்தநிலையில், இறுதி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்க அணி
தென்னாப்பிரிக்க அணி

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்திய அணியின் கேப்டன் கோலியே டாஸை வென்றார். இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸிலேயே நல்ல ஸ்கோரை எட்டியது. ஆனால், அடுத்துக் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது.

இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு டாஸ் ஒரு முக்கிய பங்காகக் கூறப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டுப்ளெஸ்ஸிஸ் ஆசிய மண்ணில் தொடர்ச்சியாக டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கிறார். அவர், ஆசிய மண்ணில் கடைசியாக விளையாடிய 9 போட்டிகளிலும் தொடர்ச்சியாக டாஸை இழந்துள்ளார்.

Team India
Team India
BCCI

கடைசி ஆட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டுப்ளெஸ்ஸிஸ், ``முதலாவது இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை எட்டுவது என்பது மிக முக்கியமான விஷயம். அதை மட்டும் செய்துவிட்டால் போதும். மற்றதெல்லாம் தானாக நடக்கும்” என்றார்.

இந்தநிலையில், தனக்கு டாஸ் ராசி இல்லை என்பதால், இறுதிப் போட்டிக்கான டாஸை போட அணியில் இருக்கும் வேறு வீரரை அனுப்பும் யோசனையில் டுப்ளெஸ்ஸிஸ் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று பாசிட்டிவ் மனநிலையுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் டுப்ளெஸ்ஸிஸ். இதனால்தான் டாஸுக்கு இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம்.

கோலி
கோலி

மார்க்ராம் மற்றும் கேசவ் மகராஜ் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக கடைசிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. நாளை தொடங்கும் ஆட்டத்தில் இந்திய அணியிலும் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.