மும்பை வான்கடே மைதானத்தில் மும்பையும் ராஜஸ்தான் அணியும் நேற்று மோதிய போட்டி ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு முக்கியமான போட்டி. ஏனெனில், அதுதான் 1000வது ஐ.பி.எல் போட்டி. பரபரப்பாகக் கடைசி ஓவர் த்ரில்லராகச் சென்று அந்தப் போட்டி முடிந்தது. இப்போது விஷயம் அதுவல்ல. இத்தனை நாளாக மே 6-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் மும்பையும் சென்னையும் மோதப்போகும் போட்டிதான் ஐ.பி.எல்-இன் 1000வது போட்டி என்று பில்டப் கொடுத்து வந்தார்கள். சட்டென யூ-டர்ன் அடித்து மும்பை vs ராஜஸ்தான் போட்டியை 1000வது போட்டி என்று சொல்லி கோலாகலமாகக் கொண்டாடியும் விட்டார்கள்.

எதுதான் உண்மையில் 1000வது போட்டி? மும்பை vs சென்னை போட்டி பெறவிருந்த வரலாற்றுப் பெருமை தட்டிப் பறிக்கப்பட்டு விட்டதா? கால்குலேட்டரும் கையுமாக உட்கார்ந்து ஓர் அலசு அலசி எது 1000வது போட்டி என்கிற முடிவிற்கு வருவோம்.
எது உண்மையிலேயே 1000வது போட்டி என்பதை இதுவரை எத்தனை போட்டிகள் ஆடப்பட்டிருக்கின்றன என்பதை வைத்து எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஆக, ஒவ்வொரு சீசனிலும் எத்தனை போட்டிகள் ஆடப்பட்டிருக்கின்றன என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.

ஐ.பி.எல் 2008-இல் தொடங்கப்பட்டது அல்லவா?
ஏப்ரல் 18, 2008 இல் பெங்களூருவும் கொல்கத்தாவும் மோதிய போட்டிதான் ஐ.பி.எல் இன் முதல் போட்டி.
அந்த 2008 சீசனில் மொத்தம் 8 அணிகள்தான். அரையிறுதி ஃபார்மேட்டில்தான் போட்டிகள் நடந்திருந்தது. லீக் + அரையிறுதி, இறுதி என மொத்தம் 59 போட்டிகள் அந்த சீசனில் நடந்திருந்தது. அதற்கடுத்த 2009 சீசனிலும் இந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதே 8 அணிகள். அதே 59 போட்டிகள். 2010 சீசனில் இந்த எண்ணிக்கையில் சிறிய மாற்றம் நிகழ்கிறது. அதே 8 அணிகள்தான் ஆனால், மொத்தம் 60 போட்டிகள் நடந்திருந்தன.

காரணம், மூன்றாவது இடம் யாருக்கு என்பதை தீர்மானிக்க ஒரு போட்டியைக் கூடுதலாக நடத்தியிருந்தார்கள். அந்த ஒரு சீசனில் மட்டும்தான் இப்படி ஒரு போட்டி நடத்தப்பட்டிருக்கிறது.
2011 சீசனில் அணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கொச்சி டஸ்கர்ஸ், புனே வாரியர்ஸ் என இரண்டு புதிய அணிகள் ஆட்டத்திற்குள் வந்தன. மொத்தம் 10 அணிகள். இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இப்போது இருப்பதைப் போன்றே 74 ஆட்டங்கள் அந்த சீசனிலேயே நடத்தப்பட்டன. மேலும், அந்த சீசனில்தான் முதல் முறையாக ப்ளேஆஃப்ஸ் எனும் ஃபார்மேட் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, எல்லா சீசனிலுமே இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. 2
012 சீசனில் அணிகளின் எண்ணிக்கை 9 ஆக குறைகிறது. நிர்வாகக் காரணங்களால் கொச்சி டஸ்கர்ஸ் அணி அந்த ஒரே சீசனோடு விடைபெற்றது. 9 அணிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக 2 போட்டிகளில் ஆட வேண்டும் + ப்ளேஆஃப்ஸ் என நீண்ட இந்த சீசனில் மொத்தம் 76 போட்டிகள் ஆடப்பட்டிருக்கின்றன. 2013 சீசனிலும் இதே 76 போட்டிகள்தான்.

2014 சீசனில் மீண்டும் 8 அணிகள் எனும் அதே பழைய முறைக்கே ஐ.பி.எல் திரும்பியது. இந்த முறை ப்ளே ஆப்ஸோடு சேர்த்து மொத்தம் 60 போட்டிகள் ஆடப்பட்டன. இதே எண்ணிக்கைதான் பல சீசன்களுக்கும் நீண்டன. 2021 வரை இடைப்பட்ட 8 சீசன்களிலும் எந்த மாற்றமுமே இல்லை. சீசனுக்கு 60 போட்டிகள் என்றே ஆடப்பட்டது.
2022 இல் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என இரண்டு புதிய அணிகள் உள்ளே வரவே, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்டன. நடப்பு சீசனிலும் இதே முறையில் 74 போட்டிகள்தான் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

நடப்பு சீசனைத் தவிர்த்துவிட்டு இதற்கு முந்தைய சீசன்களில் மொத்தமாக எத்தனை போட்டிகள் நடந்திருக்கின்றன என கூட்டி பார்த்தோமானால் மொத்தம் 958 போட்டிகள் நடந்திருக்கும். ஆக, நடப்பு சீசனின் 42வது போட்டி எதுவோ அதுதான் ஐ.பி.எல் இன் 1000வது போட்டி.

42வது போட்டிதான் மும்பையும் ராஜஸ்தானும் நேற்று ஆடிய போட்டி.
ஆக, அது 1000வது போட்டி என்பதில் எந்த மாற்றமுமில்லை. எனில், சென்னை vs மும்பை போட்டி எப்படி 1000வது போட்டியாக நம்பப்பட்டு விளம்பரமும் செய்யப்பட்டது? கடந்த சீசன் வரை பதிவாகியிருக்கும் 958 போட்டிகளில் 7 போட்டிகள் ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைப்பட்டிருக்கின்றன. அடைமழை உட்பட பல தவிர்க்க முடியாத விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆக, இந்த 7 போட்டிகளைத் தவிர்த்தால் ஐ.பி.எல் இல் கடந்த சீசன் வரைக்கும் 951 போட்டிகள்தான் நடந்ததாக எடுத்துக் கொள்ளப்படும். அப்படியெனில், இந்த சீசனின் 49வது லீக் போட்டி, அதாவது சென்னையும் மும்பையும் மோதும் போட்டிதான் ஐ.பி.எல்-இன் 1000வது போட்டி.

இதனால்தான் அந்தக் குழப்பம் ஏற்பட்டது. சென்னையும் மும்பையும் மோதும் போட்டிதான் 1000வது போட்டி எனப் பெரிய பெரிய பில்டப்களும் விளம்பரங்களும் செய்யப்பட்டன. ஆனால், பிசிசிஐ மும்பை vs ராஜஸ்தான் போட்டியைத்தான் 1000வது போட்டியாக அங்கீகரித்திருக்கிறது.
மும்பையும் சென்னையும் மோதும் போட்டி எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்தான் இருக்கும். அது 1000வது போட்டியாக இருந்தால் என்ன 1007வது போட்டியாக இருந்தால் என்ன?