Published:Updated:

"இந்திய வீரர்கள் ஆதரவளித்தால் நன்றாக இருக்கும்!"- LGBTQ+ கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மனிஷ் மோடி

Exclusive: மனிஷ் மோடி

"உலகம் முழுதும் LGBTQ+ கிரிக்கெட் கிளப்புகள் இன்னும் நிறைய வரவேண்டும். சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் ஒரு LGBTQ+ கிளப் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்!" - மனிஷ் மோடி

"இந்திய வீரர்கள் ஆதரவளித்தால் நன்றாக இருக்கும்!"- LGBTQ+ கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மனிஷ் மோடி

"உலகம் முழுதும் LGBTQ+ கிரிக்கெட் கிளப்புகள் இன்னும் நிறைய வரவேண்டும். சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் ஒரு LGBTQ+ கிளப் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்!" - மனிஷ் மோடி

Published:Updated:
Exclusive: மனிஷ் மோடி
அகமதாபாத்தில் பிறந்து வளர்ந்து, சென்னை லயோலா கல்லூரியில் மேற்படிப்பை முடித்து, லண்டனில் தொடங்கப்பட்ட உலகின் முதல் LGBTQ+ கிரிக்கெட் கிளப்பின் கேப்டனாகவும் பணிபுரிந்த மனிஷ் மோடியுடனான நேர்காணல் இதோ.

அந்த LGBTQ+ கிரிக்கெட் கிளப் குறித்த சிறப்புக் கட்டுரையை இங்கே படிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரிக்கெட்டைத் தீவிரமாக எடுத்து விளையாட வேண்டும் என்று உங்களுக்கு எப்போது தோன்றியது?

"நான் முதலில் கல்லி கிரிக்கெட்தான் விளையாடிக் கொண்டிருந்தேன். நவ்ஜோட் சிங் சித்து, சவுரவ் கங்குலி போன்ற வீரர்கள் விளையாடுவதைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போதுதான் ஏன் நாமும் அதுபோல ஆகக்கூடாது என்ற யோசனை வந்தது. எனவே அகாடமி ஒன்றில் சேர்ந்து விளையாடத் தொடங்கினேன். அதன்பிறகு கிரிக்கெட் என் வாழ்வின் ஒரு அங்கமாய் மாறியது. கல்லூரி அணி, நான் பணிபுரிந்த பேங்க் ஆஃப் இந்தியா அணி எனப் பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளேன்."

LGBTQ+ கிரிக்கெட் அணி
LGBTQ+ கிரிக்கெட் அணி

சென்னை லயோலா கல்லூரியில் படித்துள்ளீர்கள். உங்கள் சென்னை வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்?

"நான் அங்கு MBA மாணவராய்ப் படித்த ஆண்டு 2003. அது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலம். ஸ்பென்சர் பிளாசாவில் ஷாப்பிங், மவுன்ட் ரோடு பஞ்சாபி தாபா உணவு ஆகியவற்றை என்னால் இன்னமும் மறக்கமுடியாது. தோசை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இன்றும் இங்கிலாந்திலுள்ள சரவணபவனுக்குச் சென்று தோசை சாப்பிடுவேன்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்பால் ஈர்ப்பாளராக உங்களை எப்போது உணர்ந்தீர்கள்?

"என்னை நான் 15 வயதில் தன்பால் ஈர்ப்பாளராக உணர்ந்தேன். ஆனால் இந்தியக் கலாசாரக் கோட்பாடுகளை அறிந்த என்னால் அதை வெளியே சொல்ல முடியவில்லை. அதனால் அதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன்."

தன்பால் ஈர்ப்பாளர் என்று மற்றவர்களிடம் சொல்ல முடியாதது எவ்வளவு கடினமாக இருந்தது? அதுமட்டுமல்லாமல், திருமணம் போன்ற விஷயங்கள் உள்ள சமூகக் கட்டமைப்பை நீங்கள் எப்படிச் சந்தித்தீர்கள்? இவற்றையெல்லாம் எப்படிக் கையாண்டீர்கள்?

"நான் நானாக இருக்க முடியாதது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்தியக் கலாசாரம் எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். பெற்றோர்களைத் திருப்திப்படுத்தி நல்ல பிள்ளை என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதே எப்போதும் நம் மனதில் இருக்கும். அப்படிச் செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் பெற்று நாம் நன்றாக இருப்போம் என்று நினைத்து வாழ்வோம். அதுபோல்தான் ஒரு கட்டத்தில் என் உணர்வுகளை விட்டுக்கொடுத்து கல்யாணம் செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டேன்."

லண்டன் செல்ல வாய்ப்பு கிடைத்தபோது அதைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன? வேலை மட்டுமா, இல்லை இந்தச் சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க அதைத் தேர்ந்தெடுத்தீர்களா?

"நான் வெளிநாடு செல்ல முக்கிய காரணம் வேலைக்காகத்தான். பிரிட்டிஷ் அரசின் வேலைத் திட்டம் ஒன்றின் மூலம் கிடைத்த வாய்ப்புதான் அது. எனக்கும் வேறு ஒரு நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை வாழ்ந்து பார்க்க ஆர்வம் இருந்தது. இன்றும் அந்த முடிவை எடுத்தது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு வந்தபின் என் மனைவியுடன் எனக்கு விவாகரத்து ஆனது. அதன்பின்தான் தன்பால் ஈர்ப்பாளர்களின் உணர்வைப் பற்றி இன்னும் அதிகமாய்ப் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த நாட்டில் என்னால் சுதந்திரமாக இருக்க முடிந்தது. பல பேர் இங்கு என்னைப் புரிந்துகொண்டு ஆதரவு தந்தனர்."

LGBTQ+ கிரிக்கெட் அணி
LGBTQ+ கிரிக்கெட் அணி

வெளிநாடு சென்ற பின்னும் கிரிக்கெட் விளையாட்டைத் தொடர்ந்தது எப்படி?

"2004-ம் ஆண்டில் இங்கிலாந்து சென்றபின் முதல் ஓராண்டு என் வேலையில் மட்டும்தான் முழுக் கவனத்தையும் செலுத்தினேன். பின்பு அங்குள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து விளையாடத் தொடங்கினேன். 2007-ம் ஆண்டில் லண்டனுக்குச் சென்ற பிறகுதான் LGBTQ+ சமூகத்திற்காகச் செயல்படும் கிரேசஸ் கிரிக்கெட் கிளப் பற்றி அறிந்தேன். அவர்களைத் தொடர்பு கொண்டபோது லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு என்னை அழைத்தார்கள். அன்று தொடங்கிய பயணம் 15 ஆண்டுகள் கழித்து இன்றுவரை தொடர்கிறது. என் வாழ்க்கையில் நான் விளையாடிய சிறந்த கிரிக்கெட் கிளப் இதுதான்!"

கிரேசஸ் கிரிக்கெட் கிளப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியவந்தது?

"2007-ல் எனக்கு கிரஹம் என்ற காதலன் இருந்தார். அவருக்கு கிரிக்கெட்டில் எந்த ஈடுபாடும் இல்லை. சமூகவலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த கிளப்பினை பற்றி அவர் அறிந்திருந்தார். எனக்கு கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தைப் பற்றித் தெரிந்ததும் நான் கிரேசஸ் கிரிக்கெட் கிளப்பில் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எனக்கு அவர்தான் பரிந்துரை செய்தார். ஒரு LGBTQ+ அணிக்காக விளையாடுவது வீட்டில் தெரியவந்தால் என்னவாகும் என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் அந்த பயத்தை உடைத்து, நமக்கு ஒரு வாழ்க்கைதான், அதில் நான் நானாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அங்கு சேர்ந்தேன். என்னை ஆசையாக வரவேற்றுக் கொண்டது அந்த கிளப்."

நீங்கள் தன்பால் ஈர்ப்பாளர் என்று பெற்றோர்களிடம் எப்படிச் சொன்னீர்கள்? அந்தத் தருணம் எப்படி இருந்தது?

"நான் வீட்டில் அப்பாவிடம்தான் முதன்முதலில் சொன்னேன். அது ஒரு மிகப் பதற்றமான தருணம். அப்பா லண்டன் வந்து இருந்தபோது முதல் முறை அவருடன் மது அருந்தினேன். இதைப்பற்றிச் சொல்வதற்கு அதுவே சரியான தருணம் என்று தோன்றியது. அதற்காக என்னை ஒரு வாரமாய் தயார்படுத்திக்கொண்டுதான் வந்தேன். நான் தன்பால் ஈர்ப்பாளர் என்று சொல்வது மட்டுமல்லாமல், அவர் எனக்கு எப்படிப்பட்ட தந்தை என்பதையும் அவர்தான் எனக்கு ஹீரோ என்பதையும் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் இந்தியாவில் எப்போதும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே பெரிய இடைவெளி இருக்கும். பெற்றோரிடம் மனம் திறந்து பேசக்கூடமுடியாது. மேலும், நான் தன்பால் ஈர்ப்பாளர் என்பதால் மீண்டும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளமுடியாது என்றும் கூறினேன். அப்பா, என்னைப் புரிந்துகொண்டு, 'இது உன் வாழ்க்கை. என்ன நடந்தாலும் எப்போதும் நீ என் மகன்தான். எனக்குத் தரவேண்டிய மரியாதையை நீ தந்தால் போதும்' என்றார்."

பல தரப்பினரும் கிரிக்கெட்டிற்கும் பாலுணர்வுக்கும் தொடர்பில்லை என்கிறார்கள். அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

"அதை நான் நிச்சயம் சரியான கருத்து என்றே நினைக்கிறேன். பாலுணர்வு என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஒருவர் எந்தப் பாலுணர்வைச் சார்ந்து இருந்தாலும் அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட உரிமையுண்டு. பாலுணர்வுக்கும் கிரிக்கெட்டிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை."

LGBTQ+ கிரிக்கெட் அணி
LGBTQ+ கிரிக்கெட் அணி

கிரேசஸ் கிரிக்கெட் கிளப் தொடங்கி பல வருடங்கள் ஆகின்றன. LGBTQ+ மக்களுக்கென தனியாக கிரிக்கெட் கிளப் வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

"என்னைக் கேட்டால் உலகம் முழுதும் LGBTQ+ கிரிக்கெட் கிளப்புகள் இன்னும் நிறைய வரவேண்டும். சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் ஒரு LGBTQ+ கிளப் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒவ்வொருவரும் அவர்களை அவர்களாக உணரும் இடமாக அது இருக்கும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நான் முன்பு விளையாடிய கிளப்களில் என்னால் அப்படி இருக்கமுடியவில்லை. அங்கு "காதலி எங்கே? மனைவி எங்கே?" போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கமுடியாமல் தவித்த நாள்கள் உண்டு. எனவே இது போன்ற கிளப்புகள் எப்போதும் ஒரு நல்ல தளம்."

கிரேசஸ் கிரிக்கெட் கிளப்பில் பெண்களையும் சேர்த்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா?

"எங்கள் கிளப் நிச்சயம் பெண்களையும் வரவேற்கும். நான் தனிப்பட்ட முறையில் பெண்கள் கிரிக்கெட்டைப் பெரிதாய் ஆதரிக்கும் ஒருவன். பெண்கள் எங்கள் கிளப்பில் பங்குபெறுவதைக் கண்டிப்பாக விரும்புவோம். பெண்கள் கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் கிளப்பின் கனவுகளுள் ஒன்று."

LGBTQ+ சமூகத்திற்குப் பிரபல கிரிக்கெட் வீரர்கள் குரல் கொடுக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? குறிப்பாக கிரிக்கெட்டைப் பெரிதும் போற்றும் இந்தியா போன்ற நாட்டில்?

"நான் இதைப்பற்றிப் பலமுறை பேசியுள்ளேன். இந்தியாவில் நடிகர்களும் கிரிக்கெட்டர்களும் கடவுள்களாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்களிடமிருந்து இதைப் பற்றியெல்லாம் கருத்துகள் வருமானால், நிச்சயமாக அது மக்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். கோலி போன்ற ஒரு மாபெரும் வீரர் வானவில் நிறம் கொண்ட ஷூலேஸ் அணிந்து விளையாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும். எட்பாஸ்டனில் இப்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் எல்லா வீரர்களும் அதைச் செய்தால் அது ஒரு பெரிய ஆதரவாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் போட்டி ஒன்றில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் வானவில் நிற ஷூலேஸ் அணிந்து விளையாடும் வழக்கம் இங்குண்டு. இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் இலங்கை, பாகிஸ்தான் நாட்டு வீரர்களும் இதைச் செய்தால் LGBTQ+ சமூகத்திற்கு அது பேருதவியாய் அமையும்.”

தங்கள் மதம் LGBTQ+ கலாசாரத்தை ஆதரிப்பதில்லை என்று பலரும் கூறுகிறார்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

”பெரும்பாலான மதம் சார்ந்த நூல்கள் ஓரினச்சேர்க்கை பற்றிப் பேசுவதில்லை. ஆகையால் மதவெறி கொண்டவர்கள் ஏன் இதைப் பெரிய விஷயமாக ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அதை அப்படிப் பார்ப்பதே நல்லது.”

இந்தக் காலத்திலும் LGBTQ+ சமூகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

”மக்களை அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழவிடுங்கள். ஒருவர் தன்பால் ஈர்ப்பாளராக இருப்பது அவரவரின் விருப்பம். சமூகம் மாறிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் இதை எதிர்ப்பது யாருக்கும் உதவப்போவதில்லை. ஒருகட்டத்தில் நீங்கள் தனியாகத்தான் நின்றுகொண்டு இருக்கப்போறீர்கள்.”

வாழ்க்கையில் உங்களுக்கு என்னவாக வேண்டும் என்று ஆசை?

”எனக்கு உலகம் முழுவதும் சென்று எல்லா இடங்களிலும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசை. ஏற்கெனவே சில நாடுகளுக்குச் சென்று விளையாடிவிட்டேன். அதுமட்டுமன்றி தொடர்ந்து கிரேசஸ் கிரிக்கெட் கிளப்பிற்கு விளையாடுவேன். லண்டனில் கிரேசஸ், பர்மிங்கமில் யூனிகார்ன்ஸ் போன்ற LGBTQ+ கிளப்புகள் உண்டு. இன்னும் நிறைய புது கிளப்புகள் இது போன்று உருவாக வாய்ப்புண்டு. நீங்கள் நீங்களாக இருங்கள். உங்களுக்கு ஆதரவு தருபவர்களிடம் உதவி பெற்றுக் கொள்ளுங்கள். சமீபத்தில் என் நண்பர் ’Gay Indian Network’ என்று ஒரு நிறுவனம் இருப்பதைக் கண்டறிந்தார். அதில் பல நாடுகளைச் சேர்ந்த LGBTQ+ மக்களுக்கு மனரீதியான ஆதரவு அளிக்கின்றனர். இதுபோன்ற விஷயங்கள்தான் நம் உலகிற்கு இன்னும் அதிகமாய்த் தேவைப்படுகின்றன.”