Published:Updated:

``அப்போ இருந்த அந்த வெற்றி வெறி இப்போ இலங்கை டீம்ல மிஸ்ஸிங்!''- ரங்கனா ஹெராத் #VikatanExclusive

Rangana Herath
Rangana Herath

''சச்சின், ஷேவாக், டிராவிட் மாதிரியான லெஜண்டுகளோடு விளையாடினது என்னோட அதிர்ஷ்டம்னு நினைக்கிறேன். அது ரொம்ப அருமையான அனுபவம். இந்தியாவுக்கு எதிரா விளையாடுறது எப்போதுமே சவாலான விஷயம்தான். உங்களுக்கே தெரியும், ஸ்பின்னுக்கு எதிரா அவங்க எவ்ளோ ஸ்ட்ராங்னு.''

எது கடினம்? ஒரு தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதா... தன் இடத்தை நிலைநாட்ட ஒரு ஜாம்பவானுடன் போட்டியிடுவதா... ஒரு ஜாம்பவானின் இடத்தை நிரப்புவதா... ஜாம்பவனாக உருவெடுப்பதா... இல்லை, ஜாம்பவானாக ஒவ்வொரு ரசிகனின் எதிர்பார்ப்பையும் ஒவ்வொரு நொடியும் சுமந்துகொண்டு அதைப் பூர்த்தி செய்வதா..?! எல்லாமே கடினம்தான். தொடக்கத்தில் லட்சியத்தை சுமந்துகொண்டு விளையாடுபவர்கள், அதன்பிறகு நெருக்கடியைச் சுமந்துகொண்டு ஆடுகிறார்கள். அந்தக் கட்டங்களையெல்லாம் தாண்டி தனக்கான அடையாளமும் அங்கீகாரமும் கிடைத்த பிறகும் எல்லோராலும் மனதை இலகுவாக வைத்து அந்த விளையாட்டை ஆடிட முடியாது. தன் மீதான நம்பிக்கை ரசிகர்களுக்கு அதிகமாகும்போது, அதுவரை சுமந்த லட்சியம், நெருக்கடி ஆகியவற்றைவிட பாரமான ஒன்றைச் சுமக்கவேண்டியிருக்கும்... எதிர்பார்ப்பு! அதைச் சுமந்துகொண்டு ஆடுவதும், அதைப் பூர்த்தி செய்வதும் மிக மிகக் கடினம். இப்படி ஒவ்வொரு கடினமான கட்டத்தையும் தாண்டி ஜாம்பவனாகவே கிரிக்கெட் களத்துக்கு விடைகொடுப்பவர்கள் ஓரிருவர் மட்டுமே. ரங்கனா ஹெராத் - நிச்சயம் அந்த மிகச் சிறிய பட்டியலில் இடம்பெறும் மிகமுக்கியப் பெயர்!

Herath & Muralidaran
Herath & Muralidaran

உலக சாம்பியன் இலங்கை அணியில் இடம்பிடிக்கும் நோக்கத்தோடு தொடங்கியது இவரது முதல் தரப் பயணம். ஒருவழியாக 1999-ல் டெஸ்ட் அறிமுகம். ஆனால், நிரந்தர இடம் பிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. காரணம், முரளிதரன் எனும் மகத்தான ஸ்பின்னர் டாப் கியரில் பயணித்துக்கொண்டிருந்தார். 9 ஆண்டுகள் அணிக்குள் வருவதும் போவதுமாகவே இருந்தார் ஹெராத். அவருக்கான இடம் எதுவென்று அவருக்கே தெரியாது. ஆனால், கிரிக்கெட்டிலிருந்து விலகாமல், பவுண்டரி எல்லையைத் தாண்டாமலேயே இருந்தார் ஹெராத். முரளியின் ஓய்வு இவருக்கான இடத்தைத் திறந்தது. ஆனால், முரளி சந்தித்திடாத நெருக்கடி அவருக்குக் காத்திருந்தது. ஒவ்வொரு சுற்றுப்பயணத்தின்போதும், ஒவ்வொரு தொடரின்போதும், ஒவ்வொரு போட்டியின்போதும், `முரளியின் இடத்தை நிரப்புவாரா’ என்ற கேள்வி துரத்திக்கொண்டே இருந்தது. 800 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவரின் இடத்தை நிரப்புவது சாதாரண விஷயமா என்ன? ஆனால், அந்த அசாத்திய சவாலை சமாளித்து சாதனையாளராக… தானும் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்தார் ஹெராத். 433 டெஸ்ட் விக்கெட்டுகளோடு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை பௌலர் என்ற சாதனையோடு ஓய்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளின் மிகச் சிறந்த ஸ்பின்னர்களுள் ஒருவராக விளங்கிய இந்த இலங்கை ஜாம்பவான் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இங்கே!

இந்த லாக் டவுன் நேரத்தில் எப்படி உங்களை என்கேஜ் பண்ணிக்கிறீங்க?

நான் மும்பைல லெஜண்ட்ஸ் கிரிக்கெட் விளையாடிட்டிருந்தேன். ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டதால மார்ச் 12 ஊருக்குத் திரும்பிட்டேன். கடவுள் அருளால 14-ம் தேதி எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு. என்னோட ரெண்டு பசங்க, பொண்ணு, மனைவினு குடும்பத்தோட நாள்கள் போயிட்டிருக்கு. என்னோட ஃபிட்னஸ சரியா வச்சுக்க ட்ரை பண்ணிட்டிருக்கேன். பசங்களுக்கு ஆன்லைன்ல கிளாஸ் நடக்கும். அப்றம் பொண்ணை எப்போமே கவனிச்சிட்டே இருக்கணும். அதனால பரபரப்பாவே இருக்கேன். பொண்ணுகூட 6 வாரம் ஒண்ணா கழிச்சிருக்கிறேன். அதுவே ரொம்பப் புதுசா இருக்கு. மொத்தக் குடும்பமும் அவளோடு இருக்கறத நினைச்சு சந்தோஷமா இருக்கு. அதேசமயம், இந்த கஷ்டமான நேரத்துல உதவி தேவைப்படுறங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சிட்டு இருக்கேன. கஷ்டப்படும் மக்களுக்காக நாம் பிராத்திக்கவேண்டிய நேரம் இது. நம்மோடுஇருப்பவர்களையும் நல்லா கவனிச்சிக்கணும். கொழும்புவில் லாக் டவுன் கடுமையா கடைபிடிக்கிறாங்க. இந்தப் பிரச்னையின் தாக்கத்தைக் குறைக்க நம்மால முடிஞ்ச பங்களிப்பைக் கொடுக்கணும்.

Rangana Herath
Rangana Herath

ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட்டை மிஸ் பண்றீங்களா?

நிச்சயமா. இல்லாம எப்படி! இன்டர்நேஷனல் ஸ்டேஜ்ல சுமார் 20 வருஷம் கிரிக்கெட் ஆடியிருக்கேன். அதுபோக ஃபர்ஸ்ட் கிளாஸ், கவுன்டினு என் வாழ்க்கை முழுசும் கிரிக்கெட்டோடதான் பயணிச்சிருக்கேன். இப்போ அத ரொம்பவே மிஸ் பண்றேன். டி.வி-ல பாக்கறதோட சரி. என்னோட அனுபவத்தை யங்ஸ்டர்ஸ்கூட ஷேர் பண்ணிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். அந்த வகையில எப்போதுமே கிரிக்கெட்டோடு ட்ராவல் பண்ண முடியும்னு நினைக்கிறேன்.

உங்களோட 19 வருஷ கிரிக்கெட் பயணத்துல முக்கியமான ஸ்டேஜ்னு எதைச் சொல்வீங்க?

ஶ்ரீலங்கன் டீமுக்காக ஆடினது எனக்குக் கிடைச்ச ரொம்பப் பெரிய கௌரவம். பல மில்லியன் மக்களை ரெப்ரசன்ட் பண்றதுங்கறது எல்லோருக்கும் ஈசியா கிடைக்கக்கூடியது இல்ல. அது எனக்குக் கிடைச்சது ரொம்பப் பெரிய விஷயம். சின்ன வயசுல இருந்து கண்ட கனவு அது. நாம லவ் பண்ற விஷயத்துக்காக கடுமையா உழைச்சா அது நனவாகும் அப்டின்றது நான் எப்போதுமே நம்பின, நம்பற விஷயம். 21 வயசுல இன்டர்நேஷனல் அரேனால நுழைஞ்சேன். 1999-ல இருந்து 2009 வரை அணியில நிரந்தரமான இடம் இல்ல. உள்ளே வர்றதும் போறதுமாத்தான் இருந்தேன். 2009-குப் பிறகான என்னோட ட்ராவலைத்தான் எல்லோரும் பெருசாப் பேசுவாங்க. ஆனா, அந்த முதல் 10 வருஷம்தான், என்னோட கிரிக்கெட் கரியர் நல்லா அமைஞ்சதுக்குக் காரணம். கடைசி 10 வருஷம் என்னோட செயல்பாட்டுக்கு அந்த அனுபவம்தான் பெரிய உதவியா இருந்துச்சு.

Rangana Herath
Rangana Herath

உங்களோட முதல் மேட்சே பலமான ஆஸ்திரேலியன் டீம்கூட. சுமார் 25 ஓவருக்கு விக்கெட்டே விழல. ஆனால், அடுத்த சில ஓவர்ல சூழ்நிலையை அப்டியே மாத்தி 4 விக்கெட் எடுத்தீங்க. தொடக்கத்துல தடுமாறினப்போ ஏதும் நெருக்கடிய உணர்ந்தீங்களா? அதேசமயம் அதிலிருந்து எப்படி மீண்டு வந்து அசத்துனீங்க? அந்த முதல் போட்டி அனுபவம் பத்தி சொல்லுங்க

இன்டர்நேஷனல் கிரிக்கெட்டுக்கும் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டுக்கும் வேற வேறங்கிறது அப்போதான் புரிஞ்சுது. முதல் சில மணி நேரம் அந்த நெருக்கடி இருந்துட்டேதான் இருந்துச்சு. விக்கெட்டே விழல. ஆனா ரணதுங்கா, அரவிந்தா டி சில்வா, ஜெயசூர்யானு சீனியர்ஸ் எல்லோரும் என்னை என்கரேஜ் பண்ணிட்டேதான் இருந்தாங்க. அதுவரைக்கும் பௌல் பண்ணதுல இருந்து மாற்றங்கள் செய்யணும்னு நினைச்சேன். சரியா அப்போனு பார்த்து சூழ்நிலை எனக்கு சாதகமா மாற ஆரம்பிச்சிது. பிட்சோட தன்மை மாறுச்சு. டர்ன், பௌன்ஸ் ரெண்டும் எனக்கு சாதகமா மாறுச்சு. சூழ்நிலை நமக்கு சாதகமா மாறும்போது அதைச் சரியா பயன்படுத்திகணும் அப்டின்றது நான் கத்துக்கட்ட மிகப்பெரிய பாடம். அன்னிக்கு அதைத்தான் பண்னேன். அடுத்த சில ஓவர்கள்ல எல்லாம் மாறுச்சு. 4 விக்கெட் எடுத்தேன்.

டீம்ல நிரந்தரமான இடம் கிடைக்காதவங்க சீக்கிரம் இன்டர்நேஷனல் சீன்ல இருந்து வெளிய போயிடுவாங்க. ஆனா, 10 வருஷம் உங்களால எப்படி போராடிட்டே இருக்க முடிஞ்சது?

என்னோட சூழ்நிலைதான் அதுக்குக் காரணம்னு நினைக்கிறேன். எங்க ஊர் கொழும்புல இருந்து 100 கிலோமீட்டர் தள்ளி இருக்க ஒரு கிராமம். அங்கிருந்து கிரிக்கெட்டுக்காக இங்க வந்தேன். தங்கறதுக்கான இடம், சாப்பாடு எல்லாமே நான்தான் பாத்துக்கணும். பெருசா கைல காசு இருக்காது. 3 வேலைகள் செஞ்சேன். மார்க்கெட்டிங் ஃபீல்ட்லகூட இருந்தேன். 2000-ம் ஆண்டு சம்பத் பேங்க்ல சேர்ந்தேன். அந்த வேலை எனக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைச்சுக் கொடுத்துச்சு. ஒரு ஸ்போர்ட்ஸ்மேனுக்கு அந்த மாதிரியான அடித்தளம் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். என்னால எந்தக் கவலையும் இல்லாம பிராக்டீஸ் பண்ண முடிஞ்சுது. செகண்ட் ஸ்பின்னராத்தான் பல வருஷம் இருந்தேன். 2004, 2005, 2008 சீசன்லலாம் சில வாய்ப்புகள் கிடைச்சுது. ஆனா, அந்த வேலையால, டீம்ல இல்லாத சமயங்களிலும் என்னால கிரிக்கெட்ல கவனம் செலுத்த முடிஞ்சுது. என் பேங்க்ல எனக்காக அவ்ளோ சலுகைகள் கொடுத்தாங்க. அதனாலதான் என்னால ஒவ்வொருமுறையும் டீமுக்குக் கம்பேக் கொடுக்க முடிஞ்சுது. என்னோட நிரந்தர வேலை அதுக்கு மிக முக்கியக் காரணம்.

Rangana Herath
Rangana Herath

ரணதுங்கா, அரவிந்த டி சில்வா, ஜெயசூர்யா, முரளிதரன் மாதிரியான லெஜண்டுகளோடு விளையாடின அனுபவம்…

அதெல்லாம் கனவுனுதான் சொல்லணும். என்னோட சின்ன வயசு ஹீரோ அவங்களாம். அவங்கள டி.வி-ல பார்த்துப் பார்த்து வியந்திருக்கேன். அரவிந்த டி சில்வா என்னோட ஹீரோ. அப்படிப்பட்ட பிளேயர்ஸ்கூட டிரஸ்ஸிங் ரூம் ஷேர் பண்ணிகிட்டதெல்லாம் எனக்குக் கிடைச்ச பெருமை.

உங்க பெர்ஃபாமன்ஸ்ல நீங்க ரொம்ப சிறப்பானதா நினைக்கிறது எது?

பெஸ்ட்னு ஒண்ணு மட்டும் சொல்லிடமுடியாது. 1999-ல ஆஸ்திரேலியாக்கு எதிரா என்னோட அறிமுகம். எந்த ஸ்போர்ட்ஸ்மேனுக்குமே அவங்களோட முதல் போட்டி மறக்க முடியாததாத்தான் இருக்கும். அவ்ளோ பெரிய டீமுக்கு எதிரா ஆடுன என்னோட முதல் ஆட்டம் அப்படி மறக்க முடியாத ஒண்ணுதான். 2011-ல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரா டர்பன் டெஸ்ட்ல ஜெயிச்சோம். அதுவரைக்கும் அவங்க ஊர்ல நாங்க டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சதே இல்ல. அந்தப் போட்டியில நான்தான் மேன் ஆஃப் தி மேட்ச். ஒரு லேண்ட்மார்க் வெற்றியில நம்மளோட பங்களிப்பு இருக்குதுங்கறது ரொம்பப் பெரிய விஷயம். அதேமாதிரி 2014-ல இங்கிலாந்துக்கு எதிரா அவங்க மண்ல முதல் முறையா டெஸ்ட் சீரிஸ் ஜெயிச்சோம். மேத்யூஸ் அட்டகாசமா ஆடி (லீட்ஸ் மைதானத்தில்) செஞ்சுரி அடிச்சிருந்தாரு. அவர்கூட சேர்ந்து நான் நல்ல பார்ட்னர்ஷிப் பில்ட் பண்ணியிருந்தேன். சமீபத்துல ஆஸ்திரேலியாவுக்கு எதிரா 3-0 சீரிஸ் ஜெயிச்சதெல்லாம் வேற லெவல் ஃபீல். எல்லாத்தையும் விட வாழ்க்கைல ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடிய 2014 டி-20 வேர்ல்ட் கப் வெற்றி. பல ஸ்குவாட்ல இருந்திருக்கேன். ஆனால்,வேர்ல்ட் கப் டீம்ல இருந்தது என்னோட பெரிய அதிர்ஷ்டம். இது எல்லாத்தையுமே என்னோட பெஸ்ட் பர்ஃபாமன்ஸாத்தான் நினைக்கிறேன்.

Rangana Herath
Rangana Herath

நியூசிலாந்துக்கு எதிரா நீங்க வீசிய அந்த டி-20 வேர்ல்ட் கப் ஸ்பெல்… 3 ரன் கொடுத்து 5 விக்கெட்… எப்படி அப்படி ஒரு பர்ஃபாமன்ஸ்… ‘பீஸ்ட் மோட்’ல இருந்தீங்களா?

ஹாஹா… அப்டிலாம் இல்ல. அந்த வேர்ல்ட் கப்ல நான் ஆடின முதல் ஆட்டம் அதான். ஜெயிச்சே ஆகவேண்டிய சூழ்நிலை. ஆனா 119 ரன்தான் எடுத்திருந்தோம். அப்படியொரு சூழ்நிலைய சமாளிச்சி ஜெயிச்சதுக்கு எங்க பிளேயர்ஸுக்கும், கோச்களுக்கும் க்ரெடிட் கொடுத்தே ஆகணும். அந்த பிட்ச் ஸ்பின்னுக்கு சாதகமா இருக்கும்னு முன்னாடியே கணிச்சிருந்தோம். அதனாலதான் அந்த மேட்ச்ல என்னை இறக்கினாங்க. அதுமட்டுமில்லாம, ஸ்பின்னுக்கு எதிரா… குறிப்பா லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னுக்கு எதிரா நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இருக்கும் வீக்னஸை யூஸ் பண்ணிக்கணும்னு பிளான் பண்ணோம். மேட்சுக்கு முன்னாடி, கேப்டன், கோச்சிங் டீம், பௌலிங் யூனிட் சேர்ந்து ஒரு மீட்டிங் போட்டிருந்தோம். முதல்ல பேட்டிங் பண்ணாலும் சரி, ஃபீல்டிங் பண்ணாலும் சரி, நியூசிலாந்து இன்னிங்ஸோட பவர்பிளேலயே லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னரை யூஸ் பண்ணனும்னு முடிவு பண்ணோம். அந்த பிளான் எங்களுக்கு நல்ல ரிசல்ட கொடுத்துச்சு. 3 ரன் கொடுத்து 5 விக்கெட் எடுத்ததெல்லாம் கனவு மாதிரி இருந்துச்சு. அதுமாதிரி ஒரு வாய்ப்பு இன்னொருமுறை கிடைச்சிடுமா என்ன!

உங்களுக்கு ரொம்ப சவாலா இருந்த பேட்ஸ்மேன்னா யாரை சொல்வீங்க?

அப்டி ஒருத்தரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லிட முடியாது. நிறைய பேட்ஸ்மேன் இருக்காங்க. ஒவ்வொரு காலகட்டத்துலயும், ஒவ்வொரு ஜெனரேஷன் பிளேயர்ஸ் டஃப் கொடுத்திருக்காங்க. ஆரம்ப காலத்துல பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிரா பௌலிங் பண்றது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக், யூனுஸ் கான் அவங்களுக்கெல்லாம் பௌலிங் பண்றது கஷ்டமா இருந்துச்சு. அதே மாதிரி இந்தியன் பிளேயர்ஸ் சச்சின், விராட் கோலி ரெண்டு பேரும் பெரிய சவாலா இருந்திருக்காங்க. அவங்க மட்டுமல்ல ஜோ ரூட், ஏ.பி.டி வில்லியர்ஸ் மாதிரி பேட்ஸ்மேன்களும் களத்துக்குள்ள மிரட்டியிருக்காங்க.

Rangana Herath
Rangana Herath

ஶ்ரீலங்கா… சர்வதேச அரங்கில் கன்சிஸ்டென்ட்டா ஆடிட்டு இருந்த டீம், இன்னைக்கு தடுமாறிட்டு இருக்கு. எந்த வீரருமே இப்போ பெரிய தாக்கம் ஏற்படுத்துறதில்லை. ஓய்வுபெற்ற ஜாம்பவான்களோட இடத்தை நிரப்ப இந்த இளம் தலைமுறை என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க?

இங்க இம்ப்ரூவ்மென்ட்டுக்கு ரகசியமோ, குறுக்கு வழியோ எதுவும் கிடையாது. நேர்மையா உழைக்கணும். அதுதான் ஒரே வழி. லட்சியம் இருக்கணும். ஒரு டார்கெட் இருக்கணும். கடுமையா உழைக்கணும். கஷ்டமான பாதை இருக்கத்தான் செய்யும். உங்களோட தனித்துவத்தை உணர்ந்து அதை செயல்படுத்துறது ரொம்ப முக்கியம். உங்க மைண்ட் செட் ஸ்ட்ராங்கா இருக்கணும். ஆட்டிட்யூட்தான் மேட்டர். முரளிதரன், வாஸ், சங்கக்காரா, ஜெயசூர்யானு ஒவ்வொரு லெஜண்டரி பிளேயருமே அப்படியொரு கேரக்டரை வெளிப்படுத்தியிருப்பாங்க. ‘இது என்னோட நாடு, என்னோட டீம்’ அப்டின்ற மைண்ட்செட் எப்போமே இருக்கும் அவங்ககிட்ட. வெற்றிக்கான தாகம், சாதிக்கணும்ன்ற வெறி அவங்களை நல்ல பர்ஃபாமன்ஸ் கொடுக்க வச்சது. அந்த ஆட்டிட்யூட்தான் முக்கியம்னு நான் நினைக்கிறேன். இந்த ஜெனரேஷன் பிளேயர்ஸ்க்கு அந்த ஆட்டிட்யூட் இருக்கணும். அதுதான் ஶ்ரீலங்கன் டீமோட முன்னோற்றதுக்கு வழிவகுக்கும்.

இப்போதைய ஸ்பின்னர்கள்ல உங்கள இம்ப்ரஸ் பண்ணவங்க யாராவது…

ஒருத்தரை மட்டும் குறிப்பிட்டு சொல்லிட முடியாது. நாதன் லயான், ஆர்.அஷ்வின், கேஷவ் மஹாராஜ்லாம் ரொம்ப நாளா கன்சிஸ்டென்டா பர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்காங்க. பேட்ஸ்மேன்களுக்கு ரொம்பப் பெரிய சவாலா இருக்காங்க. ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ்ல ரஷீத் கான், குல்தீப் யாதவ்லாம் நல்லா ஆடுறாங்க. ஹைலைட் பண்ணி சொல்லணும்னா லயான், அஷ்வின் ரெண்டு பேரையும் சொல்லலாம். ரொம்ப நல்லா விளையாடிட்டு இருக்காங்க.

Rangana Herath
Rangana Herath

இந்த மாதிரி சூழ்நிலைல எல்லோரும் நாஸ்டால்ஜியால மூழ்கிக் கிடக்கிறாங்க. நீங்க அந்த மாதிரி எந்த சம்பவத்தை நினைச்சுப் பாப்பீங்க?

எங்க கிராமத்துல, என்னோட சகோதரன், ப்ரெண்ட்ஸ்கூடலாம் கிரிக்கெட் விளையாடுன நாள்கள்லாம் ரொம்ப அழகானது. என்னோட பெற்றோர் நான் கிரிக்கெட் விளையாடுறதுக்கு எப்போதுமே சப்போர்ட் பண்ணிருக்காங்க. அதேசமயம் நேரம் கிடைக்கும்போது படிப்புலயும் கவனமா இருக்கச் சொல்லுவாங்க. நான் அப்போ ஓரளவு நல்லா படிச்சதால ரெண்டையும் நல்லா பேலன்ஸ் பண்ணேன். ஒருவகையில என் படிப்பு கிரிக்கெட்டுக்கு ரொம்ப யூஸ்ஃபுலா இருந்துச்சுனுதான் சொல்லணும். நான் பேங்க் வேலைல நுழையறக்கு உதவியா இருந்தது அதுதான். நான் ஏற்கெனவே சொன்னதுமாதிரி என்னோட வேலையாலதான் கிரிக்கெட்ல கவனம் செலுத்த முடிஞ்சுது. வேலைல சேர்ந்ததுக்கு அப்றம்கூட அங்க என்னோட படிப்பு உதவியா இருந்துட்டுத்தான் இருக்கு!

அடுத்த கட்டுரைக்கு