Published:Updated:

``ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஏன்? அவர்கள் கிரிக்கெட்டை விட்டு விலகிவிடலாமா?’’- முரளி விஜய்

M.Vijay ( TNPL )

"ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் எப்படி ஓப்பனிங் இறங்க முடியும் என்று ஏன் நீங்கள் கேட்பதில்லை. முந்தைய போட்டியில் நானும் 60 பந்துகள் சந்தித்தேனே!"

``ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஏன்? அவர்கள் கிரிக்கெட்டை விட்டு விலகிவிடலாமா?’’- முரளி விஜய்

"ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் எப்படி ஓப்பனிங் இறங்க முடியும் என்று ஏன் நீங்கள் கேட்பதில்லை. முந்தைய போட்டியில் நானும் 60 பந்துகள் சந்தித்தேனே!"

Published:Updated:
M.Vijay ( TNPL )

முரளி விஜய் - மிகவும் வித்யாசமான கிரிக்கெட் கதை கொண்டவர். சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் உடையில் பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியவர், அப்படியே ஒரு மிகப்பெரிய யூ டர்ன் அடித்து டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம், இந்திய அணியின் முக்கிய ஓப்பனராக இருந்தவருக்கு, ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இல்லை. இந்திய ஷார்ட் ஃபார்மட் அணிக்கான வாய்ப்பு அவருக்கு எளிதில் கிடைத்திடவில்லை. கிடைத்த வாய்ப்புகள் நிரந்தரம் ஆகவில்லை. ஐ.பி.எல் தொடரிலும் பின்னடைவு. ஆனாலும் அந்தக் காலகட்டத்தில், டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபித்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டாக மாறினார்.

இப்போது அந்த இடத்துக்கும் போட்டி. மீண்டும் ஒரு சறுக்கல். ஆனால், ஓயவில்லை. டி-20 ஃபார்மட்டில் தன் உச்சபட்ச ஆட்டத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார் விஜய். கடைசி 10 டி-20 இன்னிங்ஸில் அவரது சராசரி 76! அதில் 5 அரைசதம், 2 சதம்! சையது முஸ்தாக் அலி, IPL, TNPL என அனைத்து தொடர்களிலும் ரவுண்டி கட்டி அடித்திருக்கிறார் இந்தத் தமிழக வீரர். அவரது டி-20 ஃபார்ம், டெஸ்ட் பயணம், இந்திய அணியின் வாய்ப்பு எனப் பல விஷயங்கள் பற்றி அவரிடம் பேசினேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2018-ம் ஆண்டு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் முடியவில்லை. ஆஸ்திரேலிய தொடரின்போது உங்கள் ஃபார்ம் விமர்சனத்துக்குள்ளானது. இந்திய அணி கம்பேக் இனி சாத்தியமா?

2018 சரியாக அமையவில்லை என்று சொல்கிறீர்கள். எல்லோருமேதான் சொல்கிறார்கள். ஆனால், களத்தில் இருக்கும்போது எப்படியான பந்தில், எப்படி அவுட்டாகிறோம் என்றிருக்கிறது. அடிக்கவில்லை, எதுவும் செய்யவில்லை என்று சொல்லிவிடமுடியாது. ஒரு ஓப்பனராக வெளிநாட்டு ஆடுகளங்களில் ஆடுவது மிகவும் சவாலான விஷயம். என்னைப் பொறுத்தவரை, அந்த தொடரில் பல நல்ல பால்களை சிறப்பாகச் சமாளித்தும் இருக்கிறேன். அதனால், அதற்கு நான் பெரிதாக வருந்தப்போவதில்லை. ஒரு நல்ல தொடர், இதையெல்லாம் மாற்றிவிடும். இந்திய அணிக்குத் திரும்பவும் கம்பேக் கொடுக்க முடியும்.

Murali Vijay
Murali Vijay
TNPL

கடந்த சில ஆண்டுகளாக, நீங்கள் பந்தை விடும் சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், அதனால்தான் உங்களின் ஃபார்மில் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கிலாந்து தொடரின்போது பேசப்பட்டது. அதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?

அதைச் சொன்னது யார்? யார் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஏன் என்னிடம் மட்டும் இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன? ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் எப்படி ஓப்பனிங் இறங்க முடியும் என்று ஏன் நீங்கள் கேட்பதில்லை. முந்தைய போட்டியில் நானும் 60 பந்துகள் சந்தித்தேனே! பந்தை பழையதாக்கினால் போதுமென்றால், அதற்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் என்பவர்கள் எதற்கு? ஓப்பனர்கள் கிரிக்கெட்டை விட்டுவிடவேண்டுமா? மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையோ, டெய்ல் எண்டர்களையோ களமிறக்கிக்கொள்ளவேண்டியதுதானே? பிறகு ஏன் சேவாக் போன்றவர்கள் கிரிக்கெட் விளையாடவேண்டும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் தரப் போட்டிகளில் ஃபார்ம் வேறு மாதிரியாக இருந்தாலும், டி-20 போட்டிகளில் கடந்த சில மாதங்களாக தடுக்கவே முடியவில்லையே. ஃபார்மட்கள் மாறுவதுதான் இந்த ஃபார்ம் வேறுபாட்டின் காரணமா?

சிறப்பாகச் செயல்பட்டுத்தான் இந்திய அணிக்குள் நுழைகிறோம். கிரிக்கெட்டின் எந்த லெவலில் ஆடினாலும் சிறப்பாகச் செயல்படவேண்டும். எந்த ஃபார்மட்டுக்கும் பேட்டும் பாலும் மாறப்போவதில்லையே! இது நாமாகப் பேசிக்கொள்வதுதான். கிரிக்கெட் ஆடவேண்டுமெனில் எல்லா இடங்களிலும் விளையாடித்தான் ஆகவேண்டும். எப்படியான விக்கெட்டாக இருந்தாலும் நம்மை நிரூபித்துத்தான் ஆகவேண்டும். அந்த மனநிலையிதான் நான் எப்போதும் விளையாடுவேன். மற்றபடி, நான் ஃபார்மட்களில் வித்யாசம் பார்க்கமாட்டேன். எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் அடிக்கவேண்டும். ஜெயிக்கவேண்டும். அதுதான் எப்போதும் என் நோக்கமாக இருக்கும். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கிரிக்கெட்டை அனுகுவார்கள். அது வேறுபட்டுக்கொண்டேதான் இருக்கும்.

இந்திய அணிக்காக சுமார் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்

அது ஒரு வார்த்தையில் சொல்லக்கூடிய விஷயம் இல்லை. என் புத்தகம் வரும்போது படித்துக்கொள்ளுங்கள்! உண்மையிலேயே விலைமதிக்க முடியாத உணர்வு அது. டெஸ்ட் கிரிக்கெட் ஆடியதென்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். ஏனெனில், முதலில் ஒருநாள், டி-20 கிரிக்கெட்டராகத்தான் நான் இருந்தேன். டெஸ்ட் கிரிக்கெட் என்று வரும்போது நம் ஆட்டத்தை மாற்றவேண்டும், மனநிலையை மாற்றவேண்டும். சூழ்நிலை வேறு மாதிரியாக இருக்கும். அணியின் தேவை வேறாக இருக்கும். ஒரு டெஸ்ட் போட்டியிலேயே அத்தனை சவால்கள் இருக்கும். தொடங்கும் போது ஒரு மாதிரி இருக்கும். கிளைமாக்ஸில் வேறு மாதிரி முடியும். அதுதான் டெஸ்ட் மேட்ச். எதையும் நம்மால் கணித்துவிட முடியாது. திடமான மனநிலையும், ஆரோக்கியமான உடல்நிலையும்தான் உங்களை சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக்கும்.

Murali Vijay
Murali Vijay

புத்தகம் வரும்போது படித்துக்கொள்ளச் சொன்னீர்களே, சுயசரிதை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

(சிரித்துக்கொண்டே) ஆமாம் ஆமாம்... வரும்போது படித்துக்கொள்ளுங்கள்..!

2008 - 2012 காலகட்டத்தில் அணியில் உங்களுக்கு நிரந்தர இடம் இல்லாமல் இருந்தது. சேவாக், கம்பீர் போன்றவர்களுடன் போட்டியிடவேண்டியிருந்தது அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தீர்கள். அப்படி இருக்கும்போது கண்டிப்பாக தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்படியொரு சூழ்நிலையை எப்படி சமாளித்தீர்கள்?

அந்தக் காலகட்டத்தில் 10 போட்டிகளில் விளையாடியிருப்பேன் என்று நினைக்கிறேன். ஒருநாள், டி-20 போட்டிகளெல்லாம் சேர்த்தே அவ்வளவுதான் ஆடியிருப்பேன். ஏனெனில், அப்போது இருந்த டீம் அப்படி. விரேந்திர சேவாக், கௌதம் கம்பீர் இருவருமே மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்படியிருக்கையில் நம் வாய்ப்புக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும். எந்த நிலையிலும் மனம் தளராமல் காத்திருக்கவேண்டும். காத்திருக்கும் நேரத்தில் கடுமையாக உழைக்கவும் வேண்டும். அப்போது கண்டிப்பாக நமக்கான வாய்ப்பு அமையும். அதுதான் என் நம்பிக்கை. இப்படியான கதைகள் பலருக்கும் உண்டு. என்ன, என் கதை கொஞ்சம் வித்யாசமானது.

அதுவுமில்லாமல் களத்துக்கு வெளியே அனைவருடனும் நல்ல நட்பு இருந்தது. அதனால், கிரிக்கெட்டை ஒரு ஜாலியான விஷயமாக நாங்கள் அணுகினோம். ஏனெனில், இந்திய அணிக்கு விளையாடுகிறோம் என்பது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திவிடும். நல்ல நட்பு இருந்ததால், சிறப்பாகச் செயல்படமுடிந்தது. அணியின் சூழ்நிலை எப்படியிருக்கிறதோ, அதைப் பொறுத்துத்தான் வீரர்களின் செயல்பாடுகள் அமையும்.

ஒரு டெஸ்ட் ஓப்பனருக்கு எது முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

டெஸ்ட் ஓப்பனர் என்றெல்லாம் இல்லை. எந்த ஓப்பனராக இருந்தாலும் டெக்னிக் மிகவும் முக்கியம். எப்போது என்ன செய்யவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கவேண்டும். அதையெல்லாம்விட முக்கியமான விஷயம் ஆஃப் ஸ்டம்ப். அதைப் பற்றிய ஐடியா இருக்கவேண்டும். ஆஃப் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என்று தெரிந்திருக்கவேண்டும். தொடர்ந்து ஆடும்போது அந்தப் புரிதல் ஏற்படும்.

Murali Vijay
Murali Vijay
TNPL

கவுன்டி போட்டிகளில் இதுவரை நீங்கள் விளையாடியதில்லையே, ஏன்? அங்கு ஆடும் எண்ணம் இருக்கிறதா?

எப்பொழுதுமே கவுன்டி ஆடவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஆனால், அதற்கான சரியான நேரம் அமையவில்லை. இப்போதுதான் கொஞ்சம் அவகாசம் கிடைத்திருக்கிறது. அதனால், கவுன்டி கிரிக்கெட் கண்டிப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த TNPL தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலுமே 50+ ஸ்கோர் அடித்து அசத்தியிருக்கிறீர்கள். இந்த ஃபார்ம் உங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியம்?

அந்த இளம் வீரர்களுக்கு மட்டுமல்ல எனக்குமே இது உதவிகரமாக இருக்கிறது. அடுத்து ரஞ்சி சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது. உள்ளூர் சீசனில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறவேண்டும். அதற்கு என் பங்களிப்பைக் கொடுக்கவேண்டும். அந்த சீசனுக்குத் தயாராவதற்கு எனக்கும் TNPL தொடர் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னதுதான். எந்த வகையான கிரிக்கெட்டுமே ஒருவருக்கு ஒரு வாய்ப்புதான். வெற்றிக்கான தாகத்தோடு இருப்பவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

TNPL இளம் வீரர்களின் முன்னேற்றத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

TNPL தான் மிகவும் முக்கியமானது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. ஒரு மிகச் சிறந்த தொடர். உள்ளூர் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நிறைய புதிய வீரர்கள் வருகிறார்கள். அவர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்புதான் TNPL. இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் வரும்போது, திறமையான வீரர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சொல்வார்களே அதைப்போல். அதேசமயம், இதுதான் மிகமுக்கியமான ஒரு தொடர் என்ற எண்ணத்தில் விளையாடாமல், கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக நெருக்கடியின்றி விளையாடவேண்டும். அது மிகவும் முக்கியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism