Published:Updated:

``ஒரு வருடத்துக்கு முன்பு எனக்கே அந்த சந்தேகம் இருந்தது!’’ – அஷ்வின் #VikatanExclusive

அஷ்வின்

தன்னுடைய பெர்ஃபக்ஷனுக்குக் காரணம் என்ன? கவுன்டியில் பட்டையைக் கிளப்பியது எப்படி? அஷ்வின் - ஜடேஜா கூட்டணியின் பலம் என்ன? இளம் வீரர்களுக்கு டிஎன்பிஎல் எவ்வளவு முக்கியம்? மனம் திறக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின்..!

3 போட்டிகளில் 23 விக்கெட்டுகள், 197 ரன்கள் என கவுன்டியில் கலக்கி ஊர் திரும்பிய ரவிச்சந்திரன் அஷ்வின், இப்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சுழன்று அடித்துக்கொண்டிருக்கிறார். திண்டுக்கல் அணியைத் தொடந்து நான்காவது வெற்றிக்கு வழிநடத்தியவர், பேட்ஸ்மேனாகவும் இந்தத் தொடரில் மிரட்டிக்கொண்டிருக்கிறார். மதுரைக்கு எதிராக 3 விக்கெட்டுகள், தூத்துக்குடிக்கு எதிராக அரைசதம் என, ஃபுல் ஃபார்மில் இருக்கும் அஷ்வினை, போட்டிகளுக்கு இடையிலான ஓய்வு நாளில் பேட்டியெடுத்தேன். டிஎன்பிஎல், ஐபிஎல், உலகக் கோப்பை எனப் பல விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார் அஷ்வின்.

இந்த டிஎன்பிஎல் தொடரில் திடீரென்று ஒரு வித்தியாசமான பால் வீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தீர்கள். `நக்கில் பால்’, யார்க்கர் போல அந்தப் பந்துக்கும் புதிதாக ஒரு பெயர் வைக்கவேண்டுமென்றால் என்ன பெயர் வைப்பீர்கள்?

(சிரிக்கிறார்) பெயர் வைக்குமளவுக்கு எதுவும் செய்துவிடவில்லை. பொதுவாக, களத்தில் இருக்கும் பேட்ஸ்மேனுக்குக் குழப்பம் ஏற்படுத்த வேண்டும். அதுதான் பௌலர்களுக்கு வெற்றி தேடித்தரும். அதுவும் டி-20 போன்ற ஃபார்மட்டில் பேட்ஸ்மேன்களை `disturb' செய்வது ரொம்ப முக்கியம். நான் அங்கு செய்ததும் அதுதான். எனதுNon bowling arm ( இடதுகையை) அசைக்காமல் பந்துவீசினேன். அது நிச்சயம் பேட்ஸ்மேனுக்கு அதிர்ச்சியாக இருக்கும். என் பந்துவீச்சைக் கணிக்க முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும். அதுதான் நான் எதிர்பார்த்தது. மற்றபடி, அந்தப் பந்தை இப்படி அழைக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்கவில்லை.

நடராஜன், ஜெகதீசன், வருண் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு ஐபிஎல் வரை சென்றுவிட்டனர். இந்தத் தொடர் எந்த அளவுக்கு இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

R.Ashwin
R.Ashwin
TNCA/TNPL

முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே டிஎன்பிஎல் தொடர் பெர்ஃபாமன்ஸால் மட்டும் ஒரு ஐபிஎல் அணியோ, மாநில அணியோ வீரர்களைத் தேர்வு செய்துவிடாது. அவர்கள் தொடர்ந்து தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம், தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்கு, அதை ஏற்படுத்திக்கொடுக்கும் `ஒரு' மேடைதான் டிஎன்பிஎல். சூப்பர் சிங்கர் என்பது பாடுபவர்களுக்கு எப்படி ஒரு மேடை அமைத்துக்கொடுக்கிறதோ, அப்படியொரு மிகப்பெரிய மேடையை இளம் வீரர்களுக்கு இந்தத் தொடர் அமைத்துக்கொடுக்கிறது. ஹரி நிஷாந்த் போன்ற ஒரு தரமான பேட்ஸ்மேனைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள இந்தத் தொடர் உதவுகிறது.

இந்தத் தொடரால், ஒவ்வொரு வருடமும் பலநூறு வீரர்கள் அற்புதமான வாய்ப்பைப் பெறுகிறார்கள். அதேபோல், இந்தத் தொடரின் தரம் அவர்களின் வளர்ச்சியில் மிகமுக்கிய அங்கம் வகிக்கிறது. இதற்கு முன் இந்த அளவுக்குத் தரமான ஆடுகளங்களில் ஆடும் வாய்ப்பு அனைத்து வீரர்களுக்கும் கிடைத்துவிடாது. ஆனால், இப்போது இளம் வீரர்களுக்கு அந்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவர்களின் பேட்டிங்கை, பௌலிங்கை மேம்படுத்துகிறது.

இங்கிலாந்து ஆடுகளங்களில் உங்களுடைய செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டன. ஆனால், இந்த கவுன்டி சீசனில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறீர்கள். 23 விக்கெட்டுகள் எடுத்ததோடு, சுமார் 200 ரன்களும் அடித்திருக்கிறீர்கள். உங்களுடைய ஆட்டத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறீர்களா?

இங்கிலாந்து ஆடுகளங்களில் நான் நன்றாகச் செயல்படவில்லை என்பது, புரிதல் இல்லாதவர்களின் குற்றச்சாட்டு. ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே அப்படி எதையாவது கிளப்பிவிடுவார்கள். கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைப் பார்த்தால் அது தெரியும். பிர்மிங்ஹமில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினேன். அதன்பிறகு காயம் ஏற்பட்டதுதான் துருதிருஷ்டவசமானது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் இப்படியான காலங்கள் இருக்கத்தான் செய்யும். நாம் எதிர்பார்க்காத நேரத்தில், அப்படியொரு காயம் ஏற்பட்டு பின்னடைவை ஏற்படுத்தும். அப்படியொரு தருணம்தான் அங்கு நடந்தது. மற்றபடி இங்கிலாந்து ஆடுகளங்களில் என்னுடைய செயல்பாடுகள் நன்றாகவே இருந்திருக்கின்றன. நம்பர்களை வைத்துப் பார்த்தாலும் அது புரியும். 

R.Ashwin
R.Ashwin
AP

அதேசமயம், இந்த கவுன்டி தொடரில் நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கச் செல்லவில்லை. என்னால் அங்கு விக்கெட்டுகள் வீழ்த்தமுடியும் என்பதை நிரூபிக்க நான் நினைக்கவில்லை. கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கவே கவுன்டி தொடரில் பங்கேற்றேன். அங்கும் என் ஆட்டத்தில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை. `இப்படிச் செய், அப்படிச் செய்' என்று சொல்வதற்கு யாரும் இல்லாத, குறை சொல்வதற்கு ஆள்கள் இல்லாத ஒரு நல்ல சூழ்நிலையில் இருந்தேன். சொல்லப்போனால், அங்கு நான் நானாக இருந்தேன். அந்த நாள்களில் மிகவும் ரிலாக்ஸாக உணர்ந்தேன். அவ்வளவுதான். மற்றபடி என் ஆட்டத்தில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை.

பந்துவீச்சில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறீர்கள். கவுன்டியில் தொடங்கியது, இப்போது டிஎன்பிஎல் தொடரிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பேட்டிங்குக்காக கூடுதல் நேரம் செலவிட்டுக்கொண்டிருக்கிறீர்களா?

R.Ashwin
R.Ashwin
TNCA/TNPL

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனது வழக்கமான ஆட்டத்தைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால், இப்போதுதான் என் வழக்கமான ஆட்டத்தை ஆடுகிறேன். முன்பு இப்படித்தானே ஆடிக்கொண்டிருந்தேன். என்ன, நாளடைவில் சில ஷாட்கள் அப்படியே ஆட முடியாமல் போய்விட்டது. முன்பைப்போல், பல ஷாட்களை ஆடமுடியாமலேயே இருந்தது. இப்போதுதான் அதெல்லாம் சரியானதுபோல் இருக்கிறது. சமீபகாலமாக மீண்டும் முன்பைப் போல் பேட்டிங் செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். இதற்கென எந்த ஸ்பெஷல் டிரெய்னிங்கும் இல்லை.

SG, Duke, Kookaburra என ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பந்தின் தன்மையும் மாறுவது, ஸ்பின்னர்களுக்கு சவாலாக இருக்கும்தானே? அதை எப்படி நீங்கள் சமாளிக்கிறீர்கள்?

ஒவ்வொரு ஊரிலும் பந்தின் தன்மை மாறுவது சகஜம்தான். அது கண்டிப்பாக சவாலாகத்தான் இருக்கும். பந்து மட்டுமல்ல, தட்பவெட்பநிலை, ஆடுகளத்தின் தன்மை எல்லாமே மாறத்தானே செய்கின்றன. அப்படி இருக்கையில், இதற்கும் தயாராகத்தான் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, நான் எல்லாப் பந்துகளிலும் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளேன். Duke பந்துகளில் பல விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறேன். Kookaburra பந்துகளில் நிறைய வீழ்த்தியிருக்கிறேன். அதனால், இப்போது எனக்கு அவை சவாலாகத் தெரியவில்லை. பந்தின் தன்மைகள் உணர்ந்து, அதற்கு ஏற்ப செயல்படுவது என்பது எனக்கு இப்போது பழகிவிட்டது. பந்துகளின் தன்மை இனி பிரச்னையே இல்லை. ஆனால், பந்தின் தரம் கொஞ்சம் மாற்றப்பட வேண்டும். ஒருசில பந்துகள் சீக்கிரமே பழையதாகிவிடும். அது பௌலர்களுக்குப் பாதகமாக அமையும். பந்தின் தரத்தை சரிசெய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அதன் தன்மைக்கு ஏற்ப நம்மைச் சரிசெய்துகொள்வதில்தான் பௌலரின் வெற்றி இருக்கிறது.

ஷார்டர் ஃபார்மட்டில், ரிஸ்ட் ஸ்பின்னர்களால்தான் ஜொலிக்க முடியும் என்ற வாதம் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையில், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் காட்டும் வேரியேஷன்கள்தான் அவர்களுக்கு விக்கெட்டுகள் பெற்றுக்கொடுக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஷ் கோபால் வீழ்த்திய விக்கெட்டுகள் பெரும்பாலானவை கூக்ளிகள்தான். லெக் பிரேக் அல்ல! நீங்கள் சொன்னதுபோல் பேட்ஸ்மேனைக் குழப்புவதுதான் முக்கியமாக இருக்கும்போது, ஆஃப் ஸ்பின்னர்களும் அதைக் கையாள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

R.Ashwin
R.Ashwin
TNCA/TNPL

எல்லாமே அவரவர் பார்ப்பதில்தான் இருக்கிறது. ரிஸ்ட் ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்துகிறார்கள், ஃபிங்கர் ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்துவதில்லை என்பதெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பார்வைதான். லெக் ஸ்பின்னர்களின் வேரியேஷன்களில் ஒன்று கூக்ளி. அது ஆஃப்-பிரேக்தானே! நான் முன்பே சொன்னதுபோல், பேட்ஸ்மேன்கள் இதை சரியாக பிக் செய்யமுடியாமல்தான் அவுட் ஆவார்கள். இது ஒரு பக்கம். இன்னொருபுறம், ஒரு அணியின் வெற்றி எதைப்பொறுத்து அமைகிறது? ரன்களைப் பொறுத்தா, விக்கெட்டுகளைப் பொறுத்தா? ரன்களைப் பொறுத்துத்தானே. உலகக் கோப்பை அரையிறுதியில், 10 ரன்கள் குறைவாகக் கொடுத்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். ஆக, இங்கு விக்கெட் எடுப்பது மட்டுமே முக்கியமில்லை அல்லவா!

இந்த ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாகத்தான் பந்துவீசியிருக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஹர்பஜனும் சிறப்பாகச் செயல்பாட்டரே. அவரும் ஆஃப் ஸ்பின்னர்தானே! இத்தனைக்கும் சேப்பாக்கத்தைப்போல், மொஹாலி ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. இருந்தாலும் நான் மிகச் சிறப்பாகவே செயல்பட்டேன். 

R.Ashwin
R.Ashwin
AP

வேரியேஷன் என்று பார்த்தாலும், நான் காட்டிய வேரியேஷன்களை எந்த பௌலர்களும் காட்டியதில்லை. கேரம் பால் முதற்கொண்டு பல வித்தியாசமான டெலிவரிகளை முயற்சி செய்திருக்கிறேன். அதைச் செய்தால்தான் ஒரு ஸ்பின்னருக்கு வெற்றி கிடைக்கும் என்பதும் உங்களின் தனிப்பட்ட பார்வைதான். வேரியேஷன்கள் காட்டாமல் போனால், ஆஃப் ஸ்பின்னர்களே இல்லாமல் போய்விடும் நிலையெல்லாம் வந்துவிடாது. எல்லாமே ஒவ்வொரு பௌலரும் செய்துகொள்ளும் அப்கிரேடுதான். இதைப் பொதுவாகப் பார்ப்பதும், பொதுமைப்படுத்துவதும் சரியில்லை. ஒரு ஆஃப் ஸ்பின்னர் வேரியேஷன்களை முயற்சி செய்யவேண்டுமா, இல்லையா என்பது அவரது பார்வையைப் பொறுத்துத்தான்!

இது ஒரு புறமிருக்க, மற்றொருபுறம் பல கேப்டன்கள், இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தால் மட்டுமே ஆஃப் ஸ்பின்னர்களை பந்துவீச அழைக்கிறார்கள். ஆஃப் ஸ்பின்னர்களை கிரிக்கெட் உலகம் இப்போது அணுகுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதுவும் உங்கள் பார்வைதான். இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி லயானைத்தான் அரையிறுதி வரையில் களமிறக்கியது. அந்த அணியின் தேவையை அவர் பூர்த்திசெய்யாமல் இருந்திருந்தால் நிச்சயம் களமிறக்கியிருக்கமாட்டார்கள். அதேபோல், மொயீன் அலியும் நன்றாகத்தான் பந்துவீசினார். அவரது பேட்டிங் சிறப்பாக இல்லாததால்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, பந்துவீச்சுக்காக இல்லை. ஆஃப் ஸ்பின்னர்கள் இன்னும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமான பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒவ்வோர் அணிக்கும், கேப்டனுக்கும் மாறும்தானே!

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடப்போகிறீர்கள். இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் பற்றிய உங்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

உண்மையில் எந்த எதிர்பார்ப்புமே இல்லை. (சிரிக்கிறார்) உண்மையிலேயே இல்லை. நான் இப்போது என் ஆட்டத்தை மிகவும் அனுபவித்து ஆடிக்கொண்டிருக்கிறேன். இப்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக டிஎன்பிஎல் ஆடுகிறேன். அதுமட்டும்தான் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றபடி நான் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு, `கிரிக்கெட்டை அனுபவித்து ஆடமுடியுமா' என்றெல்லாம் சந்தேகப்பட்டிருக்கிறேன். அப்படியொரு சூழ்நிலையில் இருந்தேன். ஆனால், இப்போது நான் அதை முழுமையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். என்னால், என் ஆட்டத்தை நினைத்து மகிழ முடிகிறது. சிரிக்க முடிகிறது. அதனால், அதை மட்டுமே செய்வது என்ற முடிவில் இருக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் தொடர் பற்றி, அங்கு சென்றதும் யோசிப்போம்.

R.Ashwin
R.Ashwin
TNCA/TNPL

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்போகிறதே...

(பலமாகச் சிரித்துக்கொண்டே) அதைப் பற்றியும் யோசிக்கவில்லை. அதைப் பற்றிக் கருத்தும் இல்லை. இந்திய அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் இப்போது அதைப்பற்றிச் சிந்திக்கட்டும். நாம், அதைப் பற்றி யோசிக்காமல், டிஎன்பிஎல் தொடரை அனுபவிப்போம்!

சில வாரங்கள் முன்பு, `வர்ணனையாளராக இருந்தால், நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒரு வாசகம் என்னவாக இருக்கும்' என்று உங்களிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு `Cut out the cliches' என்று பதில் சொன்னீர்கள். ஒரு வீரராக, கிரிக்கெட்டின் எந்த கிளீஷேவை உடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அப்படி எதுவும் இல்லை. சொல்லப்போனால, கிரிக்கெட்டில் எதையுமே கிளீஷே என்று சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடாது. விளையாட்டைப் பொறுத்தவரை எதுவுமே கிளீஷே கிடையாது. நான், கமென்டரியில் இருக்கும் கிளீஷேக்களை உடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் அப்படிச் சொன்னேன். என்னைப் பொறுத்தவரை, இன்றைய வர்ணனை, விளையாட்டை மேம்படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை. அது இன்னும் விரிவாக, டெக்னிக்கலாக அலசினால், விளையாட்டுக்கு அது நல்லது.

R.Ashwin
R.Ashwin
TNCA/TNPL

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அஷ்வின் - ஜடேஜா கூட்டணி, அசைக்க முடியாத ஒரு பௌலிங் கூட்டணியாக உருவெடுத்துள்ளது. இருவரும், ஒருவரையொருவர் எப்படி `காம்ப்ளிமென்ட்' செய்துகொள்கிறீர்கள்? இந்தக் கூட்டணியின் வெற்றி எப்படிச் சாத்தியப்படுகிறது?

கூட்டணியின் பலம் என்பது, இருவரும் முழு பலத்தோடு இருப்பதுதான். அதுதான் எங்கள் பலமும். என்ன ஆனாலும், நாங்கள் இருவரும் எங்களின் முழுத் திறனையும், பலத்தையும் வெளிப்படுத்துவோம். எதற்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டோம். அதுதான் இந்த சக்சஸுக்குக் காரணம் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், இருவருமே ஓரளவு பேட்டிங் செய்வோம் என்பதால், பேட்ஸ்மேன்கள் என்ன நினைப்பார்கள் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அது எங்களுக்குக் கூடுதல் பலம். இதுதான், இந்தியாவின் முந்தைய சுழல் கூட்டணிகளிடம் இல்லாமல், எங்களிடம் இருக்கும் ஒரு பிளஸ் பாயின்ட்.

தமிழக அணிக்குக் கேப்டனாக இருந்த அனுபவம் உங்களுக்கு உண்டு. ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்தது புதிதாக இருந்ததா? ஏதும் கூடுதல் நெருக்கடியை உணர்ந்தீர்களா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அணியை வழிநடத்துவதில் எந்த வித்தியாசமும் இல்லை. எந்த நெருக்கடியும் இல்லை. சொல்லப்போனால் நன்றாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று சந்தோஷமாகவே இருக்கிறேன். கிங்ஸ் லெவன் அணியை அனைவரும் திரும்பிப்பார்க்கும்படி செயல்படச் செய்திருக்கிறோம். இரண்டு சீசன்களிலுமே சிறப்பான பர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். நான் முன்பு சொன்னதுபோல், பெரிதாக சுழலுக்குச் சாதகமாக இல்லாத ஆடுகளங்களிலும், எங்கள் சுழல் கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இரண்டு முறையும் பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டதுதான் வருத்தமாக இருக்கிறது. மற்றபடி எங்களின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன. எனக்கும் அது திருப்திகரமாகவே இருக்கிறது.

R.Ashwin
R.Ashwin
TNCA/TNPL

கிங்ஸ் லெவன் மிஸ்டிரி ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் பற்றி...

முஜீப், மிகவும் திறமையான பௌலர். புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பவர். அணிக்குள் வரும்போது கொஞ்சம் மிஸ்டிரியோடுதான் வந்தார். ஆனால், இப்போது பேட்ஸ்மேன்கள் அவரை ஓரளவு கணிக்கத் தொடங்கிவிட்டனர் என்று நினைக்கிறேன். அதனால்தான் கடந்த ஐ.பி.எல் தொடரிலும், உலகக் கோப்பையிலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியவில்லை. ஆப்கானிஸ்தான் அணியிலும் அவரை `வைட் பால் பௌலராகத்தான்' பார்க்கிறார்கள். அதனால், லிமிடட் ஓவர் கிரிக்கெட்டில் அவர் இன்னும் முழுமை காண வேண்டியிருக்கிறது. நான் சொன்னதுபோல், அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளவர். அதுமட்டுமல்லாமல் இப்போதுதான் அவருக்கு 18 வயது ஆகிறது. கற்றுக்கொள்ள ஆர்வமும், நேரமும் இருக்கும்போது யாராலும் ஜொலிக்க முடியும். முஜீப் நிச்சயம் பெரிய ஸ்பின்னராக வருவார்!

உங்கள் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஜெகதீசன், சிலம்பரசன் இருவரும் இந்த சீசனில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கேப்டனாக அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இருவருமே மிகவும் திறமையான வீரர்கள். ஜக்கி (ஜெகதீசன்) கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஓப்பனிங்கில் தொடர்ச்சியாக நல்ல இன்னிங்ஸைக் கட்டமைப்பது எந்த அணிக்குமே மிகப்பெரிய பலம். நாளுக்கு நாள் அவருடைய பேட்டிங் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு நான் இல்லாதபோது கேப்டனாகவும் அணியை இறுதிப்போட்டிவரை வழிநடத்தினார். நன்கு அனுபவப்பட்டிருக்கிறார். அதனால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒருசில வீரர்களுக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்கும்போது, அவர்களால் தங்களின் அடுத்த பரிணாமத்தையும் நிரூபிக்க முடியும். அவருக்கு அந்த வாய்ப்புகள் இன்னும் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

R.Ashwin
R.Ashwin
TNCA/TNPL

சிலம்பரசனைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவருக்கு, இன்னும் வயது இருக்கிறது. அவருடைய லைன், லென்த், வேரியேஷன் என ஒவ்வொன்றிலும் பெர்ஃபக்ஷனை அவரால் சீக்கிரம் அடைய முடியும். எந்த ஒரு சிறிய சந்தேகமாக இருந்தாலும் உடனே கேட்பார். ஆட்டத்தின் போக்குக்கு ஏற்ப வியூகங்கள் வகுப்பதைப் பற்றி ஆலோசனைகள் கேட்பார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல், ஃபீல்டிங்கிலும் 100 சதவிகிதத்தைக் கொடுக்கும் அற்புதமான வீரர். இவருடைய அர்ப்பணிப்பு நிச்சயம் அவரைப் பெரிய உயரத்துக்கு எடுத்துச்செல்லும்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், அலெய்ஸ்டர் குக் விக்கெட்டை நீங்கள் வீழ்த்திய அந்த டெலிவரியின் பெர்ஃபக்ஷன் எப்படி சாத்தியப்படுகிறது. சமீபத்திய ஒரு பேட்டியில், `வலைப்பயிற்சியின்போது, நான் ஒரே ஷாட்டை 400 முதல் 600 முறை ஆடுவேன்' என்று லான்ஸ் குளூஸ்னர் கூறியிருந்தார். அதுதான் அவரது பெர்ஃபக்ஷனுக்குக் காரணம் என்று கூறியிருந்தார். நீங்களும் அப்படித்தானா?

(சிரித்துக்கொண்டே) அப்படியெல்லாம் இல்லை. இந்த பெர்ஃபக்ஷன் என்பது என் ஆரம்ப காலத்திலேயே நான் கற்றுக்கொண்ட ஒன்று. அதற்கு முக்கியக் காரணம் ராமன் சார். அப்போதெல்லாம், அவர் பயிற்சியில் இருக்கும்போது வெகுவாகப் பாராட்டுகள் கிடைக்காது. பாராட்டுவார். ஆனால், `நல்லா பண்ணுன' என்ற அளவுக்குத்தான் பாராட்டுவார். கொண்டாட மாட்டார். ஆனால், தவறுகளை உடனுக்குடன் அங்கேயே சொல்லிவிடுவார். சிறிய தவறாக இருந்தாலும், அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆரம்பத்தில், `புதிதாகச் செய்யலாம்' என்று நாமும் ஏதாவது செய்துவிடுவோம். ஒரு ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திவிட்டால், உடனே `பந்தை flight செய்யலாமா' என்றெல்லாம் தோன்றும். ஆனால், தவறாக ஒரு பந்து வீசப்படுவதைக்கூட அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஷார்ட் லென்த்தில் width கொடுத்து, பேட்ஸ்மேனை கட் ஷாட் அடிக்கவிடக் கூடாது. ஃபுல் லென்த்தில் பந்துவீசி, எளிதாக டிரைவ் செய்ய அனுமதிக்கக் கூடாது. `இந்த ஆப்ஷன்களெல்லாம் உங்களுக்கு இல்லவே இல்லை' என்பார். தப்பித்தவறிக்கூடத் தவறான பந்துகள் வீசக் கூடாது என்பதில் கறாராக இருப்பார். அதுதான், என்னுடைய இந்த பெர்ஃபக்ஷனுக்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதில் அவருடைய பங்களிப்பு மிகப்பெரியது!

தோனி, கோலி - இரண்டு வித்தியாசமான கேப்டன்கள். ஒரு பௌலராக உங்களிடம் இவர்களின் எதிர்பார்ப்புகள் மாறுபடுமா?

அவர்களின் அணுகுமுறையில்தான் மாற்றம் இருக்குமே தவிர, அவர்கள் வீரர்களிடம் எதிர்பார்ப்பதில் எந்த மாற்றமும் இருக்காது. தோனி வீரர்களிடம் அவ்வளவாகப் பேசவே மாட்டார். கோலி, நிறைய பேசுவார். தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டே இருப்பார். அவ்வளவுதான். என்னிடம் அவர்கள் இருவரும் எதிர்பார்த்தது, எதிர்பார்ப்பது ஒன்றுதான். விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். வேறு எதுவும் இல்லை.

R.Ashwin
R.Ashwin
AP

இந்த உலகக் கோப்பைத் தொடரில் உங்களை ஆச்சர்யப்படவைத்த, அதிர்ச்சியடையவைத்த விஷயங்கள் ஏதேனும்...

உண்மையைச் சொல்லவேண்டுமானால், நான் உலகக் கோப்பையை சரியாக ஃபாலோ செய்யவில்லை. சென்னையில் இருக்கும்போது என்னுடைய அகாடெமி வேலைகளில் பிசியாக இருந்தேன். அதிலேயே முழு நேரமும் செலவிடவேண்டியிருந்தது. அதன்பின் கவுன்டி போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுவிட்டேன். அங்கு பயிற்சி, போட்டி என்று போய்க்கொண்டிருந்ததால் ஒருசில போட்டிகளை மட்டுமே பார்த்தேன். அந்தப் போட்டிகளைப் பார்ப்பதிலுமே சிக்கல் இருந்தது. ஹோட்டலில் இருந்த சேனல்களில் நேரடி ஒளிபரப்பு இல்லை. நீங்களும் அந்தப் பிரச்னை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே! ஸ்ட்ரீமிங் செய்து பார்க்கவேண்டியிருந்தது. அதனால், அனைத்து போட்டிகளையும் பார்க்கவில்லை.

இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியையே, கடைசி 8 ஓவர்கள் மட்டும்தான் பார்க்க முடிந்தது. அப்படியொரு சூழ்நிலை. அரையிறுதியில் இந்தியா தோற்றதுதான் மிகவும் வருத்தமாக இருந்தது. ஜடேஜாவின் அந்த இன்னிங்ஸ் அற்புதமாக இருந்தது. ஆனால், இந்தியா தோற்றது துருதிருஷ்டமான ஒன்று. அதேபோல், இறுதிப்போட்டியில் நியூசிலாந்து தோற்றதும் வருத்தமாக இருந்தது.

அடுத்த கட்டுரைக்கு