Published:Updated:

`பகலிரவு டெஸ்ட்; முதல் டி20 சிக்கல்; ஷகிப்புக்குத் தடை..!'- வங்கதேச தொடர் அப்டேட்ஸ்

முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அங்கு போட்டி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி
இந்திய அணி

வங்கதேச கிரிக்கெட் அணி வருகிற 3ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அங்கு போட்டி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடுதான். டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து படுமோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இதை மையமாக வைத்து வீரர்கள் டெல்லி மைதானத்தில் விளையாடினால் அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அருண் ஜெட்லி ஸ்டேடியம்
அருண் ஜெட்லி ஸ்டேடியம்

ஏற்கெனவே 2017ல் இலங்கை வீரர்கள் காற்று மாசுபாட்டைப் பொருட்படுத்தாமல் இந்த மைதானத்தில் விளையாடியதால் உடல்நலக் குறைவுக்கு ஆளான சம்பவமும் இருக்கிறது. இதை மேற்கோள்காட்டி டெல்லியைச் சேர்ந்த ஜோதி பாண்டே என்பவர், ``டெல்லி டி20 போட்டியை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். காற்று மாசுபாடு அதிகமாக இருப்பதால் வீரர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. காற்று மாசு நீண்ட காலத்திற்கு வீரர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்" எனக் கூறி பிசிசிஐ தலைவர் கங்குலிக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலோ, ``மாசுபாடு டி20 போட்டியைப் பாதிக்காது. காற்றின் தரத்தை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது" எனக் கூறியுள்ளார்.

Vikatan

எனினும் இந்த விவகாரத்தில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்தே முதல் டி20 டெல்லியில் நடைபெறுமா இல்லையா என்பது தெரியவரும். இதற்கிடையே, வங்கதேச அணியுடன் கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த பிசிசிஐ சம்மதித்துள்ளது. ஐசிசியால் பகலிரவு டெஸ்ட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் விளையாட இந்தியா மறுத்துவந்த நிலையில், இந்தியா விளையாடப் போகும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியும் இதுதான். இந்தியாவில் நடக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியும் இதுதான். இதன்மூலம் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது என்ற வரலாறு படைக்கவுள்ளது.

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

சிறப்புமிக்க இந்தத் தொடரில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர், ஆல்-ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. சூதாட்டத் தரகர்கள் தொடர்புகொண்டது சம்பந்தமாக ஐசிசி, ஷகிப் அல் ஹசனிடம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு, ஷகிப் இன்னும் விளக்கமளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஷகிப் அல் ஹசனுக்கு 18 மாதங்கள் தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்ட நிலையில் 2020 வரை அவருக்குத் தடை விதித்துள்ளது ஐசிசி. ஏற்கெனவே, ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து சீனியர் வீரர் ஷகிப் தலைமையில் வங்கதேச வீரர்கள் போராடி வந்த நிலையில் இந்தத் தடை அந்த அணிக்குப் பின்னடைவைத் தந்துள்ளது.

அவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்! #VikatanDiwaliMalar2019